என் பிழை நீ – 22

4.9
(22)

பிழை – 22

அவளின் செயலை பார்த்து புன்னகைத்த நாராயணன், “பாரு, அனிதா எவ்வளவு சந்தோஷமா இருக்கானு.. எல்லாரும் ஒன்னா போனா தானே மா நல்லா இருக்கும்”.

“இல்லப்பா ட்ரிப்புக்கு 7000 பே பண்ணனும். எதுக்கு தேவையில்லாத வீண் செலவு..” என்று இழுத்தவளை புன்னகை முகமாக பார்த்தவர்.

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் டா. நீ எதுக்கு அதை பத்தி எல்லாம் யோசிக்கிற நீயும் ட்ரிப்புக்கு போ இந்தா” என்றவர் அவள் கையில் பத்தாயிரத்தை திணித்து, “நீயும் ட்ரிப்புக்கு பே பண்ணிடு அனிதா உன் ஃப்ரெண்டும் உன்கூட ட்ரிப்புக்கு வரா.. இப்போ உனக்கு சந்தோஷம் தானே”.

“ஐயோ அங்கிள்! நான் இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா.. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. என்னையும் சொல்ல விடாம என் வாயையும் அடைச்சு வச்சிருந்தா.. கடவுளா பார்த்து தான் உங்களை இங்க அனுப்பி வைத்திருக்கிறார். ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” என்று தன் மகிழ்ச்சியை ஆரவாரத்தோடு தெரிவித்தாள்.

இத்தனை நேரமும் இவர்கள் பேசியதை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மதனின் இதழிலும் மெல்லிய புன்னகை. இனியாளிடம் அவனுக்கு பிடித்ததே அவளின் இத்தகைய குணம் தான்.

தனக்காக சிந்திக்கிறாளோ இல்லையோ.. மற்றவர்களுக்காக என தான் முதலில் சிந்திப்பாள். இப்பொழுதும் கூட நண்பர்களுடன் செல்ல அவளுக்கும் ஆசை இருந்திருக்கும். ஆனாலும், தன் தந்தைக்கு செலவு வைக்க கூடாது என்று எண்ணி வர மறுத்த அவளின் குணம் மதனை வெகுவாக ஈர்த்தது.

“சரி, சரி சீக்கிரம் வா.. நாம போய் பே பண்ணிட்டு வந்துடலாம். அப்புறம் திரும்ப உனக்கு மனசு மாறிடும்” என்றவாறு அதற்கு மேல் இனியாளை நிற்க விடாமல் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மதனின் அறை நோக்கி திரும்பினாள் அனிதா.

இருவரும் சென்று மதனிடம் பணத்தை கட்டி விட்டு திரும்பிய பிறகு தான் அனிதாவிற்கு மன நிறைவாகவே இருந்தது.

“இந்த ட்ரிப்ப நம்ம நல்லா என்ஜாய் பண்ணனும் டி” என்று எதிர்பார்ப்போடு கூறிய அனிதாவுடன் ஹைபை அடித்துக் கொண்ட இனியாள், “கண்டிப்பா பண்ணிடுவோம்” என்றாள் அவளும் குதூகலத்தோடு.

அங்கே செல்வதை தவிர்த்து இருந்தால் இனியாளின் வாழ்க்கையே திசை மாறாமல் இருந்திருக்கும். என்ன செய்வது விதி வலியதல்லவா..

அவர்கள் கிளம்பும் நேரமும் வந்துவிட்டது. நாராயணன் மகளை பஸ்ஸில் ஏற்றி அனுப்பும் வரையிலும் அங்கேயே தான் நின்று இருந்தார். முகம் கொள்ளா புன்கையோடு அவருக்கு கை காண்பித்து விட்டு கிளம்பினாள் இனியாள்.

இன்னும் கொஞ்சம் நாளில் தன் மகளின் இந்த புன்னகை காணாமல் போக போகிறது என்பதை அறியாத நாராயணனும் தன் மகளின் மகிழ்ச்சியை கண்டு தானும் மகிழ்ச்சியுற்றார்.

வழக்கம் போல் நித்யா தன் கணவரிடம் இதை பற்றி பொறியாமல் இல்லை. ஆனால் என்ன செய்ய முடியும் தன் மாமனாரின் செலவில் அல்லவா அவள் செல்கிறாள். தடுக்கவும் முடியாத நிலை.. அவளால் புலம்பவும் திட்டவும் மட்டும் தான் முடிந்தது.

தன் மன வருத்தத்தை ஆற்றிக் கொள்ள தன் தாய்க்கு அழைப்பு விடுத்தவள், அவருடன் சேர்ந்து புறம் பேச தொடங்கி விட்டாள்.

இனியாளும் அவளின் நண்பர்களும் வந்து இறங்கியது கேரளாவில் இடம் பெற்றிருக்கும் ஆலப்புழாவிற்கு தான். அன்றைய நாள் முழுவதும் போட் ஹவுஸிலேயே கழித்தவர்கள்.

ஒவ்வொரு ஊராக சுற்றி பார்க்க தொடங்கினர். அடுத்த இரண்டு நாள் பயணமும் நல்லவிதமாக தான் சென்றது. ஆட்டம் பாட்டம் கும்மாளம் என மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் உற்சாகத்தோடு ஆனந்தமாய் கழித்த நேரங்கள் அவை.

ஆஷாவும் சாதனாவும் கூட வந்திருந்தனர். ஆஷாவின் பார்வை மதனிலேயே அவ்வப்பொழுது பதிந்து மீள..

ஆனால் அவன் பார்வை செல்லும் திசையை பார்க்கும் பொழுது தான் இவளுக்குள் ஆத்திரமே பிறப்பெடுக்கும்.

உரிமையோடு அவனை பார்க்க வேண்டாம் என்று சொல்லவும் முடியாமல், அவன் செய்யும் காரியத்தை ஜீரணித்துக் கொள்ளவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் ஆஷா.

சாதனா, “என்னடி சார் இப்படி இருக்காரு.. அந்த இனியாளையே இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குறாரு”.

சாதனாவை ஆஷா முறைத்து பார்க்கவும்.

“என்னை முறைச்சு என்ன பயன்.. அங்க பாரு சார் அவ கூட எப்படி சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருக்காருன்னு”.

அங்கே சற்று தூரம் தள்ளி அமர்ந்திருந்த அனித்தாவுடனும், இனியாளுடனும் மதன் ஏதோ சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். அக்காட்சியை பார்த்து தான் ஆஷா கொந்தளித்து போய் அமர்ந்திருந்தாள்.

என்ன தான் சிரித்து பேசினாலும் பொதுவான விஷயங்களைப் பற்றி தான் இனியாள் அவனிடம் பேசுவாளே தவிர்த்து தான் சம்பந்தப்பட்ட விஷயம் எதையும் அவனிடம் பகிர்ந்து கொள்ளவும் மாட்டாள், அவனை பற்றி கேட்டு அறிந்து கொள்ளவும் மாட்டாள்.

மதனை ஒரு ஆசிரியர் என்பதையும் தாண்டி அவள் இதுவரை பார்த்ததே கிடையாது. ஆனால் அவனுக்கு அப்படி இல்லையே.. இந்த இரண்டு நாளும் அவளை நன்கு தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான்.

அவளின் செயல் ஒவ்வொன்றையும் ஒரு காதலனாக இருந்து பார்த்து ரசித்தான். அனைத்தும் அவள் அறியாமல் தான்.

அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த மதனுக்கு அழைப்பு வரவும் அவர்களிடமிருந்து எழுந்து சென்றவன் அழைப்பை ஏற்றவாறு தனியே சென்றான்.

சாதனா, “சரி வா சார் தனியா வந்துட்டாரு அவர்கிட்ட எப்படியாவது இன்னைக்கு நீ ப்ரொபோஸ் பண்ணிடு” என்றவளை அதிர்ந்து பார்த்த ஆஷா, “என்னடி சொல்ற?”.

“பின்ன, அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத இப்படி தூரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க போறியா.. என்ன நடந்தாலும் சரி நீ அவர்கிட்ட உன் மனசுல இருக்குறத சொல்லு. அப்புறம் என்ன நடக்குதுன்னு பாத்துக்கலாம்”.

தன் தோழியின் வார்த்தையை கேட்டு இவளும் மதனிடம் தன் மனதில் இருப்பதை கூறி விடலாம் என்ற எண்ணத்தோடு எழுந்து அவன் அருகில் சென்றாள்.

ஆனால் செல்பேசியில் அவன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவள் அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள்.

“ஆமாக்கா.. அவளும் தான் வந்திருக்கா”.

….

“இன்னைக்கு சொல்லிடுவேன்னு நினைக்கிறேன்”.

….

“சரி, சரி கத்தாதே.. இன்னைக்கு கண்டிப்பா அவ கிட்ட நான் சொல்லிடுவேன். அவ கிட்ட சர்ப்ரைஸா ப்ரொபோஸ் பண்றதுக்காக ஒரு பிளானும் வச்சிருக்கேன்” என்றவன் தான் செய்யப் போவதை தன் அக்காவிடம் விவரித்தான்.

அதைக் கேட்ட ஆஷாவின் இதயமோ படபடவென வேகமாக துடிக்க தொடங்கியது.

“சரிக்கா நான் அப்பறமா பேசுறேன்” என்று விட்டு அழைப்பை துண்டித்தவன் மீண்டும் இனியாள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

ஆஷாவிற்கு நிலை கொள்ளவே முடியவில்லை. என்னவெல்லாம் கூறிவிட்டு போகிறான்..

இன்று மாலை போல் பீச் ரெசார்டிற்கு அனைவரும் செல்வதாக இருக்கிறது.

அந்த ரெசார்டின் அருகே இருக்கும் பிரைவேட் பீச்சில் தான் மதன் இனியாளிடம் தன் காதலை வெளிப்படுத்த போவதாக தன் அக்காவிடம் கூறிக் கொண்டிருந்தான்.

அதற்காக அவ்விடத்தில் அலங்காரமும் செய்து இருக்கிறானாம். சினிமா பாணியில் அவள் மறுக்கவே முடியாத அளவிற்கு அவளிடம் தன் காதலை தெரிவிக்க போகிறானாம்.

இதையெல்லாம் நினைக்க நினைக்க ஆஷாவிற்குள் பொறாமைத்தீ மூண்டது.

“என்னடி சார் இப்படி எல்லாம் சொல்லிட்டு போறாரு. அப்போ இன்னைக்கு கண்டிப்பா அந்த இனியாள் கிட்ட அவர் மனசுல இருப்பதெல்லாம் சொல்லிடுவாரோ”.

“அதெல்லாம் சொல்ல மாட்டாரு”.

“எப்படி சொல்ற?”.

“இன்னைக்கு ப்ரொபோசல் கண்டிப்பா நடக்கும். ஆனா அது மதனுக்கும் இனியாளுக்கும் இல்லை.. இந்த ஆஷாவுக்கும் மகனுக்கும்”.

“நீ என்ன சொல்றன்னு எனக்கு ஒன்னும் புரியல ஆஷா” என்ற சாதனாவிடம் ஆஷா சற்று நேரம் சிந்தித்து ஒரு யோசனையை கூறினாள்.

“இதெல்லாம் சரி வருமா டி” என்று சந்தேகமாக கேட்ட தன் நண்பியை முறைத்து பார்த்தவள், “சரி வந்து தான் ஆகணும். வேற வழி இல்ல, எப்படியாவது செஞ்சு தான் ஆகணும்” என்றாள் எதையோ சிந்தித்துக் கொண்டே.

அவளுக்குள் சிறிதளவும் குற்ற உணர்ச்சி என்பதே இருப்பதாக தெரியவில்லை.

‘நாம் என்ன தவறா செய்யப் போகிறோம். தான் காதலிப்பவன் வேறொருத்தியை விரும்புவதாக பேசிக் கொண்டிருக்கிறான். தன் காதலின் ஆழத்தை அவனுக்கு உணர்த்திவிட்டால் அவன் தன்னை ஏற்றுக் கொள்வான்’ என்று எண்ணியவள்.

இனியாளுக்கு தூக்க மாத்திரையை கலந்து அவளின் உணவில் கொடுத்துவிட்டால் பீச் ரெசார்ட்டிற்கே அவள் வர முடியாமல் போய்விடும் என்று அவசரமாக திட்டத்தை தீட்டினாள்.

அவளின் விழிகளோ அங்கே தன் தோழியுடன் அமர்ந்து இது எதை பற்றியும் அறியாமல் சிரித்து பேசிக் கொண்டிருந்த இனியாளின் மேல் வன்மமாக படிந்தது.

தன்னை சுற்றி இத்தனை விஷயங்கள் நடக்கிறது என்பதையே அறியாத இனியாளோ தன் தோழியுடன் அந்த இடத்தை பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தாள்.

இனியாளுக்கு தூக்க மாத்திரையை கொடுத்தால் அதன் வீரியத்தில் அவள் தூங்கி விடுவாள். அவளை ரெஸார்ட்டிலேயே தூங்க வைத்துவிட்டு மதன் ஏற்பாடு செய்திருக்கும் அதே பீச் ரெசார்ட் சென்று அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தான் ஆஷா இருக்கிறாள்.

ஆனால் அவளே எதிர்பாராமல் பல விபரீதங்கள் இன்று நடைபெறப்போகிறது என்பதை அப்பொழுது அவளுமே அறிந்திருக்கவில்லை. ஒரு வேளை அறிந்திருந்தால் அவளின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பாளோ என்னவோ..

பேசி வைத்தது போலவே அனைவரும் அன்று மாலை ரெசார்டை சென்று அடைந்தனர்.

மதனும் இனியாளிடம் தன் காதலை வெளிப்படுத்துவதற்காக ரெசார்டை ஒட்டி இருக்கும் பிரைவேட் பீச்சில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு அவளுக்காக படபடக்கும் இதயத்தோடு காத்துக் கொண்டிருந்தவன், அவளின் செல்பேசிக்கு இந்த பீச்சிற்கு வருமாறு குறுஞ்செய்தியையும் அனுப்பி இருந்தான்.

இனியாளிற்கோ அன்று மதியம் முதலே நன்கு தலைவலி.

அனிதா, “அங்க பாரு டி ஐஸ் கிரீம் வச்சிருக்காங்க வா நாம போய் வாங்கி சாப்பிடலாம்”.

“இல்லடி எனக்கு வேண்டாம். ஏற்கனவே ரொம்ப தலைவலியா இருக்கு. என்னால முடியல”.

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே அவ்விடம் வந்து சேர்ந்த ஆஷா, “என்ன சொல்ற இனியாள் தலைவலியா இருக்கா.. முதலே என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல சாதனா தலை வலி டேப்லெட் எல்லாம் கொண்டு வந்து இருக்கா” என்றவாறு சாதனாவை பார்த்த ஆஷா தன் ஒற்றை கண்ணை சிமிட்டி காட்டவும்.

அவளும் தன் கைப்பையில் இருந்து ஒரு மாத்திரை அட்டையை எடுத்து தயக்கத்தோடு ஆஷாவிடம் நீட்டினாள்.

“இல்ல ஆஷா தலைவலிக்கெல்லாம் டேப்லெட் போடக்கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்காரு” என்று அவள் நீட்டிய மாத்திரையை வாங்காமல் மறுத்துவிட்டாள் இனியாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!