எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தது போல் சற்றும் கண்களில் உயிர்ப்பில்லாமல் தான் இருக்கிறாள் இனியாள்.
ஆம், அவள் பறி கொடுத்தது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே.. அவளின் வாழ்க்கையை அல்லவா அவள் பறி கொடுத்திருக்கிறாள். அதன் தாக்கம் அவ்வளவு எளிதில் அவளிடம் இருந்து மறைந்து விடுமா என்ன..
இதோ அதோவென்று அவள் பாரியின் வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டது. இப்பொழுது எல்லாம் குழந்தையும் நன்கு முகம் பார்த்து சிரிக்க துவங்கி விட்டது.
அன்று முத்துலட்சுமி தன் தோழியுடன் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்வதாக கூறி கிளம்பிக் கொண்டு இருந்தார்.
“இனியா நீயும் வாயேம்மா.. ரொம்ப சக்தி வாய்ந்த கோவில் என்ன வேண்டிக்கிட்டாலும் அப்படியே நடத்திக் கொடுப்பாங்களாம்”.
என் வாழ்க்கையில் இனி திருத்தவோ சீர்படுத்தவோ என்ன இருக்கிறது என்ற எண்ணம் தான் அவளிடம்..
“இல்ல மேடம் நீங்க போயிட்டு வாங்க”.
“ஐயோ! என்ன இது.. கோவிலுக்கு வர மாட்டேன்னு சொல்லக்கூடாது. உனக்கு அங்க வந்தா ஏதாவது நல்லது நடக்குமோ என்னவோ.. அதனால கூட உன்னை அந்த அம்மா கோவிலுக்கு வர வைக்கிறாங்களோ என்னவோ” என்று தன் மனதில் இருப்பதை எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி பட படவென பொரிந்தார் முத்துலட்சுமியின் தோழி அலமேலு.
அலமேலு கலகலவென பேசக் கூடியவர் தான். முத்துலட்சுமியின் வெகுளித்தனமும், அவரின் அடாவடித்தனமும் அவர்களுக்குள் ஏதோ ஒரு ஈர்ப்பை உண்டாக்க இருவரும் நன்கு ஒன்றி விட்டனர்.
முத்துலட்சுமி தன் மகனின் திருமணத்திற்காக கோவில் கோவிலாக சென்று பிரார்த்திக்க சென்ற சமயம் அது.. அங்கே தான் அலமேலுவை சந்தித்தார்.
அலமேலுவும் சாமி பக்தி அதிகமுடையவர். இருவரும் கோவிலில் சந்தித்து அப்படியே நண்பர்கள் ஆகிப்போயினர். எப்பொழுதாவது முத்துலட்சுமியை சந்தித்து பேச வேண்டி அலமேலு அவரின் வீட்டிற்கும் வருவார்.
முத்துலட்சுமியை பற்றி தான் தெரியுமே.. ஒருவர் நன்கு பேசி பழகிவிட்டால் போதும்.. அனைத்தையும் சொல்லிவிடுவார்.
அப்படி தான் தன் மகனுக்கு திருமணம் தள்ளி போவதை பற்றி அலமேலுவிடமும் வருத்தமாக கூறிக் கொண்டிருந்தார். அலமேலு தான் இந்த கோவிலை பற்றி அவருக்கு கூறி இன்று அழைத்து செல்வதாகவும் சொல்லி இருந்தார்.
அதன்படி தான் இருவரும் இன்று அக்கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர்.
அந்நேரம் சரியாக தன் கையில் ஏதோ ஒரு பைலுடன் பாரிவேந்தன் காரிலிருந்து இறங்கினான்.
‘எப்படியாவது இன்னைக்கு அவ கிட்ட இதுல சைன் வாங்கிடனும். அவளுக்கு எந்த சந்தேகமும் வராம இருக்கணும்.. நம்ம மேல அவளுக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு அதனால சைன் பண்ணிடுவானு தான் நினைக்கிறேன். இருந்தாலும், படிச்சு பார்த்தானா இன்னைக்கே நான் காலி..’.
அவனுக்குமே சற்று படபடப்பாக தான் இருந்தது. எங்கே தான் செய்யப் போகும் காரியத்தை இனியாள் கண்டுபிடித்து விடுவாளோ என்று..
அவன் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் காரியம் ஒன்றும் அவ்வளவு சிறியது அல்லவே..
தனக்கும் இனியாளுக்கும் பதிவு திருமணம் செய்வதற்காக யாருக்கும் தெரியாமல் அவனே அனைத்தையும் தயார் செய்தவன். இதோ இப்பொழுது கையில் அவள் கையொப்பம் இட வேண்டிய பைலை தூக்கிக்கொண்டு வீட்டிற்கும் வந்து விட்டான்.
எங்கே அவள் கண்டுபிடித்து விடுவாளோ என்ற படபடப்பு இருந்தாலும், அவளை தன்னவளாக்க வேண்டும் என்ற முனைப்பு அவனிடம் நிறையவே இருந்தது.
தன் குழந்தைக்கு தாயாகிவிட்டாள்..
ஆனாலுமே, ஒரு அங்கீகாரம் இல்லாத நிலை தானே அவளுக்கு..
அதை மாற்ற வேண்டும்..
அவளுக்கான அடையாளத்தை அவளுக்கு கொடுக்க வேண்டும். யாரும் அவளை பற்றி தவறாக இனியும் பேசிவிடக்கூடாது என்ற எண்ணத்தினாலேயே அவளுக்கு தெரியாமலாவது இவ்வாறு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டான்.
தன்னை சுற்றி நடக்கும் எதை பற்றியும் அறியாத இனியாளோ இனி தன் வாழ்க்கையில் நடக்க என்ன நல்லது இருக்கிறது என்ற சலிப்போடு கோவிலுக்கு வர அவர்களிடம் மறுத்து கொண்டு இருந்தாள்.
சரியாக அந்நேரம் பாரிவேந்தன் வீட்டிற்குள் நுழையவும்.
இந்நேரத்தில் அவனை இங்கே சற்றும் எதிர்பாராத அவனின் தாய் ஆச்சரியமாக, “என்ன பாரி இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்க?”.
“ஒன்னும் இல்லம்மா ஒரு வேலை விஷயமா வந்தேன். அதான் அப்படியே வீட்டுக்கு வந்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றவாறு வேலையாளிடம் தனக்கு ஒரு காபி கொண்டு வருமாறு கூறிவிட்டு அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தான்.
“சரிப்பா அப்போ நீ காபியை குடிச்சிட்டு கிளம்பு நாங்க கோவிலுக்கு போயிட்டு வர்றோம்”.
“எல்லாருமா போறீங்க..” என்றவனின் வார்த்தைகள் சடுதியில் வந்து விழ.
“இல்லப்பா இனியா வர மாட்டேங்குறா” என்று அவர் கூறி முடிக்கவில்லை மீண்டும் அலமேலு, “நீயும் வந்தா நல்லா இருக்கும் இனியா ஏன் வேண்டாம்னு சொல்ற.. கொஞ்சம் யோசிச்சு பாரு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நீ எங்கேயுமே வெளியில் போகல.. முதல் தடவை குழந்தையை தூக்கிக்கிட்டு கோவிலுக்கு போனா எவ்வளவு நல்லது தெரியுமா.. அப்படியே குழந்தையுடைய பெயர், நட்சத்திரத்தை சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடலாம். ஆமா, குழந்தையுடைய பெயர் என்ன.. நானும் உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா கேட்கவே இல்லை”.
முத்துலட்சுமிக்குமே அப்பொழுது தான் நினைவு வந்தது. அவரும் இத்தனை நாட்கள் மகாலட்சுமி, தங்கம், செல்லம் என்று தானே அழைத்துக் கொண்டு இருந்தார்.
குழந்தையின் பெயர் என்ன என்பதை பற்றி அவருமே இதுவரையிலும் இனியாளிடம் எதுவும் கேட்டது கிடையாது.
அவ்வளவு ஏன், இனியாளுமே குழந்தைக்கு இந்த பெயர் வைக்க வேண்டும் அந்த பெயர் வைக்க வேண்டும் என்றெல்லாம் எதுவும் சிந்தித்து வைக்கவில்லை. நடந்த குழப்பங்களில் அதை பற்றி எல்லாம் சிந்திக்க அவளுக்கு ஏது வாய்ப்பு.
தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எண்ணி கவலை கொள்ளவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் எங்கிருந்து மற்றதை பற்றி எல்லாம் சிந்திப்பது.
ஆனாலுமே, குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அடிப்படையான ஒரு விஷயம் தானே.. அதை நாம் செய்திருக்க வேண்டும் என்று அவளுக்கே ஒரு மாதிரியாகி போனது.
என்ன தான் அவள் கருவுற்றது பேரதிர்ச்சியாகவும், அவளின் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களாகவும் இருந்தாலும்.. குழந்தை வளர வளர அவளுக்குள் ஏதோ சொல்ல முடியா உணர்வு தோன்ற தான் செய்தது.
என்ன இருந்தாலும் அது அவள் குழந்தையும் தானே..
என்ன நடந்தது என்று தெரியாமல் யார் செய்த பிழைக்கோ எந்த தவறும் செய்யாத அந்த சிசுவின் மேல் வன்மத்தை கக்கவோ அந்த குழந்தையிடம் பாராமுகத்தை காட்டவும் அவளுக்கு சற்றும் மனம் வரவில்லை.
அதிலும், இயல்பிலேயே மென்மையான மனம் படைத்தவளிற்கு தனக்கு பிறந்த குழந்தையின் மேல் தன் கோபத்தை காட்ட முடியுமா என்ன..
அதன் விளைவு கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையை முழு மனதோடு தன் குழந்தையாக ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டாள்.
அதை விட்டால் அவளுக்கு வேறு வழியும் இல்லையே..
இனியாள் அமைதியாக நின்று இருப்பதை கண்ட அலமேலு, “என்னம்மா குழந்தையோட பேரு என்னன்னு கேட்டா அமைதியா இருக்கியே.. குழந்தைக்கு பெயர் வச்சியா இல்லையா?”.
“இல்ல மேடம் அதை பத்தி இன்னும் நான் எதுவும் யோசிக்கல”.
“என்னமா பேசுற.. குழந்தை பிறந்து மூணு மாசம் ஆகுது உன் புருஷன் கூடவா புள்ளைக்கு என்ன பெயர் வைக்கணும்னு இன்னும் சொல்லல”.
அவ்வளவு தான்.. கணவனை பற்றி பேசியதும் வழக்கமாய் அவளுக்குள் தோன்றும் படபடப்பு இன்றும் தொற்றிக் கொண்டது.
என்னவென்று சொல்வது..
யாரை பற்றி சொல்வது..
யார் என்றே தெரியாதவனை பற்றி என்ன கூறி விட முடியும் என்ற மனக்குமுறல்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு படபடப்பாக நின்று இருந்தாள்.
“ஆமா, நான் கூட உன்கிட்ட விசாரிக்கணும்னு நினைச்சேன் இனியா உன் குடும்பத்தை பத்தி நீ இதுவரைக்கும் எதுவும் சொன்னதில்லையே.. உன் புருஷனை பற்றி கூட நீ இதுவரைக்கும் எதுவும் சொன்னது இல்ல.. பார்க்கவும் ரொம்ப சின்ன பொண்ணா இருக்க அவங்க எல்லாம் எங்க இருக்காங்க.. நீ ஏன் இப்போ இங்க தனியா இருக்க?”.
அவர்களின் கேள்விக் கணைகள் சரமாரியாக இவளை தாக்கவும். என்ன கூறுவது என்று தெரியாமல் வெளிறி போய்விட்டாள்.
இத்தனை நாட்கள் தனக்கு தங்க இடம் கொடுத்து பாதுகாப்பாக தன்னையும் தன் குழந்தையையும் பார்த்துக் கொண்டவர்களிடம் பொய் உரைக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை.
அதற்காக நடந்த மொத்தத்தையும் கூறினால் தன்னை பற்றி இவர்களும் இழிவாக தானே எண்ணுவார்கள் என்று எண்ணும் பொழுதே அவளுக்குள் அப்படி ஒரு வலி.
தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு இழி நிலை என்று லட்ச முறைக்கும் மேல் தனக்கு தானே கேட்ட அதே கேள்வியை இப்பொழுதும் எழுப்பினாள்.
“அது.. அது வந்து..” என்று அவள் தடுமாறவும்.
அவளின் நிலை பாரி வேந்தனுக்கு நன்கு விளங்கியது.
‘நடந்த சம்பவங்கள் மொத்தத்தையும் இவர்களிடம் எடுத்துரைப்போம் நிச்சயமாக இவர்கள் தன்னை சந்தேகப்பட மாட்டார்கள்’ என்று ஒரு மனம் அவளுக்கு ஆதரவாக பேசினாலும்..
மற்றொரு மனமோ, ‘உன் குடும்பத்தினரே உன்னை நம்பவில்லை. இவர்கள் மட்டும் உன்னை நம்பி விடுவார்கள் என்று எதை வைத்து நீ எண்ணுகிறாய்’ என்று அவளை குழப்பி விட்டது.
இருப்பினும், அவளுக்கு பொய் உரைக்க மனம் வரவில்லை. அதிலும், முத்துலட்சுமியுடன் இத்தனை நாட்களில் அவள் மிகவும் நெருங்கி பழகிவிட்டாள்.
அவரிடம் போய் எப்படி பொய் உரைப்பது என்று குற்ற உணர்ச்சியாகவும் இருக்க.. வேறு வழியின்றி உண்மையை கூறிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டாள்.
“மேடம்..” என்று அவள் தொடங்கும் முன்னரே, “அம்மா அவங்க வீட்ல இருக்கவங்களுக்கும் இவங்களுக்கும் ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் அதனால பிரிஞ்சு இருக்காங்க. இவங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க அது அவங்க வீட்ல இருக்கவங்களுக்கு பிடிக்கல அதனால இவங்களும் இவங்க ஹஸ்பண்டும் வீட்டை விட்டு வெளியே வந்துட்டாங்க.
இப்ப இவங்க ஹஸ்பண்ட் ஃபாரின்ல இருக்காரு டெலிவரிக்கு கூட வர முடியாத சிச்சுவேஷன் அதனால தான் இவங்க யாரை பற்றியும் நம்ம கிட்ட எதுவும் சொல்லல.. இத பத்தி எல்லாம் சொன்னா நாம எதுவும் தப்பா நினைச்சுப்போம்னு நினைச்சுக்கிட்டாங்க” என்று அனைத்தையும் உண்மை போலவே இனியாளின் கண்களை பார்த்துக் கொண்டே அழுத்தமாக தன் தாயிடம் கூறினான்.
Super
Thank you 😊