அத்தியாயம் 1
லண்டன் பெரும் செல்வந்தர்களின் இருப்பிடமாக அறியப்படும் லண்டன் பிளாட்டினம் டிரையாங்கிளில் அமைந்த அந்த ஆடம்பர மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்தியவனின் எண்ணங்களில் நிறைந்திருந்தவள் அவள் ஒருத்தி மட்டுமே..
“அண்ணா” என்ற அழைப்பில் திரும்பியவன் அங்கு தன் தம்பி வருண் நிற்பதை கண்டு நீச்சல் குளத்தில் இருந்து வெளி வந்தான் நம் கதையின் நாயகன் சூர்யதேவ் சக்கரவர்த்தி. அவனது தாத்தா சக்கரவர்த்தி சிறிய அளவில் தொடங்கிய கட்டுமான நிறுவனத்தை அவனது அப்பா தேவ் தமிழ்நாடு அளவில் பிரபலமான நிறுவனமாக மாற்றினார்.
இவனோ கட்டுமான தொழிலோடு காற்றாலைகள், சூரிய ஆற்றல் (Solar Thermal), சிமெண்ட் மற்றும் கம்பி ஆலைகள், ஃபேஷன், ஃபார்மசூட்டிகள் என பிற துறைகளிலும் கால் பதித்து அதில் வெற்றியும் அடைந்து தொழில் துறையின் முடிசூடா அரசனாக திகழ்பவன். சாணக்கியனின் புத்திகூர்மை உடையவனின் மூளை வேலை நிறுத்தம் செய்தது காதலில் மட்டுமே..
தூவாலையால் தலையை துவட்டியவாறே வருணின் அருகே வந்த சூர்யதேவ் வருணிடம் ” இந்தியாவிற்கு போக ஏற்பாடு பண்ணிட்டியா?” என்று கேட்க..
வருணும் “ஆமாம் அண்ணா” என்றான் பின் தயங்கியவாறே “அண்ணா நானும் கண்டிப்பாக வரணுமா” என்று கேட்க.. அவனை பார்த்த சூர்யாவோ ” நீ இந்தியா வரக்கூடாதுனு தடை போட்டுருக்காங்களா?” என்க..
வருணோ “இல்லை ஆனா நான்.. நான்..” என்று திணற.. “டோன்ட் வேஸ்ட் மை டைம், சொல்ல வந்தத ஒழுங்கா திணறாம சொல்லு” என்று சூர்யா கூற..
வருணோ சூர்யாவை காணாது தலை குனிந்தவாறே “எனக்கு இந்தியா வர விருப்பம் இல்லை” என்க..
வருணிடம் சூர்யாவோ “நீ என் கூட இந்தியா வரணும்” என்று கோபமாக கூறிவிட்டு அவ்விடம் விட்டு செல்ல அவனின் முதுகை வெறித்த வருணோ அங்கிருந்த இருக்கையில் தளர்வாக அமர்ந்தான்..
நீச்சல் குளத்தை வெறித்தவாறே அமர்ந்திருந்தான் வருண். சூர்யாவுக்கும் அவனுக்கும் ஏழு வயது வித்தியாசம். அவர்களின் தாயும் தந்தையும் கட்டுமான நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த இரவு பகல் பாராமல் உழைக்க சூர்யாவும் வருணும் தேவ்வின் அம்மா சொர்ணம்மாளிடம் வளர்ந்தனர்..
தாயின் அருகாமை அவ்வபோது கிடைத்தாலும் தந்தையின் அருகாமை கிடைத்ததில்லை.. வருணுக்கு தன் அண்ணன் சூர்யா தாய் தந்தைக்கு ஒப்பானவன்.. ஒரு தந்தையாக தேவ் செய்ய வேண்டியவற்றை சூர்யாவே தன் தம்பிக்கு செய்தான், இனியும் செய்வான்..
வருணுக்கு சூர்யாவிடம் பயமில்லை ஆனால் அன்பும் மரியாதையும் அதிகம், அண்ணன் செய்யும் ஒவ்வொன்றும் தன் நல்லதுக்காக என்று அறிந்தாலும் அவனால் இந்தியாவிற்கு செல்ல தயக்கம் தான். கடந்தகால கசப்பான நிகழ்வுகளை அவனால் மறக்கமுடியவில்லை, காலம் அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கையும் அவனிடம் இல்லை. ஒரு நீண்ட பெருமூச்சோடு எழுந்தவன் தனதறை நோக்கி செல்ல ஆரம்பித்தான்..
இந்தியாவில்..
“சூர்யாவும், வருணும் இந்தியா வரப்போறாங்களாம்” என்று உற்சாகமாக கூறியவாறே வீட்டிற்க்குள் நுழைந்தார் தேவ்வின் மனைவியும் சூர்யா, வருணின் தாயாருமான தேவிகா..
வரவேற்பறையில் அமர்ந்திருந்த சொர்ணம்மாள் மற்றும் சக்கரவர்த்தி இருவருக்கும் நான்கு வருடங்களுக்கு பிறகு வரும் தனது பேரன்களின் வரவு மகிழ்ச்சியை கொடுக்க ஆனால் தேவிகா அடுத்து கூறிய விஷயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து பார்த்துக்கொண்டனர்..
தேவிகாவிற்கு அடுத்து நுழைந்த தேவ்வோ தனது தாய் தந்தையின் அதிர்ந்த முகத்தை பார்த்தவாறே அங்கிருந்த நீள்விருக்கையில் களைப்பாக அமர்ந்திருந்தார்..
மகனின் சோர்ந்த முகத்தை பார்த்த சக்கரவர்த்தி “வொர்க்கர்ஸ்க்கு என்னதான் பிரச்சனை ஸ்ட்ரைக்க எப்ப நிறுத்துவாங்களாம்?” என்று கேட்க..
அவரை சோர்வாக நோக்கிய தேவ்வோ “எல்லா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிய விட நம்ம வொர்க்கர்ஸ்க்கு சம்பளம் அதிகமாதான் கொடுக்குறோம்.. அதுமட்டுமில்லாமல் அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு கொடுத்திருக்கோம்.. அதுபோக போனஸ் எல்லாம் சரியாதான் கொடுக்குறோம்.. ஆனாலும் அவங்க நாம அவங்க வயிற்றில் அடிக்கிறதா சொல்றாங்க” என்று சோர்வுடன் கூற..
தேவ்வை பார்த்த சக்கரவர்த்தி “யார் தூண்டிவிட்டு இப்படி பண்றாங்க?” என்று கேட்க..
தேவ்வோ “நமக்கு தொழில்ரீதியாக போட்டி நிறைய இருக்கு.. யார் தூண்டி விடுறாங்கன்னு தெரியல.. நம்ம அக்சப்ட் பண்ணுன ப்ராஜெக்ட் எல்லாம் சொன்ன தேதியில் முடிக்க முடியல” என்று கூற..
இவர்களின் உரையாடலில் இடைப்புகுந்த தேவிகா “அதெல்லாம் சூர்யா பார்த்துப்பான். நீங்க எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க” என்று கேட்க..
தேவ்வும் “என்ன உதவி?” என்றார்..
சொர்ணம்மாள் சக்கரவர்த்தி இருவரும் தேவ்விற்கு சைகை காட்ட, தேவ்வோ இருவரையும் கவனிக்காமல் தேவிகாவை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்..
தேவிகாவும் “சூர்யாக்கும் வருணுக்கும் என் கையால சமைச்சு போடலாம்னு இருக்கேன்” என்று கூற..
அதைக்கேட்ட தேவ்வோ அதிர்ந்தவாறே தன் தாய் தந்தையின் அதிர்ந்த முகத்தின் காரணத்தை அறிந்தவாறே அவர்களை பார்க்க அவர்களும் ஏதாவது செய் என்று சைகை செய்தனர்..
தேவ்வும் “தேவிமா ஆஃபிஸ்ல நிறைய வேலை இருக்கு. இங்கே சமையல் செய்யதான் ஆட்கள் இருக்காங்களே..! நீ ஏன் கஷ்டபடனும்? என்று கேட்க..
“என் பசங்களுக்கு சமைக்கிறதுல என்ன கஷ்டம்?” என்று தேவிகா கேட்க..
சொர்ணம்மாளோ “ஆமா சாப்பிடற என் பேரன்கள்தான் கஷ்டபடணும் இவளுக்கு என்ன கஷ்டம் பாவம் என் பேரன்கள்” என்று முனுமுனுத்துக்கொண்டர்..
தேவ்வோ ” தேவிமா போன தடவை நீ பண்ணுன பால் அல்வா சாப்பிட்டு சூர்யாவுக்கு வயிறு வலி வந்துட்டு” என்று பரிதாபமாக கூற..
தேவிகாவோ “எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்” என்று கூற..
பதறிய தேவ்வோ ” நான் என்ன பண்ணுணேன்?” என்று கேட்டார்..
“நீங்கதான் பால் அல்வா சாப்பிட்டு பார்த்துட்டு நிறை குறைன்னு எதுவும் சொல்லல” என்று தேவிகாவும் பதில் கூற..
“நான் தான் பால் அல்வா சாப்பிட்டதற்கு அப்புறம் வாய் திறக்க முடியாம இருந்தேன்ல” என்று தேவ்வும் பாவமாக கூறினார்..
“சரி அதெல்லாம் விடுங்க இன்னைக்கு குலாப் ஜாமூன் செய்றது எப்படின்னு வீடியோ பார்த்தேன் அத இப்ப செய்ய போறேன். நீங்க சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் நம்ம பசங்க வரும் போது சரியா செஞ்சு கொடுத்துடுவேன்”
“இன்றைக்கு ஆஃபிஸ்ல வேலைதான பார்த்துட்டு இருந்த. சமையல் வீடியோ பார்க்க டைம் எப்படி கிடைச்சது?”
“நான் மீட்டிங் டைம்ல பார்த்தேன்”
“இதையே வேற யாரச்சும் பண்ணிருந்தா அவங்க வேலை போயிருந்திருக்கும்”
இவன என்ன பேச சொன்னா இவன் என்ன பேசிட்டு இருக்கான். ஒரு மாமியாரா நான் தான் இவளை சமைக்க விடாம பண்ணனும். இவ சமைச்சு என் பேரன்கள ஒரே நாள்ல ஓட வைச்சிருவா. கட்டின பாவத்துக்கு என் மகன் கஷ்டபடட்டும் என் பேரன்க பாவம் என்று எண்ணியவாறே சொர்ணம்மாளும் தேவிகாவை பார்த்து..
“போன தடவை அல்வா கிண்டுறேன்னு கோந்து கிண்டி என் மகன் வாயை ஒட்ட வைச்ச. இப்ப குலாப்ஜாமூன் செய்றேன்னு அவன் பல்லை உடைக்க போறீயா?”என்று கேட்க..
“நான் சமைக்கிறத பார்த்து நீங்க பொறமை படுறீங்க. அதான் என் சமையலை மட்டம் தட்டி பேசுறீங்க.. யார் என்ன சொன்னாலும் நான் குலாப்ஜாமூன் செய்றது உறுதி.. அதை தடுக்க உங்களால முடியாது”.. என்று கூறிய தேவிகா அங்கே நின்ற தேவை பார்த்து “சீக்கிரம் வந்து எனக்கு உதவி பண்ணுங்க”என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றார்..
அவர் சென்ற பின் தேவ் அருகே வந்த சொர்ணம்மாளோ “டேய் மகனே! எதுக்கும் கையில சுத்தியல் வைச்சுக்கோ அப்பதான் உன் பொண்டாட்டி பண்ற குலாப்ஜாமூன உடைச்சு சாப்பிட வசதியா இருக்கும்” என்று கேலி செய்ய..
அவரை முறைத்த தேவ்வும் “அம்மா நீங்க சரியில்லை” என்க..
“நான் என்னடா பண்ணுனேன்”
“உங்களுக்கு மாமியார் கொடுமை பண்ண வரலை அதான் உங்க மருமகள் உங்ககிட்டே இப்படி பேசிட்டு போறா”
“உனக்கு மருமகள் வரப்போற வயசில உன் பொண்டாட்டிக்கு நான் மாமியார் கொடுமை பண்ணவா”
“அம்மா ப்ளீஸ் எனக்கு ஏதாச்சும் உதவி பண்ணுங்க” என்று தேவ் சொர்ணம்மாளிடம் கெஞ்ச..
சொர்ணம்மாளும் “உன் பொண்டாட்டி செஞ்ச அல்வா இருந்தா வாயில போட்டுக்க. உன் வாய் ஒட்டுனதுக்கு அப்புறம் அவ உன்னை தொந்தரவு செய்யமாட்டாள்” என்று சிரிப்பை அடக்கியவாறே கூற..
அவரை முறைத்த தேவ்வோ “சாட்சிகாரன் கால்ல விழுவதைவிட சண்டக்காரன் கால்ல விழுறேன்” என்று கூற..
“அப்படினா”
“என் பொண்டாட்டிய சமைக்க விடாம பண்றேன்” என்றவாறே அங்கிருந்து சென்றார்..
தேவ்வை பார்த்து சிரித்தவாறே சக்கரவர்த்தி அருகே அமர்ந்தார் சொர்ணம்மாள்..
“என்ன பேரன்கள் வராங்கன்னு ரொம்ப சந்தோஷமா?” என்று கேட்டார் சக்கரவர்த்தி..
“பின்ன இருக்காதா. சூர்யாவாது வருசத்திற்கு ஒரு தடவையாது வந்து பார்த்திடுவான். ஆனா வருணை பார்த்து நாலு வருஷம் ஆயிடுச்சு. எப்படி இருக்கானோ?” என்று பெருமூச்சு விட..
“நேர்ல வரும்போது பார்த்து தெரிஞ்சுக்க”
“அவன் பழைய கசப்பான விஷயங்களை மறந்திருப்பான்ல” என்று கேட்ட சொர்ணம்மாளை பார்த்த சக்கரவர்த்தியோ “அவன் மறக்கலனா நாம மறக்க வைச்சிடுவோம்” என்று ஆதரவாக தன் மனையாளின் கைப்பற்றினார் சக்கரவர்த்தி..
காலம் மாற்றாத காயங்களை நெருக்கமானவர்களின் அன்பு மாற்றும்..