என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 39

5
(10)

அத்தியாயம் : 39

எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது வினிதா மட்டும் ஏதோ யோசனையில் இருந்தாள். அவள் யோசிப்பதை பார்த்த வெற்றிமாறன், “ஏய் நாங்க எல்லாம் பேசிக்கிட்டு இருக்கோம்… நீ என்ன யோசிச்சிட்டு இருக்குற…” என்று கேட்டான் வினிதாவிடம். அதற்கு வினிதா, “இல்ல மாமா பாட்டி வீட்டுக்கு வரப் போறேன்னு சொல்றாங்க இல்ல… பாட்டி நல்லா உளுந்து வடை சுடுவாங்கன்னு சொல்லி எங்க அம்மா சொல்லுவாங்க…. எனக்கு உளுந்து வடைனா ரொம்ப பிடிக்கும்…. அதுதான் பாட்டிகிட்ட வீட்டுக்கு வரும்போது வடை சுட்டு கொண்டு வரச் சொல்லலாம்னு யோசிச்சேன்….” என்றாள். 

இதை கேட்டதும், “ஏண்டி இங்கே என்ன போயிட்டு இருக்கு நீ என்ன பேசுற…?” என்று சீரியஸாக சொன்னாள். அதற்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு அவள் தலையில் நங்கு நங்கு என்று நான்கு கொட்டு கொட்டினான் வெற்றிமாறன். 

“தீனி பண்டாரம்…. தீனி பண்டாரம்… எப்ப பாரு திங்கறதிலேயே இரு…” என்றான். 

அதைப் பார்த்த சாரதா, “எதுக்கு வெற்றி நீ இப்ப அவள அடிச்சிட்டு இருக்க…. வினி என்கிட்ட தானே கேட்டா…. அதுல என்ன இருக்கு நான் வரும்போது கண்டிப்பா உனக்காக சுட்டு எடுத்துட்டு வாரேன் டா….” என்று சொன்னார் சாரதா பாட்டி.

“தேங்க்யூ பாட்டி…. பாட்டினா பாட்டிதான்….” என்று அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள் வினிதா. 

“பாட்டி இவ ஏற்கனவே ரொம்ப மோசம்…. இவளுக்கு செல்லம் கொடுத்தீங்க உங்க தலைக்கு மேலே ஏறி உட்கார்ந்துக்குவா….” என்றான் தமிழ்ச்செல்வன். 

“பாவம் தமிழு சின்ன பொண்ணு… அவளுக்கு போய் இப்படி எல்லாம் சொல்லாத பாவம் இல்ல….”

“என்னது பாவமா….? இவளா…? நாங்க படுற பாடு எங்களுக்கு தான் தெரியும்…. என்ன பாட்டி நீங்க பேசாம இருக்கீங்க சொல்லுங்க சாரதா பாட்டிகிட்ட….” என்று தமிழ்ச்செல்வன் ராஜேஸ்வரி பாட்டியை துணைக்கு அழைத்தான். “ஆமா சாரதா இவ வீட்ல தயாளன் இருந்தா மட்டும் தான் அமைதியா இருப்பா….. மத்த நேரத்துல வினியை புடிக்கவே முடியாது….. அவ்வளவு சுட்டித்தனம் பண்ணுவா…” என்றார் ராஜேஸ்வரி. 

“சரி சரி போதும் போதும் என் புராணம் பாடினது….. லேட் ஆயிடுச்சு போலாமா வீட்டுக்கு….” என்று வினிதா கேட்டதும், தமிழ்ச்செல்வன் ராஜேஸ்வரி பாட்டியையும் வினிதாவையும் அழைத்துக் கொண்டு செல்ல, வெற்றிமாறனை சாரதா பாட்டியை அழைத்தார். 

“ஏய்யா வெற்றி இரு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்….” என்றார். அவர்கள் சென்றதும் சாரதாவின் அருகில் அமர்ந்தான் வெற்றிமாறன். “என்னாச்சு பாட்டி…?”

“வெற்றி நிஜமா ரேணு நம்ம வீட்டுக்கு வந்துடுவால்ல….. எல்லாரும் ஒன்னா இருப்போம் இல்ல…..”

“கண்டிப்பா பாட்டி ரேணு அத்த, மாமா, தாத்தா, பாட்டி, தமிழ், வாயாடி எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்ல சந்தோசமா இருப்போம்….. அது சீக்கிரமே நடக்கும்….”

“அப்படி மட்டும் நடந்துட்டா வெற்றி இந்த ஐயனாருக்கு கெடா வெட்டி பொங்கல் வைப்பேன்….”

“அப்போ ஒரு கெடாவ ரெடி பண்ணு பாட்டி…. கண்டிப்பா இது நடக்கும் வேணும்னா பாரு…. நீ. சந்தோஷப்படுற அளவுக்கு ரேணு அத்தையை உன் பக்கத்துல வச்சே பாத்துக்கலாம்….” என்றான். 

“அது நடந்துட்டா அதைவிட வேறென்ன வேணும் வெற்றி எனக்கு…..”

“ஏன் பாட்டி அப்பாக்கு மாமாவுக்கும் அப்படி என்னதான் பாட்டி பிரச்சனை….”

“அது தெரியாது வெற்றி…. என்னன்னு தெரியல ஒருநாள் வெளியில போயிட்டு வீட்டுக்கு வந்து சொன்னான் இனிமே அந்த குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்லை…. யாரும் அவங்ககூட பேசக்கூடாது பார்க்க கூடாது அப்படின்னு சொல்லிட்டான் சுந்தரம்…. குசேலனும் இராமனுக்கு அந்த இலட்சுமணன் எப்படியோ அப்படித்தான் சுந்தரத்திற்கு குசேலன்…. அவன் சரி அண்ணா நாங்களும் பேச மாட்டோம் அப்படின்னு சொல்லிட்டான்…. பசங்க ரெண்டு பேர்ல பேச்ச மீறி நாங்க எப்படி அவங்க கூட பேச முடியும் சொல்லு…. என்னதான் இருந்தாலும் பசங்க கூட தானே நாங்க இருக்கோம் அவனை மீறி பொண்ணு வேணும்னு போக முடியுமா…. அதான் அப்படியே அமைதியா இருந்துட்டேன்…. ஆனா என்ன பிரச்சனைன்னு ரெண்டு பேருக்குமே தெரியாது….” என்றார் சாரதா பாட்டி. 

வெற்றிக்கு மிகவும் யோசனையாக இருந்தது. ‘யாருக்கும் தெரியாத அளவுக்கு இவங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்ன பிரச்சனை இருக்கப் போகுது….’ என்று மனதுக்குள் நினைத்தவன், “சரி பாட்டி வாங்க எதைப்பற்றியும் நீங்க போட்டு குழப்பிக்க வேணாம் எல்லாம் சரியாயிடும்….” என்று அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

அங்கே சுந்தரமும் குசேலனும் வீட்டி ஹாலில் இருந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் சுந்தரம், “அம்மா இந்த நேரத்தில் எங்க போயிட்டு வரீங்க….” என்று கேட்டார். அதற்கு சாரதா, “ஒன்னும் இல்லப்பா மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது…. அதுதான் அய்யனார் கோயிலுக்கு போயிட்டு வந்தேன்…..”

“என்னம்மா அதுக்கு தனியாவா போவீங்க….”

“இல்லப்பா நானும் பாட்டி கூட போயிருந்தேன்….” என்றான் வெற்றிமாறன். 

“அப்படியா சரி… வெற்றி நீ வந்து இந்த கணக்கு கொஞ்சம் பாரு…. ரைஸ் மில்லில் இந்த கணக்கு கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்குப்பா… அது என்னன்னு பாரு…” என்றார். வெற்றிமாறனும், “சரிப்பா குடுங்க….” என்று அங்கே இருவருடனும் உட்கார்ந்தான். சாரதா பாட்டி அவர் அறைக்குச் சென்று விட்டார்.

அடுத்த நாள் காலை வைதேகியும் ராகவியும் சாரதாவிடம் சொல்லிவிட்டு மரக்கறிகளும் சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றனர். வினிதாவும் அவள் தோழிகளும் வழமை போல சந்தையில் தின்பண்டங்கள் வாங்கி தின்று கொண்டு சந்தையை சுற்றி வந்தார்கள். சந்தைக்கு வந்து வேண்டிய மரக்கறிகளை வாங்கிக் கொண்டு வரும் வழியில் வினிதா இவர்களைக் கண்டதும் ஓடி வந்தாள். 

“அத்தை நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்….?” என்று கேட்டாள். “வினி வாம்மா… நாங்க நல்லா இருக்கோம்… நீ நல்லா இருக்கியா… வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா….?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை….”

“ஆமா என்ன நீ சந்தை பக்கம் எல்லாம் வந்து இருக்க…. ஏதாவது வீட்டுக்கு வாங்க வந்தியா…” என்றார் ராகவி. 

“ஐயோ இல்ல அத்தை நான் சும்மா ஃப்ரெண்ட்ஸ்ங்களோட சந்தைக்கு ஏதாச்சு சாப்பிடலாமேனு வந்தேன்….”

“அடிப்பாவி ரேணுக்கு ஒத்தாசையா இருக்கலாம்ல்ல புள்ள…” என்றார் வைதேகி. 

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் அத்தை…. இப்ப ஜாலியா சுத்தணும் அவ்வளவுதான்….”

“அது சரி…. ஆமா ரேணு வரல…?”

“அம்மா தானே சந்தைக்கு வரணும்னு சொல்லிட்டு இருந்தாங்க வருவாங்க போல….”

“ச்சே வந்து இருந்தா ரேணுவ பாத்து பேசிட்டு போயிருக்கலாம்…. என்ன பண்றது…” என்றார் ராகவி. 

அப்போது திடீரென்று வினிதா, “அத்தை அங்க பாருங்க அம்மா…. அட அம்மா கூட பாட்டியும் வராங்க போல இருக்கு….” என்றாள். வினிதா காட்டிய திசையில் பார்க்க ராஜேஸ்வரியும் ரேணுகாவும் வந்து கொண்டிருந்தனர். 

“அத்தை அம்மாகூடவும் பாட்டிகூடவும் இப்படி பேசுறீங்களா…?” என்று கேட்டாள். 

“பேசலாம் தான் வினிமா…. ஆனா உங்க மாமா வேற சந்தைக்கு மாடு வாங்க வரணும்னு பேசிட்டு இருந்தாங்க… அதான் பயமா இருக்கு…..”

“அத்தை உங்ககிட்ட அன்னைக்கே அவ்ளோ பேசினாங்களே மாமா…. அதெல்லாம் மறந்துட்டீங்களா… அத்தை எதுக்கு பயப்படுறீங்க… எது வந்தாலும் பாத்துக்கலாம்…. எப்படியும் மாமா வீட்ல வச்சு தான் திட்டுறன்னா திட்டுவாங்க… ஊர்ல இருக்கிறவங்க முன்னாடி பேச மாட்டாங்கல…. அதனால தைரியமா போங்க அத்தை நம்ம திட்டு வாங்குறது வீட்டுக்குள்ள தானே… யாருக்கும் தெரிய போறது இல்லல…. வாங்க வந்து பேசுங்க அம்மாகூட….” என்று அவர்கள் இருவரையும் பிடித்து இழுத்து வந்தாள் வினிதா. 

ராகவியையும் வைதேகியையும் பார்த்த ரேணுகா அருகில் இருந்த ராஜேஸ்வரியை மறந்துவிட்டு, “அண்ணி….” என்றவாறு வந்து அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டாள். 

“ரேணு எப்படி இருக்க… நல்லா இருக்கியா…? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா…..?” என்று வினிதாவிடம் கேட்டதை அவரிடமும் கேட்டார்கள். 

“எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணி….. அங்க அண்ணனுங்க அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா….?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க….” என்றார்கள் அவர்கள். 

அப்போது மெல்ல ராஜேஸ்வரி பாட்டியிடம் வந்த வினிதா, “ஏன் பாட்டி அதுதான் நீயும் சாரதா பாட்டியும் ப்ரெண்ட்ஸ்ல…. இப்ப என்ன இவங்க கூட பேசாம அமைதியா நிக்கிற…. நீ பேசு போ….”

“ஏய் கூறுகெட்டவளே சும்மா இருடி யாரவது பார்த்து வீட்ல போய் சொல்லிட்டா அப்புறம் செத்த கதை தான்….”

“பாட்டி நைட்டு தான் எவ்வளவு தைரியம் சொல்லி அனுப்பினோம்…. பேசு பாட்டி….. ப்ளீஸ் பாட்டி….” என்றாள் வினிதா. 

“சரி இருடி பேசுறேன்….” என்று மெல்ல வந்தார் அவர்களிடம். 

“என்ன ராகவி வைதேகி நல்லா இருக்கீங்களாமா….?” என்று கேட்டார். அப்போதுதான் ரேணுகாவிற்கு தனது அத்தையுடன் வந்ததே ஞாபகத்திற்கு வந்தது. நாக்கை கடித்துக்கொண்டு, ‘ஐயோ அத்தை இருக்கறது தெரியாம அண்ணிகிட்ட பேசிட்டோமே…’ என்று மனதுக்குள் நினைக்க, சிரித்த ராஜேஸ்வரி, “என்னமா மருமகளே அத்தை வந்தது தெரியாம அண்ணிங்க கூட பேசிட்டோமேனு யோசிக்கிறயா…. பயப்படாதே நான் எதுவும் சொல்ல மாட்டேன்…. நீ தாராளமா உன் அண்ணிங்ககூட பேசலாம்…. ராகவி, வைதேகி சாரதா எப்படி இருக்கா… நல்லா இருக்காளா…?” என்று கேட்டார். 

“அத்தை நல்லா இருக்காங்க அம்மா….” என்றார்கள் இருவரும். ராகவிக்கும் வைதேகிக்கும் யோசனை, என்னடா இது இதுவரைக்கும் எங்க பார்த்தாலும் பேசாமல் போகும் ராஜேஸ்வரி அம்மா இப்போது அவர்களிடம் தானாக வந்து பேசுவது அவர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது. 

இவர்கள் எல்லோருடைய முகத்தை பார்த்ததும் வினிதாவுக்கு சிரிப்பு வந்தது இருந்தும் சிரிப்பை அடக்கிக் கொண்டவள், “என்ன அத்த எங்க பாட்டி அவங்களாக வந்து பேசுறாங்கன்னு யோசிக்கிறீங்களா…?” என்று கேட்க, உடனே அவரைப் பார்த்து, “இல்ல அம்மா….” என்று தலையாட்டினார்கள். அவர்களது செய்கையைப் பார்த்த நால்வரும் சிரித்தனர். 

“ஏய் வினி அத்தை கிட்ட வம்பு பண்ணிட்டு சும்மா இரு….” என்ற ராஜேஸ்வரி, “ராகவி, வைதேகி நீங்க ரெண்டு பேரும் ரேணுகா கூட பேசுறதில்ல எனக்கு எந்த பிரச்சனையுமே இல்லை….”

“அத்தை நிஜமாவா சொல்றீங்க….?” என்றார் ரேணுகா.

“ஆமா ரேணு…. நான் நிஜமாத்தான் சொல்றேன்…. நீங்க மூணு பேரும் பேசிக்குறதுல எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை…. தாராளமா பேசலாம்….” என்றார். 

“அத்தை ரொம்ப நன்றி…. அத்தை நான் நீங்க ஏதும் திட்டுவீங்களோனு பயந்துட்டேன்….”

“அது எப்படி அம்மா நம்ம பாட்டி திட்டுவாங்க….? பாட்டி தான் நம்ம சாரதா பாட்டியோட ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட் ஆச்சே….” என்றாள் வினிதா.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!