அவனை சோதித்துப் பார்த்து விட்டு வந்த வைத்தியர், “டோன்ட் வொர்ரி” என்று அவர்களை அமைதிப்படுத்தும் விதமாகவே பேச்சை ஆரம்பித்தார்…
“இனி பேஷண்ட உயிருக்கு ஆபத்தில்ல… ஆனா அவர் கோமாவுக்கு போய்ட்டார்… எப்ப கண்விழிப் பாருன்னு நம்மளால சொல்ல முடியாது… ஒரு கிழமை… ஒரு மாசம் அல்லது அவர் எழும்புறதுக்கு வருஷங்கள் கூட போகலாம்… இனி இவருக்கான ட்ரீட்மென்ட் ஹாஸ்பிடல்ல தான் பார்க்கணும்” என்று கூறிவிட்டு அபின்ஞானை பார்க்க சென்று விட்டார்.
அவன் உயிருக்கு ஆபதில்லை என்று கூறியதே அவர்கள் இருந்த மனநிலைக்கு நிம்மதியாக இருந்தது…
உயிர் தப்பி விட்டானே….
அவன் இருந்த நிலைக்கு அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் தான்…
*
அடுத்த ஏழு நாட்களில் அவர்களது சொந்த நாட்டுக்கே வந்துவிட்டனர்…
அவர்களுக்கு அவர்களது நாட்டு ஜனாதிபயிடம் இருந்தே ராஜ வரவேற்பு…
எவ்வளவு பெரிய சாதனையை படைத்து விட்டு வருகிறார்கள்…
ஆனால் அதைக் கொண்டாடும் மனநிலையில் யாரும் இருக்கவில்லை…
அபின்ஞான் ராகவ் கையில் கொடுத்த நவ ரத்தினம் அரசாங்கத்துக்கு உரியது…
அது பாதுகாப்பில் எப்போதும் கண்காட்சிக்கு வைக்கப்பட வேண்டியது…
அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் வேலையை ராகவிடம் வழங்கி விட்டு மற்றவர்கள் நேரடியாக வைத்தியசாலைக்கு தான் சென்றனர்.
அன்னபூரணி அம்மாளுக்கும் பசுபதிக்கும் போகும் போதே விஷயத்தை தேவ் கூறிவிட்டான்…
அவர்களும் உடனே தம் மகனை பார்க்க வந்துவிட்டனர்…
போகும்போது கம்பீரமாக சென்ற தம் மகனை படுக்கையில் திரும்பக் கொண்டு வருவதை அவர்களாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை…
அன்னபூரணி அம்மாளோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை…
பசுபதியை பார்த்தவர், “என் பையனுக்கு ஒன்றுமே நடக்காது, சீக்கிரமா எழுந்து வந்துருவான்” என்றார் ஒரு உறுதியடனும் அபரிதமான நம்பிக்கையுடனும்…
பசுபதியும் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, “கட்டாயம் நம் பையன் எழுந்திடுவான்” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார்…
மகிமாவோ எந்த உணர்வும் இன்றி சிலை போல் அமர்ந்து இருந்தாள்…
அபின்ஞான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் தாண்டி விட்டது…
எந்த முன்னேற்றமுமே இல்லை அவனிடம்…
அன்று அவனை பார்க்க வந்த பசுபதி வைத்தியரிடம், “டாக்டர் நம்ம பையன வீட்டுக்கே கூட்டிட்டு போய் நாம பார்த்துக் கொள்ளலாமா” என்று கேட்க,
“எல்லா வசதியும் இருந்தா நீங்க கூட்டிட்டு போய் பார்க்கலாம்… வீட்டுல இருந்து நீங்க டுவன்டி போர் ஹவரும் கூடவே இருந்து பார்க்கும் போது பேஷன்ட் சீக்கிரமா ரெக்கவர் ஆகுற சான்ஸ் இருக்கு” என்று கூற…
அடுத்த இரு நாட்களிலே அபின்ஞானை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார் பசுபதி…
மகாதேவ் பசுபதிக்கு பக்க பலமாக நின்று அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டான்.
அபின்ஞான் இது மாதிரி பல ஆபத்தான இடங்களுக்கு சென்று இருக்கிறான்…
தம் மகன் கவனமாய் போய் வருவான் என்று எண்ணி விட்டனர் அவர்கள்… ஆனால் அவனோ படுத்த படுக்கையாக வந்து சேர்ந்தான்…
அவர்களுக்கும் யார் மீதும் குற்றம் சொல்ல பிடிக்கவில்லை…
கடவுள் எழுதி வைத்தது என்று அதைப் புறம் தள்ளிவிட்டு, “அவன் எப்படியாவது நன்றாக வேண்டும்”என்று மட்டுமே கடவுளிடம் வேண்டிக் கொண்டனர்…
மகிமாவோ அவன் உடனே தன் முழு நேரத்தையும் செலவழித்தாள்.
அவனைத் தாண்டி அவளால் வேறு எதுவுமே யோசிக்க முடியவில்லை…
அவனைப் பார்க்க மீனாட்சி வந்திருந்தார்…
அபின்ஞானை பார்த்துவிட்டு வந்தவர், “உன் மருமக வந்த நேரத்தை பார்த்தியா… நல்லா போன பையன் இப்ப பேச்சு மூச்சு இல்லாம வந்து சேர்ந்திருக்கான்… அண்ணி இனி நீங்க இவள வீட்ல வச்சு கொள்ளணுமா… துரத்தி விட்டிடுங்க இவ போனா எல்லாமே பழையபடி சரியாகிவிடும்” என்று மீனாட்சி தேள் கொடுக்கு போல் வார்த்தைகளை பேச,
“ஐயோ அண்ணி என்ன பேசுறீங்க… நாங்களே மனசுடஞ்சி போய் இருக்கோம்… நீங்க வேற” என்று அன்னபூரணி அம்மாள் வேதனையாக கூற,
அங்கே சிலை போல் நின்ற மகிமாவை வெறுப்பாக பார்த்தவர், “அண்ணி உங்க நலவுக்கு தான் சொல்றேன்… காலம் போகல… இந்த சனியன ஒழிச்சிடுங்க…” என்று மீனாட்சி கூறிக்கொண்டிருக்க அவரை அதிர்ந்து பார்த்த அன்னபூரணி அம்மாள், மகிமாவின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டார்.
மகிமாவுக்கோ சட்டென கண்ணீரே வந்துவிட்டது…
எதுவும் பேசாமல் அவள் அப்படியே நின்றிருந்தாள்.
இப்பொழுது இதுமாதிரி ஆயிரம் கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறாள் ஆனால் திருப்பிப் பேச வாய்தான் வருவதில்லை…
மீனாட்சியை அழுத்தமாக பார்த்த அன்னபூரணி அம்மாள், “இந்த விஷயத்துல என்னால எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது அண்ணி… நாங்க தேர்ந்தெடுத்த பொண்ணு இல்ல மகி… அபி பார்த்து காதலிச்ச கல்யாணம் பண்ண பொண்ணு… அவன் எழும்பி எங்க என் பொண்டாட்டின்னு கேட்டா நாங்க என்ன சொல்றது? அவனுக்கு இப்ப முடியாம இருந்தாலும் அவன் முடிவ எங்களால எதிர்க்கவும் முடியாது… அத மீறவும் முடியாது” என்று நிதானமாகவே கூறிவிட,
அதற்கு மேல் மீனாட்சியாலும் எதுவும் பேச முடியவில்லை…
அவர் சென்று விட, மகிமா அபின்ஞான் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்…
“அபி நான் பேசுறது கேக்குதா…ஏன் அபி என்னோட பேசாம இருக்கீங்க, நான் வந்த நேரம் தான் நீங்க இப்படி ஆகிடீங்கன்னு எல்லாரும் சொல்றாங்க… எனக்கு எவ்ளோ கவலயா இருக்கு தெரியுமா? ப்ளீஸ் எழும்புங்க அபி…ப்ளீஸ் எனக்காக எழும்புங்களேன்… ” என்றவளுக்கோ கண்களில் கண்ணீர் வழிந்தது…
சட்டென தன் கண்ணீரை துடைத்தவள் அங்கிருந்த குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்…
அவளுக்கோ தன்னுடன் தன் சகோதரன், அபின்ஞானின் பெற்றோர் கூட இருந்தும் தனிப்பட்ட மாதிரி உணர்வு…
அவன் இல்லாத குறை அவளை பூதாகரமாக வளர்ந்து தாக்கி கொண்டிருந்தது…
குளியலறைக்குள் இருந்தவள் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நீண்டநேரம் அழுதவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வந்து அவனைப் பார்த்துவிட்டு வெளியே சென்றாள்…
அபின்ஞான் இருக்கும் நிலையை பார்த்து அன்னபூரணி அம்மாளோ மனதாலும் உடலாலும் உடைந்து போய் பலவீனமாக இருந்தார்…
இந்த நேரத்தில் அந்த வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டிய முழு பொறுப்பும் மகிமாவுக்கே வந்து சேர்ந்தது…
வெளியில் பசுபதியே அவனது தொழிலை கவனித்துக் கொண்டிருந்தார்…
மகாதேவும் அவருக்கு உதவி செய்தான்…
அன்னபூரணி அம்மாளுக்கும் ஆறுதல் அளித்து அவரையும் படுக்க வைத்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அபின்ஞான் அருகே படுத்தாள்…
அந்த அறையில் இருந்த கடினமான திரைச்சீலையை தாண்டி ஒலி ஊடுறுவவும் கண்களை விரித்தாள் மகிமா…
விடிந்தது விட்டது… மெதுவாகத் திரும்பி அருகே படுத்திருந்த அபின்ஞானை பார்த்தாள்…
அவனோ எப்போதும் போலவே எந்த அசைவும் இன்றி படுத்திருந்தான்…
அவன் கன்னத்தை மென்மையாக வருடியவளுக்கோ… தன்னை மீறி கண்ணீர் வழிந்தது…
“ஏன் அபி என்ன இப்படி கஷ்டப்படுத்துறீங்க… நான் அழுறத பார்த்து உங்களுக்கு அவ்ளோ சந்தோஷமா? எனக்கு உங்கள கிஸ் பண்ணனும் போல இருக்கு… உங்களோட லைப் லோங் நடந்து போகனும் மாதிரி இருக்கு… தோல்ல சாஞ்சுக்கனும் போல இருக்கு.. நடக்குற எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட பேசணும் போல இருக்கு… உங்களோட சண்டை போடணும் போல இருக்கு” என்று தன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தவள் அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தவள், “நமக்கு ரெண்டு குழந்தைங்க வரப்போகுது… அவங்க கூடவாவது உங்களுக்கு பேச விருப்பம் இல்லையா…” என்று தன்னை மீறி விம்மிய படியே கண்ணீரை துடைத்தவள், சுவரில் மாட்டியிருந்த கலண்டரை பார்த்தாள்…
அவன் கோமாவுக்கு சென்று ஆறு மாதங்கள் கடந்து விட்டன…
எத்தனையோ சிகிச்சை செய்து பார்த்து விட்டனர்… ஆனால் எந்த பலனும் இல்லை…
அவளும் இன்று எழுவான்… நாளை எழும்புவான் என்று நம்பிக்கை தளராது காத்துக் கொண்டிருக்கிறாள்…
அவள் மட்டுமா இல்லையே… அவள் வயிற்றில் இருக்கும் இன்னும் இரு ஜீவன்கள் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனவே…
ஆனால் அவனோ ஒவ்வொரு நாளும் அவளது நம்பிக்கையை தலரடிப்பது போலவே படுத்தே கிடக்கின்றான்…
அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு கட்டில் இருந்து எழுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், அவனை துடைத்து உடைமாற்றி விட்டு வெளியே வந்தாள்…
அவள் அழகோ மங்கிப்போய் இருந்தது…
கண்களில் கருவளையம் வந்து… மெலிந்து போய் இருந்தாள்…
அவள் உடலில் எடுப்பதற்கு சதை இல்லை…
அதற்கு மாறாக அவள் வயிறு மட்டும் பெரிதாக வீங்கிப் போயிருந்தது…
அவன் குழந்தைகளை சுமந்து கொண்டிருப்பதற்கு சான்றாக…
பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் இருந்தாள்…
மீனாட்சி தப்பித்தவறி அந்த வீட்டுக்கு வந்து விட்டால், அவளோ அன்று நரக வேதனை அனுபவிப்பாள்…
இப்பொழுது அவள் அமைதியாகி தனக்குள் ஒடுங்கிப் போய்விட்டாள்…
யாருடனும் பேசக் கூட மாட்டாள்…
அன்னபூரணி அம்மாளும் அவளுக்கு எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்…
அது அவள் செவிகளுக்கு ஏறுகிறதோ இல்லையோ என்பது அந்த கடவுள் தான் அறிவான்…
“குழந்தைக்காக மனதை அமைதியாக வைத்துக்கொள்… ஒழுங்கா சாப்பிடு” என்று அன்னபூரணி அம்மாளோ எவ்வளவோ அவளுக்கு எடுத்துக் கூறிவிட்டார்…
ஆனால் அவளோ அதைக் கேட்ட பாடே இல்லை…
இப்போது எல்லோருக்கும் அவனை விட அவளை நினைத்து தான் பயம் அதிகம்…
அவளை நம்பி இன்னும் ஒரு இரு உயிர்கள் இருக்கின்றனவே…
அவள் குழந்தைகளை பத்திரமாக பிரசவிக்க வேண்டுமே…
மகாதேவும் அவளை தன்னுடன் வந்து சிறிது காலம் இருக்கும் படி எவ்வளவு அழைத்தும் அவளோ அபின்ஞானை விட்டு நகர மறுக்கிறாள்…
மகாதேவும் சஞ்சனாவும் திருமணம் முடித்து இருந்தனர்… சஞ்சனாவும் ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறாள்…
ஆரம்பத்தில் அவர்களது திருமணத்துக்கு மீனாட்சி முழுக்க முழுக்க எதிர்ப்பு தெரிவித்தார்…
ஆனாலும் மகாதேவ் அபின்ஞானுக்கு எந்த ஒரு வகையும் குறைந்தவன் இல்லையே…
சஞ்சனாவும் அவனைத் தான் கல்யாணம் முடிப்பேன் என்று உறுதியாக இருந்துவிட அதற்கு மேல் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை…
மகாதேவே அனைத்து திருமண ஏற்பாடுகளையும் செய்து முடித்தான்…
அபின்ஞான் இவ்வாரு இருக்கும் போது திருமணம் செய்வது சங்கடம் தான்…
ஆனால் திருமணத்துக்கு முன்பே சஞ்சனா கருவுற்றிருந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை…
மகிமாவுக்கோ எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஈடுபடுவதற்கு மனமே இல்லை…
அதை மீறி மகாதேவுக்காக சென்றாலும், மீனாட்சி அவளை ஒதுக்கி வைத்து விடுவார்…
இல்லாவிட்டால் வார்த்தைகளால் அவர் மனதை குத்தி கிழிப்பார்…
விதியின் சூழ்ச்சியால் தன் அண்ணன் என் திருமணத்தில் கூட ஒதுங்கி இருக்க வேண்டிய நிலையாகிப் போனது…
அவளுக்கு சந்தர்ப்பம் இருந்தாலும் அதை கொண்டாடும் மனநிலையில் மகிமா இருக்கவில்லை என்பதுதான் உண்மை…
அவளே அனைத்து விடயங்களில் இருந்தும் தன்னை ஒதுக்கி ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டாள் என்பதுதான் நிஜம்…
சஞ்சனா மீனாச்சியிடம் பெரிதாக அபிப்ராயம் கேட்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்… அப்போதாவது அவர் திருந்துவாரா என்கிற எண்ணம் அவளுக்கு…
எவ்வளவோ மகிமாவை தங்களுடன் வந்து தங்குமாறு அழைக்கிறாள் சஞ்சனா… ஆனால் அவள் தான் வரமாட்டாளே…
அவளையும் அபின்ஞானையும் சென்று இருவரும் பார்த்து விட்டு வருவார்கள்…
நேரம் கிடைக்கும் போது கரனும் ராகவம் வருவார்கள்…
கரனது காலோ இப்பொழுது முழுதாக குணமாகி விட்டிருந்தது…
அவளது வசதிக்காக இப்பொழுது அபின்ஞானது அறை கீழே மாற்றப்பட்டிருந்தது…
அதனால் மகிமாவுக்கு மாடி ஏறி இறங்கும் சிரமம் இருக்கவில்லை….
அவள் அறையில் இருந்து வெளியே வந்ததும் அவள் முன்னால் பழங்கள் அடங்கிய ஒரு பாத்திரத்தை நீட்டிய அன்னபூரணி அம்மாள், ” மகி சாப்பிடு முதல்ல” என்றார் கடினமாக…
அவளுக்கு இப்போதெல்லாம் யாராவது கொஞ்சம் கடினமாக பேசினாலே கண்ணீர் வடிந்து விடும் …
ஆனால் அவளிடம் பொறுமையாக சொன்னால் கேட்பதில்லையே…
அதனால் தான் இப்பொழுது அவளை மிரட்டி உருட்டி உண்ண வைத்துக் கொண்டிருக்கிறார் அன்னபூரணி அம்மாள்…
காலை உணவை உண்டு விட்டு அபின்ஞான் அருகே சென்று படுத்துக் கொண்டாள்…
அவள் நேரம் முழுவதும் தூங்குவதிலே தான் கழிந்து கொண்டிருந்தது…
எதிலும் ஈடுபட அவள் மனம் விரும்பவும் இல்லை… எதிலும் அவள் மனம் லயிப்பதும் இல்லை…
இந்தக் காதல் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்…
அவன் அருகே உறங்குவதில் அவளுக்கு ஒரு நிம்மதி… அதனால் உறங்கியே நேரத்தை நெட்டி தள்ளிக் கொண்டிருக்கிறாள்.
திடீரென அவளை யாரோ தட்டிய உணர்வு…
சட்டென அவனை திரும்பிப் பார்த்தாள்…
எப்போதும் போலத்தான் இருந்தான்…
தன் மன உணர்வு என்று அதை ஒதுக்கியவள் மீண்டும் கண்ணை மூடிக்கொள்ள மீண்டும் ஏதோ ஒரு அசைவு…
இல்லை… இல்லை… இது அவள் மனக்குழப்பம் இல்லை என்பது அவளுக்கு நூற்றுக்கு நூறு வீதம் உறுதி…
எழுந்து அமர்ந்து கொண்டவள் அவனை ஊன்றிப் பார்த்தாள்…
அவன் கைகால்கள் துடித்தன…
அதிர்ந்து போய்விட்டாள்…
அவனுக்கு ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது…
தான் கை கால் துடிக்கும் வேகம் இன்னும் இன்னும் கூடியது…
அவன் உடல் துடித்து வெட்டி வெட்டிப் போட்டது.
வேகமாக வெளியே ஓடி வந்தவளுக்கு வாயிலிருந்து வார்த்தை வரவில்லை காற்று தான் வந்தது…
அழுகையில் உதடுகள் துடித்தன…
கண்ணீரும் வரவில்லை…
அதுவும் வற்றிப் போய் விட்டது போலும்…
அவள் அறை வாசல் கதவை வேகமாக தட்டினாள்…
அவள் அபிக்கு எதோ நடந்து கொண்டிருக்கின்றது…
அவளால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை…
தொண்டை அடைத்துக் கொண்டது…
கதவு தட்டும் சத்தத்தை கேட்டு அன்னபூரணி அம்மாளும்… அருகில் இருந்த அறையில் அவனைப் பார்த்துக் கொள்வதற்காக இருந்த தாதியும் வேகமாக அவள் அறையை நோக்கி வந்தனர்…
பித்துப் பிடித்தவள் போல் நின்று அறையை நோக்கி கை நீட்டி காட்டியவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவனை பார்க்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டாள்…
அவள் உடலோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது…
அபின்ஞானது உடலோ கட்டிலில் அடங்காமல் வெட்டி வெட்டி இழுக்க, தாதியோ வேகமாக அவனை சோதித்தபடியே வைத்தியரை அழைத்து வர சொன்னார்….
அன்னபூரணி அம்மாளுக்கோ தன் மகனை பார்ப்பதா மருமகளை பார்ப்பதா என்கின்ற கையறு நிலையில் தவிப்பாக நின்றிருந்தார்…