“வாயை திறந்து அப்படி உன் மனசுல என்ன தான் இருக்குன்னு சொல்லுடி.. உன்கிட்ட உரிமையா வெளிப்படையா கேட்கவும் முடியாம நீ இப்படி கஷ்டப்படுவதை பார்க்கவும் முடியாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கேன் டி. ப்ளீஸ், அப்படி என்ன தான் உன் மனசுக்குள்ள இருக்குன்னு என்கிட்ட வெளிப்படையா சொல்லு” என்று மனசீகமாக அவளிடம் மன்றாடியவன்.
தன் குரலை செருமியவாறு, “என்கிட்ட உனக்கு ஷேர் பண்ணிக்கனும்னு இருந்தா தாராளமா உன்னுடைய பாஸ்ட் பத்தி என்கிட்ட நீ ஷேர் பண்ணலாம்”.
அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அவனிடம் தன் கடந்த காலத்தை பற்றி சொல்ல தூண்டியது.
நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு,
நாராயணன் இனியாளின் தந்தை தன் மகளுக்காக 9 மணி அளவில் மிதமான சூட்டில் இருந்த பாலில் காபி பொடியையும், சர்க்கரையையும் கலந்து அவளுக்கு பிடித்தவாறு ருசியான காபியை தயாரித்து எடுத்துக் கொண்டு இனியாளை எழுப்ப சென்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே தன் ஒன்றரை வயது மகனுக்கு உணவை ஊட்டி கொண்டிருந்த இனியாளின் அண்ணி நித்யா தனது கணவன் முகிலனிடம், “இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியல.. வயசு பொண்ணு 9 மணி வரைக்கும் தூங்குனா எங்கிருந்து வீடு விளங்கும்” என்று சிடுசிடுப்பாக மூணுமுணுத்தாள்.
“அம்மாடி தங்கம்.. எழுந்திருடா மணி ஒன்பது ஆகுது பாரு” என்று திரும்பி திரும்பி அலுப்பாக படுத்தவளை ஒரு வழியாக எழுப்பி அமர்த்தியவர். அவள் கையில் அந்த காபியை கொடுத்து குடிக்க வைத்துவிட்டு தான் அறையை விட்டு வெளியே வந்தார்.
தன் மனைவி கூறியதை கேட்டு முறுக்கிக் கொண்டு நின்றிருந்த முகிலன், “என்னப்பா இதெல்லாம் வயசு பொண்ணு 9 மணி வரைக்கும் தூங்க வச்சு பெட் காஃபி கொடுத்து எழுப்புறிங்க.. நாளை பின்ன அவ மாமியார் வீட்டுக்கு போனா எப்படி ஒழுங்கா குடும்பம் நடத்துவா..
பாருங்க நித்யாவும் தான் இருக்கா காலையிலேயே எழுந்திருச்சு எப்படி வீட்டு வேலையெல்லாம் பார்க்கிறா.. தனி ஆளா அவளே தான எல்லா வேலையும் பார்க்கிறா.. இந்த இனியாள் கொஞ்சம் சீக்கிரம் எழுந்துருச்சு அவளுக்கு கூட மாட ஹெல்ப் பண்ணலாம்ல.. குழந்தையை வச்சுக்கிட்டு அவளே தான் எல்லா வேலையும் பாக்கணுமா?”.
“ஏன் பா இப்படி எல்லாம் பேசுற.. பாவம், இத்தனை நாள் பரிட்சைக்காக படிச்சிட்டு இன்னைக்கு தானே 9 மணி வரைக்கும் தூங்குறா.. இத்தனை நாளும் காலைல நாலு மணிக்கு எல்லாம் எழுந்திருச்சு படிச்சுக்கிட்டு இருந்தா.. இன்னும் கொஞ்சம் நாள்ல ரிசல்ட் வந்துடும் அப்புறம் காலேஜ்ல சேர்க்கணும். இந்த கொஞ்ச நாள் தான் அவ நல்லா தூங்க முடியும். அதுக்கப்புறம் திரும்ப படிப்புல பிஸி ஆகிடுவா”.
அவரின் வார்த்தையில் தன் மனைவியை முகிலன் திரும்பி பார்க்கவும். நித்யா எதுவோ ஜாடை காட்டவும் மீண்டும் தன் தந்தையை பார்த்தவன், “இதெல்லாம் சரி வரும்னு எனக்கு தோணலை பா” என்றான் வெடுக்கென்று.
அவன் எதை பற்றி கூற வருகிறான் என்பது புரிந்தாலும், “என்னப்பா சொல்ற என்ன சரி வருமானு கேக்குற?”.
“ஏன் பா இப்போ இவ டாக்டருக்கு படிச்சு அப்படி என்ன பண்ண போறா.. நீங்க ஏன் அவளை டாக்டர்க்கு தான் படிக்க வைக்கணும்னு ஒரே பிடியிலேயே இருக்கீங்க. வேற எந்த படிப்பும் படிக்க வைக்க கூடாதா.. நாங்க சின்ன வயசா இருக்கும் பொழுதே அம்மா போய் சேர்ந்துட்டாங்க.
அதுக்கப்புறம் நீங்க ஒத்த ஆளா இருந்து என்னையும் இனியாளையும் படிக்க வச்சு வளர்த்திருக்கீங்க.. எனக்கு நல்ல படியா வாழ்க்கை அமைந்திடுச்சு அதே மாதிரி இனியாளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்தா உங்க கடமை முடியும்ல..
அதை விட்டுட்டு சேர்த்து வச்சிருக்க காசு மொத்தத்தையும் இப்படி அவ படிப்புக்கு செலவு பண்ணா நாளை பின்ன அவளுக்கு கல்யாணம்னு ஏதாவது செய்யணும் இல்ல.. அதுக்கு வேற செலவு இருக்கு. அத பத்தி யோசிக்காமல் இப்படி எல்லா காசையும் அவ படிப்பிலேயே கொட்டுறீங்க” என்று படபடவென பொரிந்தான்.
நாராயணன் பிரைவேட் வங்கியில் கேஷியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் முகிலன், இரண்டாவது தான் இனியாள்.
சிறு வயது முதலே இனியாள் மிகவும் திறமைசாலி, அன்பானவளும் கூட.. அவள் பிறந்து கை குழந்தையாக இருக்கும் பொழுதே அவளின் தாய் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
அதன் பிறகு நாராயணன் தான் ஒற்றை ஆளாக இருந்து தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார். முகிலனுக்கு சிறு வயது முதலே அந்த அளவிற்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை.
ஆனால், இனியாளுக்கு அப்படி கிடையாது. சிறு வயது முதலே கற்பூர புத்தி.. எதை சொல்லிக் கொடுத்தாலும் அதை சரியாக பிடித்துக் கொள்வாள். அவளின் திறனை பார்த்து நாராயண மூர்த்திக்கு அவளை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசை.
இது இன்று, நேற்று தோன்றியது அல்ல.. அவளின் சிறு வயதிலேயே தோன்றியது தான்.
“இனியாள் குட்டி வளர்ந்து பெரிய பிள்ளையானதும் டாக்டராகி அப்பாவுக்கு ஊசி போடுவீங்களா?” என்று தன் மகளை பார்த்து ஒரு நாள் ஆசையாக கேட்டார் நாராயணன்.
இனியாளோ, “அச்சோ! அப்பா ஊசி எல்லாம் வேண்டாம்.. ஊசி போட்டா உங்களுக்கு வலிக்கும். நான் டாக்டராகி உங்களுக்கு மாத்திரை கொடுத்து உங்க உடம்பை சரி பண்ணிடுறேன்” என்றாள் கலகலவென நகைத்து கொண்டு.
பெண்பிள்ளைகளுக்கு தந்தை என்றாலே அலாதி பிரியம் தானே.. இதில் இனியாள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா என்ன..
சிறு வயது முதலே தாய் இன்றி வளர்ந்தவளுக்கு தந்தை தான் அனைத்துமே.. அவர் ஆசைப்படியே மருத்துவராக வேண்டும் என்பது சிறு வயது முதலே பசுமரத்தாணி போல் அவளின் மனதில் நன்கு பதிந்து போனது.
அதன்படி பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவள் நீட் பரீட்சைக்காக இத்தனை நாட்களும் இரவு பகல் பாராது கண் விழித்து படித்து நேற்று தான் அந்த பரிட்சையையும் நல்ல முறையில் எழுதி விட்டு வந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“இங்க பாரு முகில் இனியாள் டாக்டர் ஆகணும்னு இன்னைக்கு நேத்து இல்ல சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆசை. இது உனக்கும் நல்லாவே தெரியும். இப்போ என்ன அவளுக்கு அவ்வளவு வயசா ஆகிடுச்சு அதுக்குள்ள இப்போவே எதுக்கு கல்யாண பேச்சு எல்லாம் பேசிக்கிட்டு.. முதல்ல அவ நல்லபடியா படிச்சு முடியட்டும். அப்புறமா இந்த கல்யாணத்தை பத்தி எல்லாம் பாத்துக்கலாம்”.
“அப்பா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. நான் ஒன்னும் அவளை படிக்க வைக்க வேண்டாம்னு சொல்லல.. ஏதாவது ஒரு டிகிரி படிக்க வச்சா போதுமில்ல ஏன் டாக்டருக்கு தான் படிக்க வைக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க. அதுக்கு எல்லாம் எவ்வளவு செலவாகும்னு தெரியுமா.. நான் என் பிரண்டு கிட்ட விசாரிச்சேன் டாக்டருக்கு படிக்கணும்னா லட்ச கணக்குல செலவாகும்னு சொல்றான்”.
“இருக்கட்டும் பா.. அதை எல்லாம் நான் பாத்துக்குறேன்”.
“அப்போ கல்யாணத்துக்கு?”.
“அதையும் நானே பாத்துக்கிறேன். நீ எந்த செலவும் செய்ய வேண்டாம். ஒரு அண்ணனா அவ கல்யாணத்தை முன்ன இருந்து எடுத்து நடத்தி கொடுத்தால் மட்டும் போதும். நீ உன் குடும்பத்தை பாரு நான் எல்லாம் பாத்துக்குறேன்” என்று இன்முகமாகவே கூறியவர் வங்கிக்கு கிளம்பி சென்று விட்டார்.
இது வழக்கமாக எப்பொழுதாவது இவர்களின் வீட்டில் நடப்பது தான். நித்யாவிற்கு எங்கே இனியாளின் திருமண செலவு தங்கள் தலையில் வந்து விழுந்து விடுமோ என்ற பயம்.
தன் கணவனின் வருமானத்தை எல்லாம் பத்திரப்படுத்தி வைப்பவள், மாமனாரின் வருமானத்தில் தான் குடும்பத்தையே நடத்திக் கொண்டிருக்கிறாள்.
சொந்த வீடு தான். வீடு மட்டும் தான் சொந்தமே தவிர நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான்.
எனவே, தன் மாமனார் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வைத்து இனியாளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்து அனுப்பி விட்டால் தங்களுக்கு செலவு இருக்காது என்று எண்ணுபவள் அவ்வபொழுது தன் கணவனை தூண்டிவிட்டு இவ்வாறு பேச வைப்பாள்.
ஆனால் இன்றோ படிப்பு, திருமணம் என அனைத்து செலவையும் நாராயணனே பார்த்துக் கொள்வதாக கூறிய பிறகு தான் அவளுக்கு மனம் நிம்மதி அடைந்தது.
தன் மாமனார் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட நித்யா தன் கணவனிடம், “சரி விடுங்க அதான் எல்லா செலவும் மாமாவே பார்த்துக்கிறேன்னு சொல்றார் இல்ல.. அவர் ஆசைப்படியே அவர் பொண்ண டாக்டர்க்கு படிக்க வைக்கட்டும். ஆனால் நாளை பின்ன கல்யாணத்துக்கு செலவு பண்ண காசு இல்லன்னு கேட்டார்னா ஒத்த பைசா கூட நீங்க தரக்கூடாது சொல்லிட்டேன்” என்று தன் கண்களை உருட்டி மிரட்டியவள் கிச்சனுக்கு சென்று விட்டாள்.
அவள் சென்ற பிறகு தன் தலையை இரு பக்கமும் ஆட்டியவாறு சலிப்பாக பெருமூச்சை வெளியேற்றியவன். தானும் அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.
முகிலன் ஒரு கார் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். கிடைக்கும் வருமானத்தை அப்படியே தன் மனைவியின் கையில் ஒப்படைத்துவிடும் அக்மார்க் கணவன். அவளோ அதை அப்படியே பத்திரப்படுத்தி விடுவாள்.
அனைத்தும் நித்யாவின் தாய் பாக்கியாவின் சொல்படி தான் அங்கே நடக்கும். நித்யாவின் தாய் பாக்கியா தான் அவ்வபொழுது அவளுக்கு இப்படி செய், அப்படி செய் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
அவர் தான் இப்பொழுது இனியாளுக்கும் சீக்கிரமே திருமணத்தை முடித்து கொடுக்குமாறும் தன் மகளுக்கு சொல்லிக் கொடுத்தார். இல்லையென்றால், செலவு தன் மகளின் தலையில் வந்து விழுந்து விடும் என்ற பயம் அவரிடம்..
இனியாள் எப்பொழுதுமே ஒன்பது மணி வரை தூங்கும் ஆள் எல்லாம் கிடையாது. சீக்கிரமே எழுந்து விடுபவள் தான். இன்று தான் சற்று அதிகப்படியாக தூங்கிவிட்டாள்.
காபியை குடித்து முடித்தவள் குளித்து கிளம்பி வெளியே வந்து தன் அண்ணன் மகனுடன் சற்று நேரம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
இனியாள் வீட்டில் இருந்தால் சிறு சிறு வேலைகளை எல்லாம் நித்யா அவளிடமே வாங்கி விடுவாள்.
என்ன தான் இனியாள் அவளுக்கு ஒத்தாசையாக கூட மாட வேலைகள் செய்தாலும் அது எதுவுமே வெளியே தெரியாது. நித்யா மற்றவர்களின் முன்பு தான் மட்டும் தான் அனைத்து வேலைகளையும் செய்வது போல் காட்டிக் கொள்வாள். இதுவுமே அவளின் தாயின் அறிவுரை தான்.