அத்தியாயம் 8
மீட்டிங் ஹாலில் நுழைந்த சூர்யாவின் பார்வை ஒளிர்மதி மீது படிந்தது. சூர்யாவை பார்த்த ஒளிர்மதிக்கோ அதிர்ச்சியில் விழிகள் விரிய அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் முகபாவனைகளை உள்ளுக்குள் ரசித்தவன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்..
அவனை தொடர்ந்து தேவிகா, வருண் மற்றும் பிற பணியாளர்களும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். பணியாளர்களில் ஒருவர் அனைவருக்கும் அவர்களது பணி மற்றும் கம்பெனியின் வரலாறு அனைவற்றையும் விளக்கி கூற.. அவரது எந்த உரையையும் காதில் வாங்காமல் சூர்யாவையே முறைத்து கொண்டிருந்தாள் ஒளிர்மதி..
ஒளிர்மதி முறைப்பதையும் சூர்யாவின் பார்வை அவளை தீண்டுவதையும் கண்டுக்கொண்ட தேவிகாவோ, ஒளிர்மதியிடம் பார்வையை செலுத்தினார். அவருக்கோ அவளை எங்கோ பார்த்தது போல் இருக்க, அவரும் அவளது தற்குறிப்பை(resume) பார்க்க அதில் சூர்யா படித்த கல்லூரியிலே அவளும் படித்ததாக இருந்தது. கூடுதல் தகவலாக அவளது பிறந்த தினம் பிப்ரவரி பதினேழு என்று இருக்க, அவருக்கோ எதுவும் தெளிவாக புரியவில்லை..
புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள பலரை விடுத்து ஒளிர்மதியிடம் மட்டும் எதுவும் கேட்க முடியாது என்பதால், ஏற்கனவே உரையாற்றியவரின் உரை முடிந்ததும் தேவிகா பேசலானார்..
அனைவரையும் வரவேற்றவர், அவர்களிடம் தங்களை பற்றி அறிமுகம் செய்யக் கூறினார்..
ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்ய, ஒவ்வொருவரிடமும் சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக ஒளிர்மதியின் முறையும் வந்ததது..
ஒளிர்மதியும் தன்னை அறிமுகபடுத்திக்கொள்ள அவளை பார்த்த தேவிகாவும் ” உனக்கு சூர்யாவை தெரியுமா? என்று கேட்டார்..
அந்த கேள்வியால் கொஞ்சம் தடுமாறிய ஒளிர்மதியோ “புரியல” என்று கூற..
அவளது தடுமாற்றத்தை குறித்துக் கொண்ட தேவிகாவோ “இங்க உட்கார்ந்திருக்காரே சூர்யா அவரும் நீ படிச்ச காலேஜ்ல தான் படிச்சார். அதனால உனக்கு அவரை தெரியுமா?” என்று கூற..
சூர்யாவை பார்த்த ஒளிர்மதியோ “தெரியாது” என்று கூறினாள்..
அவளது பதிலை கேட்டுக்கொண்டிருந்த சூர்யாவும் ஒரு நொடி நிமிர்ந்து அவளை கேள்வியாக பார்த்தவன், பின் தனது பார்வையை திருப்பிக்கொண்டான்..
அங்கு அமர்ந்திருந்த வருணுக்கும் எதுவும் புரியவில்லை. நேற்று தனது அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்த பெண் இன்று அவனை தெரியாது என்று கூறியதால் குழம்பியவன், அனைத்தையும் ஒரு பார்வையாளராகவே பார்த்துக்கொண்டிருந்தான்..
ஒளிர்மதி பேசி முடித்த பின், பேச தொடங்கிய சூர்யாவோ “உங்கள் அனைவரையும் இங்கு அன்போடு வரவேற்கிறேன். நீங்களும் சக்கரவர்த்தி குடும்பத்தோட ஒரு அங்கம் தான்” என்று கூறியவனின் பார்வை ஒளிர்மதி மீது படிய..
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் எண்ணமோ இந்த வேலையை எப்படி விடுவது என்றே இருந்தது..
மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேறிவிட, ஒளிர்மதியும் மெதுவாக எழுந்தவள் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தாள்..
ஒளிர்மதியின் வீட்டிலோ கல்யாணியும், வேணியும் சமையல் செய்தவாறே மதியரசியின் நிபந்தனையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்..
“அக்கா அத்தை பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. மதிக்கு இப்ப என்ன வயசாயிடுச்சுன்னு கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க..”
“அவங்க என்ன பண்ணுனாலும் சரியாதான் இருக்கும்..”
“என்ன சரியோ? நான் பெறாட்டாலும் மதிதான் எனக்கு மூத்த பொண்ணு, அவளுக்கு மட்டும் பிடிக்காத மாப்பிள்ளையை கொண்டு வரட்டும், நானே கல்யாணத்தன்னைக்கு அவளை ஓட வைச்சிருவேன்..”
இதை கேட்டவாறே உள் நுழைந்த மதியரசியோ “கயல்விழியும் நீ பெத்த பொண்ணு இல்ல” என்று கூற..
அவரின் எதிர்பாராத வருகை இருவருக்கும் அதிர்ச்சி என்றாலும், அவர் கூறிய வார்த்தையில் வேணிக்கு கண்ணீர் முட்டியது..
வேணியினை பார்த்த வேதனைப்பட்ட கல்யாணியோ “அத்தை கயல்விழியும் இந்த வீட்டோட வாரிசு தான்” என்று கூற..
“அவ எப்படி இந்த வீட்டோட வாரிசு ஆவா? நீ பெத்தியா? இல்ல இவ பெத்தாளா? அவ பிறப்பை பத்தி என்ன தெரியும்? அவளை இந்த வீட்டோட வாரிசாகவோ இல்லை என் பேத்தியாவோ என்னைக்கும் ஏத்துக்கமாட்டேன்..”
கண்ணீரை துடைத்துக் கொண்ட வேணியோ ” பெத்தாதான் பிள்ளைனு யார் சொன்னது, கிருஷ்ணருக்கு யசோதா எப்படியோ அப்படிதான் கயலுக்கு நான்..”
“கயல் கிருஷ்ணனும் இல்லை, நீ யசோதாவும் இல்லை” என்று கூறிக்கொண்டே அவ்விடம் விட்டு சென்றார்..
கல்யாணிக்கு வேணியை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை. மதியரசியின் பேச்சில் அவருக்குமே வருத்தம் தான். அவரோ வேணியின் தோளை தொட வேணியும் அவரை கட்டிக் கொண்டு அழுதார்..
மதியரசிக்கு இருமகன்கள் மூத்தவர் விஜயராகவன், இளையவர் வீீரராகவன். விஜயராகவனின் மனைவி கல்யாணி அவர்களின் பிள்ளைகளே இளந்தீரனும், ஒளிர்மதியும். வீரராகவன் வேணிக்கு குழந்தை பாக்கியம் மருத்துவரீதியாக முயன்றும் கிடைக்கவில்லை..
பிரச்சனை வேணியிடம் என்பதால் அவரும் தனது கணவரை விவாகரத்து செய்ய முயன்றார். அதற்கு வீரராகவன் மறுத்துவிடவே அவர்கள் கயல்விழியை தத்தெடுத்து வளர்த்தனர். இதனை மதியரசி ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் அவர் வீரராகவனோடு பேசுவதையும் நிறுத்திவிட்டார்..
வீட்டில் பிள்ளைகள் அனைவரும் கல்யாணி, வேணியை அம்மா என்றே அழைத்து பழகினர். இங்கு யாரும் பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டவில்லை என்றாலும், மதியரசியோ கயல்விழியிடம் பாராமுகமே காட்டுவார்..
தனது அம்மா செய்வது அனைத்துமே சரி என்று நினைக்கும் விஜயராகவனுக்குமே கயல்விழியிடம் மதியரசி நடந்து கொள்வது அதிகப்படி என்றே தோன்றும், அவரிடம் இது பற்றி பேச முயன்றாலும் மதியரசியிடம் இருந்து பதில் வராது எனவே அவருமே இது பற்றி தனது அம்மாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்..
இளந்தீரனுக்கும், ஒளிர்மதிக்கும் கயல்விழி பற்றி தெரிந்திருந்தாலும் அவர்களுமே அவளை தன் சொந்த தங்கையாகவே நடத்தினர். இருவருக்குமே அவள் செல்ல தங்கையாவாள்..
கயல்விழிக்கு பாட்டியின் ஒட்டாத தன்மை சிறு வயதில் புரியாவிட்டாலும், விவரம் தெரிந்த பின் பாட்டி தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் குழப்பத்தையே தரும்..
அவளது குழப்பத்தை வளர விடாதவாறு வீட்டில் அனைவரும் அவளின் மனதை திசை திருப்பி விடுவர். அதன் பின் அவளுமே பெரிதாக யோசிப்பதில்லை..
இதையெல்லாம் யோசித்தவாறே சோர்வாக அமர்ந்திருந்த வேணியிடம் தேநீர் கோப்பையை நீட்டினார் கல்யாணி, அதனை எடுத்து கொண்ட வேணியின் அருகே தானும் கையில் ஒரு தேநீர் கோப்பையோடு அமர்ந்தார் கல்யாணி..
தேநீரை பருகியவாறே கல்யாணயிடம் “அக்கா என்னைக்காவது கயலுக்கு நான் அவளோட உண்மையான அம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அவ என்மேல இப்ப பாசமா இருக்கிற மாதிரி அப்பவும் இருப்பாளா?” என்று கேட்க..
அவளை வாஞ்சையாக பார்த்த கல்யாணியோ “இப்பவும், எப்பவும் அவளுக்கு நீ மட்டும் தான் அம்மா. உன் பாசத்துக்கு நிகர் எதுவும் இல்ல” என்று கூறினார்..
“நான் என்ன பாவம் பண்ணுனேன்னு கடவுள் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தார். கயல் யார் வயித்துலயோ பிறந்ததுக்கு பதிலா என் வயித்துல பிறந்திருக்கலாம்..”
“பிள்ளைய பெத்தா மட்டும் அம்மா ஆகிட முடியாது. நீ ரொம்ப குழம்பி போய் இருக்குற. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா எல்லாம் சரியா ஆகிடும், போய் தூங்கு” என்று கூறியவாறே காலி தேநீர் கோப்பையை வாங்கினார்..
“இல்லைக்கா சமையல் வேலை இருக்கு, நானும் உதவி பண்றேன். தூங்கிறத விட சமையல் பண்ணுனா என் மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்..”
“சரி வா” என்று கூறியபடியே கல்யாணியும் வேணியும் சமையல் அறைக்குள் நுழைந்தனர்..
உணவு இடைவேளையில் கேண்டீனில் அமர்ந்திருந்த நிரல்யாவோ “மஞ்சு இன்னும் ஏன் தீரா எனக்கு கால் பண்ணல” என்று கேட்க..
அவளை முறைத்த மஞ்சரியோ ” நானே அசைன்மெண்ட் முடிக்கிற டென்சன்ல இருக்கேன். இதுல நீ வேற ஏன்டி என்னை படுத்துற” என்று அழும் குரலில் கூற..
“இல்லை டி காலைல இருந்தே எனக்கு தீரா நினைப்பாவே இருக்கு..”
“உனக்கு நான் ஃப்ரெண்டனா நாள்ல இருந்து நீ தீரா நினைப்பாதான் இருக்க, அவ்ளோ லவ் பண்றனா போய் லவ்வ சொல்ல வேண்டியதான..”
“எனக்கும் ஆசைதான், ஆனா எனக்கு பயமா இருக்கு ஒருவேளை என்ன திரும்பவும் ரிஜெக்ட் பண்ணிட்டா, என்ன பண்றது..?”
“அப்ப வேற யாரையாச்சும் லவ் பண்ணு..”
“அவன் இருந்த மனசுல இன்னொருத்தனா, என்னால முடியாது..”
“எங்கிட்ட பக்கம் பக்கமா வசனம் பேசு, பேச வேண்டிய இடத்தில பேசாத..”
“சரி என் நம்பரை தீரா எப்படி சேவ் பண்ணி வைச்சிருப்பான்..”
“கடன்காரின்னு..”
“விளையாடத டி சொல்லு..”
“எனக்கு எப்படி தெரியும். நீயே கேட்டுக்கோ உன் தீரா கிட்ட..”
“நல்ல ஐடியா இப்பவே கால் பண்ணி கேட்கிறேன்” என்று கூறியபடியே அலைப்பேசியுடன் நகர்ந்தவளை கண்டு தலையில் அடித்துக்கொண்டாள் மஞ்சரி..