என் பிழை நீ – 29

4.7
(27)

பிழை – 29

அதன் பிறகும் மதன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இனியாள் அவனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டாள்.

அத்தோடு இந்த ஊரிலேயே தான் இருக்க விரும்பவில்லை என்றும் கூறி விட. திருமணம் தான் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாய் உனக்கு பாதுகாப்பாகவாவது நான் இருக்கிறேன் என்று அவள் எவ்வளவோ மறுத்தும் மீறி அவளுடனே மதன் வேறு ஒரு ஊருக்கு இடம் பெயர்ந்து விட்டான்.

அங்கேயே ஒரு வீடும் பார்த்து இனியாளை நல்ல விதமாக பார்த்துக் கொண்டான். தன்னால் ஏற்பட்ட தவறை தானே சரி செய்ய வேண்டும் என்று அவனும் எவ்வளவோ முனைந்தான்.

ஆனால், அவள் தான் விடவில்லையே..

அவனை திருமணம் செய்ய முடியாது என்று மட்டும் உறுதியாக கூறிவிட்டாள். யாரோ செய்த தவறை அவன் தலையில் சுமக்க வைக்க அவளுக்கு விருப்பமில்லை.

அதன் பிறகு இனியாளை அவளின் வீட்டு ஆட்களும் தேடவில்லை. நடந்த சம்பவத்தினால் அதீத அழுத்தத்தில் நாராயணனுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டுவிட.

அவருக்கு ஒரு கையும், ஒரு காலும் வேலை செய்யாமல் போய்விட்டது. சரி வர பேச்சும் வரவில்லை. படுத்த படுக்கையாக ஆகிவிட்டார்.

இது எதுவுமே இனியாளுக்கு தெரியாது. தன் குடும்பத்தினரின் முன்பு சென்று நின்று அவர்களை வருத்தப்பட வைக்க கூடாது என்ற எண்ணத்தோடு அவளும் அவர்களை காண செல்லவில்லை.

அவர்களும் இனியாளை தேடவில்லை. நாராயணன் நன்றாக இருந்திருந்தாலாவது சிறிது காலம் கழித்து சற்று மனம் மாறி தன் மகளை பற்றி தேடி இருப்பார்.

ஆனால், முகிலனின் மனம் மாறாதவாறு நித்யாவும், பாக்யாவும் அவனை ஏற்றி விட்டுக் கொண்டே இருக்க.

அவனும் இனியாளை தேடவில்லை. முன்பு போல் நாராயணனுக்கு அவரின் வீட்டில் மதிப்பும் இல்லாமல் போய்விட்டது.

மதிப்பு, மரியாதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது.

அவரால் வருமானம் வரும் வரை நித்யா அவரை மாமனார் என்ற மதிப்போடும் மரியாதையோடும் நடத்தினாள்.

என்று அவர் படுத்த படுக்கையாகினாரோ அவருக்கு வேறு தண்டமாக செலவு செய்ய வேண்டுமா என்று முகிலன் இல்லாத நேரத்தில் எல்லாம் வார்த்தைகளால் அவரை குடைந்து எடுத்து விடுவாள்.

பதில் பேசக்கூட முடியாத நாராயணனும் கண்ணீரின் வழியாக தான் தன் மனக்காயத்தை ஆற்றிக் கொள்வார்.

அழகாகவும், அன்பாகவும் சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை அப்படியே தடம் மாறிவிட்டது.

கண்ணீரோடும், காயங்களோடும் நாளுக்கு நாள் கழிய தொடங்கியது.

என்ன தான் கோபத்தில் இனியாளை வீட்டை விட்டு போகும் படி கூறிவிட்டாலும், நாராயணனின் மனதிற்குள் அவளை பற்றிய எண்ணங்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

அது வேறு அவருக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. என்ன செய்கிறாளோ, எங்கே இருக்கிறாளோ என்று தினமும் எண்ணி வருந்திக்கொண்டு தான் இருக்கிறார்.

இனியாளுக்கு தன் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயமாக எவ்வளவு அவதூறாக அவளை பற்றி பேசினாலும் அதை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாது அவர்களின் வீட்டு வாசலில் முன்பே சென்று நின்று இருப்பாள்.

அங்கே நடப்பது எதுவும் அவளுக்கு தெரியாது. மீண்டும் மீண்டும் தன் தந்தையின் முன் சென்று நின்று அவரை வருத்தப்பட வைக்க கூடாது என்று எண்ணியவள். அதன் பிறகு அவர்களை சந்திக்கவே எண்ண வில்லை.

அவ்வபொழுது அவளின் குடும்பத்தாரின் எண்ணம் அவளை வெகுவாக வாட்டும் தான். ஆனாலும், ஏதோ ஒன்று அவர்களின் முன் சென்று நிற்க அவளை விடவில்லை.

அது நிச்சயம் குற்ற உணர்வாக தான் இருக்கும்!

இனியாள் மதனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாளே தவிர, அவனின் செயல்களையும் உதவிகளையும் அவளால் தடுக்க முடியவில்லை.

“நீ திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் இத்தகைய நிலைமைக்கு நான் தான் காரணம். குழந்தை பிறக்கும் வரையிலாவது உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன். அதன் பிறகு உன் வாழ்க்கையை நீயே பார்த்துக் கொள். இது கூட செய்யாவிட்டால் குற்ற உணர்ச்சியிலேயே நான் செத்து விடுவேன்” என்று ஏதேதோ கூறி மதன் அவளின் வாயை அடைத்து விட்டான்.

மாதா மாதம் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டினான். மதனிடம் இனியாள் பெரிதாக பேச மாட்டாள். தனக்குள்ளேயே ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டாள்.

அதில் தான் மட்டும் தான் என்றும் உறுதிப்படுத்திக் கொண்டாள். யாருடனும் நெருங்கி பழக கூடாது என்று முடிவெடுத்துவிட்டாள்.

மதன் எவ்வளவோ அவளின் படிப்பை தொடரும் படியும், நான் உனக்கு உதவுகிறேன் என்றும் வற்புறுத்தி பார்த்து விட்டான். அவனிடமிருந்து இதற்கு மேல் எந்த ஒரு உதவியும் பெறக் கூடாது என்பதிலும் அவளுக்கு அத்தனை உறுதி, அதனாலேயே மறுத்துவிட்டாள்.

படிப்பை தொடர முடியவில்லை.. தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தம் அவளுக்கும் பெரிதாக இருக்கிறது தான்.

ஆனாலும், மதனின் உதவியோடு படிக்க அவளுக்கு ஏனோ மனம் வரவில்லை. குற்ற உணர்ச்சியால் தான் அவன் தனக்கு இவ்வளவு உதவியை செய்கிறான் என்பதை உணர்ந்தவளுக்கு அதற்கு மேலும் அவனை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்த மனம் வரவில்லை. ஏனெனில், இந்த விஷயத்தில் அவனும் எந்த தவறும் செய்யவில்லையே..

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆஷாவுமே இனியாளுக்கு தொடர்பு கொண்டு அவளிடம் மன்னிப்பை வேண்டினாள்.

இனியாளுக்கு யாரின் மீது குற்றம் சொல்வது என்றே தெரியவில்லை. இதை பற்றி மேலும் சிந்திக்க அவளின் மனதில் தெம்பும் இல்லை.

ஆஷாவின் மேல் அவளுக்கு வருத்தம் நிறையவே இருக்கிறது தான். ஆனாலும், இந்த விஷயத்தில் இப்படி நடக்கும் என்று அவளும் எதிர்பார்த்து செய்யவில்லையே என்று எண்ணியவள்.

அவள் மேல் இருக்கும் வருத்தத்தில் சற்று காலம் அவளுடன் பேசாமல் தான் இருந்தாள்.

ஆனால் ஆஷா அவளை‌ விட வில்லை. இனியாளின் விஷயத்தில் பெரும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி விட்டாள்.

எனவே, “நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி, நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். என்னால் தானே உனக்கு இப்படி ஒரு நிலை.. உன்னை மதனிடம் இருந்து விளக்க வேண்டும் என்று நினைத்தேனே தவிர, உன் வாழ்க்கை இப்படி சீரழிய வேண்டும் என்று நான் நினைத்து பார்த்ததே கிடையாது.

உன்மேல் எனக்கு நிறையவே கோபமும், பொறாமையும் இருந்தது. அதில் தான் புத்தி கெட்டு இப்படி எல்லாம் செய்து விட்டேன். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூட நான் தயாராக இருக்கிறேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு. நாளுக்கு நாள் குற்ற உணர்வில் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்று மன்றாடி தினம் தினம் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தாள்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அப்படித்தான் இனியாளின் நிலையும் ஆஷாவின் விஷயத்தில் ஆகிப்போனது.

ஆஷாவின் மேல் நிறையவே வருத்தம் இருக்கிறது தான். ஆனால், அதை அவளிடம் இனி காட்டி எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்தவள்.

மேலும், அவள் உண்மையிலேயே வருந்தி தன்னிடம் மன்னிப்பு கேட்பதும் விளங்க.. அதற்கு மேல் அவளை தண்டிக்க இவளுக்கு தோன்றவில்லை.

அதன் பிறகு தான் அவளுக்கு பிரசவ தேதியும் நெருங்கி விட்டது.

அவர்களின் கல்லூரியிலேயே மதனுக்கு சம்பள உயர்வோடு கூடிய வேலையும் கிடைத்தது.

முன்பை விட நல்ல வேலை.. ஆனால், அவனோ அங்கு செல்ல முடியாது என்று இனியாளுக்காக மறுத்து விட்டான். ஆஷா இனியாளிடம் பேசி எப்படியாவது அவனை மீண்டும் அங்கேயே வேலைக்கு செல்லுமாறு கூறும் படி கூறினாள்.

அதன்படி ஏதேதோ பேசி இனியாளும் அவனை அனுப்பி வைத்து விட்டாள். அவள் இதை செய்தது ஆஷா தன்னிடம் கேட்டுக் கொண்டதற்காக மட்டும் கிடையாது.

தனக்காக இத்தனை செய்த மதனின் வாழ்க்கை இறுதியில் கேள்விக்குறியாகி விடக்கூடாது.

அவனின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அவனை இங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

குழந்தை பிறந்த பிறகு மதனை தன்னுடன் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் இனியாள் முடிவாக இருந்தாள். அதன் படி குழந்தை பிறந்ததும் அவனை அனுப்பியும் வைத்து விட்டாள்.

அவளை பொருத்த மட்டும் தங்களுக்கு என்று யாரும் தேவையில்லை. இந்த குழந்தையின் தந்தை யார் என்று அவளுக்கு தெரியாது தான். ஆனால், எது எப்படி ஆனாலும் தாய் இவள் தானே..

யாரின் குழந்தையோ என்று எண்ணி அதை அப்படியே விட அவளுக்கு மனம் வரவில்லை. ஒரு உயிரை எப்படி அப்படியே விட முடியும்.

தன் தந்தையே தன்னை வெறுத்த பிறகு இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று எப்பொழுதோ இனியாள் முடிவு செய்து இருப்பாள்.

இன்று வரை அவள் தன் உயிரை பிடித்துக் கொண்டிருப்பதற்கு ஆதாரமே இந்த குழந்தை தான்!

யாரோ செய்த பிழையால் உருவான குழந்தை தான். ஆனால், அதன் உதிரத்தில் தன் ரத்தமும் கலந்திருக்கிறது அல்லவா..

தவறே செய்யாத சின்னஞ்சிறு உயிரை தண்டிக்க அவளுக்கு சற்றும் மனம் வரவில்லை. அதிலும், மருத்துவ துறையை தேர்ந்தெடுத்து பல உயிர்களை காக்க வேண்டும் என்ற ஆசையோடு தன் படிப்பை துவங்கியவளால் இவ்வுலகத்தையே பார்க்காத சிறு உயரை கருவிலேயே கருகச் செய்ய சற்றும் மனம் வரவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆஷா எத்தனையோ முறை தன் தவறை உணர்ந்து மதனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டாள்..

மன்றாடி பார்த்துவிட்டாள்..

ஆனால், அவன் அவளை மன்னிப்பதாகவே இல்லை.

எப்படி அவ்வளவு எளிதில் அவளை மன்னித்து விட வேண்டும். என்ன தான் இனியாள் அவளை தண்டிக்காமல் விட்டு விட்டாலும், இவனுக்கு மனம் கேட்கவில்லை.

தான் இனியாளை காதலித்த ஒரே காரணத்திற்காக அவளின் வாழ்க்கையை இப்படி கேள்விக்குறியாகிவிட்டவளை எப்படி மன்னித்து இவனால் ஏற்றுக்கொள்ள முடியும்?

உண்மையிலேயே ஆஷா தன் மேல் இருக்கும் தவறை முற்றிலுமாக உணர்ந்து விட்டாள்.

இனியாளை மதனின் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று எண்ணினாளே தவிர, அவளின் வாழ்க்கையை இப்படி கேள்விக்குறியாக்க வேண்டும் என்று அவள் ஒரு நாளும் எண்ணியது கிடையாது.

அவள் மேல் அளவுக்கு அதிகமான கோபம் தான்.. ஆத்திரம் தான்..

என் மதன் எப்படி அவளை நேசிக்கலாம் என்ற ஆத்திரம் நிறையவே இருந்தது.

விளைவு இனியாளின் வாழ்க்கையே காவு வாங்கப்பட்டு விட்டது. இப்பொழுது அவளிடம் எஞ்சியிருப்பது குற்ற உணர்வு மட்டுமே!

இனியாளுக்கு குழந்தை பிறந்த பிறகு தன் வீட்டிற்கு அவளை வருமாறு அழைத்துப் பார்த்தாள். அவளோ வர முடியாது என்று மறுத்து விட்டாள்.

 

“என்னை மன்னிச்சுடு ஆஷா உன் மேல எனக்கு நிறையவே வருத்தமும் கோபமும் இருக்கு தான். நீ மட்டும் அன்னைக்கு அப்படி செய்யாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை இப்படி ஆகி இருக்காதே அந்த ஆதங்கம் எனக்குள்ள நிறையவே இருக்கு. நீ திரும்பத் திரும்ப என்கிட்ட வந்து அழுகுறதாலும், மன்னிப்பு கேட்கிறதாலயும் சரின்னு நான் உன்னை மன்னிச்சாலும் உன்னுடைய உதவிகளை ஏத்துக்கிட்டு உன்னோட பிரண்ட்ஷிப் வச்சுக்கிற அளவுக்கு எனக்கு பெரிய மனசு எல்லாம் இல்ல ஆஷா”.

என்ன தான் அவள் செய்த தவறை இவள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாலும், அவளை நெருக்கமாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு எல்லாம் பெரிய மனது இவளுக்கும் இருக்கவில்லை.

மேலும், குழந்தை பிறந்த பிறகு அவளின் கல்லூரி படிப்பை தொடங்குமாறு ஆஷா இனியாளிடம் வற்புறுத்தினாள். அனைத்து செலவுகளையும் தானே பார்த்துக் கொள்வதாகவும் குழந்தையை ஆள் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் கட்டாயப்படுத்தினாள்.

இனியாளோ ஆஷாவின் உதவிகள் எதுவுமே வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

அனைத்தையும் பாரிவேந்தனிடம் கூறியவளிற்கு‌ கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

அவளின் நிலையை கேட்டறிந்த பாரிவேந்தனின் மனதிலே பெரும் பாரம் குடி ஏறிவிட்டது.

அவள் தனிமையில் தன் குழந்தையை பிரசவிக்கும் பொழுதே ஏதோ பெரிய சிக்கலில் அவள் மாட்டிக் கொண்டாள் என்பதை எண்ணினான் தான்.

ஆனால், இப்படி தன்னால் அவளின் படிப்பும் பாதியிலேயே நின்று, அவளின் குடும்பத்தினரே அவளை ஒதுக்கி வைப்பார்கள் என்று அவன் சற்றும் சிந்திக்கவில்லை.

அதிலும், எப்படிப்பட்ட அவதூறான கீழ் தரமான வார்த்தைகளை எல்லாம் கேட்டு இருக்கிறாள். எந்த தவறும் செய்யாமலேயே ஒருவரை தரக்குறைவாக நடத்துவதெல்லாம் எப்பேர்பட்ட பாவம்.

அதிலும், யாருமே இவளிடம் தன்னிலை விளக்கம் கேட்கவில்லை என்பது அவனுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் அளித்தது.

உண்மையிலேயே இனியாள் தன் குழந்தைக்கு தாயாகி இருப்பாள் என்று அவன் சற்றும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அவளுடன் அவளின் விருப்பம் இன்றி இணைந்ததால் தான் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அன்று அவன் முடிவு செய்தானே தவிர, தன் குழந்தைக்கு அவள் தாயாகி இருப்பாள் என்றெல்லாம் அவன் சற்றும் நினைத்து பார்க்கவில்லை.

அப்படியே இப்படி நடந்து இருந்தாலும், அவளின் குடும்பத்தினர் அவளின் நிலையை பற்றி கேட்டு அறிந்திருக்கலாமே என்ற பெரும் ஆதங்கம் அவனுக்கு எழுந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!