என் பிழை நீ – 20

4.6
(14)

பிழை – 20

மதன் கூறியது போலவே அன்று மதிய உணவு இடைவேளையில் அவனை சந்திக்க வேண்டி அவனின் அறையை தேடி சென்றாள் ஆஷா.

அந்நேரம் மதன் யாருடனோ செல்பேசியில் பேசிக் கொண்டிருப்பது இவளின் காதில் விழ.. அப்படியே சற்று நேரம் நின்று இருந்தாள்.

“என்னக்கா நான் தான் இப்போ எதுவும் பார்க்க வேண்டாம்னு சொல்றேன்ல இப்ப என்ன அவசரம்?”.

எதிர் முனையில் என்ன கூறப்பட்டதோ, “ஆமா என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா அதனால தான் இப்போ பொண்ணு பார்க்க வேண்டாம்னு சொல்றேன் போதுமா.. இதை எல்லார்கிட்டயும் சொல்லி தம்பட்டம் அடிச்சுக்கிட்டு இருக்காத உன் மனசோட வச்சுக்கோ.. இன்னும் நான் அந்த பொண்ணு கிட்ட கூட என் மனசுல இருக்குறதை வெளிப்படையா சொல்லல சொன்னா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு வேற தெரியல. அவ கிட்ட இந்த விஷயத்தை சொல்லி அவ சம்மதம் சொன்ன பிறகு தான் எல்லார்கிட்டயும் சொல்லனும்னு இருக்கேன். அதுவரைக்கும் ஏதாவது பொண்ணு பாத்து இருக்கேன்னு திரும்ப எனக்கு போன் பண்ணாத”.

ஆஷாவின் கால்கள் அவன் கூறிய செய்தியை கேட்டு அப்படியே பூமிக்குள் புதைந்தது போல் நின்று விட்டன. அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

இன்று தன் மனதில் இருப்பதை இவனிடம் வெளிப்படுத்தி விடலாம் என்ற ஆசையோடு கிளம்பி வந்தவளிற்கு மதனின் இத்தகைய பேச்சு பெறும் ஏமாற்றத்தை தான் அவளுக்கு பரிசளித்தது.

மேலும் இதை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு வருடமாக இவள் மதனை காதலிக்கிறாள் இப்படி திடீரென்று அவன் வேறு யாரோ ஒருத்தியை காதலிப்பதாக கூறுவதை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

“என்னக்கா உனக்கு என்ன பிரச்சனை அதான் நான் வேற ஒரு பொண்ண காதலிக்கிறேன்னு சொல்லிட்டேன்ல.. அந்த பொண்ண பத்தி எந்த டீடைல்ஸும் என்னால இப்போ சொல்ல முடியாது. அவ இப்போ தான் படிச்சுக்கிட்டு இருக்கா.. அவ படிப்பு முடியட்டும் அப்புறமா அவங்க வீட்ல பேசலாம்”.

ஆஷாவின் காதுகள் மதனின் வார்த்தையில் கூர்மையாகின. யார் அந்த பெண் என்று தெரிந்து கொள்ள வேண்டிய முனைப்பு அவளிடம் நிறையவே இருந்தது. எனவே தன் செவிகளை கூர்மையாக்கி அவன் கூறுவதை கேட்க தொடங்கினாள்.

“ம்ம்.. விட மாட்டியே நீ.. இதுக்கு தான் நான் உன்கிட்ட இத்தனை நாளும் சொல்லாமல் இருந்தேன். சரி உன்கிட்ட சொல்றதை வெளியில யார் கிட்டயும் சொல்லிடாத.. அந்த பொண்ணு நான் ஒர்க் பண்ற காலேஜ்ல தான் படிச்சுக்கிட்டு இருக்கா அவ பேரு இனியாள்”.

அவ்வளவு தான் ஆஷாவிற்கு தலையில் இடி விழுந்த உணர்வு. ஏற்கனவே, இனியாளின் மேலிருந்த வன்மம் இப்பொழுது பல மடங்காக அதிகரித்தது.

படிப்பில் தான் தனக்கு போட்டியாக இருக்கிறாள் என்று பார்த்தாள். இப்பொழுது வாழ்க்கையிலும் அவள் தான் தனக்கு போட்டியா என்று எண்ண எண்ண இனியாளின் மேல் அத்தனை ஆத்திரம் எழுந்தது ஆஷாவிற்கு.

கோபத்தில் அவளின் கண்கள் மட்டுமல்ல முகமே செவ்வண்ணம் பூசிக் கொண்டது. அவளையும் மீறி அவளின் கண்கள் கண்ணீரை சுரக்க ஆக்ரோஷமாக அதனை துடைத்துக் கொண்டவள் வேகமாக கழிவறையை நோக்கி ஓடினாள்.

அங்கே தன் முகத்தை நன்கு அடித்து கழுவியவளிற்கோ இனியாளின் மேல் அத்தனை ஆத்திரம்.. கண்மண் தெரியாத கோபம்..

எப்படியும் அவனை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி அவளுக்குள் எழுந்தது.

அதற்கு மேல் அன்று கல்லூரியில் இருக்க முடியாமல் உடனே கிளம்பி வீட்டிற்கு சென்று விட்டாள்.

இனியாளுக்கோ அன்று காய்ச்சல் அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு கஞ்சியை ஊட்டிக் கொண்டிருந்த நாராயணன், “நீ எதுக்குடாமா இதெல்லாம் பண்ண.. பாரு இன்னைக்கு ஒன் டே வேஸ்டா காலேஜுக்கு லீவு போடுற மாதிரி ஆகிடுச்சு. படிக்கிற புள்ள நீ உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம்” என்று அன்பாக திட்டிக்கொண்டே அவளுக்கு கஞ்சியை புகட்டி கொண்டு இருந்தார்.

“இல்லப்பா ஃப்ரீயா தானே இருக்கோம்னு டஸ்ட் கிளீன் பண்ணலாம்ன்னு பண்ணேன். அது இப்படி ஆகும்னு நான் நினைச்சு கூட பாக்கல” என்றாள் இருமலோடு.

அருகில் நின்றிருந்த நித்யாவிற்கோ மனம் பதை பதைப்பாக இருந்தது. அவள் தானே நேற்று சாயந்திரம் கல்லூரி முடிந்து வந்த இனியாளை வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்யுமாறு ஏவினாள். எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பதட்டம் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது.

ஆனால் இனியாளோ அவளை காட்டிக் கொடுக்காமல் தானாக முன் வந்து தான் வேலை செய்ததாக கூறி விடவும் தான் அவளுக்கு ‘அப்பாடா’ என்று நிம்மதி மூச்சே வெளியேறியது.

“உனக்கு தான் டஸ்ட் அலர்ஜினு தெரியும்ல அப்புறம் ஏன் இப்படி பண்ண.. உனக்கு டஸ்ட் அலர்ஜினு தான் உன்னுடைய ரூம்ல தூசி இல்லாம நான் பாத்துக்குறேன். நீ என்னன்னா இப்படி ஜுரத்தை இழுத்து வச்சிருக்கியே”.

“அப்பா எனக்கு ஒன்னும் இல்ல.. இப்ப பரவாயில்ல நாளைல இருந்து நான் பழையபடி காலேஜ் போக ஆரம்பிச்சிடுவேன்”.

“ஒன்னும் தேவையில்லை, நாளைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நாளை மறுநாளிலிருந்து போய்க்கலாம். நீ நல்லா படிக்கிற பொண்ணு ரெண்டு நாள் லீவ் போடுறதால ஒன்னும் ஆகிடாது. சரி நீ படுத்து தூங்கு” என்று அவளுக்கு போட வேண்டிய மாத்திரைகளையும் கொடுத்தவர். போர்வையை போர்த்திவிட்டு அவளை தூங்க வைத்து விட்டே அறையை விட்டு வெளியேறினார்.

“நல்லவேளை, இந்த இனியாள் நம்மள போட்டுக் கொடுக்காமல் விட்டுடா இவளுக்கு என்ன கொஞ்சம் வேலை செஞ்சா கூட ஒத்துக்க மாட்டேங்குது ரொம்ப தான் சொகுசா பொண்ண வளர்க்கிறார். நாளைக்கு எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க வீட்டுக்கு போய் வீட்டு வேலையெல்லாம் பார்ப்பாளாம்..

அதெல்லாம் இந்த மாதிரி சாக்கு சொல்லி எங்க வீட்டில் தப்பிக்க முடியாது. என் அம்மா எல்லா வேலையும் மொத்தமா வாங்கிடுவாங்க.. உனக்கு இந்த சொகுசு எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான்” என்று இனியாளை நினைத்து பொறுமியவள் தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்.

இங்கே நடப்பது மொத்தத்தையும் அவளின் தாயிடம் கூறுவது தான் அவளின் முதல் வேலையே.. அன்றாட நிகழ்வுகளை அப்படியே தன் தாயிடம் ஒப்பித்து விடுவாள். அவரும் அவளை ஏற்றி விடும் விதமாக அவளுக்கு அறிவுரைகளை கூறுவார்.

“நீ ஒன்னும் கவலைப்படாத நித்யாமா எப்படியும் நம்ம வீட்டுக்கு தானே அந்த மகாராணி வந்து ஆகணும். அப்போ மொத்த வீட்டு வேலையும் அவ தான் பார்த்தாகணும் இப்படி பாசாங்கு போடுற வேலை எல்லாம் என்கிட்ட வேலைக்காகாது. காய்ச்சலா இருந்தாலும் எல்லா வேலையும் நான் வாங்கிட்டு தான் விடுவேன்” என்றார் அக்மார்க் மாமியாராக.

இனியாள் அவர்களின் வீட்டு மருமகள் ஆகும் முன்னரே அவளுக்கு என்னென்ன வேலைகளை கூற வேண்டும் என்று இருவரும் பட்டியலிட தொடங்கிவிட்டனர்.

அவர்களை பொறுத்தவரை இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அடுத்தவர்களை பற்றி புறம் பேசும்பொழுது அதில் அவர்களுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம் கிடைக்கும்.

மறுநாளும் இனியாள் கல்லூரிக்கு செல்லவில்லை. அன்றும் வகுப்பறைக்குள் நுழைந்த மதனின் பார்வை முதலில் பதிந்து மீண்டது என்னவோ இனியாள் அமரும் இடத்தை நோக்கி தான்.

இன்றும் அவள் வரவில்லை என்றதும் அவனுக்குள் சிறிய தடுமாற்றம். அவளுக்கு என்ன ஆனதோ என்று பதட்டம் வேறு ஏற்பட யாரிடம் கேட்பது என்றும் அவனுக்கு விளங்கவில்லை. பாடத்தை எடுத்து முடித்தவன் வகுப்பறையை விட்டு கிளம்பும் முன்பு இனியாளின் தோழி அனிதாவை தன் கேபினுக்கு வருமாறு அழைத்துவிட்டு சென்றான்.

அனிதாவும் அவனின் அறை நோக்கி செல்லவும். அவள் அறியாமலே ஆஷாவும், சாதனாவும் அனிதாவை பின்தொடர்ந்து சென்றனர்.

“அனிதா என்ன ஆச்சு இனியாளுக்கு 2 டேஸ் கிளாஸ்க்கு வரவே இல்லையே.. 2 டேஸா எவ்வளவு இம்பார்ட்டன்டான கிளாஸ் நான் எடுத்துட்டு இருக்கேன்னு தெரியுமா.. நல்லா படிக்கிற பொண்ணு எங்க போனாங்க அவங்க”.

நேரடியாக இனியாள் ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று கேட்டால் ஏதேனும் தவறாக எண்ணிவிடுவார்களோ என்று எண்ணியவன் இப்படி சுற்றி வளைத்து கேட்டான். அவன் நினைத்தது போலவே அனிதாவிற்கும் அவனின் மேல் எந்த ஒரு சந்தேகமும் எழவில்லை.

“சார் அவளுக்கு ஃபீவர் சார். அதான் டூ டேஸ் வர முடியல. நாளையிலிருந்து காலேஜ் வருவேன்னு எனக்கு போன் பண்ணி சொன்னா.. சும்மா டைம்ல எல்லாம் அவ இப்படி லீவு போட மாட்டா சார். நல்லா படிக்கிற பொண்ணு.. அவளுக்கு நோட்ஸ் எல்லாம் நான் கொடுத்து ஹெல்ப் பண்றேன் சார்”.

“ஓகே எப்பயுமே கிளாஸ்ல கவனமா இருக்கணும். ஒரு பாடத்தை மிஸ் பண்ணாலும் அது உங்களுக்கு தான் பெரிய லாஸ் கிளம்புங்க” என்று அனிதாவை அனுப்பி வைத்தவனிற்கோ ஏனோ மனம் சற்று வருத்தமாக இருந்தது.

இனியாளுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும் காதல் கொண்ட மனம் தன் காதலியை எண்ணி வருந்தத்தானே செய்யும்.

அவன் அனிதாவுடன் பேசியதை கவனித்த ஆஷாவிற்கோ திகுதிகுவென பற்றிக் கொண்டு எறிந்தது.

“உங்க ஆசை நாயகியை இரண்டு நாள் பார்க்கலைன்னதும் உங்களால நார்மலா இருக்க முடியலையோ.‌ அப்போ ஒரு வருஷமா உங்களை காதலிக்கிறேனே என்னுடைய நிலைமை என்ன ஆகிறது. ரொம்ப ஆசைப்படாதீங்க சார் என்னைக்கா இருந்தாலும் இந்த மதன் இந்த ஆஷாவுக்கு தான்” என்று உள்ளுக்குள் பொறுமியவள் அங்கிருந்து சாதனா உடன் புறப்பட்டாள்.

“இங்க என்ன தான் டி நடக்குது. ஏன் இப்போ என்னை மதன் சார் கேபினுக்கு கூப்பிட்டு வந்த அப்புறம் எதுவுமே அவர் கிட்ட பேசாம நீ பாட்டுக்கு வெளியில் வந்துட்ட”.

ஆஷா சாதனாவிடம் அனைத்து கதையையும் கூறவும். தன் வாயின் மேல் கையை வைத்த சாதனா, “ஊமை குசும்பு மாதிரி இருந்துகிட்டு எவ்வளவு பெரிய வேலையை பார்த்து இருக்கா பாரு டி இந்த இனியாள். சரியான ஆளு டி அவ”.

சும்மாவே பேய் ஆட்டம் ஆடும் ஆஷாவை இன்னும் ஏற்றி விடும்படி இருந்தது சாதனாவின் வார்த்தை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!