ஒரு நாள் சங்கரநாதன் வீட்டில் இருந்தவர்களிடம் நான் கொஞ்சம் வேலையாக வெளியில போயிட்டு வரேன் என்று சொன்னார். உடனே ரேணுகாவும், “எங்க மாமா போறீங்க இந்த வெயில் நேரத்தில….?” என்றார்.
“நான் போய் முடிச்சுட்டு வந்து சொல்றேன்….” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டார். அப்போது இங்கு வந்த ராஜேஸ்வரியிடம், “அத்தை மாமா எங்கே இவ்வளவு அவசரமா போறாரு இந்த வெயில் நேரத்தில….?” என்று கேட்டாள்.
அதற்கு ராஜேஸ்வரியும், “அவரைப் பற்றி உனக்கு தெரியாதா ரேணுகா….? எப்போவாவது இப்படி வேலைன்னு போவாரு… அப்புறம் வரும்போது நல்லா கள்ளு குடிச்சிட்டு வருவாரு…. அதுதான் உங்க மாமாவோட வேலை….” என்றார். “என்ன அத்தை இது…. மாமாக்கு வேணும்னா இங்கேயே வாங்கி வரச் சொல்லி குடிக்கலாமே…. இதுக்கு இந்த வெயில்லயா அத்தை போகணும்….?”
“அது அவரோட பழக்கமா போயிட்டு ரேணுகா…. கள்ளை இறக்கின உடனே குடிக்கணும்னு சொல்லுவாரு…. அதுவும் அவரோட கூட்டாளிகள் யாரையாவது பார்த்திட்ணாருனா அப்புறம் அவரை பிடிக்கவே முடியாது….. எப்போவாவது தானேனுதான் நான் அவருக்கு எதுவும் பேசுற இல்லை…. ஆனாலும் அவர் வந்ததும் முகத்தை தூக்கி வைச்சிட்டு இருந்தா மனுஷன் கெஞ்சிட்டு இருப்பாங்க….”
“அத்தை நல்ல வேலை பார்த்தீங்க நீங்க…..” என்று சிரித்தாள் ரேணுகா. “என்னம்மா பண்றது அப்படியே பழகிருச்சு….. ஆமா தயாளன் எங்க போயிட்டான் காலையில இருந்து ஆளையே காணலை…..?”
“அதுவா அத்தை அவர் வந்து டவுன் வரைக்கும் போயிருக்கிறார்…. பஞ்சு மில்லில் ஏதோ மெஷின் ஒன்று உடைஞ்சிடுச்சி…. இப்போ அதை வாங்கிட்டு வரணும் சொல்லி போய் இருக்காரு….”
“அப்படியா அப்போ சரிம்மா சரி…” இப்படியாக இருவரும் பேசிக் கொண்டு சமையல் வேலையை ஆரம்பித்தார்கள்.
சாரதாப் பாட்டி வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த மருமகள்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர். “ஏய் நீங்க எதுக்குடி இப்போ சிரிக்கிறீங்க….?”
“இல்லை அத்தை இத்தனை வருஷமா நாங்களும் பார்க்குறோம்… நீங்க மாமாவைத் திட்டும் போது மாமா அப்படியே அப்பாவி மாதிரியே முகத்தை வைச்சிட்டு இருப்பாரு… அதை பார்த்துதான் எனக்கு சிரிப்பா வருது….” என்றாள் ராகவி.
“ஆமா…. ஆமா அவரு முகத்தை அப்படியே வச்சுட்டா உங்க மாமா என்ன அப்பாவியா….?” என்றார் சாரதா.
அதற்கு சிரித்த திருநீலகண்டன், “சரி சரி நான் போயிட்டு வரேன் திட்டாத…. நீயும் மாசம் மாசம் இதையே சொல்ற…. நானும் மாசம் மாசம் அதையே சொல்றேன்…. நான் போய் கள்ளு குடிச்சிட்டு வரேன் கொஞ்சம் குடிச்சா தெம்பா ஒரு இதமா இருக்கும் அதுக்காக தான் போறேன். திட்டாத….” என்றார்.
சாரதாவும், “சரி சரி பத்திரமா போயிட்டு வாங்க….” என்றார். “இதுதான் என்னோட சாரதா….” என்று அவர் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றார் திருநீலகண்டன். மருமகள்கள் முன்னால் அவர் இவ்வாறு செய்ததும் சாரதாவிற்கு வெட்கமாக போய்விட்டது. மெல்ல தலையைக் குனிந்து கொள்ள, அதைப் பார்த்த வைதேகியும் ராகவியும், “அத்தை இங்க நடந்ததை நாங்க பார்க்கலபா….” என்றார்கள்.
“இவருக்கு இதே வேலையா போச்சு….” என்று சொல்லி சிரித்து விட்டு அவர் அறைக்கு சென்று விட்டார். வைதேகியும் ராகவியும் சிரித்துக்கொண்டு அவர்களுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
திருநீலகண்டன் வழமை போல அந்த கள்ளு குடிக்கும் இடத்திற்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எழுந்து நிற்க, “என்னலே கள்ளு இறக்கியாச்சா….?” என்று கேட்டார்.
அதற்கு அவர்களோ, “ஆமா ஐயா இப்போ தான் இறக்கினேன்…. இந்தாங்க உங்களுக்கு…” என்று சொல்லி ஒரு சிறிய பானையில் கள்ளைக் கொடுத்தார். அதைப் பார்த்ததும் மீசையை முறுக்கிக் கொண்ட திருநீலகண்டன், இன்னும் ஒரு பானையையும் சேர்த்து கேட்டார். “ஐயா உங்களுக்கு…..” என்று இழுத்தான். அவரோ, “சொல்றத கேளு…. கேட்டதைக் கொடுடா….” என்றார்.
அவர்களும் நமக்கு எதற்கு வம்பு என்று இருந்த சிறிய பானையையும் அவரிடம் நீட்டினார். அதை எடுத்துக் கொண்ட திருநீலகண்டன் அங்கிருந்து ஓரிடத்திற்குச் சென்றார். அங்கே இவருக்கு முன்னரே வந்து காத்திருந்தார் சங்கரநாதன். திருநீலகண்டன் வருவதைப் பார்த்ததும் எழுந்து, அவரிடம் சென்று ஒரு பானையை வாங்கிக் கொண்டார். இருவரும் சேர்ந்து வந்து மரத்தடியில் அமர்ந்து இரண்டு பானைகளையும் கீழே வைத்துக் கொண்டார்கள்.
“ஏலேய் நீலகண்டா நல்லா இருக்கியா….” என்று கேட்டார் சங்கரநாதன். அதற்கு திருநீலகண்டனும், “ஆமா சங்கரா… நான் நல்லா இருக்கிறேன்… நீ எப்படி இருக்க….?”
“நானும் நல்லாத்தான் இருக்கேன்…” என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த கல்லை காலி செய்தார்கள்.
“சங்கரா இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம்ம ரெண்டு குடும்பத்துக்கு தெரியாம இப்படி சந்திக்கிறது….?”
“ஆமா நீலகண்டா ஏதோ கள்ளக்காதலியை பார்க்க போற மாதிரி வர வேண்டியதா இருக்கு….” என்றதும் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
“என்ன பண்றது நம்ம பசங்க அப்படி…. பசங்களை எதிர்த்து நாம் எதுவுமே பண்ண முடியாது…. காலம் மாறும் அப்போ சேர்ந்து இதே மாதிரி எல்லாரும் பார்க்க நம்ம சந்தோஷமா இருக்கலாம்….” என்றார் திருநீலகண்டன்.
“ஆமா நீலகண்டா நானும் கண்ணை மூடறதுக்குள்ள அப்படி ஒருநாள் வராதா என்று தான் ஏங்கிட்டு இருக்கிறேன்….” என்றார் சங்கரநாதன்.
“சங்கரா கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத…. என் பொண்ணு ரேணுகா அங்க நல்லா தானே இருக்கிறா…. மாப்பிள்ளை அவளை நல்லபடியா பார்த்துக்கிறாருல்ல….”
“அதை ஏன் கேட்கிற நீலகண்டா…. உன் பொண்ணு என் பொண்ணு மாதிரி தான் வீட்ல இருக்கிறா… ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறா…. அது மட்டும் இல்லை தமிழ்ச்செல்வன், வினிதா எல்லாருமே நல்லா இருக்கிறாங்க… அதுவும் உன் பேத்தி வினிதா அப்பப்பா அவ வாயைத் தொறந்தா மூடவே மாட்டா… சரியான வாயாடி அவ….” என்று சொல்லி சிரித்தார். அதற்கு திருநீலகண்டனும், “என் பொண்ணைப் பார்த்து பேசணும் போல இருக்கு சங்கரா…. என்ன செய்றது இது எல்லாம் நல்லபடியா இருந்தால் குமுதாவை தமிழுக்கு கொடுத்து வினிதாவை வெற்றிக்கு கட்டி வச்சி என் வீட்டுக்கு மருமக்களாக்கி இருப்பேன்…”
“சரி யோசிக்காத நீலகண்டா… என்ன செய்றது இது நடக்கும் அதுதான் நடக்கும்… இதைப் போட்டு யோசிச்சி உனக்கு சரியில்லாமல் போயிடப் போகுது பார்த்து பத்திரமா இரு…”
“நீயும் பார்த்து கவனமா இரு சங்கரா…. நேரமாயிடுச்சி போவோமா…?” என்று திருநீலகண்டன் கேட்ட உடனேயே சங்கரநாதனும், “சரி நீங்க நீலகண்டா அப்போ அடுத்த மாசம் சந்திப்போம்….” என்றார்.
அப்போது, “ஏன் அடுத்த மாசம் சந்திக்க போறீங்க…. நாளைக்கே பஞ்சாயத்துல நீங்க ரெண்டு பேரும் சந்திக்கலாம்…..” என்ற சத்தம் கேட்டது. அங்க நிமிர்ந்து பார்க்க வெற்றிமாறனும் தமிழ்ச்செல்வனும் ஒருத்தர் தோளின் மேல் ஒருத்தர் கையைப் போட்டுக்கொண்டு நின்றனர். இவர்கள் இருவரையும் பார்த்த திருநீலகண்டனும் சங்கரநாதனும் அதிர்ச்சி அடைந்தார்கள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
“தாத்தா இங்க என்ன பண்றீங்க ரெண்டு பேரும்….?” என்றவாறு வெற்றிமாறனுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வன் அவர்கள் அருகில் வந்தான்.
“என்ன பண்றீங்க ரெண்டு பேரும் இங்கே….?” என்று மீண்டும் கேட்டான் வெற்றிமாறன். அதற்கு திருநீலகண்டனோ, “ஒன்னும் இல்லை வெற்றி…. கள்ளு குடிக்கலாம்னு வந்தேன்….” என்றார்.
இதை கேட்டதும் தாத்தா இருவரும், “ஏய் நாங்க ரெண்டு பேரும் பேசிக்குவோம்… உங்களோட ரெண்டு அப்பா அம்மா பேசாமல் இருக்கிறதுக்கு நாங்க என்ன பண்றது…? நாங்க ரெண்டு பேரும் அந்தக் காலத்திலேயே நல்ல நண்பர்கள்…. உங்க அப்பா அம்மாவோட சண்டைக்காக எல்லாம் எங்களோட நட்பை விட்டு விட முடியாதுல்ல….” என்றார் சங்கரநாதன்.
உடனே வெற்றிமாறனும், “அப்படி போடுங்க தாத்தா…. அப்போ நீங்க இதையே உங்க பசங்க கிட்ட சொல்லி இருக்கலாம்ல்ல… அப்போ ரெண்டு குடும்பமும் இவ்வளவு நாளைக்கு பிரிந்து இருக்காதே….” என்றான். அதற்கு திருநீலகண்டனும், “என்ன செய்றது வெற்றி… உன் அப்பாவும் இவன் அப்பாவும் நாங்க சொல்ற பேச்சைக் கேட்பாங்கலா… அதுதான் நாங்க பேசாம அமைதியாவே இருந்துட்டோம்…..” என்றார்.
அதற்கு தமிழ்ச்செல்வனும், “நீங்களும் தாத்தாவும் எப்படி ஃப்ரெண்ட்ஸோ அதே மாதிரி நானும் தமிழும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்…. எங்களோட நட்பும் உங்களுடைய நட்பு மாதிரித்தான். ஆனால் வெளியில தான் காட்டிக்க மாட்டோம்…. அவனுக்கு ஒன்னுன்னா நானும் எனக்கு ஒன்னுன்னா அவனும் உசுரக்கூட கொடுப்போம்…..” என்றான்.
தங்கள் பேரப்பிள்ளைகளை பெருமையாக பார்த்தனர் இருவரும். “தாத்தா நான் ஒன்னு கேட்கலாமா….?” என்றான் வெற்றிமாறன்.
“என்ன வெற்றி….?”
“இல்லை இந்த பிரச்சனை தீரவே தீராத தாத்தா….? நம்ம எல்லோரும் ஒன்னா ஒரே குடும்பமா இருக்க மாட்டோமா…?” என்றான்.
அதற்கு திருநீலகண்டன், “என்ன பண்றது வெற்றி…. இப்படியே இருந்து பழகிருச்சு…. இது தீருமானு கேட்டால் அதுக்கான பதில் எங்ககிட்ட இல்லை…. எங்களுக்கு அதே ஆசைதான்… அதைப் பற்றித்தான் இப்போ பேசிட்டு இருந்தோம்…. என்ன செய்வது உங்க ரெண்டு அப்பாக்களும் எடுக்க வேண்டிய முடிவு இது….” என்றார்.
அதை கேட்ட சங்கரநாதனும், “ஆமா வெற்றி நீலகண்டன் சொல்றது சரிதான்…. எங்களுக்குமே எங்க பேர பிள்ளைகளோட ஒண்ணா இருக்குறதைப் பார்க்க தான் ஆசை… என்ன பண்றது எடுக்க முடியலையே….” என்றார்.
“அது சரி…. ஆமா நாங்க ரெண்டு பேரு இங்க இருக்கிறதை நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க….?” என்று கேட்டார் திருநீலகண்டன்.
அதற்கு சிரித்த வெற்றிமாறன், “நாங்க ரெண்டு பேரும் இந்த வழியா வந்துகிட்டு இருந்தோம்…. அப்போதான் நான் இங்க மரத்துக்கு கீழே நீங்க ரெண்டு பேர் இருக்கிறதும் தெரிஞ்சது…. நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்கன்னு பார்க்கத் தான் வந்தோம்….”
“சரி…. சரி நாங்க ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிட்டு இருந்ததை உங்க வீட்ல போய் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க….” என்றார் சங்கரநாதன். இரண்டு பேரையும் பார்த்துச் சிரித்த வெற்றிமாறனும் தமிழ்ச்செல்வனும் ஒரே நேரத்தில், “சரி அப்படி நாங்க வீட்ல சொல்லாம இருக்கணும்னா நாங்க என்னெல்லாம் சொல்றோமோ அதெல்லாம் நீங்க பண்ணனும்….” என்றார்கள்.
“சரி சரி நீங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க அதை நாங்க பண்றோம்… ஆனால் வீட்ல மட்டும் சொல்லிடாதீங்கடா….” என்றார்கள். “சரி வாங்க போலாம்…” என்று தமிழ்செல்வன் சங்கரநாதன் தாத்தாவையும் வெற்றிமாறன் திருநீலகண்டன் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Wow super divima