இரண்டு நாட்களாக வினிதாவிற்கு கால் வலி இருந்தது. அதனால் அவள் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. ரேணுகாவும் அவள் முதலில் விளையாட்டுக்காக சொல்வதாக நினைத்தார். ஆனால் கால் வலிப்பதாக கூறி அவள் அழுவதை பார்த்தவருக்கு மிகவும் கவலையாக இருந்தது. அவரும் வீட்டு வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் வினிதாவிற்கு கால் வலி குறையவில்லை. அப்போது அந்த ஊரில் மூலிகை வைத்தியம் செய்பவரை அழைத்து வர சொல்லி தமிழ்ச்செல்வனிடம் சொன்னார். தங்கை படும் வேதனையை பார்த்தவன், உடனே சென்று அவரை கையோடு அழைத்துக் கொண்டு வந்தான். வினிதாவின் காலைப் பார்த்துவிட்டு, மருந்தொன்றை கொடுத்து அதை நன்கு அரைத்து காலில் பூசும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
கால் வேதனையோடு சேர்த்து உடல் அசதியாக இருக்க வினிதாவிற்கு காய்ச்சல் வந்துவிட்டது. எப்போதும் துள்ளித்துள்ளி திரியும் வினிதா இன்று ஒரே இடத்தில் படுத்து இருப்பதை பார்த்த ரேணுகாவிற்கு மிகுந்த கவலையாக இருந்தது.
அவளை தோழிகள் வேறு இடையிடையே வந்து பார்த்துவிட்டு அவளுடன் சிறிது நேரம் இருந்து பேசி விட்டு சென்றார்கள். வினிதாவிற்கு மூன்றாவது நாள் கால் வலி குறைந்து காய்ச்சல் விட்டிருந்தது. உடனே தாயிடம் சொல்லிக்கொண்டு தோழிகளுடன் ஊரைச் சுற்ற கிளம்பி விட்டாள். ரேணுகா எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. “மூன்று நாள் வீட்டுக்குள் இருந்தது எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குமா…. நிறைய தூரம் நடக்கலை அம்மா…. கொஞ்ச தூரம் போயிட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு தோழிகளுடன் சென்றாள்.
“ஆமா வினி இன்னொரு ரெண்டு மாசம் தானா அதுக்கப்புறம் நம்மளோட காலேஜ் லைஃப் முடிஞ்சிடும் அப்படின்னு நேற்று க்ளாஸ்ல மேடம் சொல்லிக் கொண்டு இருந்தாங்க…. அது மட்டும் இல்ல வினி, காலேஜ்ல கல்ச்சரஸ் வேற இருக்குதாம்…. நம்ம கண்டிப்பா பெர்ஃபாமன்ஸ் பண்ணியே ஆகணும்னு சொன்னாங்க…. நீதான் நல்லா ஆடுவல அதான் உன் பேரை டான்ஸ்க்கு கொடுத்திருக்கேன்…”
“என்னடி சொல்றீங்க… என்னால ஆட முடியாதுடி…”
“அப்படி சொல்லாத வினி இதுதான் நம்ம காலேஜ்ல பண்ணப் போற கடைசி நிகழ்ச்சி…. ரொம்ப கவலையா இருக்கு தெரியுமா….”
“அம்புட்டு கவலையாக இருந்தால் அப்போ நீ வேணும்னா அடுத்த பேட்சோட சேர்ந்து படி…” என்றாள் இன்னொருத்தி.
“ஏய் விடுங்கட… எல்லோரோட லைப்லையுமே காலேஜ் வந்து படிச்சிட்டு காலேஜை மிஸ் பண்ற டைம் வரும்… இப்போ நமக்கு வந்திருக்கு…. இன்னும் ரெண்டு மாசம் தானே ரெண்டு மாசமும் நல்லா என்ஜாய் பண்ணலாம்…” என்றாள் வினிதா.
“ஆமா வினி உனக்கு என்ன ஆச்சு திடீர்னு கால் வலி என்று சொல்லி அம்மா சொன்னாங்க… வீட்ல வச்சு கேட்கலாம்னு நெனச்சோம் ஆனால் ரேணுகா அம்மா இருந்ததனால கேட்க முடியல… என்னாச்சுடி உனக்கு….?” என்றனர்.
“அது ஒன்னும் இல்லைடி ரொம்ப தூரம் நடந்து வந்தனா அது தான் கால் வலி…”
“என்ன ரொம்ப தூரம் நடந்து வந்தியா… என்னடி சொல்ற..?”
“அந்த சோகத்தை ஏன் கேட்குற… அன்னைக்கு காலேஜ் ஸ்ட்ரைக்னு எனக்கு தெரியலை…. நான் போன வேற பார்க்கலையா ரெடியாகி காலேஜுக்கு வந்துட்டேன்…. அப்புறம் வீட்டுக்கு வர்றதுக்கு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுகிட்டு இருந்தேன்னா பஸ்சும் வரல… அப்புறம் மாமா கூட புல்லட்ல வந்தேன்…”
“என்ன வெற்றி அண்ணன் கூட வந்தியா…?”
“ஆமா மாமா கூடத்தான் வந்தேன்.. மாமா கூட வரும்போது வண்டி நின்னுடுச்சு…. அதுக்கப்புறம் அங்கிருந்து கொஞ்சம் ஒரு மூணு கிலோ மீட்டர் வரைக்கும் நடந்து வந்தனா அதுதான் கால் வலி…” என்றாள் வினிதா.
“பார்த்து வரமாட்டியா… சரி சரி இதுக்கு மேலாவது கவனமா இரு…”
“ஏய் அதுதான் வெற்றி அண்ணா அன்னைக்கு உன் பேர்ல கோயில்ல அர்ச்சனை பண்ணிட்டு இருந்தாரா….?”
“ஏய் என்னடி சொல்ற… என் பேர்ல அர்ச்சனை பண்ணாங்களா மாமா…?”
“ஆமா வினி அன்னைக்கு தம்பிக்கு பர்த்டே…. அதுக்கு அர்ச்சனை பண்றதுக்கு கோயிலுக்கு போயிருந்தேன்.. அப்போ வெற்றி அண்ணா உன்னோட பெயருக்கு அர்ச்சனை பண்ணிட்டு இருந்தாங்க…”
“என்மேல மாமாக்கு எவ்வளவு பாசம்…”
“ஆமா… ஆமா உன் மேல பாசம் தான் வெற்றி அண்ணாக்கு….” என்று சிரித்தார்கள் மற்றவர்கள்.
“ஏய் கேலி பண்ணாதீங்க டி… என்னதான் இருந்தாலும் நான் மாமாக்கு முறை பொண்ணுல… என் மேல பாசம் இருக்கும் தானே….”
“பாசம் மட்டும் தான் இருக்கா இல்லை…” என்று இழுத்தார்கள். உடனே வினிதாவும், “சரி சரி நீங்க தொடங்கிடுவீங்களே இனி… பேசாம அமைதியா வாங்கடி…” என்று அவர்களுடன் சென்றாள்.
அப்போது எதிரே வெற்றிமாறனும் வந்தான். வெற்றிமாறனைப் பார்த்ததும் வினிதா, “மாமா….” என்று அவன் முன்னால் வந்தாள்.
“ஏய் இங்க எதுக்குடி வந்த….?”
“இது நல்லா இருக்கே… இது என்ன நீ போட்ட ரோட்டா…? நான் எந்த ரோட்ல வேணாலும் போவேன் உனக்கு என்ன மாமா…?”
“நீ எந்த ரோட்ல வேணாலும் போ… ஆனால் என்னோட வண்டி முன்னாடி மட்டும் வந்து நிற்காதே…. அப்புறம் நீ என்னை வம்பிழுப்ப… அதற்கு நான் வம்பு இழுப்பேன் அதுக்கப்புறம் நீ அழுவ…. இது எனக்கு தேவையா…?”
“மாமா நிஜமாவே எனக்கு கால் வலி… அதுதான் அழுதுட்டேன் மத்தபடி எல்லாம் ஒன்னும் இல்லை… உன் மேல நான் ஏன் கோபப்படப்போறேன்…. நீ என்னோட மாமா நீ எவ்வளவு வேணாலும் என்னைக் கேலி பண்ணலாம்…”
“அப்புறம் எதுக்கு அன்னைக்கு பெரிய ஆளாட்டம் அழுதுட்டு போன…”
“மாமா நெஜமாவே வலியா இருந்துச்சு…. உன் மேல லைட்டா கோபம் இருந்துச்சு தான்… ஆனால் நீ எனக்காக கோயில் அர்ச்சனை பண்ணனு தெரிஞ்சுச்சா…. அதான் உன் மேல இந்த கோபாம் ஓடிப் போயிடுச்சு….”
“என்ன உன் பேர்ல அர்ச்சனை பண்ணினனா உனக்கு லூசா….?”
“மாமா பொய் சொல்லாத… என் பேர்ல நான் குணமாகணும்னு நீ அர்ச்சனை பண்ணல….”
“இல்லை பண்ணலை…”
“சரி விடு அதை நான் அப்புறம் உன்கிட்ட எப்படி வாங்கணுமோ அப்படி வாங்கிக்கிறேன்….”
“நீ எப்படி கேட்டாலும் நான் எதுக்கு உன் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்…. எனக்கு வேற வேலை இல்ல பாரு….”
“ஆமா ஆமா உனக்கு வேற வேலை இல்லாம தான் கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்த….”
“போடி அங்கிட்டு… வந்துட்டா பெருசா பேச…. எனக்கு நிறைய வேலை இருக்கு…” என்று சொல்லிட்டு புல்லட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
“போ மாமா போ… ஆனால் உண்மை எப்பவுமே மறைந்து இருக்காது…” என்று சொல்லி சிரித்துக் கொண்டே தோழிகளுடன் சென்றாள் வினிதா.
மறுநாள் வழமை போல ரெடியாகி காலேஜுக்கு சென்றாள் வினிதா. அங்கே கல்ச்சரஸ் ப்ரோக்ராமுக்கு நேம் கொடுத்தவர்களுக்கான பிரக்டிஸ் நடந்து கொண்டு இருந்தது. வினிதாவும் அவள் தோழிகளுடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடுவதற்கு ப்ராக்டிஸ் பண்ணிக் கொண்டிருந்தாள். காலையிலிருந்து மதியம் வரை ப்ராக்டிஸ் நடந்து கொண்டு இருந்தது. வினிதாவிற்கு ஆடுவது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும். காலேஜில் அவள் ஆடப் போகும் கடைசி நடனம் என்பதால் மிகவும் நன்றாகச் செய்ய வேண்டும் என்பதற்காக முழுமூச்சாக பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.
அவளை தோழிகள் தான், “போதும் வினி கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்….” என்று சொன்னார்கள். அதன் பின்னரே வந்து உட்கார்ந்தாள் வினிதா. அப்போது அவள் தோழியொருத்தி வேகமாக வினிதாவிடம் ஓடி வந்தாள்.
“என்ன ஆச்சுடி…. எதுக்கு இப்படி ஓடி வர்ற…?” என்றாள் வினிதா.
“வினி உனக்கு ஒன்னு தெரியுமா…?”
“ஏன்டி நீ இப்படி ஓடி வந்துட்டு எனக்கு ஒன்னு தெரியுமானு கேட்டா நான் என்னடி சொல்ற…?”
“வினி நம்ம கல்ச்சுரல்ஸ்க்கு யார் தெரியுமா சீப் கெஸ்ட்டா வர்றாங்க…?”
“யார் வராங்க…”
“யார் வராங்கனு தெரிஞ்சா நீ ரொம்ப ஹேப்பியாயிடுவ டி….”
“நான் ஹேப்பியாகிற அளவுக்கு யாருடி வராங்க….”
“உன் மாமா தான் வராங்க…”
“என்னது மாமாவா….?”
“ஆமா வினி உன் மாமா தான்… அதாவது வெற்றி அண்ணன் தான் வர்றாங்க….”
“என்னடி சொல்ற நெஜமாவே மாமாவா எப்படிடி…”
“அதுவா வெற்றி அண்ணன் இப்போ இரசாயனம் இல்லாத மரக்கறிகளை வந்து உற்பத்தி செய்து கொண்டிருக்கிறாரே அதனால்தான் அவர சீஃப் கெஸ்ட்டா நம்ம கரஸ்பாண்டன்ட் கூப்பிட்டு இருக்காங்க….” என்றாள் வினிதாவின் தோழி.
உடனே வினிதா அவள் கையைப் பிடித்துக் கொண்டு சுற்றினாள். “வினி போதும்டி…. போதும்டி என்னை விடுடி… ஏற்கனவே தலை சுத்திட்டு இருக்கு…. இதுல நீ வேற இழுத்து சுத்திக்கிட்டு இருக்க….” என்றால் அவளின் தோழி.
“நீ இவ்ளோ பெரிய ஹேப்பி நியூ சொல்லிக்க தெரியுமா…. நம்ம கல்ச்சுரசுக்கு மாமா வர்றாங்க… அப்போ இந்த தடவை செம்மையா ஆடும்… வாங்கடி பிராக்டிஸ் பண்ணலாம்….”
“இவ ஒருத்தி மாமா மாமான்னு சொல்லிட்டே இருப்பா…. ஆனால் உள்ளே என்ன இருக்குன்னு ஒன்னுமே நம்ம கிட்ட சொல்லமாட்டல… பார்ப்போம் எப்போவாவது எங்களுக்கு தெரியத் தானே போகுது….” என்றார்கள்.
ஆனால் வினிதா அதை காதில் எடுக்காமல், பிரக்டிஸ் பண்ணலாம் என்று டான்ஸ் பிராக்டிஸ் பண்ணத் தொடங்கினாள். இவள் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பதை இரு விழிகள் அவதானித்துக் கொண்டே இருந்தன.
காலேஜ் விட்டதும் இவர்கள் வழமை போல பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸிற்காக காத்திருந்தனர். அப்போது வினிதாவின் வகுப்பு படிக்கும் ஒருவன் வினிதாவின் அருகில் வந்தான்.
“எக்ஸ்கியூஸ் மீ வினிதா…” என்றான் அவளைப் பார்த்து. அவனைப் பார்த்த வினிதாவும், “ஹாய் அர்ஜுன்…” என்றாள்.
உடனே அர்ஜுன், “வினிதா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
“என்ன என்கிட்ட பேசணுமா… என்ன பேசணும்…?” என்றாள்.
அர்ஜுன் வினிதாவிடம், “இங்க உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்கிறாங்க… கொஞ்சம் இந்த பக்கம் வர முடியுமா…?” என்றான். அதற்கு வினிதா, “இவங்களுக்கு தெரியாத எந்த விஷயமும் ரகசியமும் என்கிட்ட இல்லை…. நீங்க இப்போ என்கிட்ட என்ன பேசினாலும் வந்த உடனே இவங்க கிட்ட சொல்லிடுவேன்….. அதனால இங்கேயே சொல்லுங்க….” என்றாள். உடனே அர்ஜுன், “வினிதா நான் செகண்ட் இயர்ல இருந்து உன்னை ரொம்ப லவ் பண்றேன்…. இதை உன்கிட்ட சொல்லறதுக்கு நிறைய தடவை முயற்சி பண்ணேன்… ஆனால் சொல்றதுக்கு பயமா இருந்துச்சு… க. லேஜ் வேற ரெண்டு மாசத்துல முடிஞ்சிடும் அதுதான் இப்போ உன்கிட்ட இதை சொல்லலாம்னு வந்தேன்…. நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன் வினிதா…. உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவேன்…. ஐ லவ் யூ…” என்று ரோஸை நீட்டினான் அவளிடம்.
அதற்கு வினிதா, “இதோ பாரு அர்ஜுன்… எனக்கு உன் மேல அந்த மாதிரியான ஒரு எண்ணம் இல்லை… ஏன் யார் மேலேயும் அப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்ததும் இல்லை…. வீணாக உன் மனசை போட்டு குழப்பிக்காம படிச்சு முடிச்சிட்டு உன் லைஃப்ல செட்டிலாகிற வழியைப் பாரு… உனக்கு நான் செட்டே ஆக மாட்டேன்….”
“ஏன் வினி அப்படி சொல்ற…. உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்….”
“இங்க பாரு அர்ஜுன்… இந்த உனக்காக என்ன வேணா பண்ணுவேன்…. நீ இல்லைனா நான் செத்துடுவேன்… கைய கட் பண்ணிப் பேன்… இப்படி எல்லாம் சொல்றது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்…. என்னால உன்னை இல்லை வேற யாரையுமே லவ் பண்ண முடியாது சரியா…. இதுக்கு மேல என்னை தொல்லை பண்ண வேணாம்… அப்புறம் உனக்கு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை…..” என்றவள் பஸ் வர அதில் தோழிகளுடன் ஏறிச் சென்று விட்டாள். அர்ஜுனுக்கு வினிதா தன்னை மதியாமல் பஸ்ஸிலேறிச் சென்றது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Vinu edhunala appidi sollura