என் பிழை நீ‌ – 30

4.9
(8)

பிழை – 30

சிறு வயது முதல் அத்தனை பாசத்தோடு வளர்க்கப்பட்டவள். வாழ்க்கையில் செய்யக்கூடாத பெரும் தவறை இழைத்து விட்டதாகவே இருக்கட்டும். அதற்கு அவளிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று யாருக்குமே தோன்றவில்லையா?

அவள் மேல் தவறு இருக்கிறதா இல்லையா என்பதை கூட ஏன் அவர்கள் யாருமே கேட்டு அறிய முன்வரவில்லை.

அப்படி என்றால் இவள் மேல் யாருக்கும் நம்பிக்கை இல்லையா? என்ற ஆதங்கம் இனியாளின் குடும்பத்தினர் மேல் பாரிவேந்தனுக்கு இருந்தது.

ஆனால், அன்று நாராயணனின் மனநிலை எப்படி இருந்தது என்பதை இவன் அறிந்திருக்க வாய்ப்பில்லையே..

ஆம், சிறு வயது முதலே சீராட்டி பாராட்டி தன் மகளை வளர்த்தார் தான்..

உள்ளங்கையில் வைத்து தாங்கினார் தான்..

தன் மகளிடம் தன்னிலை விளக்கம் அவர் கேட்டு இருக்க வேண்டும் தான்..

ஆனால், அதற்கெல்லாம் பாக்யா அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லையே..

அவரின் முன்னிலையில் எப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் இனியாளை நோக்கி வீசினார். தன் மகள் நிச்சயம் அப்படிப்பட்ட தவறை செய்திருக்க மாட்டாள் என்பதை நாராயணனுமே உணர்ந்திருந்தாலும், மற்றவர்களும் அப்படியே நினைக்க வேண்டும் என்று அவர் யாரையும் வற்புறுத்த முடியாது அல்லவா..

அதிலும், இந்த குழந்தையின் தந்தை ஒருவர் தானா என்று பாக்யா கேட்டதை நாராயணனால் சற்றுமே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

தன் மகளின் செயல் ஒரு புறம் என்றால், அவரின் வார்த்தை மற்றொரு புறம் அவரை கத்தி இன்றி குத்தி கிழித்தது.

மேலும், இவர்களின் முன்பு அவள் நின்று இருந்தால் இன்னமுமே தரக்குறைவான வார்த்தைகளை அவர்கள் இனியாளை நோக்கி வீசுவார்கள் என்பது நிச்சயமாக நாராயணனுக்கு தெரியும். அதனாலேயே அவளை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறிவிட்டார்.

ஆனால், அதன் பிறகு இனியாளை நினைத்து அவர் எவ்வளவு வருந்தினார் என்பது அவர் மட்டுமே அறிந்த உண்மை.

டேபிளின் மேலே வீற்றிருந்த தண்ணீர் பாட்டிலை தன் நடுங்கும் கைகளால் எடுத்து இனியாளின் முன்னே நீட்டிய பாரிவேந்தனுக்கு இப்பொழுது என்ன பேசுவது என்று தெரியவில்லை.

அவளை ஆரத்தழுவி அவளுக்கு ஆறுதல் அளிக்க அவனின் கைகள் இரண்டும் பரபரத்தது என்னவோ உண்மை தான்!

ஆனால், இவனின் ஆறுதலை அவள் ஏற்றுக் கொள்வாளா?

அனைத்திற்கும் காரணம் இவன் தான் என்ற உண்மை அவளுக்கு தெரிய வந்தால் என்னவாகும்?

முன்பும் அவள் தன்னை ஏற்றுக் கொள்வாளா என்ற பயம் பாரிவேந்தனுக்கு இருந்தது தான். ஆனால், இப்பொழுதோ அது பல மடங்காக அதிகரித்துவிட்டது.

“சாரி” என்றான் குரல் நடுங்க.

அவன் தன் கதையை கேட்டு தான் இப்படி கூறுகிறான் என்று எண்ணிய இனியாள் அறிந்திருக்கவில்லை..

மானசீகமாக அவன் அவளிடம் மன்னிப்பை மன்றாடிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை..

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவளுக்கோ இப்பொழுது ஏதோ மனம் லேசான உணர்வு. தன் மனதில் இருப்பது மொத்தத்தையும் இவனிடம் கொட்டி தீர்த்து விட்டாள் அல்லவா..

என்ன தான் மதன் அவளுக்கு அரணாக பாதுகாப்பாக இருந்து அவளை பார்த்துக் கொண்டாலும், அவனிடம் அவள் மனதில் இருப்பதை வெளிப்படையாக என்றுமே கூறியது கிடையாது. ஏனோ, அவனை வேற்று ஆளாக தான் அவளுக்கு பார்க்கத் தோன்றியது.

ஆனால் பாரி வேந்தனிடம் அப்படி கிடையாது. எதுவோ ஒன்று அவனுடன் இவளுக்கு நெருக்கமான உணர்வை உண்டாக்கி இருந்தது. அது இவன் அவளுக்கு செய்து கொண்டு இருக்கும் உதவிகளாக கூட இருக்கலாம்.

“பரவாயில்ல டாக்டர், எனக்காக நீங்க நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க.. உங்க கிட்ட நடந்த விஷயத்தை எல்லாம் மறைக்கணும்னு எனக்கு தோணல. என் குழந்தையை பத்தி யாரும் தப்பா பேச கூடாதுன்னு அன்னைக்கு மேடம்கிட்ட எங்களுக்காக பொய் சொன்னீங்க.. அப்போவே எனக்கு தெரிஞ்சிடுச்சு உங்களுக்கு என் லைஃப்ல என்னமோ நடந்து இருக்குன்னு தெரிஞ்சிருக்கு. ஆனா, இதுவரைக்கும் நீங்க என்கிட்ட அதை பத்தி எதுவும் கேட்டது கிடையாது. எனக்கு இவ்வளவு உதவி பண்ற உங்ககிட்ட இதை மறைக்க எனக்கு கொஞ்சமும் மனசு வரல. அதான் எல்லா உண்மையையும் சொல்லிட்டேன்.

‘உன் குழந்தையை பத்தி தப்பா பேசக்கூடாதுன்னு நான் அன்னைக்கு அப்படி சொல்லலடி.. நம்ம குழந்தையை பத்தி யாரும் தப்பா பேசக்கூடாதுனு தான் அன்னைக்கு அப்படி சொன்னேன். இந்த குழந்தையோட அப்பா நான் தான்னு எல்லார் முன்னாடியும் சொல்லக்கூட நான் தயார் தான். ஆனா அத நீ ஏத்துப்பியானு தெரியலையே.. தெரிஞ்சோ தெரியாமலோ நீ இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க நான் காரணமா இருந்திருக்கேன். இனியும் உனக்கு எந்த கஷ்டமும் வர நான் விடமாட்டேன். கடைசி வரைக்கும் நான் தான் இந்த குழந்தையோட அப்பானு உனக்கு தெரியாமலே இருந்தாலும் பரவாயில்லை. நீ இங்கேயே பாதுகாப்பா இருந்தா எனக்கு அது போதும்’ என்று மானசீகமாக அவளுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.

“நிலா அழற மாதிரி இருக்கு நான் வரேன் டாக்டர்” என்று சற்றும் உயிர்பில்லாத மெல்லிய புன்னகையை உதிர்த்தவள் அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

பாரி வேந்தனுக்கு தான் இதையெல்லாம் சற்றும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளின் உயிர்ப்பற்ற புன்னகையை பலமுறை கண்டிருக்கிறான் தான். அப்பொழுதெல்லாம் அதற்கான காரணத்தை உணராதவன், இப்பொழுது காரணத்தை உணர்ந்த பின்பு அவனின் மனம் அப்படி வலித்தது.

அவளின் மன பாரத்தை இவனிடம் இறக்கி வைத்து விட்டாள்.

இவனுக்கு தான் இப்பொழுது ஏதோ பாராங்கல்லை தூக்கி தன் மேல் வைத்தது போல் ஆகிவிட்டது.

இவனின் விழிகளும் கலங்கி போக.. அவன் மனதின் அத்தனை வலியையும் விழிகள் பிரதிபலித்தது.

மெதுவாக நடந்து சென்று பால்கனியில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்தான்.

அவனின் இதயமோ படபடவென அடித்துக் கொண்டிருந்தது. அவள் கூறிய அனைத்தும் அவனின் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

நினைக்க நினைக்க அப்படி வலித்தது.

நிலைகொள்ள முடியவில்லை..

தன் மேலேயே அத்தனை கோபம்.. ஆத்திரம்..

கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரும் வழிந்து விட்டது.

எத்தனை வலி, வேதனைகளை கடந்து வந்திருக்கிறாள். அவளின் லட்சியம் அழிந்தது மட்டுமல்லாமல், அவள் தந்தையின் ஆசையும் அல்லவா கருகிப் போய் இருக்கிறது.

அனைத்திற்கும் மூல காரணமே நாம் தானே என்று நினைக்க நினைக்க அவ்வளவு ஆத்திரம் வந்தது.

அருகில் இருந்த சுவற்றில் தன் கையால் ஓங்கி குத்தினான்.

கையில் இருந்து குருதி வழிந்தது. அது கூட அவனின் கவனத்தை ஈர்க்கவில்லை.

தன் தலை முடியை அழுத்தமாக பற்றியவன் வேக வேகமாக மூச்சை எடுத்து விட்டான்.

எப்படிப்பட்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவன் அவன்..

எவ்வளவு பெரிய தவறை இழைத்திருக்கிறான்.

தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அன்று இனியாளுடன் ஒன்றிணைந்த தன்னை எண்ணியே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.

இத்தனை நாட்கள் இனியாளுக்கு தான் செய்த துரோகத்தை எண்ணி வருந்திக் கொண்டு தான் இருக்கிறான்.

அவளை கண்டுபிடித்து அவளையே மணந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி இருக்கிறான்.

அதை செயல்படுத்தியும் இருக்கிறான். ஆனாலும், தன் உணர்ச்சியை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டோமே என்ற ஆத்திரம்.

அப்பொழுது தான் அவனே ஒரு விஷயத்தை கவனித்தான். அப்படி என்ன கட்டுப்படுத்த முடியாத உணர்வு?

இதுவரை அவனுக்கு இவ்வாறு எல்லாம் நடந்ததே கிடையாதே, அன்று மட்டும் ஏன் தனக்கு அப்படியானது என்பதையே அவனின் மூளை இப்பொழுது தான் சிந்திக்க தொடங்கியது.

இத்தனை நாட்களும் அவனின் மாற்றத்திற்கான காரணத்தை அவன் அறிய முற்பட வேண்டும் என்பதை அவனின் மூளை சற்றும் சிந்திக்கவில்லை.

தவறு செய்து விட்டோம், தவறு செய்து விட்டோம் என்ற ஒரே இடத்திலேயே சுற்றி கொண்டு இருந்தானே‌ தவிர, எதனால் அந்த தவறு நேர்ந்தது என்பதை சிந்திக்க தவறி விட்டான்.

காலம் கடந்த சிந்தனை தான். ஆனாலும், இன்று வரை அவனுக்கு இதற்கான விடை தெரியவில்லை.

ஆழ்ந்த மூச்சை நன்கு இழுத்து விட்டவன், இனி என்ன ஆனாலும் சரி இனியாளை விடக்கூடாது என்ற உறுதியோடு அறையை விட்டு வெளியேறினான்.

இவர்களின் வாழ்க்கை திசை மாறியதில் முக்கிய பங்கு வகித்த அரவிந்தோ விதுஷாவின் நினைவில் அமர்ந்திருந்தான்.

இன்றோடு அவன் தன் காதலை அவளுக்கு தெரிவித்துவிட்டு வந்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டது. இன்னமுமே விதுஷா அவனுக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.

அன்று பாரிவேந்தன் மருத்துவமனைக்கு வரவில்லை.

விதுஷாவும், அரவிந்தும் தான் அவன் பார்க்க வேண்டிய நோயாளிகளை பரிசோதித்தனர்.

இப்பொழுதெல்லாம் விதுஷாவிடம் ஏதோ ஒரு தடுமாற்றம். அரவிந்திடம் முன்பு போல் அவளால் சாதாரணமாக பேசி பழக முடியவில்லை. குறிப்பாக அவன் காதலை இவளிடம் வெளிப்படுத்திய பிறகு தான் இவளுக்குள் இந்த தடுமாற்றம்.

விதுஷா வீட்டிற்கு கிளம்பும் வேளை தான் அரவிந்த் அவளின் அறைக்குள் நுழைந்தான்.

அவனை ‘என்ன’ என்பது போல் அவள் பார்க்கவும்.

“வீட்டுக்கு தானே போற என்னையும் அப்படியே வழியில் டிராப் பண்ணிடு”.

மறுக்க முடியவில்லை..

அவனுக்கு சம்மதமாக தலையத்தவள் அவனுடன் சேர்ந்து நடக்க துவங்கினாள்.

அப்பொழுது அவளின் செல்பேசி சிணுங்கவும் ஏற்று காதிற்கு கொடுத்தவள், “ம்ம்.. கிளம்பிட்டேன்மா.. வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் வந்து பேசுறேன்” என்றவாறு அணைப்பை துண்டித்தாள்.

அதற்குள் இருவரும் காரில் ஏறி புறப்பட்டு விட்டனர்.

விதுஷா தான் காரை ஓட்டிக்கொண்டு இருந்தாள்.

அவளிடம் அமைதி மட்டுமே நிலவிக் கொண்டிருந்தது.

சற்று நேரம் பொறுத்து பார்த்த அரவிந்த் தன் குரலை செறுமிக்கொண்டு, “நான் சொன்னதை பத்தி யோசிச்சியா விது? ஆண்டியும், அங்கிலும் உன் லைஃபை நெனச்சு எவ்வளவு வருத்தப்படுறாங்கனு நான் சொல்லி தான் உனக்கு தெரியணும்னு இல்ல.. உனக்கே எல்லாம் தெரியும். இதுக்கு மேலயும் அவங்கள கஷ்டப்படுத்த போறியா?”.

அவளிடம் அதற்கு எந்த பதிலும் இல்லை ஆழ்ந்த மூச்சை வெளியிட்டாள்.

அதற்குள் அரவிந்த் இறங்க வேண்டிய இடமும் வந்து சேர காரை ஓரமாக நிறுத்தி அவனை திரும்பி பார்க்கவும்.

அவளின் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டவன், அவளுக்குள் ஊடுருவும் பார்வை பார்த்தவாறு தன் மொத்த காதலையும் விழிகளில் தேக்கிக்கொண்டு, “இதே போல உன்னோட லைஃப் லாங் டிராவல் பண்ணனும்னு ஆசைப்படுறேன். உன் லைஃப்லையும் நீ எப்போ எனக்கு லிப்ட் கொடுப்பனு நான் காத்துகிட்டு இருக்கேன். காதலோடு காத்துக்கிட்டு இருக்கிறது சுகம்னு எவன் டி சொன்னான்.. ரொம்ப வலிக்குது விது” என்று தன் மார்பில் கை வைத்து காட்டியவன் விறுவிறுவென இறங்கி சென்று விட்டான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!