எத்தனை நல்லவனாக இருக்கிறான். தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு கூட எவ்வளவு உதவிகளை செய்கிறான். அவர்களின் வாழ்க்கையை சீர்படுத்த முனைகிறான்..
உண்மையிலேயே அன்று நர்ஸ் ரம்யா கூறியது போல் இவன் மிகவும் நல்லவன் தான் என்று பிரம்மிப்பாக அவனை பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள்.
“சைன் பண்ணு” என்று அவன் தன் கண்களால் அவள் கையில் இருக்கும் காகிதங்களை காட்டவும்.
முதல் இரண்டு பக்கங்களை படித்தவளுக்கு அவன் கூறியது போல் இது குழந்தைக்கானது தான் என்பது புரியவும். அதற்கு மேல் படிக்காமல் அவன் காட்டும் அனைத்து இடத்திலும் கையொப்பமிட தொடங்கினாள்.
அதற்கு முக்கிய காரணம் அவன் மேல் இருக்கும் நம்பிக்கை என்றும் கூறலாம்.
மேலும், தன்னிடம் ஏமாற்ற என்ன இருக்கிறது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.
அவன் காட்டிய அனைத்து இடத்திலும் யோசிக்காமல் கையொப்பமிட்டு விட்டு அவள் நிமிரவும் தான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சே வெளியேறியது.
எந்த ஒரு ஆரவாரமும் இல்லை..
யாரின் ஆசிர்வாதமும் இல்லை..
வாழ்த்துக்களும் இல்லை..
அவனின் மனசாட்சியை தவிர இவர்களின் திருமணத்திற்கு எந்த ஒரு சாட்சியும் இல்லை..
அவ்வளவு ஏன், மணமகளுக்கே இப்பொழுது நடந்தது ஒரு திருமணம் என்று தெரியவும் இல்லை..
ஆனால் அவனின் மனைவியாகிவிட்டாள்..
‘மிஸஸ். இனியாள் பாரிவேந்தன்’ ஆகிவிட்டாள்.
தன் மேல் இருக்கும் களங்கம் மொத்தத்தையும் அவன் துடைத்து எடுத்து விட்டான் என்பதை அறியாமலேயே நின்றிருக்கிறாள்.
கையொப்பம் இட்டு முடித்தவள் அறையை விட்டு வெளியேறவும். செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழிலோ மெல்லிய புன்னகை ஒன்று குடியேறியது.
அதன் பிறகு அனைத்தையும் சரியாக செய்து முடித்தவன். சட்டப்பூர்வமாக இனியாளை தன் மனைவியாக்கி கொண்டான்.
ஆனாலுமே அவளை பற்றி எந்த ஒரு விவரமும் அவனுக்கு தெரியாது. தன் குழந்தையின் தாய் அவள் என்பதை தவிர..
தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு அவனிடம் இருந்தாலும், அவளை காயப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவனிடம் நிறையவே இருக்கிறது. அதனாலேயே அவளின் விஷயத்தில் மிகவும் மென்மையாக கையாண்டு கொண்டிருக்கிறான்.
அடுத்த இரண்டு மாத காலங்களும் மின்னல் வேகத்தில் ஓடிவிட்டது. அன்று முத்துலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவரின் ரத்த மாதிரியை எடுத்து செல்ல வேண்டி ரம்யா வீட்டிற்கே வந்து இருந்தாள்.
முத்துலட்சுமியிடம் பேசிக் கொண்டே அவரின் ரத்த மாதிரியை அவள் சேகரிக்கவும் கிச்சனிலிருந்து அவளுக்காக காபியுடன் வெளியே வந்த இனியாள், “எடுத்துக்கோங்க ரம்யா” என்றவாறு அவளிடம் கொடுத்தாள்.
அவள் கொடுத்த காபியை பருகிக் கொண்டே, “காபி ரொம்ப நல்லா இருக்கு இனியா குழந்தை எங்க நல்லா இருக்காளா?”.
“ம்ம்.. நல்லா இருக்கா தூங்குறா”.
இவளின் தகவல்கள் முழுமையாக தெரியாவிட்டாலும் அரசல் புரசலாக ரம்யாவும் யூகித்திருந்தாள். அவளுக்கு பிரசவம் பார்க்கும் பொழுது இவளும் உடன் இருந்தால் அல்லவா.
ஆனாலும் எதையும் வெளிப்படையாக இனியாளிடம் அவள் கேட்கவில்லை.
“என்ன ரம்யா எப்ப தான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்க?”.
“செய்யலாம் மேடம் இப்போ என்ன அவசரம்.. இப்ப தான் தம்பி காலேஜ் ஃபைனல் படிச்சிட்டு இருக்கான். அவன் படிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கு போனா அம்மாவையும் தங்கச்சியையும் அவன் பார்த்துப்பான். அதுக்கப்புறம் நான் ப்ரீ ஆயிடுவேன் அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்”.
“அதுக்காக இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க முடியும். அதான் நம்ம டாக்டர்.வினோத் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப வருஷமா கேட்டுக்கிட்டு இருக்காரே பேசாம அவருக்காவது சம்மதம் சொல்லலாம் இல்ல.. ரொம்ப நல்ல பையன்” என்று உண்மையான அக்கறையோடு முத்துலட்சுமி கேட்கவும்.
அவரின் கேள்விக்கு பெருமூச்சை வெளியேற்றியவள், “அதெல்லாம் சரி வராது மேடம்”.
“ஏன் அப்படி சொல்ற.. அவனும் உன்ன மாதிரி தான் நம்ம டிரஸ்ல படிச்ச பையன். நம்ம கண்ணு முன்னாடியே வளர்ந்தவன் ரொம்ப நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அப்புறம் ஏன் சரி வராதுன்னு சொல்ற.. ஒரு வேளை, அவனுக்கு தன்னுடைய அப்பா யாருன்னு தெரியாதே அதை நினைச்சு ஏதாவது யோசிக்கிறியா?”.
அவரின் வார்த்தை ரம்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்ததோ இல்லையோ.. இனியாளுக்கு சுருக்கென்று இதயத்தில் எதையோ தைத்தது போல் இருந்தது.
“ச்ச.. ச்ச.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல மேடம். என்ன இருந்தாலும் அவர் ஒரு டாக்டர் முதல்ல இருந்த போல இப்போ நிலைமை இல்லையே.. அவர் இப்போ சொந்தமா வீடு வாங்கிட்டாரு நல்லா செட்டில் ஆகிட்டாரு.. ஆனா, நான் அப்படி இல்ல.. சாதாரண நர்ஸ் தான். அவங்க எதிர்பார்க்கிற போல எங்களால நகை, பணம் எல்லாம் கொடுக்க முடியாது மேடம்”.
“என்ன பேசுற ரம்யா நீ.. அதுவும் நம்ம வினோத்தை பத்தி நீ அப்படியா நினைச்சுட்ட.. அவன் உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் ஆசைப்படுறானே தவிர, உன்னுடைய நகை பணத்துக்காக எல்லாம் அவன் உன்னை ஆசைப்படல”.
ஆம், இது ரம்யாவும் அறிந்த விஷயம் தானே.. அவன் நகைக்கோ, பணத்திற்கோ எல்லாம் அலைபவன் கிடையாது. மிகவும் நல்லவன் தான்.. ரம்யாவை ஒரு தலையாக காதலிக்கிறான்.
இவளுக்கும் அவன் மேல் நிறையவே காதல் இருக்கிறது. ஆனால் அதை வெளியில் சொல்ல தான் மறுக்கிறாள்.
ரம்யாவை போலவே அவனும் இவர்களின் டிரஸ்டில் படித்தவன் தான். இப்பொழுது தன் முயற்சியால் நல்ல நிலைமையிலும் இருக்கிறான். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் இப்பொழுது சற்று வசதி வாய்ப்போடு இருக்கிறான்.
பணம் வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே அப்படி தான் அவனின் தாய் சற்று வசதி வாய்ப்பு ஏற்பட்டதும் ரம்யாவை தன் மருமகளாக்க விரும்பவில்லை.
அதை அவரின் வார்த்தைகள் மூலமாகவும் செயலின் மூலமாகவும் உணர்ந்த ரம்யா வினோத்திடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்ள தொடங்கி விட்டாள்.
முன்பும் இருவரும் நெருக்கமானவர்கள் எல்லாம் கிடையாது. இவளிடம் அவன் காதலை உரைத்திருக்கிறான். இவளுமே தன் காதலை தன் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தாள். அவனிடம் கூறிவிடலாம் என்று எண்ணும் பொழுது அவன் சற்று உயரத்திற்கு சென்று விட்டான்.
அவனின் உயரத்திற்கு தான் பொருந்த மாட்டோம் என்று எண்ணியவள் தன் மனதில் இருப்பதை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.
ஆனால் அவனின் தாய் தான் தங்களின் காதலுக்கு தடையாக இருக்கிறார் என்பதை அவள் யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. தன் தகுதிக்கு இது அதிகம் என்று நினைத்து தன்னைத்தானே அடக்கி கொண்டாள்.
“இங்க பாரு ரம்யா பணத்துக்காக வினோத் ஆசைப்படுறான்னு சொன்னா அது ரொம்பவே ஆபத்தம். உன் மனசுல என்ன இருக்குன்னு வெளிப்படையா சொல்லு.. வினோத்தோட அம்மா மாசமானதும் அவனுடைய அப்பா அவங்கள விட்டுட்டு போயிட்டாரு யாரும் இல்லாம நின்னவங்கள நான் தான் கூப்பிட்டு வந்தேன்.
அதுக்கப்புறம் அவங்களுக்கு வினோத் பிறந்தான். அவனையும் நம்ம டிரஸ்ட் மூலமாக படிக்க வச்சோம். இப்ப அவங்க நல்ல நிலைமையில் இருக்காங்க அவங்கள சின்ன வயசுல இருந்து நான் பாக்குறேன். அதனால அவன் மேல இப்படி ஒரு விஷயத்தை நீ சொன்னா என்னால அதை ஏத்துக்க முடியாது. உண்மை காரணம் என்னன்னு சொல்லு”.
அவர் கூறியது இனியாளுக்கு ஏனோ தனக்கு பொருந்துவது போல் தான் தோன்றியது. தனக்கும் தன் குழந்தையின் அப்பா யார் என்று தெரியாதே..
நாளை தன் பிள்ளையும் வளர்ந்து பெரியவள் ஆகினாள் அனைவரும் இப்படி தான் கேட்பார்களோ.. அவளின் திருமண வாழ்க்கையிலும் இதனால் பிரச்சனை வருமா என்று ஏதேதோ சிந்தனையோடு நடப்பவற்றை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவர் பணம் எதிர்பார்க்கலைனாலும் அவர் ஒரு டாக்டர்.. அவருடைய தகுதிக்கு அவருக்கு நிறைய பேர் பெண் கொடுக்க முன் வருவாங்க என்னை மாதிரி ஒரு பொண்ணு அவருக்கு தேவைப்படாது மேடம். அவருடைய தகுதிக்கும் எனக்கும் கொஞ்சமும் பொருத்தம் இருக்காது” என்றவள் முத்துலட்சுமியிடமும் இனியாளிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவள் சென்ற பிறகு ஏனோ இனியாளுக்கு மனமே சரியில்லை. தன் பிள்ளையின் வாழ்க்கையும் நாளை தன்னை போல் பாழாகி விடுமோ.. என்னை போல் அவளும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவாளோ என்ற எண்ணமே அவளை வெகுவாக பாதித்தது.
மருத்துவமனை செல்வதற்காக தயாராகி அவளுக்கு முன்னிருந்த இருக்கையில் வந்து அமர்ந்த பாரிவேந்தனை கூட அவள் சற்றும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவளின் சிந்தனை மொத்தமும் ரம்யா கூறி சென்றதிலேயே சுற்றி கொண்டு இருந்தது.
‘என்ன இவ இங்க ஒருத்தன் வந்து உட்கார்ந்து இருக்கேன் கொஞ்சம் கூட கண்டுக்காம அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கா’ என்று எண்ணிக்கொண்டு இருக்கையிலேயே முத்துலட்சுமி அவன் அருகில் வந்தவர், “கிளம்பிட்டியா பாரி”.
“ம்ம்.. கிளம்பிட்டேன்மா” என்றவனின் வார்த்தை அவரிடம் இருந்தாலும் பார்வை என்னவோ இனியாளின் மேலே தான் நிலைத்திருந்தது.
“பாரி ரம்யா வந்து இருந்தா அவ ஏன் வினோத்தை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டேங்குறா.. வினோத்துக்கு அவனுடைய அப்பா யாருன்னு தெரியாது அதனால தான் அவ சம்மதிக்க மாட்டேங்குறாளா?”.
அவரின் வார்த்தையில் தன் சிந்தனையில் இருந்து கலைந்த இனியாள் வெடுக்கென்று அவரை திரும்பி பார்த்தாள்.
இப்பொழுது பாரிவேந்தனுக்கு நன்கு விளங்கி விட்டது. இத்தனை நேரம் அவள் கொண்டிருந்த வருத்தத்திற்கான காரணம் என்னவென்று.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லமா நானே ரம்யா கிட்ட இத பத்தி பேசணும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். சீக்கிரமே அவ கிட்ட இத பத்தி பேசி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கலாம்”.
“ஆமாம்பா அவங்க அம்மா அப்பா செஞ்ச தப்புக்கு பாவம் வினோத் ஏன் கஷ்டப்படணும். பாவம், ரொம்ப நல்ல பையன்”.
“தப்பு நடந்தது உண்மை தான் மா. ஆனா அது ரெண்டு பேரும் தெரிஞ்சு செஞ்சாங்களான்னு தெரியாது இல்ல.. அதுலயும் அவங்க அப்பா மேல தப்பு இருந்தாலும் இருக்குமே தவிர அவங்க அம்மா மேல எந்த தப்பும் இருந்து இருக்காது. அவங்க மேல தப்பு சொல்லாதீங்க அவர் தானே விட்டுட்டு போயிருக்காரு இதில் இவங்க என்ன செய்வாங்க”.
அவன் கூறிய வார்த்தை ஏனோ இவளுக்கு தனக்காகவே அவன் கூறியது போல் உணர்த்தியது. அவன் கூறியதும் அதற்காக தானே..
அவன் எதை நினைத்து கூறினானோ அது சரியாகவே வேலை செய்தது. அவனின் வார்த்தைக்கு பின் இனியாளின் முகம் சற்று தெளிவடைய தொடங்கியது.
Super