இங்கே ராட்டினத்தில் ஒரு ரவுண்டு வரும்போது வினிதாவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது. கீழே வெற்றிமாறன் இருப்பதை பார்த்தாள். ‘ஐயையோ மாமா வேற இங்க நின்னுட்டு இருக்கே…. இப்போ இறங்கினாலும் அசிங்கமாகிடுமே…. எப்படியும் முழுசா மூணு ரவுண்ட் போகாம இறங்க விடமாட்டாங்க…. சரி சமாளி வினி சமாளி…’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு ராட்டினத்தில் சுற்றினாள் வினிதா.
அவர்களது ரவுண்ட் முழுதாக முடிந்ததும், ராட்டினம் நிறுத்தப்பட்டது. எல்லோரும் இறங்கினர் கடைசியாக வினிதாவும் இறங்கி தைரியமாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ள தனது தோழியைப் பிடித்துக் கொண்டாள். அவர்களும், “வினி என்ன ஆச்சு…?” என்றனர்.
“ஒன்னும் இல்லைடி… லைட்டா தலை சுத்துற மாதிரி இருக்கு….”
“அப்படியா வா கொஞ்ச நேரம் இங்க உட்காரு…..” என்றார்கள்.
“ஹலோ என்னம்மா கண்ணு தல நல்லா சுத்துதா….? இதுக்கு தான் சொல்றது நமக்கு எது எது முடியுமோ அதை தான் பண்ணனும்…. ஏன்டி உனக்குத்தான் இந்த ராட்டினம் சுற்றினால் தலை சுத்து வரும்னு தெரியுமில்லை… அப்புறம் எதுக்கு போன….?”
“சரி சரி இந்தா புடி….” என்று வாட்டர் பாட்டிலைக் கொடுத்தான் வெற்றிமாறன். அவள் அவனைப் பார்க்க, “உனக்குத்தான் தண்ணீர்… முகத்தை நல்லா கழுவிட்டு தண்ணீர் கொஞ்சம் குடி சரியாகும்….” என்றான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த. அவனின் நண்பர்கள், “மச்சான் இப்போ என்ன பண்ற நீ….?”
“ஒன்னும் இல்லடா… அவளுக்கு ராட்டினம் சுத்தினா தலை சுத்தும்… அதுதான் தண்ணீர் கொடுத்தேன்….”
“ஏய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை…. இது மயக்கம் போட்டா யாரு பார்க்குறது…? அதனால தான் தண்ணீர் கொடுத்தேன்… மத்தபடி இவ மேல எல்லாம் பாசம் இல்லை எனக்கு….”
“நானும் உன்னோட பாசத்தை எதிர்பார்க்கலை போ…” என்ற வினிதா அவன் கொடுத்த தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு, தண்ணீரும் கொஞ்சம் குடித்து விட்டு தோழிகளுடன் சென்று விட்டாள்.
இதைப் பார்த்த வெற்றிமாறனுக்கு சிரிப்பு தான் வந்தது. “மச்சான் உன்னோட ரூட்டு சரி இல்லை போலயே….”
“டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா… வாங்க நாமளும் போகலாம்….” என்று அங்கிருந்து நண்பர்களுடன் சென்று விட்டான்.
கோயிலில் நன்றாக சுற்றி அலைந்து விட்டு வீட்டுக்குள் வந்தாள் வினிதா. “அம்மா….. அம்மா….” என்று ரேணுகாவை தேடினாள்.
“எங்கம்மா போன…. அம்மா எங்க இருக்க….?” என்று கத்தினாள். ஆனால் ரேணுகா பதில் பேசாமல் இருக்க, ‘எங்க போச்சு இந்த அம்மா…’ என்று சொல்லி அவரது அறைக்குள் வந்தாள்.
அங்கேயும் அவரைக் காணவில்லை. சரி என்று சொல்லி சமையலறை, சுவாமி அறை, மொட்டைமாடி என்று எல்லா இடத்திலும் சென்று பார்த்தாள். ஆனால் எங்கேயும் ரேணுகாவை காணவில்லை. ‘எங்க தான் போச்சோ தெரியல இந்த அம்மா….’ என்று சொல்லி வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தாள்.
அவர்கள் வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் நின்று இருந்தார் ரேணுகா. அவர் புடவை முந்தானையை எடுத்து முகத்தை துடைப்பது நன்றாக தெரிந்தது வினிதாவிற்கு. சத்தம் இல்லாமல் அவர் அருகில் வந்தவள், “அம்மா என்னமா பண்றீங்க….?” என்ற உடனே அவர் தனது கையில் இருந்ததை பின்னால் மறைத்துக் கொண்டு வினிதாவைப் பார்த்தார். “வினி நீயாடி…. ஏன் டி இப்படி கத்துற….?”
“என்ன நான் கத்துறனா… ரொம்ப நல்லா இருக்கு அம்மா நீ சொல்றது…. இம்புட்டு நேரம் உன்னைக் காணோம்னு தொண்டைத் தண்ணீர் வற்ற கத்திக் கத்தி இந்த வீடு ஃபுல்லா உன்னைத் தேடிட்டு பயந்து போய் வந்தா…. நீ இங்க இருந்து நான் கத்துறேன்னு சொல்ற போமா… ஆமா இப்போ எதை எங்கிட்ட இருந்து மறைச்ச நீ….? எங்க அதைக் காட்டு பார்க்கலாம்….” என்றாள்.
ஆனால் ரேணுகாவோ, “அதெல்லாம் முடியாது நீ போ…” என்றார். “அதெல்லாம் இல்லை எங்கிட்ட இருந்து என்னத்தை மறச்சேன்னு சொல்லிடு அம்மா…. இல்லை அப்பாகிட்ட சொல்லிடுவேன்…”
“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது போடி… உங்க அப்பனா எனக்குப் பயமா….?”
“இல்லை நீ இப்படி எதை என்கிட்ட இருந்து மறைக்கிற… எனக்குத் தெரியாது இப்போ அதை நான் பார்த்தே ஆகணும்…” என்ற வினிதா, ரேணுகாவின் கையில் இருந்ததின் ஒரு பக்கத்தை பிடித்தாள். மறு பக்கம் ரேணுகாவின் கையில் இருந்தது. அதை வினிதா இழுக்க முயன்றாள். அவரும் தரமாட்டேன் என்று இழுக்க, இருவரும் அதை வேகமாக இழுக்க, ரேணுகா கையில் இருந்த போட்டோ இரண்டாக கிழிந்தது.
அதன் ஒரு துண்டு வினிதாவின் கையிலும் மற்றைய துண்டு ரேணுகாவின் கையிலுமாக வந்தது. இதைப் பார்த்த ரேணுகாவிற்கு கோபம் வந்தது. “அடியே சண்டாளி…. என்ன வேலை பார்த்து வைத்திருக்கிறாய்…. என் குடும்ப ஞாபகமா இருந்தது இந்த ஒரே ஒரு போட்டோ தான்…. அதையும் இப்படி அநியாயமா கிழிச்சு போட்டியே…. உன்னை எல்லாம் என்னடி செய்றது….?” என்று அவள் முதுகில் நான்கு போடு போட்டார் ரேணுகா.
அதை வாங்கிக் கொண்ட வினிதா, “அம்மா இப்போ எதுக்கு இப்பிடி போட்டு அடிக்கிற….? நீ மாமா குடும்பத்தோட போட்டோவைத் தான் பார்க்குறேன்னு சொல்லியிருக்கலாம்ல… அதுக்கு நான் என்ன பண்ண போறேன்…. பேசாம போயிருப்பன்ல… அதை விட்டுட்டு நீ மறைக்கத்தான் ஒரு ஆர்வத்துல வந்து நான் புடிச்சி இழுத்தேன்…. நீயாவது நான் இருக்கிறான்னு போட்டோவை விட்டு இருக்க வேண்டியது தானே… இப்போ பாரு ரெண்டு பேரும் புடிச்சு இழுத்து போட்டோ கிழிஞ்சி இருக்கு… இதில என்னை மட்டும் போட்டு அடிக்கிற… மாமா குடும்பத்து போட்டோனு சொன்னா நான் பேசாம போயிருக்க போறேன்….” என்றாள் வினிதா.
“யாரு நீ அமைதியா போயிடுவ…? அவங்க ஞாபகமா இருந்தது இந்த ஒரே ஒரு போட்டோ தான்…. அதுவும் இப்போ இல்லை…. அண்ணா உங்க கூடத்தான் இருக்க கொடுத்து வைக்கலை… அட்லீஸ்ட் போட்டோவைக்கூட பார்க்க முடியாம போயிடிச்சே… போ வினிதா இங்க இருந்து…. என் கண்ணு முன்னாடி வந்த உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது….” என்று அவைப் பிடித்து தள்ளினார் ரேணுகா. அதில் வினிதா கீழே விழ அவளது கையில் காயம் ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல், “அம்மா….” என்று ரேணுகாவின் தோளைத் தொட வந்தாள் வினிதா. “இங்க பாரு மரியாதையா சொல்லிட்டேன்… இங்க இருந்து போயிரு இல்லை… உன் கையை உடைத்து அடுப்புக்கு வைத்துவிடுவேன்….” என்றார்.
வினிதாவும்,’ எப்படியாவது ஓகே ஓடிடுடி…. ரேணுகா சொன்னதை செஞ்சாலும் செஞ்சுடும்…’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நைசாக தனதறைக்கு சென்று விட்டாள்.
எல்லாருக்கும் இரவு நேர உணவை கொடுத்த ரேணுகா அவர் உண்ணவில்லை. “அம்மா ஏன் சாப்பிடலை….? வாமா நீயும் எங்ககூட சேர்ந்து சாப்பிடு…” என்றாள் வினிதா. ஆனால் அவரோ, “ஏய் போய்டு…. எனக்கு பசிச்சா எனக்கு சாப்பிட தெரியும்…. நீ ஒன்னும் சொல்ல வர வேணாம்…” என்றார்.
“ ஆமா பொண்ணுக்கு எதுனா மட்டும் வந்துருவாரு….” என்று முணுமுணுத்த ரேணுகா, “எனக்கு பசிச்சா எனக்கு சாப்பிட தெரியும்ங்க… நான் எப்போ சாப்பிடணும்….. எப்போ சாப்பிடக் கூடாதுனு அதையும் நீங்கதான் முடிவு பண்ணுவீங்களா…?” என்று யாரு மீதோ உள்ள கோவத்தை யார் மீதோ காட்டினார் ரேணுகா.
“வினிமா உங்க அம்மாக்கு இன்னைக்கு ஏதோ நடந்திருச்சு… நீ அவளை கண்டுக்காத…. நீ சாப்பிட்டு போய் தூங்குமா….” என்றார். அவளும், “சரிப்பா….” என்று சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றாள்.
ரேணுகா எதுவும் சாப்பிடப் பிடிக்காமல் அப்படியே அங்கிருந்த எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு சென்று படுத்து விட்டார். இங்கே அறையில் வந்து படுத்த வினிதாவிற்கு மனசே கேட்கவில்லை. தாய் சாப்பிடாதது, அவர் வருத்தப்பட்டது என்று இவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ‘அவசரப்பட்டுட்ட வினி… பாவம் அம்மா…. இப்போ அவங்க கிட்ட இருந்த அந்த ஒரு போட்டோவையும் கிழிஞ்சிடுச்சி இனிமேல் மாமா, அத்தையைப் பார்க்க என்ன பண்ணுவாங்க…? ஐயோ கடவுளே இதுக்கு என்ன பண்ணலாம்…. அம்மாவை எப்படியாவது சிரிக்க வைக்கணுமே…” என்று யோசித்தவளுக்கு ஒரு ஐடியா வந்தது.
அதை செயல்படுத்த அவளது தோழிக்களுக்கு மாறி மாறி போன் போட்டாள். அவர்களோ நல்ல உறக்கத்தில் இருந்தார்கள் போல ஒருத்தரும் போனை எடுக்கவில்லை. ‘சரி வினி உனக்கு நீ தான் துணை… கிளம்பிடு கைப்புள்ள…’என்று அவளுக்கு அவளே தைரியம் கூறிக் கொண்டு, அலமாரியில் இருந்த ஒரு கறுப்பு கம்பளியை எடுத்து தலையில் இருந்து போர்த்திக் கொண்டவள், மெல்ல வீட்டிலிருந்து கிளம்பினாள். வீட்டை விட்டு வெளியே வந்தவள், தனது ஸ்கூட்டரே ஸ்டார்ட் செய்யாமல் அதைத் தள்ளிக்கொண்டே வீட்டை விட்டு சிறிது தூரம் வந்தாள். சுற்றும் முற்றும் மருத்துவம் பார்த்துவிட்டு தன்னை யாரும் கவனிக்கவில்லை என்றதும், ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வெற்றிமாறனின் வீட்டை நோக்கி சென்றாள்.
வெற்றிமாறனின் வீட்டின் பின்பக்கமாக ஸ்கூட்டரை நிறுத்தினாள். அந்த காம்பவுண்ட் சுவரை நிமிர்ந்து பார்த்தாள். ‘என்னடா இது காம்பவுண்டு சுவரை கட்ட சொன்னால் ஏதோள சிறைச்சாலைக்கு காம்பவுண்டு கட்டி வச்ச மாதிரி இருக்கு…. வினி இதுல எப்படி நீ ஏறப் போற…? அவசியம் ஏறியே ஆகணுமா…?” என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
‘ஏய் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது… அம்மாவுக்காக எது வேணாலும் செய்வா இந்த வினி… வினி உன்னால முடியாதது எதுவுமில்லை…’ என்று அவளை அவளே . தட்டிக் கொடுத்துக் கொண்டாள். பின்னர் ஒரு வழியாக ஸ்கூட்டரின் மீது ஏறி சுவற்றைப் பிடித்து மறுபக்கம் துள்ளி குதித்தாள் வினிதா.
நன்றாக மூச்சு வாங்கியது அவளுக்கு. மெல்ல மெல்ல நடந்து வந்தவள். வீட்டின் உள்ளே செல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டவள், எதற்கும் பின்பக்கத்து கதவைத் திறந்து பார்க்கலாம் என்று, பின்பக்க கதவின் பக்கம் வந்து அதைத் திறந்தாள். கதவு திறந்து கொண்டது.
‘அட என்னடா இது… கதவு திறந்து கிடக்குது… ஒரு வேளை யாரும் திருட வந்திருப்பாங்களோ…’ என்று யோசித்தாள். பின்னர், ‘சரி யார் வந்தா நமக்கென்ன… நம்மளோட வேலையை முடிச்சிட்டு நம்ம போய்கிட்டு இருக்க வேண்டியதுதான்….’ என்று மெல்ல மெல்ல சத்தம் போடாமல் பூனை போல நடந்து வந்தாள் வினிதா. ‘ஐயோ இதுல எந்த அறையில் மாம்ஸ் இருக்கும்னு தெரியலையே…’ என்று புலம்பிக் கொண்டு ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்துக் கொண்டு வந்தாள். முதல் அறையை திறந்தாள். அங்கே திருநீலகண்டனும் சாரதாவும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள். ‘ஐய்யய்யோ… நம்மளோட தாத்தா பாட்டி… மாட்டினம் செத்தோம்….” என்றவள் மெல்ல கதவை மூடினாள். அடுத்ததாக, குமுதாவின் அறை, சுந்தரம் ராகவி அறை என்று ஒவ்வொரு அறையாக பார்த்து மூடினாள். ‘என்னடா இது வீடு ஃபுல்லா றூமா வச்சிருக்கிறங்க…. இந்த மாம்ஸ்ஸோட அறைய மட்டும் காணவே இல்லை…. ஒருவேளை அவன் இந்த வீட்டு ஹால்ல ஒரு பக்கமா மூலையில படுத்து இருப்பானோ…’ என்று எண்ணினாள்.
அவள் யோசிக்கும் போதே அவளது வாயை மூடி அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான் வெற்றிமாறன். “ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்…” என்று கையை காலை உதறினாள் வினிதா.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super and intresting divima