என் பிழை‌ நீ – 19

4.9
(20)

பிழை – 19

தன் கடின உழைப்பால் இனியாள் நீட் தேர்வில் தேர்ச்சியாகி பெரிய மருத்துவ கல்லூரியிலும் அவளுக்கு படிக்க இடம் கிடைத்தது.

நாராயணனுக்கு அத்தனை மகிழ்ச்சி.. தன் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை அனைவரிடத்திலும் சொல்லி பூரித்துப் போனார்.

தன் சம்பந்தி வீட்டிற்கும் அவர் அழைத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள..

அவர்களும், “அப்படியா ரொம்ப சந்தோஷம்” என்று அதைப்பற்றி விசாரித்துவிட்டு அழைப்பை துண்டித்து விட்டனர்.

பாக்யா உடனே நித்யாவிற்கு அழைப்பெடுத்தவர், “என்னடி உன் நாத்தனாருக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட்டு கிடைச்சிடுச்சாமே.. உன் மாமனாருக்கு வாயெல்லாம் பல்லா இருக்கு”.

“ஆமா மா எப்படியோ அவங்க ஆசைப்பட்ட மாதிரியே பெரிய காலேஜ்ல சீட்டு கிடைச்சிருக்கு அங்க படிச்சா அங்கேயே வேலையும் செய்யலாமாம்”.

“சரி தான்.. ஏய் நித்யா எனக்கு ஒரு யோசனை வந்து இருக்குடி”.

“என்னமா”.

“அது.. நம்ம ஏன் உன் அண்ணன் திவாகருக்கு இனியாளை கல்யாணம் செய்து கொடுக்க கூடாது”.

“எங்கம்மா அவ தான் படிக்க போறாளே”.

“அதனால தான் டி சொல்றேன். அவ சும்மா படிக்கல டாக்டருக்கு படிக்கிறா.. எவ்வளவு பெரிய படிப்பு.. அவளுக்கு நல்ல சம்பளம் வரும் இவ்வளவு செலவு பண்ணி அவளை படிக்க வச்சு எதுக்காக வெளியில் எவனுக்கோ கட்டிக் கொடுக்கணும். பேசாம என் அண்ணனுக்கு கட்டி கொடுங்கன்னு நீ உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி உன் மாமனார் கிட்ட பேச சொல்லு.. நம்ம திவாகருக்கு இனியாளை கல்யாணம் பண்ணிட்டா சொத்து நம்ம குடும்பத்துக்குள்ளவே இருக்கும். இவளுடைய சம்பாத்தியமும் நம்ம குடும்பத்துக்கே வரும் என்ன சொல்ற..” என்று சும்மா இருந்த நித்யாவிற்கு ஐடியா கொடுத்தார்.

அவளின் முகமும் பிரகாசிக்க, “ஆமாமா நீ சொல்றதும் வாஸ்தவம் தான். இந்த வீட்ட நாங்களே எடுத்துப்போம். அவளுடைய வருமானமும் நம்ம குடும்பத்துக்கே வரும். எல்லாம் சரி தான் ஆனா நம்ம திவாகருக்கு என் மாமனார் இனியாளை கட்டி கொடுக்க சம்மதிப்பாரான்னு தெரியலையே”.

“ஏன் டி இப்படி சொல்ற.. என் பையனுக்கு என்ன குறைச்சல்?”.

“ஆமா உன் பையன் ஃபாரின்ல பெரிய பிசினஸ் பண்றான் பாரு.. அவனே ஃபாரின்ல டிரைவர் வேலை பார்த்துகிட்டு இருக்கான். அதை வெளியில சொன்னா அசிங்கம்னு நாம அவன் ரெஸ்டாரன்ட் வச்சு நடத்துறான்னு பொய் சொல்லிட்டு இருக்கோம். டாக்டர்க்கு படிச்ச பொண்ண போய் ரெஸ்டாரன்ட் வச்சிருக்க உன் பையனுக்கு கொடுக்க அவர் சம்மதிப்பாரானு தெரியலையே”.

“அதெல்லாம் உன் கையில தான் டி இருக்கு. நீ தான் உன் புருஷன் கிட்ட பேசி உன் மாமனாரை சம்மதிக்க வைக்க சொல்லணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா நம்ம உறவு ஸ்ட்ராங்கா இருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கலாம்னு நீ தான் டி பேசணும். வழக்கம் போல வாயை மூடிக்கிட்டு இல்லாம உன் வீட்டுக்காரர்க்கு புரியுற மாதிரி புத்திமதி சொல்லி பேச சொல்லு”.

“சரிமா இப்ப தானே படிக்கவே ஆரம்பிச்சு இருக்கா படிப்பு முடியட்டும் பாத்துக்கலாம்”.

“அப்படி அசால்டா இருக்காத டி இப்போவே உன் வீட்டுக்காரர் காதுல இந்த விஷயத்தை போட்டு வை. அப்போ தான் வேற யாராவது பொண்ணு கேட்டு வரும் போது டக்குனு உன் வீட்டுக்காரர் உன் மாமனார் கிட்ட இதை பத்தி பேச முடியும்”.

தன் தாய் கூறுவதும் சரி தான் என்று நித்யாவிற்கு பட, “ம்ம்.. நீ சொல்றதும் சரி தான் மா. நான் அவர்கிட்ட இப்போவே இதை பத்தி சொல்லி வைக்கிறேன்” என்றவாறு அழைப்பை துண்டித்தாள்.

இனியாள் தன் தந்தையின் ஆசைப்படி தான் ஒரு மருத்துவராக போகிறோம் என்ற கனவோடு கல்லூரிக்கு செல்லும் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்க.

அவளின் அண்ணியோ அவளை தன் அண்ணனுக்கு மனம் முடித்து வைக்க திட்டம் திட்டிக் கொண்டிருந்தாள்.

அன்று இரவே முகிலன் வேலை விட்டு வீடு திரும்பியதும் அவனிடம் தன் தாய் கூறியதை அப்படியே ஒப்பித்தாள்.

“என்ன பேசுற நீ இதெல்லாம் சரி வருமா.. டாக்டர் படிச்ச பொண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்தா தான் நல்லா இருக்கும். உன் அண்ணன் ரெஸ்டாரன்ட் ஓனரா இருக்காரு அவரை கட்டிக்க இனியாள் சம்மதிப்பாளானு தெரியலையே”.

“என்னங்க பேசுறீங்க நீங்க.. இதுல அவ சம்மதிக்க என்ன இருக்கு.. பெரியவங்க நாம என்ன முடிவு பண்றோமோ அதுக்கு சரின்னு தானே சொல்லணும். இங்க பாருங்க பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா இரண்டு குடும்பமும் ஒத்துமையா இருக்கும். நாளைக்கு நமக்கு ஒன்னுனா அவங்க தான் வந்து நிக்கணும். நல்லா யோசிச்சு பாருங்க.. என் அண்ணனுக்கு என்ன குறைச்சல்.. சொந்தமா பிசினஸ் பண்றான். இனியாளை அவனுக்கு கட்டி கொடுத்தா அவன் அவளை சந்தோஷமா வச்சு பார்த்துப்பான். ஒழுங்கா மாமா கிட்ட நேரம் கிடைக்கும் போது இதை பத்தி பேசுங்க”.

“சரி பொறுமையா பேசலாம் இப்ப என்ன அவசரம்.. இப்ப தானே அவள் காலேஜ் போக ஆரம்பிக்கிறா.. நான் அப்பாகிட்ட நேரம் கிடைக்கும் போது பேசுறேன்”.

தன் தாய் கூறியது போலவே தன் கணவனிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டாள். தன் திறமையை எண்ணி மெச்சிக் கொண்ட நித்யா நிம்மதியாக உறக்கத்தை தழுவினாள்.

இப்படியே நாட்கள் உருண்டோட இனியாள் கல்லூரிக்கு செல்லும் நாளும் வந்து சேர்ந்தது. நாராயணனுக்கு அத்தனை மகிழ்ச்சி, முகம் கொள்ளா புன்னகையோடு தன் மகளை வண்டியில் ஏற்றிச் சென்று கல்லூரியில் விட்டவர். அவளை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு தான் புறப்பட்டு இருந்தார்.

இனியாளும் கல்லூரியில் தன் கவனத்தை எதிலும் சிதறவிடாமல் நன்கு படித்தாள். முதல் செமஸ்டரில் அனைத்து பாடத்திலும் அவள் தான் கல்லூரியிலேயே அதிக மதிப்பெண்.

இனியாளின் தோழிகள் அனைவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவிக்கவும். புன்னகை முகமாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்த இனியாளை வன்மமாக பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் ஆஷா.

ஆஷா பெரும் வசதியான குடும்பத்து பெண் நன்கு படிப்பவளும் கூட.. படிப்பில் எப்பொழுதுமே அவள் தான் முதலாவதாக வரவேண்டும் என்ற போட்டி குணம் உடையவள். அவளையே இரண்டாம் இடத்திற்கு தள்ளிய இனியாளின் மேல் அவளுக்கு வன்மம் ஏற்பட தான் செய்தது.

ஆஷாவின் தோழி சாதனா, “என்னடி இவ உன்ன விட நல்ல மார்க் வாங்கிட்டா”.

“விடு ஒரு செமஸ்டர் தானே.. அடுத்த செமஸ்டர்ல பாத்துக்கலாம்” என்று கோபமாக இனியாளை பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள் ஆஷா.

அடுத்தடுத்து வந்த அனைத்து தேர்வுகளிலும் அவளே முதல் மதிப்பெண்களை எடுப்பது தொடர் கதை ஆகிப் போனது.

இதனால் ஆஷாவிற்கும் இனியாளின் மேல் வன்மம் கூடிக் கொண்டே போனது. ஒவ்வொரு முறையும் கிளாஸ் டெஸ்ட் முதல் கல்லூரி தேர்வு முதல் செமஸ்டர் வரை அனைத்திலும் அவள் இவளை இரண்டாம் இடத்திற்கு தள்ள தள்ள.. இவளுக்குள் கோபம் அதிகரித்து கொண்டே சென்றது.

அந்த நேரம் தான் இவர்களின் கல்லூரிக்கு புதிதாக ஆசிரியராக வந்து சேர்ந்தான் மதன்.

ஏனோ பார்த்த முதல் பார்வையிலேயே மதன் ஆஷாவை வெகுவாக கவர்ந்து விட்டான். நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் மேல் ஆஷாவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாக மலர தொடங்கியது.

ஆனால் விதி வலியது அல்லவா..

மதனின் பார்வையோ யாரும் அறியா வண்ணம் இனியாளின் மேலேயே வட்டமடிந்தது.

அன்று முதல் வகுப்பு மதன் உடையது தான். வேகமாக கையில் அன்று எடுக்க வேண்டிய பாடத்தின் கோப்புகளை சுமந்தவாறு வகுப்பறைக்குள் நுழைந்தவனின் பார்வை எதிர்நோக்கியது என்னவோ இனியாள் அமர்ந்திருக்கும் இடத்தை தான்.

ஆனால் அவள் அமர்ந்திருக்கும் இடமோ வெற்றிடமாக இருக்க.. அவனுக்குள் இருந்த உற்சாகம் மொத்தமும் வடிந்துவிட்ட உணர்வு.

ஆஷாவின் பார்வையோ மதனை விட்டு நொடியும் விலகாமல் அவனிலேயே நிலைத்திருக்க.

அவள் அருகில் அமர்ந்திருந்த சாதனா அவளின் தோளில் இடித்தவாறு, “போதும் டி ரொம்ப வழியுது கொஞ்சம் கிளாசையும் கவனிக்கலாமே” என்றாள் கிண்டலாக.

அவளின் கிண்டலில் அசடு வழிந்த ஆஷா, “என்னமோ தெரியல.. மதன் சாரை பார்த்தா என்னால் இப்போலாம் என்னை கண்ட்ரோல் பண்ணவே முடியல”.

“அப்போ வைரஸ் தாக்கிடுச்சு போலருக்கே” என்ற சாதனாவை புரியாமல் பார்த்த ஆஷா, “என்ன வைரஸ்?”.

“அதாம்மா காதல் வைரஸ்” என்று கூறி தன் ஒற்றைக் கண்ணை சிமிட்டவும்.

தன் நெற்றியை நீவியவாறு தன் பார்வையை திருப்பி கொண்டாள் ஆஷா.

“சீக்கிரம் மதன் சார் கிட்ட உன் மனசுல இருக்குறதை சொல்லிடு டி ஆள் வேற பார்க்க ரொம்ப ஹேண்ட்ஸமா இருக்காரு.. அப்புறம் வேற எவளாவது கொத்திக்கிட்டு போயிட போறாளுங்க” என்றதுமே கோபமாக அவளை முறைத்து பார்த்த ஆஷா, “அதெல்லாம் ஒன்னும் நடக்காது நீ உன் வாயை வைக்காமல் சும்மா இருக்கியா” என்றாள் கடுப்போடு.

அதன் பிறகு சாதனாவும் தன் வாயை மூடிக்கொள்ள.. அன்றைய வகுப்பை எடுத்து முடித்த மதன் வகுப்பறையை விட்டு கிளம்புகையில் எழுந்து நின்ற ஆஷா, “சார் எனக்கு இன்னைக்கு நீங்க எடுத்த கிளாஸ்ல ஒரு டவுட் இருக்கு”.

மதனுக்கு பொறுமையாக நின்று அவளின் சந்தேகத்தை தெளிவுபடுத்தும் அளவிற்கு எல்லாம் நேரமில்லை. அடுத்ததாக மற்றொரு வகுப்பிற்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கவே, “ஓகே ஆஷா ஆஃப்டர்னூன் லஞ்ச் பிரேக்ல என்னுடைய கேபின்க்கு வாங்க நான் சொல்லி தரேன். இப்போ எனக்கு வேற ஒரு கிளாஸ் இருக்கு” என்றவாறு அவசரமாக அறையை விட்டு வெளியேறினான்.

“பரவாயில்லையே டி சார் உன்ன அவருடைய ரூம்க்கு கூப்பிட்டு உனக்கு நல்ல சான்சை கொடுத்திருக்காரு.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாத. அவர்கிட்ட உன் மனசுல இருக்குற மொத்தத்தையும் சொல்லிடு” என்ற சாதனாவை பார்த்து வெட்க புன்னகையோடு சம்மதமாக தலையசைத்தாள் ஆஷா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!