“என்னமோபா அவங்க வாழ்க்கை தான் அப்படி ஆயிடுச்சுன்னு பார்த்தா இப்ப அவங்க பையனோட வாழ்க்கையும் இப்படி இருக்கு” என்று வருத்தத்தோடு அவர் பெருமூச்சு விடவும்.
மீண்டும் இனியாளின் எண்ணம் தன் மகளிடம் சென்றது.
தன் தாயின் வார்த்தைக்கு இனியாளின் முகம் சுணங்குவதை கண்ட பாரிவேந்தன், “உள்ள குழந்தை அழற மாதிரி சத்தம் கேட்குது நீ போய் என்னன்னு பாரு” என்றதும் அவனுக்கு சம்மதமாக தலையசைத்த இனியாள் அறைக்கு எழுந்து சென்று விட்டாள்.
“நான் பாத்துக்குறேன் மா நீங்க விடுங்க.. நான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசி இதை சரி பண்றேன்” என்றதோடு கிளம்பி மருத்துவமனை சென்று விட்டான்.
அடுத்த இரண்டு நாட்களுமே இனியாளின் முகம் வருத்தமாக தான் காட்சி அளித்தது.
ஏனோ அவளின் வருத்தம் இழைந்தோடும் முகம் பாரிவேந்தனுக்குள்ளும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது.
“ச்ச.. உண்மையை சொல்லவும் முடியல சொல்லாமல் இருக்கவும் முடியல.. எங்க சொன்னா நம்மள விட்டுட்டு போயிடுவாளோனு பயமா இருந்தாலும், தினம் தினம் அவ இத நினைச்சு கஷ்டப்படுறத பார்க்க முடியல” என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டு இருந்தவன் அன்று மருத்துவமனைக்கு கூட செல்லவில்லை. ஏனோ அவன் வீட்டிலேயே இருந்து விட்டான்.
இனியாளுக்கும் இதிலிருந்து எப்படியாவது வெளிவர வேண்டும் என்ற எண்ணம் தான். எத்தனை நாட்கள் தான் வருத்தத்திலும் அழுகையிலுமே கரைவது.
குழந்தையோடு அறையில் இருந்து வெளியே வந்த இனியாளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட முத்துலட்சுமி, “அம்மாடி எனக்கு ஒரு உதவி பண்றியா?”.
“சொல்லுங்க மேடம்”.
“அது பாரியோட ரூமை கொஞ்சம் சுத்தம் பண்ணனும். வீட்ல வேலை செய்றவங்கள சுத்தம் பண்ண சொன்னா அவங்களுக்கு பாரியுடைய முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரியா எடுத்து வைக்க தெரியல. பாரியோட ரூம்ல நிறைய மெடிக்கல் பைல்ஸும் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இருக்கும். அதையெல்லாம் சரியா எடுத்து வைக்காமல் கலைச்சு போட்டுடுறாங்க.. இல்லைனா, எங்கேயாவது மாத்தி எடுத்து வச்சிடுறாங்க. அப்புறமா அவன் தேடி எடுக்குறதுக்குள்ள டென்ஷன் ஆயிடுறான். அதனாலேயே நான் வேலை செய்யுறவங்க யாரையும் அவன் ரூமுக்குள்ள சுத்தம் பண்ண அனுப்புறது இல்ல. இன்னைக்கு நீ ஃப்ரீயா இருந்தா பாரியும் வீட்ல தான் இருக்கான். அவன் கிட்ட எந்த பைலை எங்க வைக்கணும்னு கொஞ்சம் கேட்டு அவனோட அறையை சுத்தம் பண்ணி கொடுக்கிறியா மா “.
இனியாளுக்குமே தன் கவனத்தை மாற்ற இது தனக்கு உதவி செய்யும் என்று தான் தோன்றியது. ஏதாவது வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் தன் சிந்தனையில் இருந்து சற்று வெளிவரலாம் என்று எண்ணியவள்.
“சரி மேடம் நான் பண்றேன்” என்று விட்டு அவனின் அறையை சுத்தப்படுத்துவதற்காக தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவன் அறை நோக்கி நடந்தாள்.
அவளுக்கு இது ஒன்றும் தவறாகவே தோன்றவில்லை. அவள் இவர்களிடம் வேலை பார்ப்பவள் தானே.. எந்த வேலை கொடுத்தாலும் பார்க்கத்தானே வேண்டும்.
நான் முத்துலட்சுமியை மட்டும் தான் பார்த்துக் கொள்ள வந்தேன். வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய மாட்டேன் என்று ஒதுக்கி வைக்க எல்லாம் அவள் நினைக்கவில்லை. அவர் எந்த வேலையை கூறினாலும் முகம் சுழிக்காமல் அவர் கூறுவதை செய்வாள்.
கதவை தட்டும் ஓசையில் எழுந்து வந்து கதவை திறந்த பாரிவேந்தன் இனியாளை சற்றும் இங்கே எதிர்பார்க்கவில்லை.
“என்ன இது கையில துடப்பத்தோட வந்து நிக்கிறா.. ஒருவேளை, உண்மையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நம்மள அடிக்க வந்திருப்பாளோ” என்று எண்ணியவன் புரியாமல் ‘என்ன’ என்பது போல் அவளை பார்க்கவும்.
“மேடம் உங்க ரூமை கிளீன் பண்ணி தர சொன்னாங்க டாக்டர்”.
அவள் கூறியதை கேட்டு அவளுக்கு வழிவிட்டு நின்றவனுக்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் எண்ணியதை நினைத்து தனக்கே சிரிப்பாக வந்தது.
அதிலும், அவள் எதனால் அடித்தாலும் வாங்கிக் கொள்ளும் நிலைக்கு வந்த தன்னை எண்ணி அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அந்த அளவிற்கு அவள் தனக்குள் ஊடுருவி விட்டாள் என்று எண்ணும் பொழுதே ஏதோ ஒரு பரவசம்.
பெரிதாக குப்பை எதுவும் இருப்பது போல் தோன்றவில்லை. ஆனாலுமே சற்று தூசியாக தான் இருந்தது. அவளுக்கு சிறு வயது முதலே டஸ்ட் அலர்ஜி ஆனால் முத்துலட்சுமி தன்னிடம் கேட்கும் பொழுது மறுக்க அவளுக்கு மனம் வரவில்லை. அதனாலேயே சரி என்று ஒப்புக் கொண்டாள்.
தூசியை துடைப்பதற்கு முன்னதாகவே ஒரு துணியால் தன் முகத்தை நன்கு கட்டிக் கொண்டாள். தூசி என்றால் அவளுக்கு சற்றும் ஆகாது. தும்மல் எடுத்து விடும்.
அதுவும் நிற்காது தொடர்ந்து தும்மலாகவே இருக்கும். ஒரு முறை இதில் நன்கு அனுபவப்பட்டு இருக்கிறாள். அன்று முதல் தூசிகள் இருந்தால் அந்த பக்கமே செல்ல மாட்டாள். ஏனென்றால், அவள் பட்ட அனுபவம் அப்படி.
முதலில் அவன் புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த அலுமாரியை சுத்தம் செய்தவளிற்கு வெகு நாட்கள் கழித்து புத்தகத்தை கையில் தொடுவது ஏதோ ஒரு புத்துணர்ச்சியை அவளுக்குள் கொடுத்தது.
தன் கையில் ஒரு புத்தகத்துடன் சற்று தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தவனோ அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் மனைவி தான்..
தன் குழந்தைக்கு தாய் தான்..
ஆனாலுமே, இன்று வரை அவனுக்கு அவள் ஒரு எட்டாக்கனி தான்.
இன்று வரை அவளின் முகத்தை தாண்டி அவன் பார்த்தது கிடையாது. இன்றும் அப்படி தான் அவளின் நெற்றியில் ஆரம்பித்த அவனின் பயணம் அவளின் கண்களை அடையவும் அதற்கு கீழ் அவனுக்கு தரிசனம் தராமல் அவளின் முகத்தை துணியினால் சுற்றி இருந்தாள்.
ஆனால் அவனே சற்றும் எதிர்பாராமல் அவனின் பார்வை இன்று ஏனோ கணவனாக முழு உரிமையோடு அவளின் மேல் படிய தொடங்கியது. அவளின் முகத்தை தவிர அவனுக்கு மற்றைய தரிசனங்கள் தாராளமாகவே கிட்டியது.
சுடிதார் தான் அணிந்திருந்தாள் பெண் அவள். இதுவுமே அவன் வாங்கி கொடுத்தது தான். கரு நீல நிற சுடிதார் அவளுக்கு பாந்தமாக பொருந்தி இருந்தது.
மிகவும் அவளின் உடலை இறுக்கிக் கொண்டும் இல்லாமல் அவளுக்கு கச்சிதமாக இருந்தது. அவளின் அங்க வனப்புகள் எல்லாம் அவனுக்கு தாராளமாகவே காட்சி தர.
அவனே எதிர்பாராமல் அவளின் அழகில் இவனுக்கு தான் மூச்சடைப்பது போல் ஆகிவிட்டது. தான் செய்யும் காரியத்தை உணர்ந்தவன் சட்டென்று தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
“என்னடா பண்ற நீ.. உன்னை எல்லாரும் வெளியில எவ்வளவு பெரிய டாக்டர்னு பெருமையா சொல்லிட்டு இருக்காங்க.. இப்படி சீப்பா பிகேவ் பண்ற” என்று அவனின் மனமே அவனை காரி துப்பியது.
“என்ன இப்போ அவ என் பொண்டாட்டி தானே நான் பார்த்தா ஒன்னும் தப்பில்லை” என்று கேள்வி எழுப்பிய மனத்திற்கு கடிவாளம் போட்டான்.
“பாக்குறது ஒன்னும் தப்பு இல்ல அப்புறம் நீ தான் அவஸ்தைபடுவ பாத்துக்கோ” என்ற எச்சரிக்கையையும் அவனின் மனசாட்சி விடுக்க.
ஆம், அதுவும் வாஸ்தவம் தானே என்று எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை.
“டாக்டர் இதை எல்லாம் எங்க வைக்கணும்” என்ற இனியாளின் வார்த்தையில் தன் சிந்தனையில் இருந்து கலைந்தவன் தன் குரலை செருமிக்கொண்டு அவளை நோக்கி எழுந்து வந்தான்.
அவள் கையில் வைத்திருந்த பைல்களை பார்த்தவன், “அந்த இடத்தில் அடக்கி வச்சிடு” என்று கூறிவிட்டு அறையில் இருந்த பால்கனிக்கு சென்று நின்று கொண்டான்.
அறைக்குள்ளேயே இருந்து அவளை பார்க்க துடிக்கும் தன் கண்களுக்கு கடிவாளமிட அவனால் முடியவில்லை மிகவும் சிரமமாக இருந்தது. அதனாலேயே எதற்கு வம்பு என்று பால்கனியில் தஞ்சம் புகுந்து விட்டான்.
அவன் கூறியது போலவே அனைத்தையும் தூசி தட்டி துடைத்து வைத்தவள். அறையையும் பெருக்கி துடைத்து முழுவதுமாக சுத்தம் செய்து முடித்துவிட்டு திரும்பகையில் தான் அது அவளின் கண்ணில் பட்டது.
அறையில் இருந்து வெளியேற சென்ற அவளின் கால்கள் ஒரு நொடி அப்படியே அந்தரத்தில் ஸ்தம்பித்து நின்று விட்டது.
அவளையும் மீறி அவளின் கால்கள் அதனை நோக்கி அவளை அழைத்து செல்ல.. ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் தன்னையும் மீறி தன் கால் போகும் போக்கில் நடந்த சென்றாள்.
அங்கே வீற்றிருந்ததை தன் கையில் தொட்டு பார்த்தவளிற்கோ என்ன மாதிரியான உணர்வு என்று விவரிக்க முடியாத நிலை. அவளின் மனக்கண் முன்பு பல காட்சிகள் திரை போல் விரிய கண்கள் தானாக கலங்க தொடங்கியது.
ஸ்டெதஸ்கோப்!
அவள் கையில் வீற்றிருந்தது ஸ்டெதஸ்கோப் தான்!
அதை பார்த்ததுமே அவளுக்குள் பல தரப்பட்ட எண்ணங்கள் கிளர்ந்து எழ. உணர்ச்சி பெருக்கில் தன்னை நிதானப்படுத்த முடியாமல் அருகில் இருந்த டேபிளை அழுந்த பற்றி தன்னை ஒரு நிலை படுத்தினாள்.
அப்பொழுது அறைக்குள் நுழைந்த பாரிவேந்தன் அவளின் நிலையை ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தவன்.
அவள் அருகே வந்து, “என்னாச்சு?” என்றான் அங்கே கலக்கமாக நின்றிருந்தவளை பார்த்து.
அவளின் கண்களிலோ கண்ணீர் குளம் கட்டி இருக்க. தன் எதிரே நிற்பவனின் உருவம் கூட அவளுக்கு முழுதாக தெரியவில்லை. கண்ணீர் நிறைந்த கண்கள் அவனை முழுவதுமாக பார்க்க முடியாமல் மறைத்திருந்தது.
இமை சிமிட்டி அதனை கீழ் இறக்கியவள் தன் கையில் வீற்றிருந்த ஸ்டெதஸ்கோப்பை கீழே வைத்தாள்.
அவளின் நிலையே எதுவோ சரியில்லை என்பதை அவனுக்கு உணர்த்த, “எனி ப்ராப்ளம்” என்றான் தவிப்பான குரலில்.
அவளின் கலக்கமான முகமும் கண்ணீர் நிறைந்த கண்களும் அவனுக்குள் அப்படி ஒரு வலியை கொடுத்தது. ஒரே நொடியில் அவளின் மொத்த வருத்தத்தையும் துடைத்தெறிய வேண்டும் என்ற முனைப்போடு பரிதவித்து போனான் பாரிவேந்தன்.
ஏனோ அவனிடம் மறைக்க அவளுக்கும் தோன்றவில்லை. தனக்காகவும் தன் பிள்ளைக்காகவும் என்று எத்தனையோ பார்த்து பார்த்து செய்கின்றான். தன்னை பற்றியும் தன் பிள்ளையை பற்றியும் அடுத்தவர் தவறாக நினைத்து விடக்கூடாது என்று மற்றவர்களின் முன்பு இவர்களின் சார்பாக பேசுகிறான்.
அப்படிப்பட்டவனிடம் எப்படி உண்மையை மறைக்க மனம் வரும். இத்தனை நாட்கள் தன்னை பற்றிய விஷயங்களை தனக்குள்ளேயே ஒளித்து வைத்திருந்தவள் முதல் முறை பாரிவேந்தனிடம் அனைத்தையும் கூற முடிவெடுத்துவிட்டாள்.
Super heroine doctor ra