என் பிழை நீ

4.4
(17)

பிழை – 10

 

“என்னாச்சு பாரி ஆர் யூ ஓகே” என்றவாறு அவனின் நெற்றியில் கையை வைக்க முற்பட்ட விதுஷாவின் கை தன் மேல் படாதவாறு இரண்டு அடி தள்ளி நின்றவன்.

“நத்திங் விதுஷா கிளம்பலாம்” என்றான் வேறு எங்கோ பார்த்தவாறு.

அவனின் செயலில் விதுஷாவின் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.

அவன் மீது தோன்றிய ஈர்ப்பினால் உண்டானதல்ல இவ்வருத்தம்..

சிறு வயது முதலே இருவரும் அவ்வளவு நெருக்கம். சட்டென்று பாரிவேந்தனின் இந்த நிராகரிப்பை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே கண்களும் கலங்கி விட்டது.

“பாரி இன்னும் விது சாப்பிட கூட இல்லடா இரு சாப்பிட்டு கிளம்பலாம்” என்ற‌ அரவிந்தையும் அவன் எதிர்‌ நோக்கவில்லை.

“சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க எனக்கு வேண்டாம்” என்றவனோ இருவரின் முகத்தையுமே எதிர் நோக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டே பேசினான்.

அவன் தங்களை நிராகரிக்கிறான் என்பது அப்பட்டமாக இருவருக்குமே தெரிந்தது. ஆனால் இந்த நிராகரிப்பின் காரணம் புரியாத விதுஷாவின் மனம் வெதும்ப.

காரணத்தை உணர்ந்த அரவிந்தின் மனமோ குதூகளித்தது.

அரவிந்த் விரைந்து சென்று இரண்டு தட்டில் தனக்கும் விதுஷாவிற்குமான உணவை எடுத்துக் கொண்டு வேக நடையுடன் இவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தான்.

“இந்தா விது சீக்கிரம் சாப்பிடு” என்றவாறு ஒரு தட்டை அவளிடம் வைக்கவும்.

“எனக்கு வேண்டாம்” என்றவளின் பார்வை பாரிவை விட்டு இம்மியும் நகரவில்லை.

“ஏன் டி இப்போ உனக்கு என்ன ஆச்சு.. அவனுக்கு என்ன பிரச்சனைன்னு நம்ம பேசி சரி பண்ணிக்கலாம் நீ பஸ்ட் சாப்பிடு டைம் ஆகுது பாரு” என்று ஏதேதோ பேசி அவளை கொஞ்சமாக சாப்பிட வைத்தான்.

உணவை உண்ணும் பொழுது கூட விதுஷாவின் பார்வை பாரியின் மேலேயே நிலைத்திருந்தது.

பாரி மொத்தமாக மாறியது போல் தான் அவளுக்கு தோன்றியது. ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணம் தான் அவளுக்கு விளங்கவில்லை.

அதிலும், தன் கை அவன் மீது பட்டதும் வெடுக்கென்று அவன் நகர்ந்ததை அவளால் இன்னமுமே ஜீரணிக்க முடியவில்லை.

தனக்கு விவரம் தெரிந்தது முதல் அவனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறாள். அவனின் குணத்தை பற்றி இவளுக்கு தெரியாதா என்ன..

அவளுக்கு தெரிந்து இப்படி எல்லாம் அவன் நடந்து கொள்வது இதுவே முதல் முறை.

அதுவும் பொது இடத்தில் வைத்து பாரிவேந்தன் தன்னிடம் இப்படி நடந்து கொண்டதை தான் அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இயல்பிலேயே பாரிவேந்தன் மற்றவர்களிடத்தில் மரியாதையாகவும் அன்பாகவும் நடந்து கொள்ளும் குணம் கொண்டவன் தான். அப்படிப்பட்டவன் தன்னிடம் இப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என்று புரியாமல் குழம்பிப் போனாள்.

அதன் பிறகும் கூட பாரிவேந்தன் அவர்களிடம் எதுவும் பேசவில்லை. அவர்களின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தான்.

முவரும் நல்ல விதமாக ஊருக்கும் வந்து சேர்ந்தனர்.

“என்ன பாரி கான்ஃபரன்ஸ் எல்லாம் எப்படி போச்சு.. நீ ரொம்ப நல்லா பண்ணனு விதுஷா சொன்னா” என்ற தன் தாயிடம், “ம்ம்” என்று மட்டுமே பதிலுறைத்தவன் அதற்கு மேல் அவரிடம் எதுவும் பேசாமல் விறுவிறுவென தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

அவரும் பயண களைப்பு என்று எண்ணியவர் ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அத்தோடு அவன் கதவை திறக்கவே இல்லை. உணவு உண்ண அவனின் தாய் கதவை தட்டிக் கொண்டே நின்றாலும் உள் இருந்தே பதில் உரைப்பானே தவிர கதவை திறக்க மாட்டான்.

உள்ளே என்ன செய்கிறான் என்று கூட விளங்காமல் அவனின் இந்த புதிய அவதாரத்தில் பயந்து போனார் முத்துலட்சுமி.

உடனே விதுஷாவிற்கு அழைத்த முத்துலட்சுமி, “என்ன விதுமா இதெல்லாம்.. பாரி ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான் சாப்பிட கூட வர மாட்டேங்குறான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு வந்ததும் கதவை சாத்தினான் இன்னும் திறக்கவே இல்ல” என்று அழுகும் குரலில் பேசினார்.

அவரிடம் பேசி சமாதானம் செய்த விதுஷா உடனே பாரியின் எண்ணிற்கு தான் அழைத்தாள். முதல் இரண்டு மூன்று முறை இவள் அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவே இல்லை.

விடாமல் இவளும் அழைத்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் தன் பொறுமையை இழந்தவன், “என்ன வேணும் உனக்கு.. எதுக்கு சும்மா கால் பண்ணிக்கிட்டே இருக்க?” என்று அழைப்பை ஏற்றதும் சிடுசிடுத்தான்.

“என்ன தான்டா உனக்கு பிரச்சனை.. என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ உன் மனசுல.. என்னன்னு சொன்னா தான எங்களுக்கெல்லாம் தெரியும். பாவம் அத்தை ஃபோன் பண்ணி அழறாங்க.. நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறனு காரணம் தெரியாமல் அவங்க எவ்வளவு ஃபீல் பண்றாங்கன்னு தெரியுமா.. அப்படி உன் மனசுல என்ன தான் இருக்கு சொல்லி தொலையேன்.. எல்லாத்தையும் உனக்குள்ளவே வச்சுக்கிட்டு ஏன்டா இப்படி எங்களை சாவடிக்கிற” என்று அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தத்தமும் தீரும் மட்டும் திட்டி தீர்த்து விட்டாள்.

“அம்மா கிட்ட நான் பேசுறேன் நீ வை” என்றவன் அவளின் பதிலையும் எதிர்பாராது பட்டென்று அழைப்பை துண்டித்தான்.

“அப்படி என்ன தான் இவனுக்கு பிரச்சனையோ சொன்னால் தான தெரியும். வாயை திறந்து சொல்லவும் மாட்டான்” என்று அவனுக்கு திட்டிக் கொண்டே அமர்ந்துவிட்டாள்.

இவள் பேசிய பிறகு தான் தன் தாயை பற்றிய சிந்தனையே பாரி வேந்தனுக்கு எழுந்தது. இத்தனை நேரமும் தன்னை பற்றியே தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவன் தன் முகத்தை நன்கு கழுவிக்கொண்டு மனதில் ஒரு முடிவுடன் அறையை விட்டு வெளியேறினான்.

அவனை கண்டதும் அணைத்துக் கொண்ட முத்துலட்சுமி, “என்னாச்சு பாரி நீ இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டியே.. அம்மா ரொம்ப பயந்துட்டேன் பா. ஏதாவது பிரச்சனையா எதுவா இருந்தாலும் சொல்லு சரி பண்ணிக்கலாம் அதுக்காக இப்படி எல்லாம் நடந்துக்காத” என்று அழுது கொண்டே பேசினார்.

தன் செயல் அவரை எந்த அளவிற்கு காயப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்த பாரிவேந்தனுக்கோ மனம் மேலும் கனத்து போனது.

அவரை அணைத்துக் கொண்டவன், “சாரிமா.. ஏதோ ஒரு டென்ஷன்ல இப்படி எல்லாம் செஞ்சிட்டேன். இனிமே இப்படி எல்லாம் நடக்காது” என்று விட்டு அதன் பிறகு சற்று இயல்பாக நடந்து கொள்ள தொடங்கினான்.

ஆனாலும், பழையபடி அனைவரிடமும் அவனால் நடந்து கொள்ள முடியவில்லை. அவனின் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சி அவனை தனக்குள்ளேயே அழுத்திக்கொண்டது.

அதன் விளைவு அனைவரிடமும் சற்று சகஜமாக இருப்பது போல அவன் காட்டிக் கொண்டாலும் அவனுக்குள்ளேயே ஒரு இறுக்கம் படர்ந்தது.

முதல் இருக்கும் இலகு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து மறைந்து அழுத்தம் அதிகரித்தது.

தேவை இன்றி யாரிடமும் பேசுவதை குறைத்துக் கொண்டான். நண்பர்களாகவே இருந்தாலும் அரவிந்திடமும் விதுஷாவிடவும் கூட சற்று தள்ளி இருக்க தொடங்கினான்.

திருமண பேச்சை பற்றி விதுஷா அவனிடம் எதுவும் பேசவில்லை. அவன் இப்படி இருக்கும் பொழுது எப்படி அவனிடம் திருமணத்தை பற்றி பேசுவது என்று அவளுக்குள் ஒரு தயக்கம்.

எனவே முத்துலட்சுமியிடம் கூறி பாரிவேந்தனிடம் பேச சொல்லி இருந்தார் ராதிகா.

அன்று அவன் மருத்துவமனை செல்வதற்காக உணவருந்தி கொண்டிருந்தான்.

அவன் அருகில் அமர்ந்திருந்த முத்துலட்சுமி, “பாரி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் தயக்கத்தோடு.

“சொல்லுங்கம்மா என்ன விஷயம்?”.

“அது வந்து பாரி விதுஷாவை பத்தி நீ என்ன நினைக்கிற?”.

“என்னமா பேசுறீங்க.. சின்ன வயசுல இருந்து நான் அவளை பார்க்கிறேன் அவ எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் அவளை பத்தி நான் என்ன நினைக்கிறது”.

“இல்லப்பா.. ராதிகா அண்ணி உனக்கு விதுஷாவை கல்யாணம் செஞ்சு கொடுத்தா நல்லா இருக்கும்னு யோசிக்கிறாங்க” என்றதும் உணவை உண்டு கொண்டிருந்தவனின் கை சற்று நேரம் அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது.

அவனின் மனக்கண் முன்பு பல சம்பவங்கள் திரை போல் விரிய.. தன் நிலை மறந்து அப்படியே அமர்ந்திருந்தான்.

அவனை உலுக்கிய முத்துலட்சுமி, “என்னாச்சு பாரி ஏன் அப்படியே உட்கார்ந்து இருக்க?”.

“ஒன்னும்.. ஒன்னும் இல்லமா..” என்று தடுமாற்றத்தோடு வந்து விழுந்தன அவனின் வார்த்தைகள்.

“உனக்கு விதுஷாவை கல்யாணம் பண்ணிக்கிறதுல சம்மதம் தான பாரி.. ரொம்ப நல்ல பொண்ணு சின்ன வயசுல இருந்து நமக்கு தெரிஞ்ச பொண்ணு.. உன்னை பத்தி நிறையவே புரிஞ்சு வச்சிருக்கா.. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா அமையும்” என்று அவர் பேசிக் கொண்டே போகவும்.

அவரை இடைமறித்த பாரிவேந்தன், “அம்மா ப்ளீஸ்.. விதுஷா என்னோட ஃப்ரெண்ட் அவளை கல்யாணம் பண்ணிக்கிறதை பற்றி எல்லாம் என்னால் யோசிக்கக்கூட முடியாது. நான் அவளை பிரெண்டா மட்டும் தான் பார்க்கிறேன். என்னால் அதுக்கு மேல அவளை பார்க்க முடியாது. ப்ளீஸ் மா.. இந்த பேச்சை இதோட விட்டுடுங்க ஆன்ட்டி கிட்ட இதெல்லாம் சரி வராதுனு சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு விறுவிறுவென எழுந்து சென்று விட்டான்.

அவனின் மனதிற்குள்ளோ அத்தனை குற்ற உணர்ச்சி..

முதலில் யார் என்றே தெரியாத அவளை தேட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

இவன் கூறியதை அப்படியே ராதிகாவிடம் முத்துலட்சுமி கூறவும். அவருக்குமே மன வருத்தம் தான். ஆனால் என்ன செய்ய முடியும் ‘சரி’ என்று அழைப்பை துண்டித்தவர் விதுஷாவிடமும் அவளின் தந்தையிடமும் இதை பற்றி பகிர்ந்து கொண்டார்.

“சரி விடு ராதிகா இத்தனை வருஷமா நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல உறவு இருக்கு. அதை இந்த விஷயத்தால் கெடுத்துக்க வேண்டாம்.. சின்ன வயசுல இருந்து அவன் விதுஷாவை பிரண்டா பாத்துட்டான். அதனால் கல்யாணம் பண்ணிக்க தயங்குறான் சரி விடு” என்று விட்டு அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்.

விதுஷா தன் தாய் தந்தையின் முன்பு இந்த விஷயத்தால் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பது போல் இலகுவாக காட்டிக்கொண்டாலும் மனதிற்குள் அவளுக்கு வருத்தம் இருந்து கொண்டு தான் இருந்தது. என்ன அதை அவள் வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை அவ்வளவே..

ஒருபுறம் பாரிவேந்தன் யார் என்று தெரியாத பெண்ணவளை தேடிக்கொண்டிருக்க..

விதுஷாவோ பாரியின் நிராகரிப்பினால் ஏற்பட்ட மன வருத்தத்துடன் தான் இயல்பாக இருப்பது போல் போலியாக காட்டிக் கொண்டிருந்தாள்.

எது எப்படியானாலும் அரவிந்திற்கு நடக்கும் சம்பவங்களால் முழு திருப்தி..

விதுஷாவிடம் தன் காதலை பகிர்ந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் வேண்டி காத்துக் கொண்டிருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “என் பிழை நீ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!