என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 41

4.8
(14)

அத்தியாயம் : 41 

தனது தோழியை பார்த்து வெவ்வ வெவ்வ என்று பளிப்பு காட்டினாள் வினிதா பிறர் அறியாமல். அவளோ, “இருடி உங்க மாமா போட்டும் அப்புறம் உன்னை வச்சிக்கிறேன்…” என்றாள். 

“சரிதான் போடி…” என்ற வினிதா, “மாமா அதோ அந்த வளையல் தான் வேணும்….” என்று ஒரு வளையலை சுட்டி காட்டினாள். உடனே சுந்தரம், “எடுத்துக்க கண்ணு உனக்கு எத்தனை வளையல் வேணுமோ என்ன நிறத்தில் வேணுமோ எடுத்துக்க….” என்றார். 

வினிதாவும், “சரிங்க மாமா….” என்றவள் அவள் மிகவும் ஆசைப்பட்ட அந்த வாடாமல்லி வளையலை மாத்திரம் எடுத்துக் கொண்டாள். அதைப் பார்த்த குசேலன், “அம்மாடி இன்னும் ரெண்டு வாங்கிக்க… உனக்கு ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிப் போட்டு அழகு பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம்…. என்ன பண்றது அதுக்கு எல்லாம் கொடுத்து வைக்கலையே…. இப்பவாது உனக்கு எங்க கிட்ட கேட்கணும்னு தோணுச்சுல்ல இன்னும் எடுத்துக்கோ…” என்றார் குசேலன். 

“மாமா எனக்கு வளையல் போதும்… அம்மாக்கு வேணும்னா வாங்கிக்க வா….?”

“அதுக்கு என்னம்மா கேட்டுகிட்டு எங்க தங்கச்சிக்கு எங்க கையால கொடுக்க முடியல எங்க சார்பா நீயாவது கொடுத்திடு…..” என்று ரேணுகாவுக்கு பிடித்த சிவப்பு நிறத்திலும் பச்சை நிறத்திலும் வளையல்களை வாங்கி கொடுத்தார்கள் சுந்தரமும் குசேலனும். 

அதைப் பார்த்த வினிதா, “மாமா அம்மா இந்த வளையலைப் பார்த்தா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவாங்க…. கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் வாங்கி கொடுத்தீங்கன்னு சொல்லிட்டு தான் கொடுக்க போறேன்….”

“பாத்து வினி உங்க அப்பா இருக்கும்போது சொல்லிடாத….”

“அதெல்லாம் பாத்துக்கலாம் மாமா…”

“சரிடாம்மா உன்னை பாத்தது, நீங்க எங்ககிட்ட வளையல் கேட்டது ரொம்ப சந்தோஷம்…. வேற எதுவும் வாங்க போறியா….?”

“இல்ல மாமா இதுவே போதும்…” என்றாள்.

“சரு கண்ணு பாத்து பத்திரமா வீட்டிற்கு போ…..”என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். 

பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றதும் வினிதா தன் தோழிகளிடம், “பாத்திங்களா டி எப்படி எங்க மாமா கையாலேயே வளையல் வாங்கிட்டேன்….”

“அது சரி… ஆனா கொஞ்சம் அந்தப் பக்கம் பாரு….” என்றார்கள். 

அங்கே தயாளன் நின்றிருந்தார். ‘அடியாத்தி இவரு எப்ப வந்தாரு….?’ என்று மனதுக்குள் நினைத்தவள் வெளியே தந்தையைப் பார்த்து முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, மெல்ல அவரிடம் சென்றாள். 

“அப்பா…..” என்றாள். 

“எதுவும் பேசாத வினி வா என் கூட….” என்று அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றார். வீட்டுக்குச் வினிதாவை அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் ஒருவர் தயாளனிடம், “என்ன தயாளா இரண்டு குடும்பமும் ஒண்டாகிட்டீங்க போல இருக்கு….”

“என்ன சொல்றீங்க….?” என்று கேட்டார் அவரிடம். 

“அதான்பா உன் குடும்பமும் உன்னோட மச்சான் குடும்பம் ஒண்ணாகிட்டீங்களானு கேட்டேன்….”

“என்ன சொல்ற ராமு ஒழுங்கா சொல்லு…. எனக்கு எதுவும் புரியல….”

“அதான் காலையில சந்தையில் பாத்தனே உன் அம்மாவும் உன் வீட்டுகாரம்மாவும், சுந்தரம் குசேலன் வீட்டம்மாக்களும் பேசிகிட்டு இருந்தாங்களே சந்தையில் நின்னு…. அதான் பிரச்சனை தீர்ந்து சேர்ந்துட்டாங்க போலன்னு நினைச்சேன்….”

‘அய்யய்யோ நேரம் காலம் புரியாம இவன் வேற கோர்த்து விடுறானே ரேணு உனக்கு இன்னைக்கு சங்கு தான்டி….’ என மனதுக்குள் நினைத்த வினிதா திருதிருவென முழித்தாள். அவரிடம் தயாளன் எதுவும் பேசாமல், “வா வினி….” என்று அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். 

வரும் வழியில் வினிதா பேச வருவதைக்கூட காது கொடுத்துக் கேட்பதற்கு கூட தயாளன் தயாராக இல்லை. அவளும் விதியே என்று அவருடன் வந்தார். வீட்டுக்கு வந்ததும், “ரேணுகா…. ரேணுகா…” என்று அழைத்துக் கொண்டு வந்தார். 

“அய்யய்யோ என்ன அத்தை இவரு இப்படி சத்தம் போட்டுட்டு வராரு…?”

“எனக்கு என்னடி தெரியும்… இதுவரைக்கும் இவன் இப்படி கத்தி நான் பார்த்ததே இல்ல….” என்றார் ராஜேஸ்வரி. 

“அத்தை ஒருவேளை நம்ம பேசிட்டு இருந்த யாராவது உங்க பையன்கிட்ட சொல்லிக் கொடுத்திருப்பாங்களோ.. அத்தை பயமா இருக்கு அத்தை….”

“விடு ரேணு பாத்துக்கலாம்… என்ன மீறி என்ன பண்ணிடுவான்….”

“ஆமா ஆமா அவர் சத்தம் போட்டா நீங்க அமைதியா உட்கார்ந்துக்குவிங்க… அப்புறம் என்ன யாரு காப்பாத்துவா….?” என்று சமயம் பார்த்து மாமியாரின் காலை வாரினார் ரேணுகா. 

“இவ ஒருத்தி…. அடியே என்னைக்கோ ஒரு நாள் பண்ணத இப்ப போய் சொல்லி காட்டறே அமைதியா இரு…. முதல்ல என்னன்னு பார்ப்போம் வா…” என்று அவரை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்.

“என்ன வரும் போதே ரேணுகானு சத்தம் போட்டுட்டு வர என்ன ஆச்சு….?”

“அம்மா ரேணு எங்க….?”

“இதோ வந்துட்டேங்க….” என்று வந்தார் ரேணுகா. 

“உங்களுக்கு தெரிஞ்சுதான் எல்லா விஷயமும் நடக்குதா….? நீ இந்த வீட்டில எதுக்கு இருக்க….?” என்று கேட்டார். 

இவர் எடுத்தோம் கௌத்தோம்னு என்று கேட்டதும் அவர்களுக்கு இவர் எதை கேட்கிறார் என்று புரியவில்லை. ரேணுகா தயாளினிடம், “என்ன ஆச்சுங்க…. எதுக்கு இப்படி கோவப்படுறீங்க….?”

“கோபப்படாம என்ன பண்ண சொல்ற…? உன் பொண்ணு பார்த்த வேலை அப்படி…”

“ஏய் என்னடி பண்ணி தொலச்ச…” என்று ரேணுகா வினிதாவிடம் கத்தினார். 

“ஆமா இப்ப அவகிட்ட கத்து… இதே அவ அந்த வேலை பண்ணும்போது கத்திருந்தா அவ பண்ணிருப்பாளா….?” என்றார். ‘ஐயையோ அம்மா அன்னைக்கு மாந்தோப்புக்கு போனதுக்கே அந்த பேச்சு பேசிச்சுது இப்ப வளையல் வேற வாங்கினது தெரிஞ்சா என்ன பண்ணனும்னு தெரியாதே….’ என்ற மனதுக்குள்ளே புலம்பி கொண்டு நின்றாள். 

அப்போது அங்கே வந்த தமிழ்ச்செல்வன் இவள் திருதிருவென முழிப்பதை பார்த்து, ‘என்னடி…’ என்று கண்களால் கேட்டான். அதற்கு அவளோ நாக்கி வெளியே நீட்டி கழுத்தை ஒரு பெருவிரலால் அறுப்பது போல காட்டினாள். தமிழ்ச்செல்வனுக்கு சிரிப்பு வர, சிரிப்பை அடக்க முடியாது சத்தமாக சிரித்து விட்டான். 

அந்தச் சத்தம் கேட்டு திரும்பிய தயாளன், “ஏன்டா நீ அண்ணன்னு எதுக்கு இருக்க…. உனக்கு கூட இவளை பார்த்துக்க தெரியாதா…?” என்று அவனிடமும் சீறி விழுந்தார். 

‘அட நேரங்காலம் தெரியாம வந்து மாட்டிக்கிட்டே சின்ராசு…’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் தமிழ்ச்செல்வன். 

“டேய் எதுக்கு இப்ப வந்ததும் வராததுமா கத்திக்கிட்டு இருக்க…. அப்படி என்ன விஷயம் நடந்துச்சுன்னு சொல்லு….” என்றார் ராஜேஸ்வரி. 

அதில் சற்று அமைதியான தயாளன், “என்னத்த சொல்ல சொல்றீங்க அம்மா…. இவ பண்ணின வேலை அப்படி…. நல்லா தெரியும்ல மொதல்ல மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க வந்து வேணாம்னு சொல்லிட்டு போயிட்டாங்கனு…. என்ன காரணம்னே தெரியல… அதுக்குள்ள பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்குமா வீட்ல இருக்காம இந்த சந்தை வழிய சுத்திக்கிட்டு திரியுறா…. அவளை சந்தைக்கு அனுப்பிட்டு நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்க….?” என்றார் தயாளன்.  

அப்போதுதான் அங்கிருந்த மூவருக்கும் உயிரே வந்தது. வினிதா, ‘என்னது இது நம்ம ஸ்கிரிப்டிலேயே இல்லையே….’ என்று அவர் முகத்தைப் பார்த்தாள்.

“என்ன ஏன் முகத்தை பார்த்துகிட்டு இருக்கே…. இனிமே அங்க இங்கன்னு சுத்தி பாரு உன் காலை உடைச்சு வீட்ல போடுறன்….” அங்கிருந்து சென்று விட்டார். 

அவர் சென்றதும் வினிதாவின் அருகே வந்த ரேணுகா அவள் முதுகிலே ஒன்று வைத்தார். 

“அட கூறுகெட்ட சிறுக்கி…. நீ என்னக்கு பொறந்தியோ அன்னையில இருந்து எனக்கு நிம்மதியே போயிடுச்சு டி….” என்றார். ஆனால் அவளோ, “அம்மா இப்ப எதுக்கு அடிக்கிற…? உன்கிட்ட அடி வாங்கணுமா…. கொஞ்சம் இரு நான் ஒண்ணு யோசிச்சுட்டு இருக்கேன்…. அப்புறமா வந்து உன்கிட்ட அடி வாங்கிக்கிறேன்….” என்றாள். 

“ஏன்டி வினி அம்மா இப்படி அடிக்கிறாங்க உன்னை…. நீ என்னனா சூடு சொரணை இல்லாம நிக்கிறயேடி…” என்றான் தமிழ்ச்செல்வன். 

“அட போடா எப்பவாவது வாங்கினா தான் வலிக்கும்…. எப்பவுமே வாங்கினா எப்படி வலிக்கும்…? அம்மா உனக்கு ஒன்னு தெரியுமா…”

“என்ன புதுக் கதை சொல்ல போற இப்போ…?”

“அம்மா ஒரு முக்கியமான விஷயம் அம்மா….”

“சொல்றத சீக்கிரமா சொல்லு எனக்கு சமையல்ல வேலை இருக்கு…. அப்புறம் உங்க அப்பா சாப்பாடு வைக்கல சமைக்கலன்னு அதுக்கு வேற தாம் தூம்னு குதிப்பாரு….” 

“ஐயோ அம்மா இன்னைக்கு சந்தையில் என்ன நடந்துச்சு தெரியுமா…? நீங்கள் வந்த பிறகு நான் வந்து ஐஸ் குடிச்சுக்கிட்டே பிரண்ட்ஸ்சோட போயிட்டு இருந்தனா…. அப்போ வந்து அங்க கடையில கண்ணாடி வளையல் இருந்துச்சு எனக்கு ஆசையா இருந்துச்சுன்னு வாங்க போனா காசு பத்தாது…. அப்ப என்ன பண்ணலாம்னு நான் யோசிச்சுகிட்டே இருந்தனா அப்போ சின்ன மாமாவையும் பெரிய மாமாவையும் சந்தையில பார்த்தேன்…. அவங்ககிட்ட போய் எனக்கு வளையல் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டேன் அவங்களும் எனக்கு இல்லாத தான்னு சொல்லிட்டு வந்து வாங்கி கொடுத்தாங்க அம்மா…. எனக்கு மட்டும்ல இதோ உனக்கும் தான் வாங்கி கொடுத்தாங்க…. இதை புடி முதல்ல…” என்று அந்த இரு நிற வளையல்களையும் ரேணுகாவிடம் கொடுத்தாள். 

அதைப் பார்த்து ரேணுகா, “எத்தனை வருஷத்துக்கு அப்புறம் எங்க அண்ணன் கிட்ட இருந்து எனக்கு கிடைச்சிருக்கு அத்தை….” என்று கண் கலங்கினார். 

“அழாத ரேணு இனிமே எல்லா நல்லபடியாகத்தான் நடக்கும்னு….” என்றார். 

“பாட்டி இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு…. அம்மா மாமா எனக்கு வளையல் வாங்கி கொடுத்தத அப்பா பாத்துட்டாரு….”

“என்ன உங்க அப்பாவ பாத்துட்டாரா….?”

“ஏன் வினி சந்தையில வச்சு உன்னை அடிச்சிட்டாரா….?”

“அடியா அம்மா உன் புத்தி எப்படி போகுது பாரு…. உனக்கு ஒன்னு நீ அடிக்கணும் இல்ல ஊர்ல இருக்கிற யாராவது போட்டு என்னை அடிக்கணும் ஏம்மா….?”

“சரி சரி சொல்லு சொல்லு….” “ஒன்னும் பேசல… எதுவும் பேசாத வான்னு என்னை கூட்டிட்டு வந்தாரு…. ஆனா இதுல ஹைலைட் என்ன தெரியுமா…?”

“ஏய் சீக்கிரம் சொல்லி தொலைடி உன்கிட்ட கதை கேட்க வந்தா அஞ்சு நிமிஷம் கதையை அஞ்சு மணித்தியாலத்துக்கு சொல்லுவ….” என்றான் தமிழ்ச்செல்வன். 

“டேய் நான் சொல்றதை கேளு…. அம்மா நாங்க வர்ற வழியில நம்ம ராமு மாமா இல்ல ராமு மாமா அவங்க வந்து என்ன தயாளா ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திட்டீங்க போல அப்படின்னு கேட்டாரு….. அதுக்கு அப்பா என்ன புரியாம பேசுறேன்னு அவர்கிட்ட கேட்க…. அவரு நம்ம எல்லாம் சந்தையில் வைத்து ஒன்னா பேசிட்டு இருந்ததை சொல்லி கொடுத்துட்டாரு…”

“அடியாத்தி….” என்றார் ரேணுகா. “ஆனா பாருங்க நான் அப்பா வந்த வேகத்துக்கு உனக்கு பெல்டாலே விழ போகுதுன்னு நினைச்சேன்…. ஆனா அப்பா எதுவுமே பண்ணாம போயிட்டாரு… அதைத்தான் நீ அடிக்கும் போது யோசிச்சிட்டு இருந்தேன்…” என்றாள் வினிதா. 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 41”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!