அன்று அவர்களின் ஆடிட்டோரியத்தில் முக்கிய வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அனைவரும் அங்கே கூடி இருக்க. திடீரென மீண்டும் இனியாள் மயக்கம் போட்டு விட்டாள்.
அனிதாவும், மதனும் அவளை ஓய்வெடுக்கும் அறைக்கு அழைத்து செல்லவும், அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆஷாவின் காதருகில், “அடிக்கடி மயக்கம் போடுற மாதிரி மதன் சார் முன்னாடி வேணும்னே சீன் போடுறாளோ” என்று கிசுகிசுத்தாள் சாதனா.
“இப்படி எல்லாம் நடிச்சு மயக்க தான் எனக்கு தெரியலையே” என்றவாறு கடுப்பான முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஆஷா.
அறைக்கு அழைத்து வந்து சற்று நேரம் ஆகிவிட்டது. இன்னமுமே இனியாளுக்கு மயக்கம் தெளியவில்லை.
“என்ன அனிதா ஏன் இனியாள் அடிக்கடி இப்படி மயக்கம் போடுறா”.
அனிதாவோ அதிர்ந்து தன் கையை வாயில் வைத்தவாறு, “என்ன சார் சொல்றீங்க அதுக்கெல்லாம் சான்சே இல்ல.. இனியாள் ரொம்ப நல்ல பொண்ணு”.
“ஐ நோ.. பட், இது எப்படி நடந்துச்சுன்னு தெரியலையே.. அவ கண் விழித்ததும் அவ கிட்ட கேட்டா தான் தெரியும்”.
இதற்கிடையில் இவர்களை பின் தொடர்ந்து யாரும் அறியாமல் வந்த சாதனாவோ இதை கேட்டு அதிர்ந்தவள் வேகமாக ஓடிச் சென்று ஆஷாவிடம் விஷயத்தை கூறினாள்.
“என்னடி சொல்ற பிரெக்னண்டா இருக்காளா.. யார் காரணம்?”.
“ஒருவேளை, மதன் சாரா இருக்குமோ” என்று தயங்கியவாறு சாதனா கேட்கவும்.
ஆஷாவிற்குள்ளும் குழப்பம், “ச்ச.. ச்ச.. மதன் இப்படி எல்லாம் பண்ண மாட்டாரு”.
“அப்போ வேற யாராவது இப்படி செஞ்சு இருப்பாங்களோ?”.
“ஆனா அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லையேடி”.
“என்ன திடீர்னு அவளுக்கு சப்போர்ட் பண்ற”.
“எனக்கு அவளை பிடிக்காது தான். ஆனா அவளுடைய கேரக்டரை அசிங்கப்படுத்தணும்னு நான் நினைச்சதில்ல. கண்டிப்பா இதுக்கு மதன் காரணமா இருந்திருக்க மாட்டார். வேற யாரோ தான் இப்படி செஞ்சிருக்கணும்”.
தான் செய்த காரியத்தால் தான் இன்று இவளுக்கு இப்படி ஒரு நிலை என்பதை அறியாத ஆஷா இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள்.
“யாருக்கு தெரியும் இப்படி அப்பாவி மாதிரி முகத்தை வைத்திருக்கிறவங்க தான் எல்லா விஷயமும் பண்ணுவாங்க. ஒருவேளை, யாரையாவது லவ் பண்ணி அதனால இப்படி நடந்து இருக்குமோ என்னவோ”.
இதற்கிடையில் அனிதாவோ, “இப்ப என்ன சார் பண்றது?”.
“தெரியல” என்றவனுக்கும் இப்பொழுது என்ன செய்வது என்று உண்மையிலேயே தெரியவில்லை.
அவளை பற்றி இவனுக்கும் நன்கு தெரியும். அவளா இப்படி என்று சற்றும் நம்ப முடியாமல் நின்றிருந்தான்.
அவன் சிந்திப்பதற்குள்ளாகவே அனிதா பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சட்டென்று இனியாளின் தந்தைக்கு அழைப்பு விடுத்தவள், உடனே கல்லூரிக்கு வருமாறு கூறிவிட்டாள்.
இனியாள் எழுந்ததும் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டு விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசிக்கலாம் என்று எண்ணிய மதனிற்கு அவன் நினைத்ததை செயலாற்ற விடாமல் அனிதா சட்டென்று கூறி விடவும் வேறு வழியில்லாமல் நின்றிருந்தான்.
நிச்சயமாக இனியாள் இப்படி ஒரு தவறை செய்திருக்க மாட்டாள் என்று அவனுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அதனாலேயே விஷயத்தை பெரிது படுத்தாமல் அவளிடம் முதலில் விசாரிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அனிதா அவளின் தந்தைக்கு விஷயத்தை கூறி விடவும், இவனுக்கும் வேறு வழியில்லாமல் போனது.
அதன் விளைவு பிரின்சிபால் அறையின் உள்ளே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய கூனிக்குறுகி போய் யாரின் முகத்தையும் எதிர் நோக்க முடியாமல் தலை குனிந்து அழுது கொண்டு அமர்ந்திருந்தாள் இனியாள்.
அனிதாவும் அவள் அருகில் தான் நின்று இருந்தாள். மதனுமே அவ்வறைக்குள் தான் இருந்தான்.
இனியாளை இப்படி ஒரு நிலையில் அவனால் சற்று காண முடியவில்லை, அவனுக்குள் அப்படி ஒரு வலி.
அனைத்திற்கும் மேலாக அவளின் தந்தையோ அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தார்.
“இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லுங்க மிஸ்டர்.நாராயணன்” என்ற பிரின்சிபாலின் குரலில் கலைந்தவர், “எனக்கு தெரியல சார் என் பொண்ணு இப்படி எல்லாம் பண்ணுவானு நான் நினைச்சு கூட பாக்கல. அவ மேல மலை அளவு நம்பிக்கை வைத்து இருந்தேன். ஆனா இப்படி எல்லாம்..” என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வேறு வெளிவராமல் சதி செய்தது.
இனியாளுக்கும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. ஆனால் எதுவோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது மட்டும் விளங்கியது. தன் தந்தையின் முகத்தை சற்றும் எதிர்நோக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.
“ஐ கேன் அன்டர்ஸ்டான்ட் யுவர் ஃபீலிங். நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க மிஸ்டர்.நாராயணன் என்ன நடந்துச்சுன்னு பொறுமையா இதை பத்தி பேசுங்க” என்றவர் இனியாளை அவரோடு அனுப்பி வைத்து விட்டார்.
வீடும் வந்து சேர்ந்து விட்டார்கள்.
இருவருக்கு இடையிலும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.
வீட்டின் வாயிலை இவர்கள் அடைந்ததுமே வீட்டிற்குள் இருந்து சிரிப்பு சத்தம் வாசல் வரை எட்டியது. நித்யாவின் தாயும் தந்தையும் வந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக அவர்களின் குரல் இவர்களின் செவி மடலை தீண்டவும், நாராயணனுக்கு எப்படி அனைவரின் முன்னிலையிலும் இதை பற்றி பேசுவது என்று பெரும் அவமானமாக இருந்தது.
அவரின் நடையிலேயே ஒரு தளர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. முற்றிலுமாக நொறுங்கிப் போய்விட்டார். மகள் என்றால் சிறு வயது முதலே கொள்ளை பிரியம்..
அளவற்ற அன்பையும், பாசத்தையும், நம்பிக்கையையும் அவள் மேல் வைத்து விட்டார். இப்பொழுது அது பொய்த்து போனதை அவரால் சற்றும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
யாரின் மீதாவது காதல் என்று வந்து நின்று இருந்தால் கூட பரவாயில்லை. நல்லவனாக இருந்திருந்தால் தன் மகள் விருப்பத்திற்கே திருமணம் செய்து வைத்திருப்பார்.
ஆனால் இது அப்படி இல்லையே.. வயிற்றில் குழந்தையை அல்லவா சுமந்து கொண்டு வந்து நிற்கிறாள். உண்மை காதலாகவே இருந்தாலும் இதை அவரால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எத்தகைய பாவம் இது என்று எண்ண எண்ண முதல் முறை இனியாளின் மேல் அத்தனை ஆத்திரம் எழுந்தது. அவளின் முகத்தை பார்க்கவே வெறுப்பாக இருந்தது.
முதல் முறை தன் வளர்ப்பு தவறிவிட்டதோ.. அவளின் தாய் இருந்திருந்தால் சரியாக வளர்த்திருப்பாளோ என்று எண்ணாமல் அவரால் இருக்க முடியவில்லை. அதன் விளைவு தன்னை நினைத்தே கோபம் எழுந்தது.
சோர்ந்து போய் வீட்டிற்குள் நுழையும் நாராயணனை பார்த்த முகிலன், “என்னப்பா அதுக்குள்ள வந்துட்டீங்க” என்னும் பொழுதே அவரின் பின்னோடு அழுது வீங்கிய முகத்துடன் தலை குனிந்தவாறு உள்ளே நடந்து வந்தாள் இனியாள்.
இருவரின் உடல் மொழியையும் வைத்தே எதுவோ சரி இல்லை என்று யூகித்த நித்யாவும் பாக்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள..
“என்ன இனியாள் அதுக்குள்ள வந்துட்ட” என்று அவளையும் நோக்கி கேள்வி எழுப்பினான்.
அவளிடமும் எந்த ஒரு பதிலும் இல்லை. எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவளையும் மீறி கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் கொட்ட தொடங்கியது.
அவளின் அழுகையும், தன் தந்தையின் கலக்கமும் அவனுக்குள் எதுவோ சரி இல்லை என்று உணர்த்த, “என்னாச்சுப்பா ஏன் ரெண்டு பேரும் ஒரு மாதிரி இருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா எதுவா இருந்தாலும் சொல்லுங்க”.
“என்னடா சொல்ல சொல்ற.. என்னத்த சொல்ல சொல்ற.. உன் தங்கச்சி மாசமா இருக்கா.. நீ தாய் மாமா ஆக போற.. அதை எப்படி உன்கிட்ட சொல்ல சொல்ற..” என்றவரோ தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
அவர் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயிருக்க. இனியாளோ தன் முகத்தை இரு கைகளாலும் மூடி தேம்பி தேம்பி அழுக தொடங்கி விட்டாள்.
அனைவரின் பார்வையும் இப்பொழுது இனியாளின் மேல் இருக்க. யாராலும் இதை சற்றும் நம்ப முடியவில்லை.
“என்னப்பா சொல்றீங்க”.
“ஆமாம்பா இவ காலேஜ்ல இருந்து போன் பண்ணி வர சொன்னாங்க.. என்னமோ ஏதோனு போய் பார்த்தா.. உங்க பொண்ணு மாசமா இருக்கா அதுக்கு யாரு காரணம்னு வீட்டுக்கு கூப்பிட்டு போய் பொறுமையா பேசி கேளுங்கன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்க. இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு இவளை படிக்க வச்சேன். இவ படிச்சு டாக்டர் ஆகணும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன். கடைசில இப்படி பண்ணிட்டாளே”.
“இதுக்கு தான் சம்பந்தி பொம்பள புள்ளைங்கள அளவுக்கு அதிகமாக படிக்க வைக்க கூடாதுன்னு சொல்றது. இப்ப பாருங்க மத்தவங்க எல்லாம் சொல்றது உண்மைன்ற மாதிரி ஆகிடுச்சா”.
அங்கே யாரின் முகத்தையும் பார்க்க முடியாமல் தன் தலையை குனிந்து கொண்டு அழுது கொண்டிருந்தவளின் முன்னே ருத்ரமூர்த்தியாக நின்ற முகிலனோ, “இதுக்கு யார் காரணம்?” என்றான் அழுத்தமாக.
தெரிந்தால் தானே கூறுவதற்கு..
என்னவென்று கூறுவது..
யாரை பற்றி கூறுவது..
அவளுக்கே இச்செய்தியை கேட்டது முதல் நிலை கொள்ள முடியவில்லை. எந்த தவறும் செய்யாமலேயே தனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என்று தான் தோன்றியது.
எங்கே நடந்தது.. எப்படி நடந்தது.. யாருடன் நடந்தது என்று எல்லாம் கேள்வி எழுமே அதற்கெல்லாம் என்ன பதில் கூறுவது என்று முன்னதாகவே சிந்தித்து பதில் தெரியாமல் தான் அழுது கொண்டிருக்கிறாள்.
அவள் எதை நினைத்து பயந்தாளோ அதே கேள்வி இதோ வந்து விட்டதே..
“சொல்லு உன் கிட்ட தானே கேட்டுகிட்டு இருக்கேன். இதுக்கு யார் காரணம்?” என்று குரலை உயர்த்தி அதட்டலாக முகிலன் கேட்கவும்.
“தெரியலையாமே.. இது நல்ல கதையா இருக்கே.. தெரியாம தான் எவனோட புள்ளையோ வயித்துக்குள்ள வச்சிருக்கியா.. எனக்கு அப்போதிலிருந்தே உன் மேல சந்தேகம் தான். ஆனால் இப்படி ஒரு காரியத்தை நீ செஞ்சிட்டு வந்து நிப்பனு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல” என்று தன் முகத்தை அருவருப்பாக வைத்துக் கொண்டு நித்யா பேசவும், இனியாளுக்கு அங்கு நிற்கவே பெரும் அவமானமாக இருந்தது.
“அது எப்படி உனக்கு தெரியாம இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கும். ஒழுங்கு மரியாதையா இதுக்கு யார் காரணம்னு சொல்லிடு” என்றவாறு அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான் முகிலன்.
இனியாளோ தட்டு தடுமாறி சுவற்றை பற்றி கொண்டு நின்றவள். தன் அண்ணன் அறைந்ததில் எரிச்சல் உற்ற கன்னத்தை கைகளால் பொத்திக்கொண்டு தனக்குள் ஒடுங்கிப் போய் நின்று இருந்தாள்.
“யாரை காப்பாத்துறதுக்காக இப்படி உங்க தங்கச்சி பொய் சொல்றாளோ யாருக்கு மாப்பிள்ளை தெரியும். ஒரு வேளை, இவ காதலிச்ச பையன் இவளை ஏமாத்திட்டு போயிட்டானோ என்னவோ.. அதான் இப்படி எல்லாம் பொய் சொல்றா” என்று முகிலனிடம் கூறிய பாக்யா இனியாளை நோக்கி, “ஏம்மா நெஜமாவே யாரையாவது காதலிச்சு தான் மாசமானியா.. இல்ல, வயசு கோளாறுல இப்படி யார் கூடவாவது சேர்ந்து தப்பு பண்ணிட்டியா” என்றதும் தன் காதுகளை பொத்திக் கொண்ட இனியாள் கதறி அழுக தொடங்க.
நாராயணனிற்கோ இதற்கு மேல் கேட்கும் சக்தி இல்லாமல் போனது.