என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 25

4.6
(11)

அத்தியாயம் : 25

ரேணுகாவோ தனது அறையில் இருந்து துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். “அம்மா…. அம்மா…. அம்மா….” என்று ஏலம் போட்டுக் கொண்டே வந்தாள் வினிதா. 

“வினி நான் இங்க ரூம்ல இருக்கிறேன் இங்க வா….” என்றார் ரேணுகா. வினிதாவும், “இங்க என்னம்மா பண்ற….?” என்று கேட்டவாறு உள்ளே வந்தாள்.

“பார்த்தா எப்படி தெரியுது. கழுவி காயப்போட்ட துணிகளை எடுத்து மடிச்சு வச்சுட்டு இருக்கிறேன்….” என்றார் ரேணுகா. அவர் அருகில் வந்திருந்த வினிதா, “குடும்மா நான் மடிச்சு தரேன்…” என்றாள். 

“என்ன நீ துணி மடிக்கிறியா….? கழுவி போடுற உன் துணியை நீ மடிச்சு வைக்க மாட்ட…. இப்போ வந்து என் துணியை மடிச்சு தர்றேன்னு சொல்ற…. என்ன வேணும்… காபி வேணுமா….?” என்று கேட்டார் வினிதாவிடம். 

“அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை… நீ தனியா கஷ்டப்படறியே… அதான் உதவி பண்ணலாமுன்னு வந்தேன்…”

“உதவி…. நீ எனக்கு உதவி பண்ண வந்த… ஏன்டி அன்னைக்கு வெங்காயம் வெட்டத் குடுத்தேன்னு அப்படி கிடந்து குதிச்ச…”

“அம்மா அது வெங்காயம்…. இது துணி வித்தியாசம் இருக்குல்ல….”

“வினி உன்னைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்…. சொல்லு உனக்கு இப்போ என்ன வேணும்….”

“ஒன்னும் இல்லை அம்மா வீட்டிலேயே இருக்க மாதிரி இருக்கு கோயிலுக்கு போயிட்டு வரலாமா….” என்றாள். 

“கொஞ்சம் விலகு….” என்ற ரேணுகா எழுந்து வந்து ஜன்னலில் இருந்து வெளியே பார்த்தார். 

“அம்மா நான் என்ன கேட்கிறேன்… நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…?”

“இல்லை நீ எப்ப பாரு ஆத்தங்கரை, மாந்தோப்பை, புளியந்தோப்பு, பம்பு செட்டுனு சுத்திட்டு இருப்ப இன்னைக்கு அதிசயமா கோயிலுக்கு போலாம்ன்ற…. அதுதான் மழை வருதான்னு எட்டிப் பார்த்தேன்…” என்றார் ரேணுகா. 

“அம்மா இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்…. ஏதோ இன்னைக்கு கோவிலுக்கு போகணும் போல இருந்துச்சு கேட்டேன்…. அதுக்கு இப்படி ஓவரா என்னை கேவலப்படுத்துற…..”

“ஏய் உனக்கு வேலை இல்லை நீ போற…. எனக்கு வேலை இருக்குடி…. வேணும்னா நீ போயிட்டு வா….”

“அதெல்லாம் முடியாது… என் ப்ரெண்ட்ஸ்க்கும் கோயிலுக்கு போக முடியாது… அப்போ நான் தனியே போலாமா…. நீயும் வா போயிட்டு வரலாம்….”

“நீ வேற என்னை போட்டு படுத்தாத வினி…. நைட்டுக்கு சமைக்கலனா அப்புறம் உங்க அப்பா வந்து தாம் தூம்னு குதிப்பாரு….”

“போமா எப்போ பாரு அப்பாக்கு பயந்துட்டு இருக்காத அம்மா… பெண்கள் எல்லோரும் சிங்கப் பெண்கள்னு பாடிருக்கிறாங்க….” 

“யாரு நானு சிங்கப்பெண் அட போடி நீ வேற நேரம் காலம் தெரியாமல் கேலி பண்ணிட்டு இருக்க….”

“உனக்கு இப்போ என்ன உன் வேலை முடிணும் அவ்வளவுதானே…. அம்மா கோயிலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் உனக்கு நான் ஹெல்ப் பண்றேன்… இப்போ கோயிலுக்கு போலாமா….”

“எதுக்குடி என்னைப் போட்டு இப்படி படுத்துற…. இப்போ எதுக்கு நீ கோவிலுக்கு போகணும்….?” என்று ரேணுகா கேட்க, “கோவிலுக்கு எதுக்கு போவாங்க விளக்கு போடத்தான்….”

“வினி நீ இப்படி பேசுவதெல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு…. நீ கோயிலுக்கு போறேன்னு சொன்னது கூட பரவாயில்லை…. ஆனால் நான் விளக்கு போட போறேன்னு சொல்றது தான் எனக்கு சந்தேகம் வருது…. நீ இத்தனை வருஷத்துல கோயிலுக்குப் போய் எப்போ விளக்கு போட்டு இருக்க….? கோயிலுக்கு போனாலும் சாமி கும்பிட்டு இருப்பியா…..? நேரா புளியோதரையும் பொங்கலும் கொடுக்கிற இடத்துல போய் நின்னுப்ப…. இன்னைக்கு நீ கோயிலுக்கு போகணும் விளக்கு போடணும்னு சொல்றதுல எனக்கு சந்தேகமா இருக்கு…. ஏதாவது வேலை பாக்குறியா வினி….?”

“அம்மா நான் உன் பொண்ணுமா எந்த தப்பும் பண்ணலை… கோயிலுக்கு போகத்தானே கூப்பிடுறேன்… ஏதோ ஓடிப்போக கூப்பிடுற மாதிரி பிகு பண்ற… இப்போ வாரியா இல்லையா….? வாம்மா ப்ளீஸ் என் செல்லம்ல….”

“சரி சரி வரேன்…. நீ போய் ரெடியாகு…” என்றார். 

“நான் இப்படித்தான் வருவேன் அம்மா…. நான் ரெடியா தான் இருக்கேன் நீ சீக்கிரமா ரெடியாகிட்டு வா….” என்றாள். 

“ஏய் நீ ரெடி ஆயிட்டடி நான் இப்படியே வர முடியுமா…. இரு குளிச்சிட்டு சாரி மாத்திட்டு வாரேன்….”

“சரி சரி சீக்கிரம் வாம்மா….” என்றவள் அங்கிருந்து தமிழ்ச்செல்வன் அறைக்குள் சென்றாள். 

“வினி அம்மாகிட்ட பேசிட்டியா…. கோயிலுக்கு வர சம்மதிச்சிட்டாங்களா….?”

“ஐயோ என்னால முடியலை தமிழு….” என்றவள் அந்த கட்டிலில் அமர்ந்தாள். 

“என்னடி அப்ப பிளான் கேன்சலா….?”

“நீ வேறடா… அம்மா கிட்ட போய் அம்மா கோயிலுக்கு போலாமான்னா என்னை சந்தேகமாவே பார்க்குறாங்க… ஏதோ கொள்ளை அடிக்கப் கூப்பிட்ட மாதிரி….” என்று அவள் சொன்னதும் சிரிக்க ஆரம்பித்தான் தமிழ்ச்செல்வன். 

“டேய் நீ சிரிக்காத அண்ணா…. அம்மாவை நான் மாந்தோப்புக்கு போக கூப்பிட்டு இருந்தா கூட சந்தோஷமா கிளம்பி வந்து இருப்பாங்க…. ஆனால் நான் கோவிலுக்கு போக கூப்பிட்டேன் பாரு…. என்னை சந்தேகமாவே கேட்கிறாங்க… கோயிலுக்கா நீயா…. எதுக்கு போறனு ஆயிரம் கேள்வி கேட்கிறாங்க…. அதுவும் விளக்கு போடன்னு சொன்னதும் அவங்க இன்னும் சந்தேகமா பார்த்து கேட்கிறாங்க…. நீ பொங்கலுக்கும் புளியோதரைக்கும் தானே கோயிலுக்கு போவ…. நீ விளக்கு போட போறதைப் பார்த்தா எனக்கு ஆச்சரியமா இருக்கேனு சொல்லிட்டு இருக்காங்க அண்ணா….”

“சரி இப்போ முடிவா என்னதான் சொன்னாங்க அம்மா…. கோயிலுக்கு போக வர்றாங்களா இல்லையா….?”

“அது எப்படி நான் கூப்பிட்டு வராம இருப்பாங்களா…. அதெல்லாம் ஓகே வரேன்னு சொல்லிட்டாங்க….”

“அப்பாடா அது போதும்….”

“ஆமா மாமாவும் கோவிலுக்கு வருவாங்களா….?”

“ஏய் நீ இப்போ எதுக்கு வெற்றியை பற்றி கேக்குற…?”

“சும்மா ஒரு ஜீகேக்கு….”

“அவன் வருவானா இல்லையான்னு யாருக்கு தெரியும்…. வேணும்னா நீ போன் பண்ணி கேளு….”

“என்ன நானா… எங்கிட்ட மாமா நம்பர் இல்லப்பா….” என்றாள். 

“உன்கிட்ட வெற்றி நம்பர் இல்லையா… இதை நான் நம்பணும்…”

“நெஜமா தமிழு என்கிட்ட மாமா நம்பரே இல்லை…”

“நம்பிட்டேன்…”

“நிஜமாவே இல்லை தமிழு உன்கிட்ட போய் சொல்லுவேனா…”

“சரி சரி நம்பிட்டேன்…. போ போ அம்மா ரெடியாகி வந்துருவாங்க….”

“மவனே நான் போறேன்… ஆனால் நான் வரும்போது சாக்லேட் ஃப்ளேவர்ல ஐஸ்கிரீம் இல்லை. உன்னோட ரீலு இன்னைக்கு அறுந்து போயிடும்….”

“சரிதான் போடி…” என்ற தமிழ்ச்செல்வன், ‘ஐஸ்கிரீம் வேணுமாம் ஐஸ்கிரீம்…. உன் வாய்க்கு ஐஸ்கிரீம் ஒரு கேடு…”

“இங்க பாரு தமிழு நான் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்க மாட்டேன்… பார்த்து நடந்துக்கோ…” என்றவள். அவன் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு ரேணுகாவிடம் ஓடிவிட்டார். 

“ஆ…. அம்மா வலிக்குது… இவளை இருடி இது எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் அப்புறம் இருக்கு உனக்கு….” என்று சொல்லிக்கொண்டு தலையை தடவி விட்டான் தமிழ்ச்செல்வன். ரேணுகாவும் ரெடியாகி வர வினிதாவும் அவருடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றாள். 

இங்கே வெற்றிமாறன் தாயையும் சித்தியையும் கோவிலுக்கு எப்படி அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்த கடவுளே உதவி செய்யும் எண்ணத்தில் இருந்து இருப்பார் போல.

ராகவியிடம் வந்த வைதேகி, “அக்கா எனக்கு என்னவோ மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு… நாம கோயிலுக்கு போயிட்டு வந்துடலாமா….?” என்று கேட்டார். அதற்கு ராகவியும், “அதுக்கு என்ன வைதேகி போய்ட்டு வந்துடலாம்…. வேலையையும் முடிச்சாச்சு தானே… வா போயிட்டு வந்துடலாம்… எனக்கும் கோயிலுக்கு போய் அந்த அம்மனை பார்த்துட்டு வந்தா மனசுக்கு நிம்மதியா இருக்கும்….”

“சரிக்கா அப்போ ரெடி ஆயிட்டு வாங்க போலாம்…” என்றார். 

“சரி ராகவி…” என்ற வைதேகி அவர் அறைக்கு சென்றார். இருவரும் தயாராகி வரும்போது குமுதா, “அம்மா எங்க போறீங்க ரெண்டு பேரும்….?” என்று கேட்டாள். அதற்கு அவர்களும், “நாங்க கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு போறோம் குமுதா…. நீயும் வரியா என்ன…?”

“இல்லை அம்மா…. நீங்க போயிட்டு வாங்க எனக்கு கொஞ்சம் காலேஜ் வொர்க் இருக்கு…” என்றாள். 

“சரி நீ உன்னோட வேலைய பாரு நாங்க போயிட்டு வந்திடுறோம்… நாங்க வர்றதுக்கு முன்னால் உன் அப்பாவும் பெரியப்பாவும் வந்தால் காபி போட்டு கொடுத்திடு….”

“சரிம்மா நீங்க போயிட்டு வாங்க நான் அதைப் பார்த்துக்கிறேன்…” என்றாள். இங்கு நடப்பதை பார்த்தும் பார்க்காதது போல நின்று கொண்டிருந்தான் வெற்றிமாறன். “வெற்றி….” என அழைத்தார் வைதேகி. 

“சொல்லுங்க சித்தி….” என்றவாறு வந்தான். 

“வெற்றி டிரைவர் யாரும் இல்லை… கோயில் கொஞ்சம் போயிட்டு வரலாம் காரை எடுக்க முடியுமா…?” என்றார். வெற்றியும், ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே, “சரி சித்தி அதுக்கு என்ன தாராளமா போகலாம்….” என்றவன் அவர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றான். 

செல்லும் வழியில் வசந்திக்கு தாங்கள் கோயிலுக்கு வந்து கொண்டிருப்பதாக மெசேஜ் போட்டான். வெற்றிமாறனின் மெசேஜை பார்த்த வசந்தி, “நான் கோவில்லதான்பா இருக்கிறேன்…” என்று பதில் அனுப்பி இருந்தார். “சரிங்கம்மா….” என்று பதில் அனுப்பிவிட்டு போனை வைத்தான் வெற்றிமாறன். 

அங்கே கோயிலில் வசந்தி ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார். வினிதாவுடன் கோயிலுக்கு வந்தார் ரேணுகா. வசந்தியை பார்த்ததும் அவர் அருகில் வந்தார். 

“வசந்தி நல்லா இருக்கியாடி….”

“வாரேணுகா நான் நல்லா இருக்கிறேன்…. நீ எப்படி இருக்க. நல்லா இருக்கிற….? சரி இப்போதான் வரியா….?”

“நான் நல்லா இருக்கிறேன்…. ஆமா வசந்தி வினிதா தான் கோயிலுக்கு போகணும்னு சொன்னா அதுதான் கூட்டிட்டு வந்தேன்….”

“அப்படியா சரி… முதல்ல போய் சாமியை கும்பிட்டு வா…. நாம அதுக்கப்புறம் பேசலாம்….” என்றார் வசந்தி. 

“சரி….” என்று சொல்லிவிட்டு ரேணுகா சன்னதிக்கு சென்றார். கை கூப்பி கடவுளிடம் தனது வழமையான வேண்டுதலான, ‘தன் அண்ணன் குடும்பத்துடன் சேர வேண்டும்’ என்ற வேண்டுதலை வைத்தார். கண்ணை மூடி அவர் வேண்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் மெல்ல அங்கிருந்து நழுவி புளியோதரை கொடுக்கும் இடத்தில் வந்து நின்றாள் வினிதா. 

அவளைப் பார்த்ததும் புளியோதரை கொடுப்பவர் சிரித்தார். பின் அவளுக்கு ஒரு தொன்னையில் புளியோதரையை வைத்து நீட்டினார். அவளும் சந்தோசமாக அதை வாங்கிக் கொண்டு, மறுபடியும் வந்து ரேணுகாவின் அருகில் நின்று கொண்டாள். கண் விழித்துப் பார்த்த ரேணுகா தன் மகள் கையில் புளியோதரை இருப்பதை பார்த்து அவளை முறைத்தார். “முறைக்காத அம்மா… அப்புறம் உனக்கு புளியோதரை தரமாட்டேன்…”

“ஆமா இந்த புளியோதரை தான் இப்போ எனக்கு வேணும்… ஏன்டி சாமி கும்பிடத்தானே என்னை கூட்டிட்டு வந்த… இப்போ வந்ததும் உன் வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்ட….” என்றார். 

“அம்மா புளியோதரை எல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடும்…. சாமியை அப்புறம் வேணும்னாலும் வந்து பார்க்கலாம்…. ஆனால் புளியோதரை கிடைக்காது… அதுக்காகத்தான் புளியோதரை வாங்கிட்டு அப்புறம் வந்து சாமியைப் பார்க்கிறேன்…” என்றாள் வினிதா. 

“சரி சரி சாமியைக் கும்பிடு…” என்று ரேணுகா சொன்னது கண்ணை மூடி கடவுளே வேண்டினாள் வினிதா. பின்னர் பூசாரி கொடுத்த விபூதியை வாங்கி, ரேணுகா வினிதாவின் நெற்றியில் வைத்தார். பின்னர் தனது நெற்றியில் வைத்துக் கொண்டார். 

“அம்மா அங்கே வசந்தி அத்தை இருக்காங்க…. நீ போய் பேசிட்டு வாம்மா…. நான் இங்கேயும் உட்கார்ந்து இந்த புளியோதரையை சாப்பிடுகிறேன்…” என்றாள். 

“வினி இது என்ன பழக்கம்…? அவங்க கூட வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டு போ…”

“பேசுறேன் அம்மா ஆனால் புளியோதரை அப்புறம் ஆறிடும்ல… அது சூடா இருக்கும் போது சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்…. நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆயிரம் பேசுவீங்க…. நான் எதுக்குமா நீங்க பேசுங்க நான் அப்புறம் வந்து பேசுறேன்….” 

“உன்னை என்ன பண்றேன் பாரு வினி வீட்டுக்கு வா…” என்று வினிதாவை முறைத்து விட்டு வசந்தியிடம் சென்றார் ரேணுகா.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 25”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!