அத்தியாயம் 10
தேவ், சூர்யா, வருண் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்டது ஒளிர்மதியைதான். தேவ் இன்று அலுவலகம் செல்லாததால் அவருக்கு ஒளிர்மதி யாரென்று முதலில் தெரியவில்லை. அவரோ தேவிகாவிடம் சைகையால் யாரிது என்று கேட்க, தேவிகாவும் பிறகு கூறுவதாக சைகையில் கூறினார்..
சூர்யாவை இந்த நேரத்தில் எதிர்பார்க்காத ஒளிர்மதிக்கோ ஒரு விதமான கலவையான உணர்வுகள். ஏதோ இது அவளது குடும்பம் என்ற உணர்வு தோன்றாமல் இல்லை. தனது மன எண்ணங்கள் செல்லும் திசையை கண்டு அதிர்ந்தவள், தேவிகாவிடமும் மற்றவர்களிடம் விடைப்பெற்று வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள்..
அவளை தடுத்த தேவிகாவோ “நீ எப்படி போவ?” என்று கேட்க..
“நான் கேப் புக் பண்ணி போயிடுவேன்” என்று ஒளிர்மதி கூறினாள்..
“என்னை டிராப் பண்ண வந்ததுனால தானே உனக்கு இந்த சிரமம்..”
“ஐயோ! மேம் அப்படிலாம் எதுவும் இல்லை..”
“சரி அப்ப சூர்யா உன்னை டிராப் பண்ணுவான்..”
“அதெல்லாம் வேண்டாம்” என்று ஒளிர்மதி கூறி முடிக்கும் முன் வண்டி சாவியை கையில் எடுத்தவனோ வாயிலை நோக்கி நடந்தவாறே, திரும்பி ஒளிர்மதியை பார்த்து “வரலையா? இல்ல கொஞ்ச நேரம் இருந்திட்டு போறீயா? என்று கேட்க..
அதனை மறுத்தவளோ மீண்டும் ஒருமுறை அனைவரிடமும் விடைப்பெற்று சூர்யாவுடன் சென்றாள்..
அவர்கள் இருவரும் சென்றவுடன் வருணை பார்த்த தேவிகாவோ “உன் அண்ணணுக்கும், அந்த பொண்ணுக்கும் இடையில் ஏதாச்சும் இருக்கா?” என்று நேரடியாகவே கேட்டார்..
இதனை கேட்டு மற்ற அனைவரும் அதிர வருணிடமோ எந்த வித அதிர்ச்சியும் இல்லை..
தேவ்வோ ” தேவிமா நீ ஏன் இப்படிலாம் பேசுற? என்று கேட்டார்..
சொர்ணம்மாளும் சக்கரவர்த்தியும் அதையே தேவிகாவிடம் கேட்டனர்..
“அவங்க இரண்டு பேர் பத்தி பேசுனா உங்க எல்லார்க்கும் அதிர்ச்சியா இருக்கு. ஆனால் இவன் நார்மலாதான இருக்கான். அப்ப இவனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு” என்று தேவிகாவும் வருணை பார்த்து கூறினார்..
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட வருணோ “அவங்களுக்கிடையில் என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ பிரச்சனைன்னு தெரியும். ஆனா அது ஏன்னு எனக்கு தெரியாது” என்று கூறினான்..
“உனக்கு இது எப்ப தெரியும்?” என்று தேவ் வருணிடம் கேட்டார்..
“இந்தியா வந்ததுக்கு அப்புறம்” என்று கூறியவன் ஐஸ்கீரிம் கடையில் இருவரும் பேசிக்கொண்டதை பார்த்தாக கூறியவன், அவர்கள் என்ன பேசினார்கள் என்று கூறவில்லை..
அவனை ஆராயும் பார்வை பார்த்த தேவிகாவோ “உன் லைஃப்லயும் ஏதாச்சும் காதல் இருக்கா?” என்று கேட்க..
அவரை முறைத்தவனோ “என் வாழ்க்கையில் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை, யாரையும் காதலிக்க போறதும் இல்லை..”
“அத்தைமா ஒளிர்மதி வந்த நேரம் ரொம்ப நல்ல நேரம். பாருங்களேன் இவனுக்கு நல்ல பேச கூட வருது. அவளுக்கு தங்கச்சி இருந்தா இவனுக்கே கட்டி வைச்சிடலாம். அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் சேர்ந்து இவனுக்கு பேச்சு வர வச்சிடுவாங்கா..”
தேவிகாவின் இந்த பேச்சில் எரிச்சல் அடைந்தவனோ தனது அறை நோக்கி சென்றான்..
வருண் சென்ற பின் சொர்ணம்மாளோ தேவிகாவிடம் “அவனை ஏன் சீண்டுற?” என்று கடிந்துக்கொள்ள..
“அத்தைமா மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது, நாமதான் பிடுங்கனும். இவனை இப்படியே விட்டா ஒதுங்கிதான் போவான்” என்று தேவிகாவும் கூறினார்..
காரின் அருகே வந்த ஒளிர்மதியோ பின் இருக்கையில் அமர போக, அவளை தடுத்த சூர்யாவோ “நீ பின்னாடி உட்கார்ந்தா உன்னை சைட் அடிச்சிட்டே வண்டிய எங்காயவது ஆக்ஸிடண்ட் பண்ணிருவேன் அதனால முன்னாடி வந்து உட்காரு” என்று கூற..
அவனை முறைத்த ஒளிர்மதியோ “அப்படி ஒன்னும் நீங்க கஷ்டபடணும்னு அவசியம் இல்லை. நான் கேப் புக் பண்ணிக்குவேன்” என்று கூறினாள்..
“உன்னை முன்னாடி தான் உட்கார சொன்னேன். ஆனா நீ பேசுற பேச்சுக்கு உன்னை மடியில் வைச்சிட்டு தான் ட்ரைவ் பண்ணனும்னு நினைக்கிறேன்” என்று கூறியவாறே அவள் அருகே செல்ல, அதில் பயந்தவளோ காரின் முன் இருக்கையில் அவசரமாக சென்று அமர்ந்தாள்..
அவளை தொடர்ந்து சிரித்தபடியே காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன் வண்டியை இயக்கினான்..
அவனை திரும்பி முறைத்த ஒளிர்மதியோ “நினைச்சதை சாதிச்சிட்டிங்கல்ல” என்று கேட்க..
“இன்னும் இல்லை” என்று அவன் கூறிய பதிலில் எரிச்சலடைந்தவள், காரின் எஃப்.எம் ஐ இயக்க அதிலோ “என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டை பார் என்னை பிடிக்கும்” என்று பாடல் வரிகள் ஒலித்தது..
அவ்வரிகளின் அர்த்தம் இன்று தானே உணர்கிறாள். சூர்யாவினை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள் “நீங்க ரொம்ப லக்கி. உங்க ஃபேமிலில எல்லாரும் கலகலப்பா இருக்காங்க” என்று கூற..
காரை ஓட்டியவாறே அவளை பார்த்தவன் “என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டனா என்னோட சேர்ந்து என் குடும்பமும் உனக்கு சொந்தம் ஆகிடும். அதனால நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்..”
“கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்களை காசுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்..?”
அவளது பேச்சில் காரை ஓரமாக நிறுத்தியவன் அவளை நோக்கி “அன்னைக்கு நான் உன்கிட்ட பேசுனது தப்பு தான் என்னை மன்னிச்சிரு” என்று கெஞ்சுதலாக கேட்டான்..
“காலம் கடந்து கேட்கிற மன்னிப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை, மிஸ்டர் சூர்யா..”
“நீ நம்ப மாட்ட உங்கிட்ட மன்னிப்பு கேட்க ஒரு வாரமா காலேஜில் காத்திட்டு இருந்தேன் ஆனா நீ காலேஜ் வரலை. அந்த நேரத்தில் வீட்லயும் ஒரு எமர்ஜென்சியான சுட்சுவேஷன். என்னால அப்போதைக்கு வேற எதுவும் யோசிக்க முடியலை. உன்னை போன்ல காண்டக்ட் பண்ண முயற்சி பண்ணினேன், ஆனா நீ நம்பர் சேன்ஜ் பண்ணிட்ட. அதுமட்டுமில்லை நீ படிச்சிட்டு இருந்ததால உனக்கு தொந்தரவு தர கூடாதுன்னு தான் ஒதுங்கியே இருந்தேன்..”
“நல்ல கதை சொல்றீங்க..”
“எங்க என் கண்ணை பார்த்து சொல்லு, நான் பொய் சொல்றேன்னு..”
“நீங்க என்னை குழப்புறீங்க..”
“நம்ம கடந்த காலத்தில நடந்தத மறந்திடு. இப்ப இந்த நிமிஷம் உன் மனசுல நான் இல்லைன்னு சொல்லு உன்னை நான் தொந்தரவு பண்ணாம விலகி போயிடுறேன்..”
கண்மூடி அனைத்தையும் சீட்டில் சாய்ந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தவள், காரை திறந்து வெளியேறி ஆட்டோ ஒன்றை கைக்காட்டி நிப்பாட்டியவள் அதில் ஏறி சென்று விட..
செல்லும் அவளை தடுக்காது அவளுக்கான தனிமையை கொடுத்தவன் அமைதியாக அவள் சென்ற ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றான்..
ஆட்டோவில் இருந்த ஒளிர்மதியின் அலைப்பேசி ஒலிக்க அதனை எடுத்து பார்க்க அவளது தந்தையே அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று காதில் வைத்து “அப்பா” என்றழைக்க..
எதிர்புறம் பேசிய விஜயராகவனோ அவளிடம் வேலையின் முதல் நாளை பற்றி விசாரித்துவிட்டு வைத்துவிட்டார்..
ஆட்டோ ஓட்டுனரோ அவளிடம் சூர்யா பின்தொடர்ந்து வருவதைக் கூற, அதனை கேட்டவளோ வீடு இருக்கும் தெருவுக்கு ஒரு தெரு முன்னமே இறங்கியவள் ஆட்டோக்கான காசை கொடுத்துவிட்டு நடக்கலானாள்..
காரில் அமர்ந்தவாறு அவள் செல்வதை பார்த்தவனோ அவள் வீட்டிற்கு செல்வதாக நினைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு சென்றான்..
நடந்து வீட்டை அடைந்தவளோ வீட்டிற்குள் நுழைய, அவளை ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் மதியரசி..
அவரை பார்த்தவாறே தனது அறைக்குள் சென்றவளை “மதி” என்றழைத்தார் மதியரசி..
“என்ன பாட்டிமா” என்று கேட்டவாறே ஒளிர்மதி மதியரசியின் அருகே வந்தாள்..
“வேலை பிடிச்சுருக்கா?” என்று கேட்டவரை விநோதமாக பார்த்தவள்..
“பிடிச்ச வேலை பிடிக்காம எப்படி போகும்..” என்று பதில் கூறினாள் ஒளிர்மதி..
“பிடிச்ச வேலை பிடிக்காத இடத்தில இருந்தா?” என்று கேட்க..
“வேலையும் பிடிச்சிருக்கு இடமும் பிடிச்சிருக்கு..”
“எல்லாம் பிடிச்ச மாதிரி இருந்தா சரி” என்று கூறியவர் அவ்விடம் விட்டு செல்ல, அவர் கூறியது எதுவும் புரியாமல் தனதறை நோக்கி சென்றாள் ஒளிர்மதி..