அன்று இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு வரவேற்பு அறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது குசேலன் சுந்தரத்திடம், “அண்ணா நம்மளோட கரும்பு வியாபாரிகள் ரொம்ப கஷ்டப்படுறாங்க… அவங்களோட விளைச்சலுக்கு சரியான கூலி கிடைக்காம இருக்குது…. அவங்களோட கரும்புக்கு குறைவான கூலியை கொடுத்து வாங்கிட்டு போய் அதை பல மடங்கு அதிகமா விக்கிறாங்க… கஷ்டப்படுற நம்ம விவசாயிகளுக்கு குறைவான பணமும் கஷ்டமே இல்லாம வாங்கிட்டு போய் விக்கிறவங்களுக்கு அதிக லாபமும் வருது…. இதுக்கு என்ன அண்ணா பண்ணலாம்…?” என்றார்.
அதற்கு சுந்தரமும், “நானும் அதைத்தான் யோசிச்சிகிட்டு இருக்கிறேன்…. பாவம் நம்ம சனங்கள்…. ஆனால் அவங்களுக்காக ஏதாவது செய்யணும் குசேலா…..” என்றார் சுந்தரம்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த திருநீலகண்டன், “சுந்தரம் நம்ம ஏன் இப்படி பண்ணக் கூடாது…” என்றார். “என்னப்பா பண்ணனும்….?”
“இல்லை சுந்தரம் நம்ம சனங்கள் எதுக்கு கரும்பை வேறொரு வியாபாரிக்கு கொடுத்து கஷ்டப்படணும்…. நாமளே அந்த கரும்பை ஒரு நல்ல விலைக்கு வாங்கி அதிலிருந்து சீனி தயாரிக்கக் கூடாது….?” என்று கேட்டார்.
இதை கேட்டதும் வெற்றிமாறனும், “ஆமாம்பா தாத்தா சொல்றதும் சரிதான்… இது ரொம்ப நல்லது… நம்மளோட சனங்களுக்கும் நியாயமான விலை கிடைக்கும்…. நாமளும் கரும்புல இருந்து சீனி தயாரிக்கலாம்…. எனக்கு என்னவோ தாத்தா சொல்றதுதான் சரியா இருக்கும்னு தோணுது….”
“அண்ணே என்னண்ணே பண்ணலாம்… எனக்கும் அப்பா சொல்றது சரின்னு தோணுது… இருந்தாலும் நீங்க என்ன முடிவெடுக்கிறீர்களோ அது எனக்கு ஓகே தான்…” என்றார் குசேலன்.
சிறிது நேரம் யோசித்த சுந்தரம், “சரி குசேலா அப்பா சொல்ற மாதிரி அப்படியே பண்ணிடலாம்… வெற்றி இந்த சீனி தயாரிக்கிற தொழிற்சாலையை நீ தான் பாத்துக்கணும் சரியா…?”
“அதுக்கு என்னப்பா பார்த்துக்கிட்டா போச்சு….”
“சரி அப்போ நாளைக்கு அதுக்கான வேலையை ஆரம்பிக்கலாம்….” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் செல்ல எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றனர்.
அடுத்த நாள் ஊர் மக்கள் முன்னிலையில் தான் புதிதாக ஆரம்பிக்கப் போகும் தொழிற்சாலை பற்றியும் மக்களிடமிருந்து தானே கரும்பினை வாங்குவதாகவும் அறிவித்தார் சுந்தரம். அது மிகவும் நல்ல யோசனையாகவும் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருந்ததால் யாரும் எதிர்த்து பேசாமல் அதற்கு ஆதரவளித்தனர். அதுக்கான வேலை மளமளவென ஆரம்பமாகியது.
இதற்கிடையில் சாரதா பாட்டி, வீட்டுப் பெண்களிடம் தனது பேச்சை ஆரம்பித்தார். “அம்மாடி ராகவி வைதேகி உங்க வேலையை முடிச்சிட்டு இங்கே வாங்கம்மா…” என்றார். அவர்களும் செய்த வேலையை முடித்துவிட்டு, “என்ன அத்தை….” என்றபடி அவர் அருகில் வந்தார்கள்.
“நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கமா ரெண்டு பேரும்… எனக்கும் வயசாகிட்டே போகுது… இந்த பிள்ளைகளுக்கு காலா காலத்திலே ஒரு நல்லதை பண்ணிப் பார்த்திட மாட்டாமானு என்னோட மனசு கிடந்து தவிக்குது…. ஒரு பேரப்பிள்ளையோட நல்லதைப் பார்த்துட்டா நிம்மதியா கண்ணை மூடிடுவேன்….” என்றார்.
“ஐயோ அத்தை… எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க….? உங்களுக்கு எதுவும் நடக்காது… நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க…” என்று சொன்னார்கள் இருவரும்.
“நடக்கப்போறதைத்தான் சொல்றேன் எனக்கு என்ன என்றும் இளமையா… எத்தா வைதேகி உன் பொண்ணு குமுதாவுக்கு வரன் பார்க்கச் சொல்லிடலாமா….? பெரியவன் வெற்றிமாறன் இருக்கட்டும் முதல்ல குமுதாவுக்கு பண்ணிடலாம்….” என்றார் சாரதா பாட்டி.
அதற்கு வைதேகி, “அதுக்கு என்ன அத்தை நீங்க சொல்லிட்டா மறு பேச்சு ஏது… உங்க பையன் கிட்ட சொல்லி வரன் பார்க்க சொல்லிடலாம்….” என்றார்.
ராகவி யோசிப்பதைப் பார்த்த சாரதா பாட்டி, “ என்ன ராகவி நீ யோசிக்கிற…?” என்றார்.
“ஒன்னும் இல்லை அத்தை… இதே நம்ம ரேணுகா குடும்பத்தோட நல்லா இருந்திருந்தால் தமிழை நம்ம குமுதாவுக்கு கேட்டிருக்கலாம்ல அத்தை….” என்றார்.
உடனேசாரதா பாட்டியும், “எனக்கு மட்டும் ரேணுகா பையனுக்கு குமுதாவை கட்டி வைக்க விருப்பம் இல்லையா… அவங்க ஒத்துக்கணுமில்ல ராகவி… ஒத்தப் பொண்ணை பெத்தேன்… அவகூட பேசுற பாக்கியமே இல்லாமல் போயிட்டே…. நம்ம அவங்க கிட்ட தமிழை கேட்டுப் போய் அவங்க தர மாட்டேன்னு சொன்னால் அசிங்கம் நமக்குத்தானே…. எத்தனை தடவைதான் நாம அசிங்கப்படுறது….” என்றார்.
உடனே ராகவியும், “அத்தை ஏதோ மனசுல பட்டதை சொன்னேன்…மற்றும்படி தவிர வேறொன்றுமில்லை… நம்ம குமுதாவுக்கு வேற இடத்துல வரன் பார்க்கலாம்….” என்றார்.
இப்படியாக குமுதாவின் கல்யாண விஷயத்தை மூவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்த குமுதாவுக்கு பகீரென்று இருந்தது. ‘என்னடா இது… இந்த வயசுலயே கல்யாணப் பேச்சு எடுத்துட்டாங்க… ஐயோ இப்போ என்னதான் பண்றது…? மாமாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது…. மாமாவை காதலிக்கிறதையும் இவங்ககிட்ட சொல்லவும் முடியாது… ஐயோ முருகா நீ தான் என்னைக் காப்பாத்தணும்….’ என்று கடவுளிடம் வேண்டுதல் ஒன்றை அவசரமாக வைத்தாள். ‘சரி முதல்ல மாமாகிட்ட இந்த விஷயத்தைப் பற்றி சொல்லலாம்…’ என்று நினைத்தவள் அவனுக்கு கால் பண்ணினாள். இரண்டே ரிங்கில் அவன் போனை எடுத்தான். “என்ன குமுதா என்ன ஆச்சு… இந்த டைம்ல கால் பண்ணி இருக்க….?”
“மாமா நீங்க எங்க இருக்கீங்க….?”
“நான் வீட்ல தான் சொல்லுமா… உன்னோட குரல் ஏன் ஒருமாதிரி இருக்கு…? ஏதாவது பிரச்சனையா…?”
“இல்லை மாமா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சாயந்தரம் மாந்தோப்புக்கு வரமுடியுமா….?”
“மாந்தோப்புக்கா… சரி நான் வந்துடறேன்…”
“மாமா கண்டிப்பா வந்துருங்க… ரொம்ப முக்கியமான விஷயம்…”
“கண்டிப்பா வந்துடறேன் குமுதா… யோசிக்காத சரியா…”
“சரி மாமா..” என்று போனை வைத்துவிட்டு திரும்பினாள் குமுதா. அங்கே வெற்றிமாறன் நின்று இருந்தான். மெல்ல அவள் அருகில் வந்தான். “என்னம்மா குமுதா ரொம்ப மாறிட்ட போல இருக்கு…”
“ஏன் அண்ணா இப்பிடி சொல்ற…?” என்றாள்.
“ஏன்னா கேட்கிற… முன்னாடி எல்லாம் நீ போன் பேசினா எட்டு ஊருக்கு கேட்கும்… இப்போ எட்டு அடில நிக்கிற எனக்கு கேட்கவில்லை…” என்றான் வெற்றிமாறன்.
“அதுவா அண்ணா அம்மா தான் பொம்பள பிள்ளைன்னா அடக்கொடுக்கமா பேசணும்னு சொல்லி திட்டிக்கிட்டே இருந்தாங்க…. அதுதான் மெதுவா பேச ஆரம்பிச்சிட்டேன்….”
“ஓஹோ அப்படியா சங்கதி… குமுதா உன்னை வந்து மெதுவா பேச சொன்னாங்க சரியா… நீ மெதுவா பேசுற துக்கும், இப்போ பேசின பாரு குசுகுசுன்னு… அப்படி பேசறதுக்கும் வித்தியாசம் இருக்கு…”
“ஐயோ அண்ணா…. அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை அண்ணா….”
“சரி ஏதோ ஒன்னு நீ குசுகுசுன்னு பேசுற…. ஆனால் என்ன்னு கண்டு பிடிச்சேன் மவளே உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது….” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் சென்ற பின்னர் தான் இத்தனை நேரம் இழுத்து பிடித்திருந்த மூச்சை விட்டாள் குமுதா. வினிதா இன்று எங்கும் செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தாள். அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார் ரேணுகா. “என்னமா என்னையே பாத்துகிட்டு இருக்க…” என்று கேட்டாள் வினிதா. “இல்லை இன்னைக்கு எங்கேயும் சுத்த கிளம்பலையா… வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கே… மழை வர போகுதோ தெரியல…” என்றார் ரேணுகா.
“அட நீங்க என்னம்மா வெளியில் சுத்தப் போனால் வெளியில் சுத்த போறேன்னு என்னைத் திட்டுறீங்க… ஒருநாளாவது அடக்க ஒடுக்கமாக வீட்ல இருந்தால் என்ன வீட்ல உட்கார்ந்து இருக்கேன்னு சொல்றீங்க… நான் என்னதான் பண்ண…?”
“ஒன்னும் இல்லடி நீ இப்படி உட்கார்ந்திருக்க மாட்டியா… அதுதான் ஏதாவது பிரச்சனையா…?” என்று கேட்டேன்.
“எனக்கு என்ன அம்மா பிரச்சனை… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை….”
“அது சரி ஆமா எங்கடி உன் படையணி… அவளுங்கள ஆளையே காணோம்…”
“அதுவா அம்மா அவளுக ஒரு ப்ராஜெக்ட் விஷயமா போயிருக்காழுக…”
“அம்மா இப்போ என்ன உனக்கு…. நான் வீட்டில் இருக்கிறது தான் பிரச்சனையா…? சரி அப்போ நான் போய் ஊரை சுத்திட்டு வரேன் சரியா…?” என்றவள் ரேணுகா அழைப்பதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்று விட்டாள். தோழிகளுடன் சுற்றி திரிந்த வினிதா இன்று தனியாக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போது வெற்றிமாறனின் மாந்தோப்பை கடந்து வரும்போது அவளுக்கு மாங்காய் உண்ண வேண்டும் என்ற ஆசை வந்தது. மெல்ல அந்த தோப்பிற்குள் சென்றாள்.
அங்கே குமுதா தனது மனம் கவர்ந்தவருடன் பேசிக் கொண்டு இருந்தாள்.
“மாமா…”
“சொல்லு குமுதா எதுக்கு இப்போ என்னை வர சொன்ன… அதுவும் ஒரு முக்கியமான விஷயம் என்று சொன்னாய்…. ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க…”
“ஆமா மாமா ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்… ஆனால் அதைக் கேட்டு நீங்க கோபப்படக்கூடாது….”
“நான் கோவப்படக் கூடாதா… அப்படி என்ன விஷயம் முதல்ல அதை சொல்லு…. அப்புறம் கோபப்படலாமா வேண்டாமுன்னு நான் முடிவு எடுக்கிறன்….” என்றான்.
“அது வந்து மாமா வீட்ல இருக்கிறவங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டாங்க…”
“என்ன உனக்கு கல்யாணமா….?”
“ஆமா மாமா… இன்னைக்கு காலையில பாட்டி வந்து அம்மாகிட்ட சொன்னாங்க…. சீக்கிரமா குமுதாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் அது இதுன்னு பேசிகிட்டு இருந்தாங்க….”
“அதுக்கு உங்க அம்மா என்ன சொன்னாங்க…”
“எங்க அம்மா என்ன சொல்லுவாங்க… சரி அத்தை நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம்னு சொன்னாங்க… மாமா எனக்கு பயமா இருக்கு மாமா…”
“ஏய் நீ எதுக்கு டி பயப்படுற… அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது… இங்க பாரு.+ உன் கழுத்துல தாலி கட்டுறது நான் தான் சரியா…” என்று அவளை தேற்றி கொண்டு இருந்தான்.
“மாமா ஆனால் ஒன்னே ஒன்னு மட்டும் நிச்சயம்… உன் கையால என்னோட கழுத்தில தாலி ஏறலைன்னு வை… அப்புறம் என்னோட பொணத்தைத்தான் நீ பார்ப்ப…”
“ஏய் லூசு மாதிரி பேசாதடி…” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வினிதா, “அட என்ன வேலை டா பாக்குற… வீட்ல இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு இருந்துட்டு… இப்போ பால் இல்லை மில்க் ஷேக்கே குடிக்குதே டா….” என்றபடி வந்தாள் வினிதா.
குமுதா விரும்புவது வேற யாரையும் இல்லை தமிழ்ச்செல்வனை தான். வினிதாவை கண்டதும் குமுதா தமிழ்ச்செல்வனிடம் இருந்து விலகினாள். அங்கே வந்த வினிதா, “ஏன்டா அண்ணா எப்படிடா உனக்கு இந்த தைரியம் வந்துச்சு…. மாமா குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஆகாதுனு நல்லாவே தெரியும் தானே…. அப்புறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை…?” என்று கேட்டாள் வினிதா.
“இங்க பாரு வினி நான் குமுதாவை லவ் பண்றேன்… கல்யாணம் பண்ணப்போறதும் அவளைத்தான்… இதுல எந்த மாற்றமும் இல்லை…”
“அப்படியா இதை வந்து உன் அப்பாக்கிட்ட சொல்லித்தான் பாரு உனக்கு கருமாதி வச்சுட்டுத் தான் அடுத்த வேலை பார்ப்பாரு…. கல்யாணமாம் கல்யாணம்…” என்றாள் வினிதா.
“வினி இவள் ஏற்கனவே பயத்தில் இருக்கா…. நீ வேற பயம் காட்டாதே….” என்றான். அவனைப் பார்த்து விட்டு குமுதா அருகில் வந்தாள்.
“ஏன் அண்ணி உங்களுக்கு லவ் பண்ண ஊர்ல வேற ஆளே கிடைக்கலையா… போயும் போய் இந்த பையன் தான் கிடைத்தானா…?” என்று கேட்டாள். அதற்கு தமிழ்ச்செல்வன், “ஏன் எனக்கு என்ன குறைச்சல்… நான் ராஜாவாட்டம் நல்லாத்தான் இருக்கிறேன்…” என்றான்.
“யாரு நீ ராஜாவாக… இரு இப்பவே ஊருக்குள்ள போய் உங்க ரெண்டு பேரு விஷயத்தையும் எல்லார்கிட்டையும் சொல்றேன்… அபஅப்புறம் இவ அண்ணன் வந்து உனக்கு வாசிக்கிற கச்சேரில ராஜாவா இருக்கிற நீ கூஜாவா இருப்ப…” என்றாள் வினிதா.
“ஏய் வினி அப்படி எல்லாம் பண்ணிடாத காரியமே கெட்டிடும்…” என்று தமிழ்ச்செல்வன் சொன்னான். குமுதாவும், “ஐயோ அண்ணி வேண்டாம்… இது மட்டும் எங்க அண்ணனுக்கு தெரிஞ்சது நான் செத்தேன் ப்ளீஸ் அண்ணி….” என்று கெஞ்சினாள் குமுதா.
“சரி நீங்க இவ்வளவு கெஞ்சுறதனால உங்களை மன்னிச்சு விடுறேன்…. ஆமா இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கிறீங்க…. ரெண்டு குடும்பமும் எப்படியும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க….”
“ஆமா வினி அதுதான் நாங்களும் யோசிச்சிக்கிட்டு இருக்கிறம் என்ன பண்ணலாம்னு… குமுதாக்கு வேற வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க போறதா பேச்சு அடிபடுது…” என்றான் தமிழ்ச்செல்வன்.
“ஓ இது வேறயா… சரி இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க தமிழ்…?”
“தெரியலை வினி இனிமேதான் யோசிக்கணும்… ஆனால் ஒன்னு குமுதாவைத் தவிர வேற யாருக்கும் என் வாழ்க்கையில் இடமே இல்லை…”
“அண்ணி என்னதான் பண்ணலாம்….” என்று வினிதாவிடம் கேட்டாள் குமுதா.
“ஆமா நானும் பாக்குறேன்… அண்ணி அண்ணினு சொல்ற… நான் என்ன உன்னை விட வயசுல அவ்ளோ பெரிய ஆளா…? நீ என்னை வினின்னே கூப்பிடலாம்…. என்றாள். ஆனால் குமுதாவோ, “இல்லை அண்ணி நீங்க என்னை விட வயசுல பெரியவங்க…. எனக்கு அண்ணி முறை தானே ஆகணும்… அதனால சொல்றேன்…”
“முதல்ல உங்க பிரச்சனையை முடிக்கலாம்…. அப்புறம் இந்த அண்ணி பிரச்சனைக்கு வரலாம்… சரி நான் சொல்றத நீங்க கேப்பீங்களா…. நான் சொல்ற மாதிரி பண்ணா உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது…”
“என்ன எங்களுக்கு பிரச்சனையும் வராதா… நிஜமாவா நீ என்ன சொல்ற வினி…?”
“ஆமாண்ணா…. நீங்க ரெண்டு பேரும் நான் சொல்ற மாதிரி பண்ணுங்க….”
“என்ன பண்ணனும்…” என்று இருவரும் ஒருமித்த குரலில் கேட்டனர் அதற்கு வினிதா, “வேற என்ன பண்ணணும்… இந்த ஊரை விட்டு ஓடிப் போய்டுங்க… ஓடிப்போய் எங்கேயாவது ஒரு கோயில்ல தாலி கட்டிட்டு சந்தோஷமா இருங்க… அப்புறம் ஒரு வருஷத்துல ஒரு குழந்தையை பெத்துக்கிட்டு அதை தூக்கிட்டு இங்க வாங்க…. அப்புறம் உங்களை எல்லாம் ஏத்துப்பாங்க…” என்றாள் வினிதா.
“சூப்பர் ஐடியா… வேற லெவல்… இந்த மேடம் சொல்ற மாதிரியே கல்யாணம் பண்ணி ஒரு வருஷத்துக்கு அப்புறம் உங்க குழந்தை எடுத்துட்டு இந்த ஊருக்கு வாங்க… உங்க குழந்தையை முதல்ல வெட்டிட்டு, அப்புறம் உங்க ரெண்டு பேரையும் வெட்டி ஆத்துல போட்டுருவாங்க… அம்புட்டு நம்பிக்கை இவங்க மேல…” என்றபடி அங்கே வந்தான் வெற்றிமாறன். சத்தியமாக யாரும் இந்த நேரத்தில் வெற்றிமாறன் அங்கு வருவான் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divima