“வானு சொல்றேன்ல” என்றவனோ அவளின் கையை பற்றி வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துக் கொண்டு அவளின் வீடு நோக்கி புறப்பட்டான்.
இவர்கள் சென்று பார்க்கும் பொழுது அங்கே பூட்டிய வீடு தான் இவர்களை வரவேற்றது.
ஆம், இனியாள் சென்ற சற்று நேரத்தில் நாராயணனுக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.
இனியாள் சென்ற பிறகும் பாக்யா அவரின் பேச்சை நிறுத்துவதாக இல்லை. இனியாளை பற்றி மேலும் அவதூறாக பேசுவதும், தவறாக அவளை சித்தரிப்பதுமாகவே இருக்கவும், அதையெல்லாம் கேட்க கேட்க நாராயணனுக்கு ரத்த அழுத்தம் கூடிப் போக தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விட்டார்.
உடனே அனைவரும் அவரை தூக்கிக் கொண்டு வீட்டையும் பூட்டி விட்டு மருத்துவமனை நோக்கி சென்று விட்டனர். இது எதையும் அறியாத இனியாளோ மீண்டும் தன் குடும்பத்திடமே வந்து நிற்க, வீடோ பூட்டப்பட்டு இருந்தது.
“என்ன இது வீடு பூட்டி இருக்கு. அதுக்குள்ள எல்லாரும் எங்க போயிருப்பாங்க” என்று மதன் கேட்கவும்.
‘தெரியவில்லை’ என்பது போல் அவனுக்கு தலையசைத்தவள் ‘எங்கே தான் மீண்டும் இங்கே வருவேன் என்பதற்காக தான் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார்களோ’ என்று நினைத்துக் கொண்டாள்.
அது மேலும் அவளுக்குள் அழுத்தத்தை அதிகரித்தது.
தன்னிடம் யாரும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே..
தன் நிலை விளக்கம் அளிக்க எனக்கு யாரும் சற்றும் அவகாசமே கொடுக்கவில்லையே..
இத்தனை வருடங்கள் என் மேல் அத்தனை நம்பிக்கை வைத்து வளர்த்தவர்களே என்ன நடந்தது என்று என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே என்று அவளுக்குள் பெரும் வருத்தம் ஏற்பட்டது.
தவறு செய்ததாக இருந்தால் கூட என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டிருக்கலாமே.. என் மேல் எந்த தவறும் இல்லை என்பதை நான் அவர்களுக்கு விலகி இருந்திருப்பேனே..
என்னை பேசவே அவகாசம் கொடுக்காமல் இப்படி துரத்தி விட்டார்களே.. அந்த அளவிற்கு நான் அவர்களுக்கு வேண்டாதவளாக ஆகிவிட்டேனா என்று எண்ணும் பொழுதே அவளின் கண்கள் மேலும் கண்ணீரை சுரந்தது.
அவளின் நிலையை உணர்ந்த மதன் அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.
இனியாளின் மூளை எதை பற்றியுமே சிந்திக்கவில்லை. அது தன் சிந்தனை திறனையே நிறுத்திவிட்டது என்று தான் கூற வேண்டும்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது, தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று எதுவுமே அவளின் மூளையில் பதியவில்லை.
மதன் அவனின் வீட்டிற்கு அழைத்து வந்தது கூட அவளுக்கு விளங்கவில்லை. வீட்டின் வாசலுக்கு வந்தவளிற்கு இப்பொழுது தான் நிதர்சனம் உரைத்தது. அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்காமல் அப்படியே உறைந்து நின்றாள்.
“என்னாச்சு உள்ள வா”.
“இல்ல.. வேண்டாம் சார்”.
“வீட்ல யாரும் இல்ல நான் மட்டும் தான்.. உன்கிட்ட சில விஷயங்கள் பேச வேண்டி இருக்கு அதனால தான் நான் உன்னை இங்க கூப்பிட்டு வந்தேன். தயவு செஞ்சு உள்ள வா என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்ல”.
மதன் அவளின் கல்லூரியின் பேராசிரியர் அதை தவிர்த்து அவளுக்கு அவனை பற்றி எதுவும் தெரியாது.
நம்பிக்கை இருக்கிறது தான்..
ஒரு ஆசிரியராக அவனின் மேல் நிறையவே மதிப்பும், மரியாதையும் கூட இருக்கிறது. ஆனால் அவளின் தற்போதைய சூழலுக்கு அவளால் யாரையும் நம்ப முடியவில்லை.
“இல்ல வேண்டாம் சார். எதுவா இருந்தாலும் இப்படியே சொல்லுங்க நான் கிளம்புறேன்”.
அவளின் மனநிலையை சரியாக கணித்த மதனும் அவளை அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. வீட்டின் வாசலிலேயே சின்னதாக அமைக்கப்பட்டிருந்த கார்டன் ஏரியாவிற்கு அவளை அழைத்துச் சென்றிருந்தவன், அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அவளை அமர வைத்து எதிரே தானும் அமர்ந்து கொண்டான்.
எதை பற்றியும் சுற்றி வளைத்து பேசாமல், “யாரையாவது லவ் பண்றியா?” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“இதுக்கு யார் காரணம்னு தெரியுமா?”.
அதற்கும் ‘இல்லை’ என்பது போல் தான் தலையசைத்தாள்.
அவளின் பதிலை கேட்ட மதனிடம் பெருமூச்சு எழ, “என்னை மன்னிச்சிடு.. இன்னைக்கு உனக்கு இருக்க இந்த நிலைமைக்கு நான் தான் காரணமானு எனக்கு தெரியல” என்றதுமே இனியாளின் மூளையோ வேறு எதையோ சிந்திக்க அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
மதன், ஆஷா இனியாளிற்கு தூக்க மாத்திரையை கொடுத்ததும். அதனால் கூட உனக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கலாம் என்பதையும் கூறவும் தான் அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.
சட்டென உன் நிலைமைக்கு நான் தான் காரணம் என்றால் அவளும் வேறு என்ன தான் நினைப்பாள். அதுவும் வயிற்றில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு..
‘ஆஷா அன்று தனக்கு தந்தது தூக்க மாத்திரையா’ என்று எண்ணியவளுக்கு காலம் கடந்து என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் தான்.
கோபம் வந்தது தான்..
ஆனால், இனி அதை காட்டி என்ன பயன்.. அனைத்தும் நடந்து முடிந்து விட்டதே. அவளின் உடலில் ஒருவித இறுக்கம் ஏற்பட அப்படியே அமர்ந்திருந்தாள்.
“அன்னைக்கு தான் இப்படி ஒரு தப்பு நடந்துச்சானு எங்களுக்கு கன்ஃபார்மா தெரியல. ஆனா அன்னைக்கு தான் நடந்திருக்கும்னு எனக்கு தோணுது. வேற எப்போவாவது நடந்திருந்தால் உனக்கு தெரிந்திருக்கும் இல்ல. உனக்கே இது எல்லாம் எப்படி நடந்துச்சுன்னு தெரியலனா கண்டிப்பா அன்னைக்கு தான் ஏதோ தப்பு நடந்து இருக்கு”.
இதை அவளால் சற்றும் ஏற்றுக் கொள்ளவும், ஜீரணித்துக் கொள்ளவும் முடியவில்லை.
யார் என்றே தெரியாத ஒருவன் தன்னிடம் தவறாக நடந்து இருக்கிறானா..
யார் அது..
அதிலும், இப்படி செய்துவிட்டு எப்படி அவனால் நிம்மதியாக இருக்க முடியும். இதனால் என் வாழ்க்கையே இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணியவளிற்கு அழுகையை தவிர வேறு எதுவும் கை கொடுக்கவில்லை.
மதன் இனியாளின் மேல் கொண்ட காதலையும் ஆஷா மதனின் மேல் கொண்ட காதலையும் அதற்காக தான் அவள் அன்று அப்படி நடந்திருக்கிறாள் என்பதையும் விவரமாக விளக்கி கூறினான் மதன்.
இனியாளுக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளை அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.
ஒருபுறம் மதனின் காதல்..
மறுபுறம் ஆஷாவின் செயல்..
அதற்கும் மேல் யார் என்றே தெரியாத ஒருவனுடன் ஓர் இரவை கழித்திருக்கிறாள்.
அனைத்தும் சேர்ந்து அவளை சிந்திக்க விடாமல் அவளின் மூளையை மங்க செய்து விட்டது.
உண்மையை கூறப்போனால் அனைத்திற்கும் மதன் தன் மேல் கொண்ட காதல் தான் காரணம் என்று எண்ணும் பொழுது ஒருவகையில் அவளுக்கு மதனின் மீதும் கோபம் தான் எழுந்திருக்க வேண்டும்.
ஆனால் அவளோ செய்வதறியாது அமர்ந்திருந்தாள். ஆஷா இவ்வாறு நடந்து கொள்வாள் என்பதை மதனுமே எதிர்பார்த்திருக்கவில்லை இல்லையா.. அவளின் காதலும் இவனுக்கு தெரியாதே இதில் யாரை குற்றம் சொல்வது.
மதன் மேல் இல்லாவிட்டாலும் தனக்கு மாத்திரையை மாற்றிக் கொடுத்த ஆஷாவின் மேல் நிச்சயமாக அவளுக்கு கோபம் எழுந்திருக்க வேண்டும். ஆனால் அதை கூட செய்ய அவளின் மூளை சிந்திக்கவில்லை.
ஏதோ தன்னை சுற்றி இருந்த வெளிச்சம் மொத்தமும் ஒரே நொடியில் மறைந்து தன்னை சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டது போல் எண்ணினாள்.
இதில் யாரையும் குற்றம் சுமற்றவும், தவறு கூறவும், ஏன் இப்படி செய்தீர்கள் என்று சண்டையிடவும் அவளின் உடலிலும் மனதிலும் சற்றும் தெம்பு இல்லை.
அவளின் தந்தையின் நிராகரிப்பிலேயே அவள் தன் உயிர்ப்பை எப்பொழுதோ இழந்து விட்டாள்.
“எப்படி நடந்திருந்தாலும் சரி உன்னுடைய இந்த நிலைமைக்கு நான் தான் காரணம். நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றதும் விருட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் ‘வேண்டாம்’ என்பது போல் மறுப்பாக தலையசைத்தாள்.
“தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு, இதனால் உன்னுடைய படிப்பு ஸ்பாயில் ஆக கூடாது. நீ நல்லா படிக்கிற பொண்ணு.. நடந்த தப்புக்கு முழு காரணமும் நான் தான். எந்த தப்பும் செய்யாமல் நீ ஏன் தண்டனையை அனுபவிக்கணும். உனக்கு துணையா என்னைக்குமே நான் இருப்பேன்”.
“வேண்டாம் சார். எனக்கு இப்ப யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற மனநிலை இல்லை. என்னை இப்படியே விட்ருங்க நான் எங்கேயாவது போயிடுறேன்”.
“என்ன பேசுற நீ தப்பே பண்ணாம நீ ஏன் தண்டனையை அனுபவிக்கணும். எங்கேயாவது போறேன்னா எங்க போவ?”.
இந்த கேள்விக்கு அவளிடமுமே எந்த ஒரு பதிலும் இல்லை. அவர்களின் வீட்டு ஆட்களை தாண்டி அவளுக்கு யாரையுமே தெரியாது. எங்கு செல்வாள்..
ஆனால் மீண்டும் அவர்களின் முன்பு சென்று நின்று அவர்களை கஷ்டப்படுத்த கூடாது என்ற எண்ணம் மட்டும் அவளின் மனதில் ஆணித்தரமாக இருந்தது.
“உன் வீட்ல இருக்கவங்க எல்லாம் இப்ப எங்க போயிருக்காங்கன்னு விசாரிச்சு உன்ன அவங்களோட நான் சேர்த்து வைக்கிறேன். உன்னையும் நானே கல்யாணம் பண்ணிக்கிறேன். உன் வயித்துல வளரும் குழந்தைக்கு நானே அப்பாவா இருக்கேன். இது எல்லாத்தையும் நான் உனக்கு சரி பண்ணி தரேன் ஐ ப்ராமிஸ் யூ!” என்றான் தவிப்பாக.
அவனுக்கு மறுப்பாக தலையசைத்தவள், “நீங்க இப்ப சொன்ன எதுவுமே எனக்கு வேண்டாம். என் வீட்டோட திரும்பி போய் சேரனும்னு எனக்கு எந்த ஆசையும் இல்லை. என் அப்பா என்னை இத்தனை வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு நல்லா பாத்துக்கிட்டாரு..
ஆனால் நான் அவரை ரொம்பவே அசிங்கப்படுத்திட்டேன். திரும்பவும் அவர் முன்னாடி போய் நிக்கிற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. நான் செத்துட்டதா நெனச்சுக்குறேன்னு சொன்னாங்க.. அவங்க அப்படியே நினைச்சுக்கட்டும். மறுபடியும் என்னை பார்த்து அவங்க கஷ்டப்பட வேண்டாம். அதோட இந்த விஷயத்துல உங்க மேல எந்த தப்பும் இல்லை சார்.
எனக்கு இப்படி எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு நடந்திருக்கு.. நீங்க இந்த விஷயத்துல எந்த வகையிலும் எந்த தப்பும் பண்ணல. தேவையில்லாம நீங்க எதுவும் பிராயச்சித்தம் செய்வதாக நினைத்து எனக்கு செய்ய வேண்டாம். என்னை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ்”.