என் பிழை நீ – 25

4.9
(17)

பிழை – 25

பாரிவேந்தன் அறையை விட்டு வெளியேறிய சற்று நேரத்தில் அறைக்குள் நுழைந்த அனிதா, “என்னடி இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க எல்லாரும் கிளம்பிட்டாங்க” என்றவாறு அவசர அவசரமாக தங்கள் உடைமைகளை பைகளுக்குள் திணித்தாள்.

அப்பொழுதும் கூட இனியாள் எழவில்லை. அவளின் அருகில் வந்தவள் அவளை போட்டு உலுக்கவும் மெல்லமாக தன் விழிகளை மலர்த்த முடியாமல் கடினப்பட்டு மலர்த்தியவளை பார்த்த அனிதா, “என்ன ஆச்சு உனக்கு ஏன் இவ்வளவு டயர்டா இருக்க?”.

“தெரியல” என்றவளுக்கு பேசக்கூட சக்தி இல்லாதது போல் உணர்ந்தாள்.

நா வறண்டு, உடலின் மொத்த சக்தியையும் ஏதோ உறிஞ்சி எடுத்தது போன்று அவளின் உடல் அத்தனை சோர்வாகவும், அடித்து போட்டது போலும் உணர்ந்தவளிற்கு எழுந்திரிப்பதே பெரும் சிரமமாக இருந்தது.

அனிதாவோ அவளுடன் பேசிக்கொண்டே இருவரின் உடைமைகளையும் வேகவேகமாக எடுத்து வைத்தவள், “சீக்கிரம் கிளம்பு டி. எல்லாரும் கிளம்பிட்டாங்க.. நீ தான் லேட் சீக்கிரம்” என்று அவளை அவசரப்படுத்தினாள்.

போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்தவள் ஒரு அடி தான் எடுத்து வைத்திருப்பாள் அவளின் அடிவயிற்றில் அப்படி ஒரு வலி, “ஸ்ஸ்… ஆஆ..” என்ற முணங்களுடன் மீண்டும் அப்படியே அமர்ந்து விட்டாள்.

அவள் அருகில் ஓடிவந்த அனிதா, “என்னாச்சுடி?”.

“என்னன்னு தெரியல அனிதா ரொம்ப டயர்டா இருக்கு. உடம்பு எல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு, வயிறு வேற வலிக்குது”.

“ஓ! பீரியட்ஸ் வர்றதுக்கு முன்னாடி கூட இந்த மாதிரி சிம்டம்ஸ் இருக்கும் டி. எனக்கும் இப்படி தான் இருக்கும். சரி, குளிக்க முடியலைன்னா விடு கிளம்பலாம் மணி ஆகிடுச்சு”.

“இல்ல நான் குளிச்சிட்டு வரேன்” என்றவளோ மெதுவாக தட்டு தடுமாறி குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

அவளுக்கு எதுவோ சரியில்லை என்று அவளுக்குள் உணர்த்திக் கொண்டே இருந்தது.

நடக்க கூட முடியாமல் தடுமாறுபவளை வினோதமாக பார்த்த அனிதாவிற்கு நேற்றைய இரவு இப்படி நடந்திருக்குமோ என்று எண்ண கூட தோன்றவில்லை.

அவர்களின் கூடலுக்கு சாட்சியாக இருந்தது என்னவோ அங்கே வீற்றிருந்த கட்டில் மட்டும் தான்.

இருவரும் அதை சரியாக கவனித்திருந்தாலே நேற்று அவர்களுக்குள் அரங்கேறிய கூடலுக்கான சாட்சிகளை அது தனக்குள் தேக்கி வைத்திருப்பதை கண்டு கொண்டிருப்பார்கள்.

கிளம்பும் அவசரத்தில் இருவருமே கட்டிலை சரி வர கவனிக்கவில்லை. மேலும், போர்வை வேறு வீற்றிருக்கவே அனிதா அந்த புறமே செல்லவில்லை.

இனியாளிற்கு தன்னை நினைத்தே பல குழப்பங்கள். குளியலறைக்குள் சென்றவளுக்கு குளித்து முடித்து வெளிவருவதே பெரும் சிரமமாக தான் இருந்தது.

இதற்கான காரணம் அவளுக்கு அப்பொழுது விளங்கவில்லை. ஆனால் எதுவோ ஒன்று அவளை உறுத்திக் கொண்டிருந்தது.

எதுவுமே செய்ய தோன்றாமல் ஷவரின் அடியில் சோர்ந்து போய் நின்றவளுக்கு நீர் பட்டதும் அவளின் உடலில் ஆங்காங்கே சற்று எரிச்சல் ஏற்பட்டது. அப்பொழுது தான் தன் உடலையே ஆராய்ந்து பார்த்தாள்.

ஆங்காங்கே சிவந்து போய் கன்றி காட்சி அளித்தது. அதை பார்த்தவளின் இதயமோ படபடக்க தொடங்கி விட்டது.

“என்ன இது” என்று சிந்தித்தவாறு தொட்டு பார்க்க எரிச்சல் அதிகரிக்கவும் வலியில் கண்களும் கலங்கிப் போனது.

“ஒரு வேளை, இந்த ரூமுக்குள்ள பேய் ஏதாவது இருக்கோ.. நேத்து ராத்திரியிலிருந்து இப்ப வரைக்கும் நான் தூங்கிக்கிட்டே இருக்கேன். என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியல. முதல்ல இங்க இருந்து கிளம்பி போகணும்”.

உண்மையிலேயே அறைக்குள் பேய் தான் இருக்கிறதோ என்று எண்ணி பயந்து போய்விட்டாள்.

அவசர அவசரமாக குளித்து வெளியே வந்தவள் அனிதாவுடன் சேர்ந்து கிளம்பி வெளியேறிவிட்டாள். ஆனால் அவளால் இன்னமுமே சரிவர நடக்க முடியவில்லை.

நடையில் ஒரு தள்ளாட்டமும், உடல் முழுக்க அசதியாலும், வலியாலும் சோர்ந்து போய் காணப்பட்டாள்.

அவர்களின் கூடலின் சாட்சியோடு கூடிய பல கதைகளையும் தேக்கி வைத்திருந்த கட்டிலோ இப்போது ஆளின்றி அனாமத்தாக கிடந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையோடு அவரவர் வீடு சென்று சேர்ந்தனர்.

வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து விட்டது.

வீட்டிற்கு வந்து சேரும் பொழுதே பயத்தில் காய்ச்சலோடு தான் வந்து சேர்ந்தாள்.

இனியாளுக்கு இன்னமுமே உடல் அசதி நீங்கியதை போல் தெரியவில்லை. அப்படியே விட்டத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.

நித்யா உணவருந்தி கொண்டிருக்கும் முகிலனின் முன்பு டங்கென்ற சத்தத்துடன் தண்ணீர் குவலையை வைத்தவள், “மகாராணி இன்னும் எத்தனை நாள் இப்படி ரெஸ்ட் எடுக்கிறதா உத்தேசம்.. நான் இங்க ஒருத்தி வேலைக்காரி மாதிரி எல்லா வேலையையும் பார்த்துக்கிட்டு இருக்கேன். அவங்க கூட மாட ஒரு ஒத்தாசையும் செய்ய மாட்டாங்களா” என்று சிடுசிடுத்தாள்.

அவளின் புலம்பலில் சலிப்பாக, “இனியாள்” என்று சத்தமாக அவளின் அறை நோக்கி குரல் கொடுத்தான் முகிலன்.

மெதுவாக எழுந்து வெளியே வந்தவளை பார்க்கவே அத்தனை சோர்வாக தெரிந்தாள்.

“லீவு தானே அண்ணிக்கு கூட மாட ஏதாவது ஹெல்ப் பண்ணலாம் இல்ல”.

“பண்றேன்ணா..” என்றவளுக்கு அதற்கு மேல் பேசக்கூட தெம்பில்லை.

விடுமுறை தினம் முழுவதும் நித்யாவிற்கு கொண்டாட்டம் தான். இனியாளை வைத்தே அனைத்து வேலைகளையும் வாங்கிக் கொண்டாள்.

அதற்கு மேல் அவளை எதை பற்றியும் சிந்திக்கவும் சோர்ந்து போகவும் நேரம் அளிக்காமல் நித்யா சொல்லும் வேலைகளை செய்து கொண்டே அவளின் நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

இன்று மூன்றாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறாள் இனியாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்நாளின் நினைவை மறந்தே போய்விட்டாள் என்று தான் கூற வேண்டும்.

மீண்டும் கல்லூரிக்கு செல்ல போகிறோம் என்றதுமே புதிய உற்சாகம் தொற்றிக் கொள்ள. அடுத்த ஒரு வார காலமும் படிப்பு, நண்பர்கள், கல்லூரி என்று அவளின் நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.

அன்று மதன் தான் அவர்களுக்கு வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தான்.

பாடத்தை கவனித்துக் கொண்டிருந்த இனியாள் சட்டென்று அருகிலிருந்த அனிதாவின் மேல் துவண்டு போய் சாயவும் பதறியவள், “ஹே! இனியாள் என்னாச்சு?” என்றவாறு அவளை அமர்த்த முயற்சித்தாள்.

பாடம் எடுத்துக் கொண்டிருந்த மதனும் இதை கவனித்தவன் பதட்டத்தோடு அவள் அருகில் ஓடி வந்து அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்தான்.

அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.

பிறகு, அவளின் முகத்தில் தண்ணீரை தெளிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலை அடைந்தவள் மெதுவாக தன் விழிகளை மலர்த்தினாள்.

இப்பொழுது தான் மதனுக்கு மூச்சே வெளி வந்தது. ஓய்வெடுக்கும் அறைக்கு அவளை அனுப்பியவன் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு வருமாறு கூறினான்.

அவளுக்கும் மிகவும் சோர்வாக இருக்கவும் ‘சரி’ என்று எழுந்து சென்று விட்டாள்.

ஆம், கருவுற்றிருக்கிறாள்!

பாரிவேந்தனின் உயிர் நீரால் ஜணித்த கருவை தன் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்!

அடுத்தடுத்த நாட்களும் அவளுக்கு அசதியிலேயே கழிய தொடங்கியது. கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவளால் சரி வர உணவை உட்கொள்ளவும் முடியவில்லை.

அவளின் தந்தை அவளை தன்னால் முடிந்த மட்டும் கவனித்துக் கொண்டாலும், அவர் இல்லாத நேரங்களில் அவளை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் போகவே சரியாக உணவை உண்ணாதது கூட யாருக்கும் தெரியாமல் போனது.

மேலும், தனக்கு ஏதோ டஸ்ட் அலர்ஜி ஆகிவிட்டது என்று எண்ணிய இனியாளும் இதை பெரிது படுத்தவில்லை.

இரண்டு நாட்கள் சரி வர சாப்பிடாததினால் தான் தனக்கு மயக்கம் வந்துவிட்டது என்று எண்ணிய இனியாள் அதை பற்றி வீட்டில் கூறாமல் அப்படியே விட்டு விட்டாள்.

அனிதாவிடமும் இதே காரணத்தைக் கூற..

அவளோ, “நம்ம வேணும்னா டாக்டர் கிட்ட காட்டலாமா.. ஏன் உனக்கு சாப்பிட பிடிக்கல?”.

“தெரியலடி ஒரு மாதிரி இருக்கு சரியாகிடும் விடு” என்று அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டாள்.

அந்த ஒரு மாத காலமும் அவளுக்கு முக்கிய வகுப்புகளும் கலந்துரையாடல்களும் என நிறைய இருக்கவே இதை அவள் பெரிது படுத்தவும் இல்லை. இதை நினைத்து சிந்திக்கும் அளவிற்கு அவளுக்கு நேரமும் இருக்கவில்லை. அத்தனை உடல் சோர்விலும் படிப்பில் முழு கவனத்தோடு ஈடுபட்டாள்.

அந்த ஒரு மாதம் கழிந்ததும் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் உடல் தேரியது. கருவுற்ற ஆரம்ப காலகட்டத்தில் இப்படித்தான் இருக்கும் என்பதை அவளும் அறிந்திருக்கவில்லை.

அதை பற்றி தெரியும் தான்..

படித்திருக்கிறாள் தான்..

படிப்பது வேறு அனுபவப்படுவது வேறு அல்லவா..

தான் கருவுற்றிருப்போமோ என்ற‌ சந்தேகம் கூட அவளுக்கு எழவில்லை.

ஒருவேளை, நாம் கருவுற்றிருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுந்தால் தானே அதை பற்றி சிந்திக்க தோன்றும்.

கல்லூரி விடுமுறை காலத்தில் நித்யாவிற்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அனைத்து வீட்டு வேலைகளையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்.

அதன் விளைவு தான் இந்த உடல் நலம் பாதிப்பு என்று எண்ணியவள் இதை பற்றி வீட்டில் கூறினால் நித்யாவை பற்றியும் கூற வேண்டி வரும் என்பதாலேயே அதை மறைத்து விட்டாள்.

இவள் ஏதோ உடல் நலம் சரியில்லை என்று நினைத்து அதை அப்படியே கடந்து விட்டாள். அடுத்த மாதம் இவளின் உடலும் சற்று தேர்ச்சி பெற்று விடவும் முற்றிலுமாக அதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.

ஒவ்வொரு வருடமும் அவர்களின் கல்லூரியில் யார் முதல் முன்று மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த ஆண்டின் இறுதியில் ஆண்டு விழா நடத்தும் பொழுது பரிசுகளும் வழங்குவார்கள்.

இக்கல்லூரியில் சேர்ந்தது முதல் ஒவ்வொரு வருடமும் இனியாளும் அந்த பரிசினை பெற்று விடுவது வழக்கம். அந்த நிகழ்ச்சி வேறு இடையில் நடைபெற்று இருக்க..

அவளின் நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக றெக்கை கட்டிக்கொண்டு பறக்கத் தொடங்கியது. அதில் தனக்கு மாதவிடாய் வராததை கூட அவள் தன் கருத்தில் கொள்ளவில்லை.

அவள் இழைத்த பெரும் தவறு இது தான்.. என்ன தான் மற்றைய விஷயங்களில் அவள் கவனத்தை செலுத்தினாலும் தன் மேலும் சற்று கவனத்தை செலுத்தி இருந்திருக்க வேண்டும்.

அன்று தவறவிட்ட விஷயம் பிற்காலத்தில் பெரிதாக வளர்ந்து நிற்கப் போகிறது என்பதை அப்பொழுது அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அடுத்த நான்கு மாதமும் இப்படியே நகர்ந்துவிட்டது. அன்று இனியாள் கல்லூரி செல்வதற்காக கிளம்பி வந்த சமயம் அவளையே ஒரு மார்க்கமாக பார்த்த நித்யா, “ஏய் நில்லு” என்று அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன ஆளே ஒரு மாதிரி இருக்க”.

“என்ன அண்ணி?”.

அவளின் முகம் ஏதோ பொலிவாக இருப்பது போல் நித்யாவிற்கு தோன்றியது.

“ஒன்னும் இல்ல நீ கிளம்பு” என்று அவளை அனுப்பியவளோ உடனே தன் தாய்க்கு அழைப்பு விடுத்து, “அவ யாரையோ காதலிக்கிறா போலம்மா.. முகமே ரொம்ப பிரகாசமா இருக்கு” என்று புலம்பி தீர்த்து விட்டாள்.

இன்று தான் இனியாளின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போடப் போகும் சம்பவம் அரங்கேற போகிறது என்பதை அறியாமலே வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டு விட்டாள் இனியாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!