அத்தியாயம் 7
சிக்னலில் காரை நின்றிருந்த இளந்தீரனின் காரின் பின்புறம் டம் என்ற சத்தத்தோடு மோதியது. காரில் இருந்து இறங்கியவன் காரின் பின்புறம் சென்று பார்க்க அங்கு இரு சக்கர வாகனத்தை தன் காரின் மீது மோத விட்ட பெண் அவனை கண்டு அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தாள்..
அவளை கண்டு முறைத்தவன் “வண்டி ஓட்ட தெரியலைனா பஸ்ல போக வேண்டியதான. இது நீ கட்டி வைச்ச ரோடா இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுற” என்று அப்பெண்னை பார்த்து கோபமாக கத்தினான்..
அப்பெண்ணோ ” சாரி சார் நான் வேணும்னு பண்ணல” என்று கெஞ்சினாள்..
சிக்னலில் நின்று கொண்டிருந்ததால் பிற வாகன ஓட்டிகளும் இவர்களை வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தனர்..
அவர்களை சுட்டிக்காட்டிய அப்பெண்ணோ “சார் எல்லாரும் பார்க்கிறாங்க. நீங்க உங்க காரை சரி பண்றதுக்கு தேவையான பணத்தை தந்திடுறேன்” என்று கூறினாள்..
அவளை அழுத்தமாக பார்த்தவனோ “இப்படி தான் ஒவ்வொரு வண்டியையும் இடிச்சிட்டு காசு கொடுப்பியா” என்று நக்கலாக கேட்டான்..
“சார் ஏதோ என் கெட்ட நேரம் உங்க வண்டில வந்து இடிச்சிட்டேன். அதுக்காக நீங்க இப்படி எல்லாம் பேசக் கூடாது” என்று கூறினாள்..
சிக்னலில் நின்றிருந்தவர்களும் ” ஏன்ப்பா அந்த பொண்ணுதான் காசு தரேன்னு சொல்லி மன்னிப்பு கேட்குதல, கொஞ்சம் இரக்கம் காட்டுப்பா” என்று கேட்டனர்..
“ஆமா பொண்ணுங்கனா இரக்கம் காட்ட சொல்லுவானுங்க. இதுவே ஒரு ஆம்பிளையா இருந்தா குடிச்சிட்டு வண்டி ஓட்டுனியான்னு கேட்பானுங்க” என்று மனதுக்குள் திட்டியவன் பின் அப்பெண்ணை பார்த்து “வண்டி சரி பண்ணுனதும் காசு எவ்ளோன்னு சொல்றேன். உன் நம்பர் கொடு” என்று கேட்க அப்பெண்ணும் தனது நம்பரை கொடுத்தாள்..
“சார் உங்க நம்பர்” என்று கேட்டவளிடம் தனது அலைப்பேசியிலிருந்து அவளது நம்பருக்கு அழைக்க அவனது நம்பர் திரையில் விழுந்தது. “அது தான் என் நம்பர்” என்று கூறியவன் அவளது ஸ்கூட்டியை ஃபோட்டோவாக எடுக்க, அதனை கண்ட அப்பெண்ணோ “சார் என் ஸ்கூட்டி உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கா, ஃபோட்டோலாம் எடுக்குறீங்க” என்று கேட்டாள்..
“ஸ்கூட்டி உன்னோடது தான..”
“ஆமா..! ஏன்..?”
“இல்லை காசு கேட்டதுக்கு அப்புறம் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டனா, உன் ஸ்கூட்டி நம்பர் வைச்சு உன் மேல கம்பிளைண்ட் பண்ணதான்..”
“சார் நீதி நேர்மைக்கு மறு பெயர் என்னன்னு கேட்டா அது நானா தான் இருப்பேன்..”
“அது காசு கேட்கும் போது தெரியும்” என்று கூறியவன் தனது வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மெக்கானிற்கு அழைத்தான்..
அவன் அருகே சென்ற பெண்ணோ “சார் நான் வேணா உங்களை டிராப் பண்ணவா?” என்று கேட்டாள்..
“எங்க பரலோகத்திலயா..? எனக்கு ரொம்ப நாள் உயிர் வாழனும்னு ஆசை இருக்கு..”
“ஐயோ சார் நான் ரொம்ப நல்ல வண்டி ஓட்டுவேன்..”
தன் காரின் பின்புறத்தை சுட்டி காட்டியவன் “தெரியுது” என நக்கலாக கூறினான்..
அதற்குள் அவன் அழைத்த மெக்கானிக்கும் வந்து விடவே அவனிடம் காரை ஒப்படைத்தவன், மெக்கானிக் வந்த காரில் கிளம்ப தயாரானான்..
அவனை வழிமறித்தவளோ “சார் உங்க மெக்கானிக் கூட காஸ்ட்லி கார் வைச்சுருக்கார்” எனக் கூற..
“அது என்னோட கார்..”
“உங்களுக்கு டிரைவ் பண்ண வராதா..?”
அவள் கேள்வியில் குழம்பியவனோ “ஏன்?” என்று கேட்டான்..
“இல்லை மெக்கானிக் ஷாப்ல இருந்து வண்டி வருதே..! எங்காயச்சும் கொண்டு போய் இடிச்சுடீங்களா..?”
“அரை மெண்டல்” என்று அவளை மனதிற்குள் திட்டியவன், தனது வாகனத்தை உயிர்ப்பித்து தனது அலுவலகம் நோக்கி சென்றான்..
செல்லும் அவன் வாகனத்தையே இதழில் புன்முறுவலோடு பார்த்துக்கொண்டே தனது வாகனத்தை உயிர்ப்பித்தாள் அவள்..
பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தை வந்தடைந்த சூர்யா அவர்களிடம் நடந்த மோசடிகள் அனைத்தையும் விளக்கி கூறிய பின், இனிமேல் எந்த தவறும் நடக்காது என்றும், அவர்களுக்கு சேர வேண்டிய தொகை அவர்களுக்கு கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டு பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்கள்..
அலுவலகம் திரும்பிய சூர்யாவிடம் “இங்க பிரச்சனை முடிஞ்சதால மறுபடியும் நீங்க இரண்டு பேரும் லண்டன் போய்டுவீங்களா?” என்று கேட்டார் தேவிகா..
“இல்ல மா நாங்க இனிமேல் இங்கதான், சில நேரம் லண்டன் போகுற மாதிரி இருக்கும்” என்று கூறிய சூர்யா அலுவலகத்தில் தனது அறைக்கு திரும்பினான்..
இது தேவிகாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்க, சூர்யா இப்படி தான் கூறுவான் என்பதால் வருணிடம் எந்த அதிர்ச்சியும் இல்லை. தேவிகாவை பார்த்து சிறிது புன்னகைத்த வருணும் தனது அறைக்கு திரும்பினான். செல்லும் வருணின் முதுகை வெறித்த தேவிகாவோ “இவன் எப்பதான் பழைய வருணா மாறுவானோ” என்று தன்னை தானே கேட்டுக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்..
“அடியே துரோகி” என்று கத்திக்கொண்டே ஓய்வறைக்குள் நுழைந்தாள் மஞ்சரி..
“இது ஹாஸ்பிட்டல் டி இங்கே இப்படிலாம் சத்தம் போட கூடாது” என்று கூறிக்கொண்டே தனது வெள்ளை நிற கோட்டை அணிந்தாள் நிரல்யா..
“ஏண்டி வழக்கமா பசங்க தான் ஃபிகர பாத்தா ஃபிரெண்ட்ஸ்ஸ கழட்டி விடுவாங்க. நீ என்னடானா உன் ஆளை பார்த்ததும் என்னை கழட்டி விட்டுட்டல்ல” என்று மூச்சுவிடாமல் கத்திக்கொண்டிருந்தாள் மஞ்சரி..
“நீதானடி சொன்ன தைரியம் இருந்தா நம்பர் வாங்கி காட்டுன்னு..”
“அதுக்குன்னு வண்டியை கொண்டு கார் மேலயா இடிப்ப, ஒரு வேளை வண்டில இருந்து கீழே விழுந்து அடி பட்டிருந்தா..”
“அதான் ஒன்னும் ஆகலையே”
“உன்னெல்லாம் திருத்த முடியாது. நம்பர் வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறம் உன்னை பிக்கப் பண்றேன்னு சொல்லிட்டு போனவ அப்படியே போயிட்டியே..! உன்னை நம்பி வந்ததுக்கு ரோட்ல நின்னதுதான் மிச்சம்..”
“அப்படிலாம் சொல்லாதடி நீ தான் என்னோட உயிர் தோழி..”
“உயிரை வாங்குற தோழின்னு வேணா சொல்லு கரெக்ட்டா இருக்கும். இனிமேல் என் ஆளை பார்க்க போரேன், கால பார்க்க போறன்னு சொல்லிட்டு என்னை நகர்வலம் கூட்டிட்டு போக வந்த அப்புறம் இருக்கு உனக்கு..”
“என் செல்ல மஞ்சு நீ ஒரு ஆஞ்சநேயர் மாதிரி உன் பலம் உனக்கே தெரியல. ஆஞ்சநேயர் எப்படி ராமரையும், சீதையையும் சேர்த்து வைச்சாரோ..! அதே மாதிரி நீயும் எங்க காதலை ஏன் சேர்த்து வைக்கக்கூடாது..”
“அதுக்கு நீ தீவுலயும் இல்லை, உன் ஆளு கடல் தாண்டியும் இல்லை, நான் பறந்து வந்து உங்களை சேர்த்து வைக்க..”
“சரி க்ளாசுக்கு டைம்மாச்சு வா போகலாம்” என்றவாறே இருவரும் அந்த மருத்துவ கல்லூரி வளாகத்திலுள்ள அவர்களது வகுப்பறைக்கு சென்றனர்..
நிரல்யா மற்றும் மஞ்சரி இருவரும் மருத்துவ படிப்பினை பயின்று முடித்தவர்கள். மகளிர் மருத்துவத்தை மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுத்து மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று கொண்டிருக்கும் மாணவிகள்..
சக்கரவர்த்தி கன்ஸ்ட்ரக்சன் என்று பெயரை தாங்கிய அலுவகத்தின் முன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திய ஒளிர்மதி, தனது அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை அங்கிருந்த காவலாளியிடம் காட்டிவிட்டு உள் நுழைந்தாள்..
அங்கே இவளைப் போல் சிலரும் காத்திருக்கவே அவர்களின் அருகே இருந்த காலி இருக்கையில் அமர்ந்தாள்.
கட்டிடத்தின் உள் அலங்காரங்களில் பார்வையை பதித்தவள் அதன் நுணுக்கங்களை ரசித்தவாறே அமர்ந்திருந்தாள். உள் அலங்காரம் செய்தவர் மிகவும் ரசனையாளர் தான் என்று நினைத்துக்கொண்டாள்..
ஒளிர்மதியின் ஒவ்வொரு அசைவையும் சிசிடிவி வழியே கண்காணித்து கொண்டிருந்தான் சூர்யா. அவனது உதடுகளோ “வெல்கம் மை லவ்” என முனுமுனுத்துக் கொண்டது..
இன்டர்காமில் அலுவலக பணியாளர் ஒருவரை அழைத்தவன், காத்திருந்த அனைவரையும் மீட்டிங் ஹாலில் அமரவைக்க கூற, அவனது ஆணை நிறைவேற்றபட்டது..
மீட்டிங் ஹாலில் நுழைந்த சூர்யா மற்றும் வருணை கண்டு பெண்கள் பார்வை ரசனையாக படிய, ஒளிர்மதிக்கோ உயிரே உயிரே தப்பித்து எப்படியாது ஓடி விடு என்று வடிவேல் பாணியில் மைண்ட் வாய்சில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது..