குமுதா பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வனின் போன் அடித்தது. “கொஞ்சம் இரு குமுதா…” என்று தமிழ்செல்வன் சொல்லிவிட்டு போன் எடுத்துப் பார்க்க வெற்றிமாறன் தான் அவனுக்கு அழைத்திருந்தான்.
“குமுதா வெற்றி தான் கூப்பிடுறான்….” என்றவன் ஃபோனை ஆன் பண்ணி காதில் வைத்தான்.
“ஓகே பார்த்து பத்திரமா போயிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு…”
“சரி மாமா…நான் வரேன்….” என்றவள் அங்கிருந்து செல்ல, தமிழ்ச்செல்வன் பைக்கை எடுத்துக் கொண்டு வெற்றிமாறன் சொன்ன மலைக்கு வந்தான்.
அங்கே இரு கைகளையும் தலைக்கு வைத்து காலை நன்றாக நீட்டியவாறு அந்த மலையின் மீது படுத்து இருந்தான் வெற்றிமாறன். தமிழ்ச்செல்வன் அவன் அருகில் வந்து அவனைப் போலவே படுத்துக்கொண்டான். இருவரும் எதுவும் பேசவில்லை ஒரு நீண்ட மௌனம் ஒன்று அங்கு நிலவியது. வெற்றிமாறன் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பி தமிழைப் பார்த்தான்.
“தமிழ் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…. ஆனா எப்படி பேசுறன்னு தெரியல….”
“சொல்லு மச்சான் உன் மனசு ஏதோ குழப்பத்தில் இருக்கு போல இருக்கு…”
“எப்படி தமிழ் அப்படியே சொல்ற…. என் மனசு குழப்பத்திலதான் இருக்கு…”
“அதான் வெற்றி நான்… உன்னப் பற்றி எனக்கு தெரியாதா சொல்லு என்ன பிரச்சனை உனக்கு…?”
“மச்சான் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது உன் தங்கச்சியால தான் எனக்கு பிரச்சனையே வரும்….”
“என்னடா சொல்ற வினியால் உனக்கு பிரச்சனையா… அப்படி என்ன பண்ணா உன்கிட்ட…?”
“மச்சான் நான் சொல்றதை கேட்டு நீ கோபப்படக்கூடாது….”
“இல்லடா சொல்லு என்ன பண்ணா….?”
“அது வந்து நான் இப்ப வர்ற வழியில உன் தங்கச்சி வந்தா… பாக்க ரொம்ப அப்சட்டா நடந்து வந்துட்டு இருந்தால ஏதும் பிரச்சினை இருக்கும்ன்னு நினைச்சு நான் பைக்கை நிப்பாட்டி என்னன்னு கேட்டேன்…. அதுக்கு என்னை கொஞ்ச நேரம் பாத்திட்டு இருந்தவ ஐ லவ் யூ மாமான்னு சொல்லிட்டா…..”
“மச்சான் இப்ப நீ என்ன சொன்ன…என் காதுல வேற மாதிரி கேட்டுச்சு….”
“உன் தங்கச்சி என்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டாடா…”
“வாவ் சூப்பர் மாப்ள….” என்றான் தமிழ்ச்செல்வன்.
“டேய் அவ தான் லூசுன்னு பார்த்தா நீ அவளை விட லூசா இருக்க….”
“என்ன மச்சான் சொல்ற…?”
“என்ன நொள்ள மச்சான்…. நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்க….?”
“டேய் என் தங்கச்சியே நீ கட்டிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை…. அம்மா கூட இதை கேட்டா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவாங்க…. வெற்றி நான் நிஜமாத்தான் சொல்றேன் இப்ப கூட குமுதாகிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது, குமுதா சொன்னா வினிதா அண்ணி எங்க வீட்டுக்கு வந்த நல்லா இருக்கும்ல்ல மாமான்னு….”
“டேய் புரியாம பேசாதடா… ஏற்கனவே குடும்பம் ரெண்டும் பகையா இருக்கு… இதுல உங்க ரெண்டு பேர வேற கல்யாணம் பண்ணி வைக்கணும்…. இப்போ நான் வேற அவளை லவ் பண்ணி… அது வேற பிரச்சனை ஆயிடுச்சின்னா என்னடா பண்றது…?”
“அய்யோ வெற்றி பிரச்சனை வந்தால் வரும்போது பாத்துக்கலாம்…. சரி அத விடு… நீ என்ன நினைக்கிற உனக்கு உண்மையா வினிதாவை புடிச்சிருக்கா இல்லையா…?”
“எனக்கு தெரியல மச்சான்… சரி நீ உனக்கு வேண்டிய டைம் எடுத்துக்கோ…. யோசிச்சு பாரு உனக்கு நிஜமாவே வினிதாவை பிடிச்சிருக்குனா பிடிச்சிருக்குன்னு சொல்லு…. இல்ல உனக்கு அவளை பிடிக்கலனா பிடிக்கலைன்னு சொல்லு எந்த பிரச்சனையும் இல்லை…. ஆனா அவ அதை ஏத்துக்குவானு நினைக்கிறியா….? அவளைப் பற்றி என்னை விட உனக்குத் தான் நல்லாத் தெரியும்னு நான் நினைக்கிறேன்…. நீயே யோசிச்சு முடிவெடுத்துக்கோ மச்சான்… இதுல நான் சொல்றதுக்கு எதுவுமே இல்ல…. எனக்கு ஒரு அண்ணனாவும் சரி உன்னோட நண்பனாவும் சரி நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா முதல்ல சந்தோஷப்படப்போறது நான் தான் மச்சான்….”
“புரியாம பேசாதடா….”
“இல்ல மச்சான் நான் புரிஞ்சுதான் பேசுறேன்…. நீ இப்ப கண்டிப்பா ஒரு முடிவு எடுத்தே ஆகணும்… ஏன்னா வினிக்கு அப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாரு….”
“மச்சான் என்ன சொல்ற நீ….?”
“ஆமாடா எங்க பாட்டி வேற அவங்க இருக்கும் போதே நம்ம வீட்ல ஒரு நல்லது நடக்கணும்னு எங்க அப்பா கிட்ட சொன்னாங்க…. அப்பாவும் வினிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலான்னு முடிவு எடுத்துட்டாங்க…. ஆனா வினிதா அதுக்கு ஒரு ஆட்டம் ஆடினா பாரு…”
“மாமா ஒன்னும் சொல்லலையாடா…”
“நீ வேற அப்பா இருக்கும்போது தான் அவ எதுவும் பேச மாட்டாளே… அப்பா இல்லாத டைம் பாட்டி வேற அதை அவகிட்ட சொல்லிட்டாங்க… அதுக்கு வினி வேணும்னா தமிழுக்கு கல்யாணம் பண்ணி வைங்க… என்னை ஆள விட்டுடுங்க… அதையும் மீறி நீங்க மாப்பிள்ளை பார்த்தீங்கன்னா வர்ற மாப்பிள்ளை மண்டைய ஒடச்சிடுவேன்னு சொல்லிட்டாடா… ஆனா உனக்கு தான் தெரியுமே மச்சான் அப்பா ஒரு முடிவெடுத்துட்டா அதிலிருந்து அவரை மாற்றவே முடியாதுனு… யோசிச்சி நல்லா முடிவா சொல்லு மச்சான்…”
“ஏன் தமிழு நானே குழப்பத்துல இருக்கிறன் உன்கிட்ட ஐடியா கேட்கலாம்னா நீ இன்னும் என்னை கொழப்பிட்டு போற….”
“இல்ல வெற்றி இது உன்னோட வாழ்க்கை நீ தான் முடிவு எடுக்கணும்…. இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை. உனக்கு உன் வினியை புடிச்சிருக்கா…? அவ கூட வாழ்ந்தா உன்னால சந்தோஷமா இருக்க முடியுமா…? இதுக்கு பதிலை உன் மனசு கிட்ட கேளு… அது என்ன சொல்லுதோ அது படி நடந்துக்க….”
“டேய் இப்படியெல்லாம் குழப்பம் வரும்னுதான்டா நான் அந்த காதல் கீதல்லு அந்த பக்கத்துக்கே போகல… இப்ப அந்த குந்தாணியால நான் படுற பாடு இருக்கே… மச்சான் ஒரு வேளை நான் அவளை கல்யாணம் பண்ணினேன்னா என் சோலி முடிஞ்சுதுடா….”
“அப்படியெல்லாம் நடக்காது விடுடா பாத்துக்கலாம் நான் தான் இருக்கேன்ல்ல…”
“டேய் தமிழ் நீ இருப்ப நான் இருக்க வேணாமா…? உன் தங்கச்சிய பற்றி நல்லா தெரிஞ்சு இப்படி சொல்றியே மச்சான்….”
“விடு வெற்றி… விடு வெற்றி எல்லாத்தையும் சமாளிச்சுக்கலாம் சரியா…”
“சரி நான் உண்மையாவே யோசிக்கணும் தமிழு… எடுத்தேன் கௌத்தேன்னு சொல்லி என்னால முடிவு எடுக்க இயலாது…. பாக்கலாம் என் மனசு என்ன சொல்லுதுன்னு….”
“அது நிச்சயம் நல்ல முடிவா தான் இருக்கும் வெற்றி… சரி வா போலாம்…”
“சரிடா…” என்ற இருவரும் கீழே இறங்கி வந்தனர்.
இரண்டு நாட்களின் பின்னர் வினிதாவை அழைத்த தயாளன் காலேஜுக்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வினிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை “எதுக்கு அப்பா என்ன காலேஜுக்கு போவேனானு சொல்றீங்க…?”
“அது ஒன்னும் இல்ல வினிமா… உன்னை இன்னைக்கு பொண்ணு பாக்க வராங்க… அதனால இன்னைக்கு ஒரு நாள் காலேஜுக்கு லீவு போட்டு வினிமா…” என்று சர்வ சாதாரணம்மாய் அவர் சொல்ல, தாயை உற்றுப் பார்த்தாள் வினிதா. அவரோ, ‘கொஞ்சம் அமைதியா இருடி….’ என்று கண்களால் கெஞ்சினார்.
தாயின் கெஞ்சலுக்காக அமைதியாக நின்றாள். ஆனால் தயாளன் மகள் தனது சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்பதாக நினைத்தார். வினிதாவின் மனசுக்குள் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. எங்கே ஏதாவது பேசி விடுவோமோ என்று வேகமாக அறைக்குள் சென்று விட்டாள்.
அவள் சென்றதும் தயாளன் ரேணுகாவிடம், “பார்த்தாயா ரேணு நம்ம பொண்ணு மாப்பிள்ளை பாக்க வர்றாங்கன்னு சொன்னதும் வெக்கப்பட்டு ஓடிட்டா உள்ள…” என்றார். ரேணுகா மனசுக்குள்ளே, ‘ஆமாமா வெட்கப்படுத்தான் ஓடுறாளா…’ என நினைத்தவர் வெளியே, “ஆமாங்க எப்படித்தான் துடு துடுப்பா இருந்தாலும் கல்யாணம்னு சொன்னது ஒரு வெட்கம் வரும்தானே பொண்ணுங்களுக்கு….”
“சரிங்க அப்படியே பண்ணிடுறேன்… ஆமா மாப்பிள்ளை என்ன பண்றாங்க…? எந்த ஊரு…?”
“மாப்பிள்ளை டவுன்ல ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாரு….”
“ஓ அப்படியா…. சரி ஆனாலும் நம்ம பொண்ணுக்கு புடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டிடுங்க….” என்றார் ரேணுகா.
“மாப்பிள்ளை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு…. நம்ம பொண்ணுக்கும் பொருத்தமா இருப்பா… நீ வேணும்னா பாரு நிச்சயம் அந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பா…”
“சரிங்க நான் போய் வேலையை பாக்குறேன்….” என்று ரேணுகா சமையல் அறைக்குச் சென்று விட்டார். தயாளனும் வேலை விஷயமாக வெளியே சென்றார்.
இரண்டு நாட்களாக வெற்றிமாறன் யோசனையிலேயே திரிந்தான். அவன் மனம் எதை எதிர்பார்க்கின்றது என்று அவனுக்கு புரியவில்லை. இந்த இரண்டு நாட்களும் வினிதாவும் வெற்றிமாறனை சந்திக்க முயற்சிக்கவில்லை.
காலைச் சூரியன் வந்தும் எழுப்பாமல் தனது தோட்டத்தின் கயிற்றுக் கட்டிலின் மீது படுத்திருந்தான் வெற்றிமாறன். இரவு தோட்டத்திற்கு காவல் இருந்ததால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனின் போன் அடித்தது. எடுத்துப் பார்க்க வினிதாவிடம் இருந்துதான் அந்த அழைப்பு வந்திருந்தது. ‘என்ன இந்த நேரத்துல இதை கால் பண்றா… காலையிலேயே ஆரம்பிச்சிட்டாளா….?’ என நினைத்தவன் போனை கட் பண்ணி விட்டான். மறுபக்கம் இருந்த வினிதாவுக்கு கோபம் வந்தது.
‘மாமா எங்கிட்டேயே விளையாட்டு காட்றியா…? இப்போ பாரு இந்த வினியோட ஆட்டத்தை…’ என்றவள், வாட்ஸ் அப்பில் சென்று வீடியோ கால் எடுத்தாள் வெற்றிமாறனுக்கு. வெற்றிமாறனோ தூக்கத்தைத் தொடர நினைக்க, இவள் மறுபடியும் வீடியோ காலில் வர, ‘ஐயோ ராட்சசி நிம்மதியா இருக்க விட மாட்டாளே…’ என நினைத்தவன், வீடியோ காலை கட் பண்ணி நார்மல் காலில் அவளுக்கு அழைத்தான். சிரிப்புடன் மறுபக்கம் இருந்த வினிதா போனை எடுத்தாள். அவள், “மாமா…” என்று சொல்லி ஆரம்பிக்கும் முன்னரே இங்கே எண்ணெயில் போட்ட கடுக்காய் பேச ஆரம்பித்தான் வெற்றிமாறன்.
“ஏய் என்னடி நெனச்சிட்டு இருக்க நீ…? காலையில தூங்குற மனுஷனுக்கு எத்தனை தடவை தான் கால் பண்ணுவ…? ஒரு தரம் நீ போனை எடுத்து அவங்க போனை கட் பண்ணினா அவங்க ஏதோ வேலையா இருப்பாங்கன்னு நினைக்க மாட்டியா….? கட் பண்ணா வீடியோ கால்ல வர்ற… இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை….?” என்று எடுத்ததும் வெற்றிமாறன் கேட்டதும் வினிதாவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
வேறு நாட்கள் என்றால் அவனுடன் வாய்க்கு வாய் பேசியிருப்பாள். ஆனால் அவளோ இன்று தன்னை பெண் பார்க்க வரும் விஷயத்தை சொல்லவே வெற்றிமாறனுக்கு கால் பண்ணி இருந்தாள். அந்த கவலையில் இருந்தவளுக்கு வெற்றி இப்படி சொன்னதும் அழுகை வந்துவிட்டது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super and intresting divima