என் பிழை நீ – 15

5
(11)

பிழை – 15

பாரியின் இத்தகைய பேச்சு இனியாளுக்குமே பேரதிர்ச்சி தான். அதிலும், அவன் ஏதேதோ கதையை எல்லாம் கூறவும் இதையெல்லாம் நாம் எப்போது அவனிடம் கூறினோம் என்று அதிர்ந்து அவனை பார்த்தாள்.

அவளின் அதிர்ந்த பார்வையை உணர்ந்தாலுமே அதை சற்றும் சட்டை செய்யாதவன் தன் கையில் இருந்த காபியை ஒரு மிடர் அருந்தினான்.

“ஓ.. அப்படியா.. இதுல என்ன இருக்கு இனியா எங்க கிட்ட எல்லாம் இத முதல்லையே சொல்லி இருக்கலாமே.. இந்த காலத்துல காதல் கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் சாதாரணம் ஆயிடுச்சு. நீ ஒன்னும் கவலைப்படாத உன் வீட்ல நாங்க பேசுறோம். உன்னை திரும்ப அவங்களோட நாங்க சேர்த்து வைக்கிறோம்” என்று அலமேலு அவளுக்கு ஆதரவாக பேசவும்.

முத்துலட்சுமியும் புன்னகையுடன், “இதுக்காக தான் இத்தனை நாள் எங்க கிட்ட எல்லாம் சொல்லாம மறைச்சியா.. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது சாதாரணம் தான் மா. ஆனா, பெத்தவங்களையும் பேசி சமாதானம் செய்யணும் இல்ல..

அதுக்காக வீட்டை விட்டு வெளியில் வருகிறதெல்லாம் தப்பு தான். என்ன இருந்தாலும் அவங்க உன்ன சின்ன வயசுல இருந்து எப்படி எல்லாம் பார்த்து வளர்த்திருப்பாங்க.. திடீர்னு நீ யாரையோ காதலிக்கிறேன்னு கொண்டு போய் நிறுத்தினா அவங்களுக்கும் மனசு கஷ்டமா தானே இருந்திருக்கும்.

சரி அதையெல்லாம் விடு உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு நாம எல்லாரும் அவங்க கிட்ட நேர்ல போய் பேசி அவங்களை சமாதானப்படுத்தலாம்” என்றதும் பதறிய இனியாள் என்ன செய்வது என்று தெரியாமல் பாரிவேந்தனை பார்க்க.

அவளின் பார்வையை உணர்ந்தவன், “அதுக்கெல்லாம் அவசியம் இருக்காதுமா நான் பாத்துக்குறேன் விடுங்க”.

“சரி சரி பாரி சொல்றதும் சரி தான். எல்லாத்தையும் பாரி பார்த்துப்பான் அவங்க சேரும்போது சேரட்டும். அதுக்காக புள்ளைக்கு பேர் வைக்காமலே இருக்க முடியுமா அம்மாடி இனியா நீ இப்பவே உன் வீட்டுக்காரருக்கு போன் பண்ணு இந்த மாதிரி குழந்தைக்கு பேர் வைக்கணும் என்ன பெயர் வைக்கலாம்னு கேளு” என்று அலமேலு அவளை அவசரப்படுத்தவும்.

அவரின் படபடப்பான பேச்சு இனியாளையும் பதட்டப்படுத்தியது.

“இல்ல.. இல்ல மேடம்.. இப்போ எப்படி..” என்று அவள் பதறவும்.

“ஏன் அவர் வேலைக்கு போய் இருப்பாரா இப்ப பேச முடியாதா?” என்று அவரே அவளுக்கு எடுத்தும் கொடுத்தார்.

“ஆங்.. ஆமா.. வேலைக்கு தான் போயிருப்பார் என்று நினைக்கிறேன். அப்புறமா நான் கேட்டுட்டு சொல்றேன்” என்று தட்டு தடுமாறி ஒருவாறு கூறி சமாளித்தாள்.

நடந்த சம்பவங்களினால் அவளின் கண்களிலோ கொஞ்சமாக நீர் கோர்த்துக் கொண்டது.

“யாழ் நிலா! இந்த பெயர் எப்படி இருக்கு ஆன்ட்டி?” என்றான் அலமேலுவை பார்த்து பாரிவேந்தன்.

“ம்ம்.. ரொம்ப நல்லா இருக்கு பாரி சூப்பர் செலக்சன்”.

முத்துலட்சுமியும், “நாம எப்படி நம்ம இஷ்டத்துக்கு பேர் வைக்க முடியும். அப்புறம் அவ வீட்டுக்காரர் எதுவும் சொல்ல மாட்டாரா?”.

“சொல்ல மாட்டாருமா அவர் இனியாளுக்கு பிடிச்ச பெயரை வைக்க சொல்லிட்டாராம். இவங்க தான் இன்னும் பெயரை யோசிக்காமல் லேட் பண்ணிட்டாங்க”.

“அப்படியா, ஏன் இனியா என்ன பேர் வைக்கிறதுன்னு கன்ஃபியூஷனா இருந்தா எங்க கிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல.. எல்லாருமா சேர்ந்து ஒரு நல்ல பெயர் வைத்திருக்களாம்”.

இனியாளுக்கு இங்கே நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்த்து தலை சுற்றுவது போல் ஆகிவிட்டது. அதிலும், பாரி வேந்தன் வேறு ஏதேதோ கூறுகிறான். திடிரென்று ஏன் அவன் இப்படி எல்லாம் கூறுகிறான். தன்னை பற்றி அவனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டதா என்றும் சந்தேகம் எழுந்தது.

தன்னை பற்றி இதுவரை அவள் யாரிடமும் கூறியதில்லை பாரிவேந்தன் உட்பட.. இங்கே மற்றவர்களை போல் அவளும் ஒரு பணியாள் அவ்வளவு தான் இங்கே இருப்பவர்களுக்கும் அவளுக்குமான உறவு என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க..

சட்டென்று இனியாளை முத்துலட்சுமி இடமிருந்து காப்பாற்றும் வண்ணம் இருந்த பாரிவேந்தனின் பதிலில் அவளுக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை.

“என்னம்மா இப்படி நிக்கிற யாழ்நிலான்ற பேரு நல்லா தானே இருக்கு பேசாம அதையே வச்சுடுவோமா.. இல்ல, நீ வேற ஏதாவது பேர் வைக்கணும்னாலும் சொல்லு” என்று அலமேலு எடுத்துக் கொடுக்கவும்.

“இல்ல வேண்டாம் ஆன்ட்டி இந்த பேரு நல்லா தான் இருக்கு” என்றதும் அவளின் கையில் வீற்றிருந்த குழந்தையை ஆசையாக வாங்கிக் கொண்ட முத்துலட்சுமி, “அப்போ இன்னையிலிருந்து என் மகாலட்சுமியோட பேரு யாழ்நிலாவா.. ரொம்ப அழகா இருக்கே உங்க பேரு” என்றவாறு குழந்தையின் காதில் மாற்றி மாற்றி மூன்று முறை யாழ்நிலா என்று கூறினார்.

அவரை தொடர்ந்து அலமேலுவும் அதே போல் செய்ய.

“சரி மா அப்ப நாங்க கோவிலுக்கு போயிட்டு வந்துடறோம்”.

அவர்களுக்கு சம்மதமாக தலையசைத்தாளே தவிர இன்னமுமே அவள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவளுக்குள் பல குழப்பங்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

இருப்பினும், அவள் பாரி வேந்தன் கூறிய பெயரை குழந்தைக்கு வைத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது அவன் தனக்கு செய்த உதவிக்கான நன்றி கடன் தான்.

அவளின் பிரசவம் தொடக்கம் இன்று வரை அவளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் பாரிவேந்தன் தானே.. அந்த நன்றியினால் தான் அவன் கூறிய பெயரையே தன் குழந்தைக்கு வைத்து விட்டாள்.

அவளின் முகத்தில் ஓடும் குழப்ப ரேகைகளை வைத்து அவள் அருகில் வந்த முத்துலட்சுமி அவளின் கையில் சற்று அழுத்தத்தை கொடுத்தவர், “இங்க பாருமா உனக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நீ என்கிட்ட தாராளமா சொல்லலாம். எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத இந்த வயசுல உனக்கு இவ்வளவு கஷ்டத்தை அந்த ஆண்டவன் கொடுத்திருக்கக் கூடாது.

என்ன பண்றது விதி இப்படி எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு. நீயும் இந்த வீட்டில் ஒருத்தி தான் நீயும் எனக்கு ஒரு பொண்ணு மாதிரி தான்.. உனக்கு ஏதாவது ஒன்னுனா என்னை உன் அம்மாவா நெனச்சு என்கிட்ட எல்லாத்தையும் சொல்லு.. பாரியையும் உன்னுடைய அண்ணனா நினைச்சுக்கோ.. உனக்கு என்ன கஷ்டம்னாலும் உனக்கு நாங்க உதவி பண்ணுவோம்” என்றது தான் தாமதம் பாரி வேந்தனின் வாயிலிருந்த காபி சட்டென்று புறையேறிவிட்டது.

தன் தாய் தங்களுக்குள் இருக்கும் உறவு முறையையே மாற்றுகிறாரே என்று எண்ணியவன் தன் தலையில் தட்டியவாறு இருமிக் கொண்டிருக்க.

“பார்த்து பா பொறுமையா குடி அப்படி என்ன அவசரம்” என்று தன் மகனிடம் மென்மையாக கடிந்தவர்.

மீண்டும் இனியாளை பார்க்க. அவளோ அவரின் வார்த்தையில் நெகிழ்ந்து போய் நின்று இருந்தாள். சிறு வயது முதலே தாய் இல்லாமல் தந்தையின் வளர்ப்பில் வளர்ந்தவள் அவள்..

ஏன் சில சமயங்களில் ஒருவேளை, தன் தாய் இருந்திருந்தால் தன் வாழ்க்கை இப்படி போக விட்டிருக்க மாட்டாரோ என்று எண்ணியது கூட உண்டு.

குடும்பத்தினர் யாருமே இவள் பக்கம் நிற்காத நிலையில் தன் தாய் இருந்திருந்தால் தன் பக்கம் இருந்திருப்பாரோ என்ற எண்ணமெல்லாம் அவளுக்குள் எழாமல் எல்லாம் இல்லை.

ஆனால் என்ன செய்வது அவர் தான் இல்லையே என்று எண்ணி தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருந்தவளுக்கு முத்துலட்சுமியின் வார்த்தைகள் கண்களை கலங்க செய்து விட்டது.

உணர்ச்சிப்பெறுக்கோடு அவருக்கு சம்மதமாக தலையாட்டினாள்.

“இனியா குழந்தையையும் நாங்க கோவிலுக்கு தூக்கிட்டு போயிட்டு வரட்டுமா.. நீ தான் வர மாட்டேங்குற குழந்தையையாவது எங்களோட அனுப்பி வையேன்” என்ற அலமேலுவின் வார்த்தையை ஏனோ அவளால் தட்டிக் கழிக்க முடியவில்லை.

“சரி” என்று ஒப்புக்கொண்டவள் குழந்தையை அவர்களுடன் அனுப்பி வைத்தாள்.

ஏனோ முன்பை விட முத்துலட்சுமியிடம் இப்பொழுது சற்று அதிகப்படியான நெருக்கம் தோன்றி விட்ட உணர்வு தான் அவளிடம்.

அவர்கள் கோவிலுக்கு சென்றதும் காபியை குடித்து முடித்த பாரிவேந்தன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ரூமுக்கு வா” என்று விட்டு தன் அறையை நோக்கி நடந்தான்.

இன்று தான் முதல் முறை அவனின் அறைக்குள் நுழைகிறாள். இதுவரையில் அவள் அவனின் அறைக்குள் எல்லாம் சென்றதே கிடையாது. எதுவாக இருந்தாலும் அவர்கள் இருவரின் பேச்சும் ஹாலோடு முடிந்துவிடும்.

பாரிவேந்தன் நிச்சயமாக காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை அவளிடம் நிறையவே இருக்கிறது. இந்த மூன்று மாத காலங்களாக அவனை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள்.

எத்தனை அன்பானவன்.. அனைவரின் மீதும் எவ்வளவு அக்கறையாகவும் நடந்து கொள்கிறான். அதிலும், மற்றவர்களுக்காக அவன் செய்யும் உதவிகளை எல்லாம் கேட்டு அறிந்தவளுக்கு ஏனோ அவனின் மேல் மலையளவு மதிப்பும், மரியாதையும் கூடிப்போனது.

அவனின் பின்னோடே சென்றவள் அறைக்குள் நுழையவும். அவளின் முன்பு அந்த பைலை நீட்டினான். அதை வாங்கியவள் புரியாமல் பிரித்து படிக்கத் துவங்கவும்.

“குழந்தைக்காக லைஃப் இன்ஷூரன்ஸ் அப்ளை பண்ணி இருக்கேன். இது குழந்தையோட பியூச்சருக்கு ரொம்பவே ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். அது மட்டும் இல்லாம பெண் குழந்தையா இருக்கிறதால் அவளுடைய படிப்பு, கல்யாண செலவு எல்லாத்துக்குமே உனக்கு இது யூஸ்ஃபுல்லா இருக்கும்”.

அவனின் வார்த்தை உண்மையிலேயே இனியாளை ஆச்சரியப்படுத்தியது. பிறந்த மூன்று மாத குழந்தைக்கு திருமணம் வரை சிந்தித்து விட்டானே.. ஆனாலும், அவளின் மனதில் அரித்துக் கொண்டிருந்த கேள்வியை இப்பொழுது கேட்டுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டாள்.

“எதுக்காக டாக்டர் மேடம் கிட்ட என் ஹஸ்பண்ட் ஃபாரின்ல இருக்காருன்னும் நான் லவ் மேரேஜ் பண்ணேன்னும் சொன்னீங்க?”.

அவளிடமிருந்து இந்த கேள்வி எழும் என்பது அவனும் யூகித்த ஒன்று தான். எனவே, அவனிடம் பெரிய ஆச்சரியமோ அதிர்ச்சியோ எல்லாம் ஒன்றும் தென்படவில்லை.

“உன் லைஃப்ல ஏதோ ஒரு இன்சிடென்ட் நடந்திருக்கு. அதனால் தான் உன் பேமிலியை விட்டுட்டு தனியா வந்து இருக்கேன்னு புரியுது. ஆனா அது என்னன்னு கேட்டு உன்னை சங்கடப்படுத்த நான் விரும்பல. உனக்கு எப்போவாவது என்கிட்ட அதை பத்தி ஷேர் பண்ணிக்கனும்னு தோணுச்சுன்னா தாராளமா அதை நீ என்கிட்ட சொல்லலாம். ஆஸ் அ..” என்று சற்று இடைவெளி விட்டவன்.

தன் குரலை செறுமிக்கொண்டு, “ஆஸ் அ பிரெண்டா.. உனக்கு ஹெல்ப் பண்ண நான் எப்பவுமே காத்துக்கிட்டு இருப்பேன். ஆனா நான் அப்படி ஒரு பதிலை சொன்னது உனக்காக மட்டும் இல்ல குழந்தைக்காகவும் தான். யாரும் குழந்தையை பற்றி தப்பா பேசிட கூடாது இல்ல.

உன்னோட சிச்சுவேஷன் என்னன்னு தெரியாம சுத்தி இருக்கவங்க எல்லாருமே இந்த கேள்வியை கேப்பாங்க தான். அதுக்கு ஏதாவது ஒரு ஆன்சர் சொல்லிட்டா அவங்க எல்லாம் அவங்க வேலையை பார்த்துட்டு போயிடுவாங்க. இல்லைன்னா இதை பத்தியே ரிசர்ச் பண்ணிட்டு இருப்பாங்க. அப்புறம் நீயே எதிர்பார்க்காத நிறைய புது கதைகள் எல்லாம் உன்ன பத்தி உனக்கே தெரிய வரும்” என்றவனை வியப்பாக பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!