ரேணுகாவும் வினிதாவும் வீட்டிற்கு வந்தனர். அங்கே ராஜேஸ்வரியும் சங்கர நாதனும் பேசிக் கொண்டிருந்தனர். “தாத்தா…. பாட்டி…” என்று அழைத்தவாறு வினிதா அவர்கள் இவருக்கும் இடையில் வந்து அமர்ந்தாள். அவர்களும் அவள் தலையை வருடி கொடுத்தனர்.
“ஏங்க நம்ம வீட்டு சின்னக்குட்டி பெரிய பொண்ணா சீக்கிரமே வளர்ந்துட்டால….”
“ஆமா ராஜி…. வினிதாக்கு ஒரு நல்லது நடத்திப் பாக்க ஆசையா இருக்குங்க….”
“அதுக்கு என்ன நல்ல மாப்பிளையைப் பாத்துட்டா போச்சு…” என்றார் சங்கரநாதன்.
இதைக் கேட்ட வினிதா, “இங்க பாருங்க பாட்டி… எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஆசையில்ல… உங்களுக்கு தேவைனா அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அழகு பாருங்க… என்னை ஆள விடுங்க…” என்றாள். ஆனால் அவர்களும், “அது எப்படி உன்னை வச்சுட்டு உன் அண்ணனுக்கு பண்றது…? அது சரி இல்லையே…”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா… யாராவது பொண்ணு பாக்குறன் பண்ணு பாக்குறேன்னு இந்தப் பக்கம் வரட்டும் மண்டைய உடைச்சு மாவிளக்கு போட்டுருவேன்…” என்ற வினிதா அறைக்குள் சென்று விட்டாள்.
“என்ன மாமா இது…? இந்தப் பொண்ணு இப்படி சொல்லிட்டு போறா…” என்றார் ரேணுகா.
“விடுமா அவ நம்ம கிட்ட தான் அவ வாயைக் காட்டுவா… தயாளன் கிட்ட எதிர்த்து பேச முடியுமா… அவனே சமாளிச்சுடுவான்… அவனாச்சு அவன் பொண்ணாச்சு…. முதல்ல மாப்பிள பாப்போம்… அதுக்கு அப்புறம் எப்படி சமாளிக்கணுமோ அப்படி சமாளிச்சு கட்டி வைக்கலாம்…” என்றார் ராஜேஸ்வரி. “சரியா சொன்னீங்க அத்தை… நான் போய் சமையல் வேலையை பாக்கிறேன்…” என்று சமையல் அறைக்குச் சென்றார்.
ராகவிக்கும் வைதேகிக்கும் நீண்ட நாட்களின் பின் ரேணுகாவுடன் மனம் விட்டு பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றிமாறன் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வேலையாக சென்று விட்டான். எப்போதும் இல்லாமல் இன்று முகத்தில் புன்னகை சிந்த வரும் மருமகள்களை பார்த்தார் சாரதா.
“என்ன மருமகளே வெளில போயிட்டு வந்ததும் முகம் எல்லாம் ரொம்ப பிரகாசமா இருக்கு என்ன விஷயம்…?”
“அது வந்து அத்தை கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வந்தோம்ல மனசு நிறைஞ்ச மாதிரி இருக்கு அதுதான் முகத்தில் தெரியுது போல அத்தை…” என்றார் ராகவி.
“அப்படியா சரி சரி… கோயிலுக்கு போய்ட்டு வந்தா மனசு சந்தோசமாத்தான் இருக்கும்…. சரிமா நீங்க போய் உங்க வேலையப் பாருங்க….” என்றார். அவர்களும், “நல்ல வேளை அக்கா…. அத்தை மேலும் ஏதாவது கேட்கவில்லை…” என்று சொல்லி அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள்.
அறைக்குள் வந்த வினிதாவுக்கு ஒரே யோசனையாக இருந்தது. ‘என்ன இது காலேஜ் முடிய முதல் இந்த வீட்ல நம்ம கல்யாணப் பேச்சு எடுக்குறாங்க… வினி என்ன பண்ணாலும் இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முடிவு எடுத்து விடாதே….’ என்று உறுதி எடுத்தாள் வினிதா.
ராகவியையும் வைதேகியையும் வீட்டில் விட்டுவிட்டு நேரே வெற்றிமாறன், தமிழ்ச்செல்வன் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கும் அந்த மலைக்கு வந்தான். வெற்றிமாறனைக் கண்டதும் தமிழ்ச்செல்வன், “வா மச்சான் என்ன இவ்வளவு நேரம்…” என்றான்.
“ஒன்னும் இல்ல மச்சான்…. கோயிலில் இருந்து அம்மாவையும் சித்தியையும் வீட்ல விட்டுட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு…”
“அது பரவாயில்ல வெற்றி… போன விஷயம் என்னாச்சு… அம்மாவும் அத்தைகளும் பேசினாங்களா…?”
“அதை ஏன் கேக்குற தமிழு… அத்தை, அம்மா, சித்தி மூணு பேரும் மனசு விட்டு ரொம்ப பேசினாங்க…. நம்ம பிளான் படிதான் எல்லாமே நடந்துச்சு…. இனிமேல் யாரும் யாருக்கும் பயப்படாம பாக்குற இடத்துல பேசுவாங்கன்னு நினைக்கிறேன்…..”
“வெற்றி இப்படி நம்ம நினைக்கிற மாதிரி எல்லாம் நடந்தா சந்தோஷம்தான்….”
“கவலைப்படாத தமிழ்… இவங்க எல்லாம் எதுக்காக பிரிஞ்சோம்னு தெரியாமலே பிரிஞ்சு இருக்கிறாங்க…அவங்களுக்கு உள்ளேயும் பாசம் எல்லாம் இருக்கும்ல அந்த பாசத்தை நம்ம வெளியில கொண்டு வந்துட்டா போதும்… அப்புறம் எல்லா தானா நடக்கும்….”
“அது என்னவோ உண்மைதான் வெற்றி…. எங்க காதலுக்காக நீ இவ்வளவு கஷ்டப்படுவதை பார்க்கும் போது கவலையா இருக்குடா…”
“இதுல கவலை பட ஒன்னும் இல்ல மச்சான்…. நம்ம குடும்பம் இரண்டும் ஒன்றும் சேர்ந்தா அதுவே எனக்குப் போதும்…. இதில எனக்கு என்ன கஷ்டம் இருக்கு…. நம்ம ரெண்டு குடும்பத்தை சேர்க்க பாடுபடுகிறோம் அவ்வளவுதான்…. எல்லாம் நல்லதே நடக்கும்….”
“நீ சொல்றது சரிதான் வெற்றி… பாப்போம் இவங்க எப்போது ஒத்துமையா இருக்காங்கன்னு…. ஆனா ஒன்னு வெற்றி ரெண்டு குடும்பமும் சேர்ந்து பெரியவங்க தாலி எடுத்து கொடுத்தா மட்டும் தான் குமுதா கழுத்துல தாலி கட்டுவேன்….”
“நீ நினைக்கிறது நிச்சயமா நடக்கும் தமிழ் யோசிக்காதே…”
“வெற்றி போலாமா… நான் உன்கிட்ட என்ன நடந்திச்சுனு கேட்கத்தான் இங்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன்….”
“சரி சரி போலாம் தமிழ்… பேசிட்டு இருந்ததில்ல நேரம் போனதே தெரியல… ஆமா எப்போதான் நம்ம ரெண்டு பேரும் யாருக்கும் பயப்படாம பேசுவோம்னு எனக்குத் தெரியல…. ஏன் வெற்றி நம்ம அம்மா, மாதிரி நாம ஏன் நடந்துக்க கூடாது… யாரும் பாத்திடக் கூடாதுனு நம்ம எதுக்கு இப்படி லவ்வர்ஸ் மாதிரி திருட்டுத்தனமா சந்திக்கணும்… அட ஆமா வெற்றி நான் முடிவு பண்ணிட்டேன்…. அவங்களுக்கு சொன்ன மாதிரி நம்ம ஏன் எல்லோரும் பாக்கும் போது பேசக்கூடாது….?”
“கண்டிப்பா தமிழ்… நீ மாமா கூட இருந்தாலும் சரி… நான் எங்க அப்பா கூட இருந்தாலும் சரி யாருக்குமே பயப்பட வேண்டாம்… நம்ம நண்பர்கள்னு நம்ம காட்டிக் கொள்ளலாம்….”
“ஓகே டன் மச்சான்….” என்று இருவரும் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டார்கள். இருவரும் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அவரவர் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்கள்.
காலையிலிருந்து ஏதோ யோசனையாக இருக்கும் வினிதாவையே பார்த்துக் கொண்டிருந்தார் அவள் தோழிகள். இடைவெளியில் அந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க, வினிதா மட்டும் அவர்களுடன் இருந்தாலும் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.
அதைப் பார்த்த அவளின் தோழிகளில் ஒருத்தி, “என்னடி நானும் பாக்குறேன் காலையிலிருந்து எதையோ யோசிச்சிட்டு இருக்கிற…?” என்று அவளிடம் கேட்டாள். அதற்கு அவளோ, “இல்லடி வீட்டில தாத்தா பாட்டி காலேஜ் முடிஞ்சதும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசிட்டு இருந்தாங்க நைட்டு…. அது தான் அதே யோசனையாக இருக்கு….”
“என்னது உனக்கு கல்யாணமா…? என்னடி சொல்ற அவங்க சொன்னாங்கன்னா நீ என்ன சொன்ன அதுக்கு….?”
“நான் என்ன சொல்லுவேன்…. உங்களுக்குத் தேவைனா அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க…. எனக்கு இப்ப கல்யாணம் பண்ற ஐடியா இல்லைன்னு சொல்லிட்டேன்….”
“வினி அப்போ நீ கல்யாணம் பண்ணினா வெற்றி அண்ணேன் கூட ஜாலியா பேச முடியாதே…. அப்போ என்ன பண்ணுவ….”
“இப்போ வேணாம்னா சரி… ஆனா எப்பவாவது அவங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கத் தானே வேணும்…. அதுக்கு அப்புறம் என்ன பண்ணுவ….?”
“என் மாமா கூட பேசுறது விளையாடுறதை யாராலும் தடுக்க முடியாது…. எத்தனை பேர் வந்தாலும் மாமா தான் ஃபர்ஸ்ட்….”
“வினி இப்ப என்ன சொன்ன…?”
“என்ன சொன்ன ஏன் மாமா கூட விளையாடுறதையோ பேசுவதையோ யாராலையும் தடுக்க முடியாதுன்னு சொன்னேன்….”
“இது கேக்குறதுக்கு நல்லா இருக்கு… ஆனா நிஜத்துல நடக்காது…. உனக்கு வரப்போற புருஷன் நீ அண்ணன் கூட பேசுறதை சந்தேகப்பட்டானா உன் வாழ்க்கையே போயிடும்… ஒண்ணு நீ வெற்றி அண்ணனை கல்யாணம் பண்ணிக்க… இல்லைனா வெற்றி அண்ணாக்கிட்ட இருந்து கொஞ்சம் விலகியே இரு…. அதுதான் உனக்கும் நல்லது… அவருக்குமே நல்லது….”
“இங்க பாருங்கடி…. இப்படி எல்லாம் பேசாதீங்க… நான் மாமாகூட பேசறதை தடுக்க முயற்சி பண்ணா அதுக்கப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்….”
“நாங்க உன்கிட்ட கேட்டோமே உனக்கு வெற்றி அண்ணா மேல காதல் ஏதாவது இருக்கானு…. நீ இல்லைன்னு சொன்னே ஆனா இப்போ இப்படி பேசுற….?”
“கொஞ்சம் அமைதியா இருங்கடி… எனக்கு காதல் எல்லாம் இல்ல… ஆனா மாமா மேல எனக்கு உரிமை இருக்கு…”
“சரி உனக்கு வரப்போற புருஷன் கிட்ட நீ சம்மளிச்சிடுவன்னு வை… இதே வெற்றி அண்ணன் பொண்டாட்டி நாளைக்கு வந்து நீ எப்படி என் புருஷன் கூட அப்படி பேசலாம்னு கேட்டா நீ என்ன சொல்லுவ…? அந்த இடத்துல நீ எட்டித் தான் நிக்கணும்…. இல்லைனா வெற்றி அண்ணன் குடும்பத்துக்கே உன்னால பிரச்சனை வந்துரும்…”
“அது எப்படி டி முடியும்….? இத்தனை வருஷம் நான் தானே மாமா கூட ஜாலியா பழகுவேன்…. இப்போ அவங்க வந்து கேட்டவுடனே நான் என்னோட மாமாவை விட்டுக் கொடுத்துவிடுவேனா…?”
“ஏய் என்னடி லூசு மாதிரி பேசுற… ஒரு பொண்டாட்டினா அப்படித்தான் இருப்பா… நீ தள்ளித் தான் நிக்கணும்…. வினி நீ நல்லா யோசிச்சுக்கோ வெற்றி அண்ணன் கிட்ட இருந்து நீ இப்ப விலகிக்கிறதுதான் நல்லது… அதைத்தான் நான் மறுபடியும் உனக்கு சொல்றேன்….”
“முடியாதுடி என்னால முடியாது… வெற்றி மாமா கிட்ட இருந்து என்னால விலகி இருக்க முடியாது…. நான் இப்படித்தான் இருப்பேன்….”
“இப்படித்தான் இருப்பேன்னா அப்போ நீ அவர கல்யாணம் பண்ணிக்கோ… அப்படி இல்லைனா கஷ்டம் வினி… உனக்கு கல்யாணமானாலும் அவருக்கு கல்யாணமானாலும் உன்னால எப்பவும் இப்படி இருக்க முடியாது…. அது பின்னாடி வேற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்…”
“ஏய் என்னைப் போட்டு குழப்பாதீங்க….”
“நாங்க உன்னை குழப்பல வினி… குழம்பியிருக்கிற உன்னை தெளிவுபடுத்தப் பார்க்கிறோம்…. நல்லா யோசிச்சு நீ தான் முடிவு எடுக்கணும்….”
“என்னடி நீங்க எல்லாம் இப்படி சொல்லிட்டீங்க….”
“வினி நாங்க சொல்றத சொல்லிட்டோம்… அப்புறம் முடிவெடுக்க வேண்டியது நீதான்… நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு… இப்ப வா கிளாசுக்கு போலாம்…” என்று அவளை அழைத்துக் கொண்டு கிளாசுக்கு சென்றனர். வகுப்பில் இருந்தாலும் ஒரு பக்கம் அவளது மனமோ வெற்றிமாறனைப் பற்றியே யோசித்து கொண்டிருந்தது.
அன்று மாலை காலேஜ் முடிந்து திரும்பி வீட்டிற்கு வரும் வழியில் எதிரில் வெற்றிமாறன் தனது புல்லட்டில் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் வினிதாவின் தோழிகள் அவளிடம், “வினி வெற்றி அண்ணா வராங்க…” என்று சொன்னார்கள்.
ஆனால் வினிதாவோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். அவள் அருகே வந்த வெற்றிமாறன் புல்லட்டை நிறுத்தினான். “ஓகே வினி நீ அண்ணா கூட பேசிட்டு வா நாங்க கிளம்புறோம்…” என்று சொல்லி சிரித்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றார்கள்.
‘இது என்னடா புது பழக்கமா இருக்கு… இவளுகளுக்கு என்ன ஆச்சு…’ என்று யோசித்த வெற்றிமாறன் வினிதாவின் அருகில் வந்து புல்லட்டை நிறுத்தி விட்டு, “ஏய் குண்டச்சி என்னடி பார்த்த உடனே மாமா மாமான்னு கத்திட்டு இருப்ப… இன்னைக்கும் இவ்ளோ அமைதியா இருக்க…. என்ன காலேஜ்ல யாராவது வம்பு பண்ணாங்களா… இல்ல அத்தை கிட்ட ஏதும் அடிவாங்கிட்டியா என்ன…?” என்று அவளிடம் கேட்டான்.
ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றாள் வினிதா.
“ஏய் உன்கிட்டதான்டி கேக்குறேன்… என்ன காது அவுட் ஆயிட்டா சொல்லு….” என்று கேட்க அதற்கு வினிதா சொன்ன பதிலில் அதிர்ச்சி அடைந்தான் வெற்றிமாறன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Appidi enna sinnadi