என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 03

4.8
(15)

அத்தியாயம் : 03

அடுத்த நாள் காலையில் ஊரில் மாரியம்மன் கோயிலில் சந்தன மாலை சாற்றும் நிகழ்வு நடைபெற இருந்தது. ஊரில் உள்ள எல்லோரும் அந்த அம்மனின் அழகான அலங்கார உற்சவத்தைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றவாறு பக்தி பரவசத்துடன் அம்மனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அம்மனின் அலங்கார உற்சவங்கள் நல்லபடியாக முடியும் தருவாயில், அங்கே சோதனை ஆரம்பமாகியது. அம்மனின் கழுத்தில் இருந்த மாலையை யாருக்கு கொடுத்து முதல் மரியாதை செய்வதென்ற கேள்வி அங்கே வந்தது. எப்போதும் போல திருநீலகண்டன் அவர்களின் குடும்பத்தின் வாரிசான சுந்தரத்திற்கு கொடுப்போம் என்று ஒரு சிலரும், இல்லை சங்கர நாதனின் வாரிசான தயாளனுக்கும் கொடுப்போம் என்று இரண்டு பிரிவினரும் சத்தம் போட ஆரம்பித்தனர். 

இதைப் பார்த்த வினிதா, ‘ஐயோ கடவுளே… ஆரம்பிச்சிட்டாங்களா… வந்தமா சாமியை கும்பிட்டமா… புளியோதரையை வாங்கி ஒரு புடி புடிச்சமான்னு இல்லாம மாலைக்கு சண்டை போடுறாங்களே… சம்மந்தப்பட்ட ரெண்டு பேரும் அமைதியாக இருக்கும் போது, இவனுங்களுக்கு என்ன வந்திச்சு… அம்மா தாயே இவங்க சண்டையை முடிச்சி விட்டுடு… அங்க சுடச்சுட புளியோதரை இருக்கு… லேட்டாச்சினா ஆறிப்போயிடும்… சாப்பிட முடியாது…’ மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டு மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்தாள். 

அவளது வேண்டுதல் அம்மனுக்கு கேட்டு விட்டது போல. அங்கே நின்றிருந்த ஒரு சிறுமி, “இரண்டு பேருக்கும் சேர்த்தே மாலையை போடுங்க…” என்றாள். உடனே அங்கே நின்றிருந்தவர்களும், “அப்பிடியே பண்ணிடலாம்…” என்றார்கள். வினிதாவும், “எதை பண்றதா இருந்தாலும் சீக்கிரமா பண்ணுங்க…” என்றவள் பார்வை புளியோதரையிலேயே இருந்தது. 

‘இவ எல்லாம் இப்படி பேச மாட்டாளே…’ என்று நினைத்துக் கொண்டே அவளைப் பார்த்த வெற்றிமாறன், அவள் பார்வை போகும் இடத்தைப் பார்த்து விட்டான், ‘அட புளியோதரைக்கு செத்ததே… இன்னும் நீ மாறவே இல்லையா…?’ என நினைத்தவன் சிரித்துக் கொண்டான். அதைப் பார்த்த வெற்றிமாறனின் நண்பர்கள், “மாப்ளை நீ இப்போ அந்த வினிதா பொண்ணை பார்க்கல தானே…” என்றனர். 

“ஆமா பார்க்கல மச்சான்… பொண்ணா அது… அவளை மனுசன் பார்ப்பானா…?” என்றான். 

“ஓஓஓஓ அப்படியா… ஆனால் இந்த மஞ்சள் புடவையில அழகா இருக்கு வினிதா…”

“மஞ்சளா… இல்லடா மச்சான் அது சிவப்பு…” என்று கூறியவன் நாக்கை கடித்தான். அவனது தோளில் தட்டியவர்கள், “ஏன் மாப்பிளை நீதான் அந்த பிள்ளையை பார்க்கவே இல்லைனு சொன்ன… இப்போ அது கட்டியிருக்கிற புடவை நிறத்தை சொல்ற…?”

“நான் ஒண்ணும் அந்த பஜாரியை பார்க்கல மச்சான்… அது பக்கத்துல நின்னுகிட்டு இருக்குல அந்த பொண்ணை பார்த்தேன்… அப்போ பார்வை லைட்டா அவ மேல போச்சு…”

“ஏதே வினிதா பக்கத்துல நிற்கிற அந்த அறுபது வயசு கிழவியைத்தான் நீ இவ்வளவு நேரமும் பார்த்த…” என்றவர்கள் அவனை கலாய்த்து தள்ளினார்கள். 

சுந்தரத்திற்கும் சங்கரநாதனுக்கும் ஒன்றாக மாலை மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க அங்கிருந்து சென்றனர். வினிதா அவளது தோழிகளை இழுத்துக் கொண்டு புளியோதரை வாங்க வரிசையில் நின்றாள். திருநீலகண்டனும் சாரதாவும் பூஜை முடிந்ததும் அங்கிருந்து சென்று விட்டனர். சுந்தரமும் குசேலனும் தங்கள் தங்கை ரேணுகாவைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் அருகில் சென்று பேச முடியாத நிலையில் இருப்பதை நினைக்கும் போது, அவர்கள் உள்ளமும் துடி துடித்தது. அப்படியே ரேணுகாவிற்கும் இருந்தது. தந்தைக்கு இவள் மீது பிரியம்தான் என்றாலும், சில விஷயங்களுக்கு தடை போட்டு விடுவார். ஆனால் தங்கை ஆசைப்பட்டால் அந்த விஷயத்தை எப்படியாவது நிறைவேற்றி விடுவார்கள் சுந்தரமும் குசேலனும். அதன் பிறகு தந்தையிடம் ஏச்சுகளும் வாங்கியது உண்டு. 

அப்படி பாசமாக வளர்த்த அண்ணன்களை தூரத்தில் இருந்தே பார்க்கும் நிலை.. அவளது அண்ணிகள் இருவரும் ரேணுகாவிற்கு தோழிகள் போலவே. அதிலும் பெரிய அண்ணி ராகவி ரேணுவை தனது பிள்ளை போல பார்த்துக் கொள்பவள். இன்றோ மூன்றாம் நபரைப் போலவும் பேச முடியாது விலகி நிற்கின்றனர். மனசில் வேதனை அழுத்த அங்கிருந்து நகர்ந்து கோயிலின் பின்புறம் வந்து நின்றார் ரேணுகா.

ராகவியும் வைதேகியும் கடைகளை சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும் போது அங்கே ஒரு கடைக்காரரிடம் சண்டை போட்டுக் கொண்டு நின்றிருந்தாள் வினிதா. அவர்கள் அங்கே வந்தனர். 

“யோவ் மரியாதையா சொன்ன மாதிரியே… சொன்ன விலைக்கு இதை தர்ற… இல்லைனு வச்சிக்கோ உன் கடையில இந்த சாமான்கள் இருக்கும்…. கடை இருக்கும்… வியாபாரம் நடக்கும்… ஆனால் அதைப் பார்க்க நீ இருக்கமாட்ட… எப்படி வசதி…?”என்று அவரின் ஷர்ட் காலரைப் பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அங்கே வந்த ராகவிக்கும் வைதேகிக்கும் வினிதாவைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. அங்கே கூட்டம் கூடுவதைப் பார்த்த கடைக்காரர், “அம்மா நீங்க எடுத்திருக்கிறது ரொம்ப விலைமா… ப்ளீஸ்மா ஐந்நூறுவா பொருளை வெறும் நூத்தம்பதுக்கு கேட்கிறீங்கமா…. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…?” என்றார். இப்படிக் கேட்டு சும்மா இருந்த வினிதாவிற்கு சலங்கையை கட்டிவிட்டார் அந்த கடைக்காரர். 

“எவ்வளவு தைரியம் இருந்தால் எனக்கு மனசாட்சி இருக்குதானு கேட்பே…?”என்று தாவணியை தூக்கி சொருகிக் கொண்டு சண்டைக்கு செல்பவளை பின்னால் இருந்து பிடித்தார் ராகவி. வினிதா தனது தோழிதான் பிடிப்பதாக நினைத்து, “என்னை விடுடி… இவனை ஒரு வழி பண்ணாமல் போகல நான் வினிதா இல்லை…” என்றவள் பின்னால் திரும்ப அங்கே ராகவி நின்றிருந்தார். அவரைப் பார்த்தாள் பிறகு தன்னைப் பார்த்தாள். மீண்டும் அவரைப் பார்த்து முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரித்தவள், “அத்தை…” என்றாள். 

“அத்தையேதான்… வைதேகி அவரு கேட்ட பணத்தை கொடுத்திடு…” என்று சொல்ல வைதேகியும் பணத்தைக் கொடுத்து, வினிதா ஆசைப்பட்ட பொருளை அவளுக்கு வாங்கிக் கொடுத்தனர். கடைக்காரரும், ‘தப்பிச்சோம்டா சாமி…’ என நினைத்துக் கொண்டு கடைக்குள் சென்று விட்டார். 

வினிதாவை அங்கிருந்து ஒரு பக்கம் இழுத்து வந்தனர்.” வினி கண்ணு எதுக்குடா இப்படி சண்டை போடுற…?”

“அதெல்லாம் ஜாலிக்காக அத்தை…”

“வாயாடி… சரி பார்த்துப் போ நாம பேசுறதை யாரும் பார்த்தா பிரச்சனையாயிடும்….” என்றார். 

“பார்த்தா பார்த்திட்டு போகட்டும் அத்தை… நான் இருக்கிறன்ல தைரியமா இருங்க…” 

“இல்லூ வினிமா ஏதாவது பிரச்சனையாயிடும் நாங்க வர்றோம்…” என்றார் வைதேகி. 

“எல்லாம் சரியாகிவிடும் அத்தைமார்களே…” என்று சொல்லி அவர்கள் இருவரின் கன்னத்திலும் முத்தம் இட்டாள். அவர்களும் இவளை அணைத்துக் கொண்டனர். அவளது தோழிகளுடன் சென்று விட்டாள். 

வெற்றிமாறனும் அவனின் நண்பர்களும் கோயில் கொடுக்கும் அன்னதானப் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவனின் நண்பன் ஒருவன், “ஏன் மச்சான் நம்மளோட வீட்டில எப்படி விதவிதமா சமைச்சாலும் இந்த கோயில்ல வாங்கிச் சாப்பிடுற அன்னதானத்திற்கு ஈடாதுல்ல…”

“அது என்னவோ உண்மைதான் மச்சான்… எனக்கும் அன்னதான சாப்பாடு ரொம்ப பிடிக்கும்…” என்றான். இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டு சாப்பாட்டை ஒரு புடி பிடித்துக் கொண்டு இருந்தனர். சாப்பிட்டு முடியும் தருவாயில் அங்கிருந்தவர்களுக்கு பாயாசம் கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு எடுக்கச் சென்றனர். வெற்றிமாறன், “எங்கப்பா பாயாசம்…? சாப்பிட்டு முடிந்து எவ்வளவு நேரமாச்சு… சீசீக்கிரமா பாயாசத்தை எடுத்துட்டு வாங்கடா…” என்றான். அந்த வழியாகச் சென்ற வினிதா இதைக் கேட்டு விட்டாள். பின்னர் சுற்றும் முற்றும் பார்த்தாள். தமையனும் தந்தையும் அங்கே இருக்கிறார்களா என்று. பின்னர் வெற்றி மாறனின் அருகே வந்தாள். அவளைக் கவனிக்காமல், “எவ்வளவு நேரம்டா பந்தியிலேயே காத்திட்டு இருக்கிற… பாயாசத்தை கொண்டு வாங்கடா…” என்றான். இதைக் கேட்ட வினிதா, “மாமோய் பாயாசம் இல்லை… பாய்சன் இருக்கு சாப்பிடுறியா மாமா…?” என்றாள். 

“ஏய் உன்னை யாருடி இங்க வரச் சொன்னது…?”

“இது என்னங்கடா வம்பா போச்சு…இது கோயில் பொதுச் சொத்து… இங்க யாரு வேண்டுமானாலும் வருவாங்க போவாங்க மாமா… யாரு வரணும் வரக்கூடாதுனு நீ சொல்லாத… ஓசியில சாப்பிட வந்துட்டு இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…” என்றாள். 

“இங்காரு சாப்பிடும் போது தொல்லை பண்ணிட்டு.. ச்சீபே…” என்றான். 

“மாமா என்ன தைரியம் இருந்தால் என்னை ச்சீ பேனு சொல்லுவ….?” என்றவள் அங்கும் இங்கும் பார்த்து விட்டு அவனின் இடத்தில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் ஊற்றினாள். திடீரென நடந்ததால் வெற்றிமாறனுக்கு என்ன செய்வது தெரியாமல், தனக்கு முன்னை நின்றவள் புடவை முந்தானையை எட்டிப் பிடித்தான். பின்னர் அதைக் கொண்டு தனது முகத்தை துடைத்தான். வினிதா அவனிடம் இருந்து முந்தானையை இழுக்க முயன்றாள். 

“மாமா விடுடா… யாராவது பார்க்கப் போறாங்க…. ஏதாவது தப்பாயிடும்…”

“பொண்ணா அடக்கமா இருக்கிறதை விட்டுட்டு எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டு திரியுற…?”

“இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்… விடு மாமா…” என்றாள். அவனும், “இந்த ஒரு தடவை உன்னை மன்னிச்சு… எப்படி மன்னிச்சு விடுறேன்…” என்ற வெற்றிமாறன் அவளை விட்டான். 

“என்னையவே கெஞ்ச வச்சிட்டல…” என்ற வினிதா, வெற்றி மாறனின் நண்பனின் இடத்தில் வைக்கப்பட்ட இருந்த தண்ணீரை எடுத்து மீண்டும் வெற்றி மாறன் மீது ஊற்றியவள், “வெவ்வவெவ்வவே… என்னை நீ மன்னிக்கப்போறியா மாமா… எப்படி என்னோட அபிஷேகம் நான் எப்பவும் சிக்க மாட்டேன்…” என்றவள் அங்கிருந்து ஓடி விட்டாள். அவளைப் பார்த்து, “உனக்கு இருக்குடி…” என்ற வெற்றி மாறன் கைகளை கழுவி விட்டு அங்கிருந்து சென்றான். 

கோயிலை சுற்றி தனது தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள் குமுதா. அங்கிருந்த மரத்தின் கீழே சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பிறர் அறியாதவாறு அழுது கொண்டு இருந்தார் ரேணுகா. அதைப் பார்த்த குமுதா, அவரிடம் போகலாமா… வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டு நின்றவள். சரி பார்த்துக்கலாம் என்று தோழிகளை அழைத்தாள். 

“குமுதா உங்க ரெண்டு குடும்பத்துக்கும் சண்டைல.. அப்படி இருக்கையில் நீ எங்கடி அவங்ககிட்ட போற…..?”

“என்னதான் இருந்தாலும் அவங்க என்னோட அத்தை… அவங்க இப்படி அழுதிட்டு இருக்கிறதைப் பார்த்தா எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு… பாவம் அத்தை நான் போய் பேசிட்டு வர்றேன்… யாராவது வந்தா எனக்கு குரல் கொடுங்க…”

“குமுதா பார்த்து…”

“அதெல்லாம் பார்த்துக்கலாம்….” என்று கையைத் தட்டி விட்டவள், மெல்ல ரேணுகாவின் அருகே சென்றாள். மரத்தில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடியபடி இருந்த ரேணுகாவின் அருகே வந்து இருந்தாள். ரேணுகாவின் முகத்தில் இருந்து கண்ணீர் வடிந்தது. 

 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 03”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!