இவ்வளவு நேரம் ரம்யா பேசியதையும் கேட்டுக் கொண்டே பாரிவேந்தனின் அறைக்குள் நுழைந்த விக்னேஷ், “ஸ்டேட்டஸ் என்ன பெரிய ஸ்டேட்டஸ்.. நானும் உன்ன மாதிரி கஷ்டப்படுற குடும்பத்துல பிறந்தவன் தான். உனக்காவது உன் அப்பா யாருன்னு தெரியும். எனக்கு அது கூட தெரியாது. நீ படிச்ச அதே சூழ்நிலையில தான் நானும் படிச்சு வளர்ந்து வந்திருக்கேன். ஆனால் என்ன நான் டாக்டருக்கு படிச்சிருக்கேன் நீ நர்ஸிங் படிச்சிருக்க.. அது ஒன்னு தான் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் இருக்க வித்தியாசம். எங்க அம்மா தான் புரியாம பேசுறாங்கன்னா அவங்க பேசுறத பெருசா நினைச்சுக்கிட்டு நீயும் இப்படி எல்லாம் பேசுறியே.. கடைசில நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை தான் கஷ்டப்படுத்துறீங்க” என்றவனின் குரல் அவனின் கடைசி வாக்கியத்தில் நலிந்து ஒலித்தது.
அதில் ரம்யாவிற்கும் மனதில் சுருக்கென்ற வலி தோன்ற. இந்நேரத்தில் விக்னேஷை அவள் சற்றும் இங்கே எதிர்பார்க்கவில்லை.
இப்பொழுது என்ன கூறுவது என்று தெரியாமல் சங்கடமாக தன் கைகளை பிசைந்து கொண்டே நின்று இருந்தாள்.
குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த இனியாளிற்கு இங்கே நடக்கும் சம்பவம் ஓரளவிற்கு பிடிப்பட்டு விட்டது.
“நீ என்ன நினைக்கிற?”.
சட்டென்று அவளை பார்த்து பாரி கேட்கவும். அவனின் கேள்வியில் திருதிருவென விழித்தவள் புரியாமல் பார்த்தாள்.
“விக்னேஷோட அம்மா பேசியதை பெருசா நினைச்சுக்கிட்டு ரம்யா அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றா.. இத பத்தி நீ என்ன நினைக்கிற?” என்றான் இம்முறை தெளிவாக.
“இது அவங்களுடைய வாழ்க்கை அவங்க தான் டிசைட் பண்ணனும். இதுல நான் நினைக்க என்ன டாக்டர் இருக்கு?” என்றவாறு அவள் மழுப்பலாக பதில் உரைக்கவும்.
“இப்போ ரம்யா இடத்தில் நீ இருந்தால் என்ன யோசித்து இருப்ப.. ஒரு சிஸ்டரா நினைச்சு ரம்யாவுக்கு நீ சொல்லலாம்ல”.
“அது.. அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கிறது தான் சரியா வரும். இப்போ அவங்க அம்மாவ பத்தி யோசிச்சு வேண்டாம்னு விட்டுட்டா அப்புறம் பியூச்சர்ல மிஸ் பண்ணிட்டோம்னு நெனச்சு பீல் பண்ற மாதிரி ஆகிடும். ரம்யா கூட கொஞ்சம் நாள் பழகி பார்த்தா அவங்க அம்மாவுக்கு நிச்சயமா பிடிச்சிடும். அப்புறம் அவங்களே ரம்யாவை அவங்க வீட்டு மருமகளா ஏத்துப்பாங்க”.
“எக்ஸாக்ட்லி.. இனியாள் சொல்றது தான் கரெக்ட்” என்றவாறு ரம்யாவை பார்த்த பாரிவேந்தன், “உன் கூட பழகி பார்த்தா உன் நல்ல மனசு அவங்க அம்மாவுக்கும் புரிந்துவிடும். மத்தவங்கள பத்தி யோசிக்காத ரம்யா உன் மனசுல என்ன இருக்கு? உனக்கு விக்னேஷ் மேல விருப்பம் இருக்கா இல்லையா அதை மட்டும் சொல்லு.. உனக்கு அவன் மேல விருப்பம் இருந்தா இந்த கல்யாணத்தை முன்னாடி இருந்து நடத்தி வைக்கிறது என்னோட பொறுப்பு”.
தான் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயத்திலும் இனியாளையும் தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் அறியாமல் இழுத்துக் கொள்ள முடிவு செய்து விட்டான் பாரிவேந்தன்.
ரம்யாவின் மனதில் விக்னேஷ் இருப்பது அவனுக்கு மட்டும் தெரியாதா என்ன..
இருந்தாலும், அவளின் வாயிலாக கூற வேண்டும் என்று விக்னேஷும் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.
அவளோ, “எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான்” என்றாள் நெலிந்து கொண்டே.
“சூப்பர்! அப்புறம் என்ன விக்னேஷ் உங்க அம்மா கிட்ட நான் பேசுறேன். சீக்கிரமே உங்க கல்யாணத்தை முடித்துவிடலாம்” என்கவும்.
விக்னேஷின் முகத்தை பார்க்கவே ரம்யாவிற்கு கூச்சமாக இருந்தது.
“நான் கிளம்புறேன் டாக்டர்” என்று யாரின் முகத்தையும் பார்க்காமல் கூறியவள் அவசரமாக வெளியேறி விட்டாள்.
அவள் செல்வதை பார்த்து புன்னகைத்த விக்னேஷும், “ஓகே டாக்டர்” என்று விட்டு வெளியேறிவிட்டான்.
“விக்னேஷோட அம்மாவை பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று இனியாளிடம் கேட்டுக் கொண்டே பாரிவேந்தன் தன் உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.
“அது சில பேர் இப்படியும் இருக்காங்க டாக்டர். கொஞ்சம் பணம் வந்துட்டா பழசை எல்லாம் மறந்திடுவாங்க. ஆனா, இந்த மாதிரி மனுஷங்க இருக்க இடத்துல உங்கள மாதிரி மனுஷங்களை பார்க்கும் பொழுது தான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வசதி இருக்கு. ஆனா, மத்தவங்களுக்கு நல்லது பண்ணனும், ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறீங்க இல்ல.. முத்துலட்சுமி மேடமும் உங்கள மாதிரி தான் இருக்காங்க. இல்ல.. இல்ல.. நீங்க தான் அவங்கள மாதிரி இருக்கீங்க.. அவங்களுமே மத்தவங்களுக்கு நம்மால் முடிந்த உதவியை பண்ணனும்னு தான் நினைக்கிறாங்க. பணத்தை நீங்க யாருமே பெரிய விஷயமா எடுத்துக்கல. அதனால தான் கடவுள் உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம வச்சிருக்கார்” என்று நெகிழ்ந்து போய் கூறிக் கொண்டிருந்தாள்.
பாரி வேந்தன் அவளுடன் பேச்சு கொடுத்ததும் இதற்காக தானே..
தாங்கள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயங்களை பற்றி எல்லாம் பேசினால் அவள் அவ்வளவு சுலபமாக தன் வாயை திறந்து விடமாட்டாள்.
இப்படி பொதுவான விஷயங்களை பற்றி பேசினாலாவது ஒன்று, இரண்டு வார்த்தைகள் சற்று அதிகமாக உரையாடுவாள் என்று அவளை பற்றி சரியாக கணித்தவன், அதே யுக்தியை அவளிடம் உபயோகித்தான்.
அவனுக்கு தேவை அவளுடன் நேரத்தை செலவிட வேண்டும், அவளுடன் பேச வேண்டும்.
அவளை பற்றி இன்னும் நிறைய நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல எண்ணங்கள் அவனுக்குள் தோன்றினாலும், அதையெல்லாம் எப்படி செயலாற்றுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவனுக்கு இதோ துருப்புச் சீட்டு கிடைத்துவிட்டதே..
இப்படி இனி எதை பற்றியாவது பேசி அவளிடம் பேச்சை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
அவள் கூறியதை கேட்டு மெலிதாக புன்னகைத்தவன், “பணம் ஜஸ்ட் பீஸ் ஆஃப் பேப்பர்னு நெனச்சாலே நமக்கு அது பெரிய விஷயமா தெரியாது. மத்தவங்களுக்கு உதவி செஞ்சு அவங்க சந்தோஷப்படுறத பார்க்கும் பொழுது நமக்கு கிடைக்கிற ஆத்ம திருப்தி எவ்வளவு பணம் சேர்த்து வச்சாலும் கிடைக்காது இனியாள்” என்றான் உண்மையிலேயே உணர்ந்து.
அவனுக்கு அவளும் ஆமோதிப்பாக தலையசைக்கவும். அவளை அழைத்துக் கொண்டே வீட்டிற்கு புறப்பட்டான்.
மறுநாளே விக்னேஷின் தாயை சந்தித்து பேசிய பாரிவேந்தன் விக்னேஷ் மற்றும் ரம்யாவின் திருமண தேதியை குறித்து விட்டே அங்கிருந்து புறப்பட்டான்.
ரம்யாவிற்கு தாங்களே செலவு செய்து திருமணம் முடித்துக் கொடுப்பதாகவும் கூறிவிட்டான்.
எனவே, விக்னேஷின் தாய்க்கும் மறுக்க காரணம் இல்லாமல் போக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டார்.
இப்படியே நாட்கள் மாதங்களாக உருண்டோட. விக்னேஷ் மற்றும் ரம்யாவின் திருமணமும் இனிதே நிறைவடைந்தது.
பாரிவேந்தனும் அவனின் குடும்பத்தாரும் தான் அனைத்தையும் முன்னிருந்து நடத்திக் கொடுத்தனர்.
நாளுக்கு நாள் இனியாளின் மனதிற்குள் பாரிவேந்தனின் குடும்பத்தின் மேல் இருக்கும் மதிப்பும், மரியாதையும் கூடிக் கொண்டே போனது.
கொஞ்சம் கொஞ்சமாக இனியாளும் அந்த சூழலுக்குள் தன்னை நன்கு பொருத்திக் கொண்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை இனியாளுக்கு கல்லூரி விடுமுறை. ஆனாலும், எதையோ படித்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள்.
முத்துலட்சுமி யாழ் நிலாவுடன் விளையாடிக் கொண்டிருக்க.
அரவிந்தும், விதுஷாவும் தங்களின் திருமண பத்திரிகையை ஏந்திக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
“அடடே! என்ன ரெண்டு பேரும் ஜோடியா வந்து இருக்கீங்க.. வாங்க வாங்க” என்று அவர்களை வரவேற்று அமர வைத்தார் முத்துலட்சுமி.
இனியாள் அவர்களுக்கு குடிக்க பழச்சாறு கொண்டு வர வேண்டி சமையலறைக்குள் நுழைந்து விட.
“வா டா இப்ப தான் ரெண்டு பேருக்கும் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா?” என்று இருவரிடமும் கேட்டவாரே பாரிவேந்தன் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
“எங்கடா கல்யாண வேலையில் கொஞ்சம் பிஸியாகிட்டேன்” என்ற அரவிந்தின் முகமோ அத்தனை பொலிவாக இருந்தது.
தன் காதல் கை கூடிய சந்தோஷம், மகிழ்ச்சி அவனின் முகத்திலேயே அப்பட்டமாக பிரதிபலித்தது.
“என்னப்பா பத்திரிகை எல்லாம் அடிச்சு வந்திடுச்சா?” என்று முத்துலட்சுமி விசாரிக்க.
அடுத்து திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் சற்று நேரம் போய்க் கொண்டிருந்தது. அதற்குள் இனியாளும் அவர்களுக்கு அருந்துவதற்காக பழச்சாறை கொண்டு வந்து நீட்டவும்.
அவளை பார்த்த அரவிந்திற்கோ மனம் பிசைய குற்ற உணர்ச்சியாக இருந்தது.
தன் காதல் கை கூட வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றது எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் சிந்திக்காமல் சுயநலத்தோடு அவன் பல விஷயங்களை செய்து விட்டான்.
அதன் விளைவு இப்பொழுது அவனின் கண் முன்னே வளர்ந்து நிற்பதை பார்த்தவனிற்கோ குற்ற உணர்ச்சி மேலோங்கியது.
முகத்தை எதிர்நோக்கவே சங்கடமாக இருந்தது. அவள் நீட்டிய பழச்சாறை வாங்கியவன் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
இனியாள் நீட்டிய பழச்சாறை புன்னகையோடு வாங்கிக்கொண்ட விதுஷா பாரி வேந்தனை பார்த்து, “சொல்லிட்டியா?” என்பது போல் தன் தலையை ஆட்டவும்.
அவனும் பதறிக்கொண்டு ‘இல்லை’ என்று தலையாட்டினான்.
இவள் ஏதேனும் அவளிடம் உளறிவிடுவாளோ என்ற பயத்தினாலேயே ஏற்பட்ட பதட்டம் அது.
விதுஷா மற்றும் அரவிந்தின் திருமணம் முத்துலட்சுமிக்குமே மகிழ்ச்சி தான். ஆனாலும், அவருக்குள் சிறு வருத்தம் எட்டிப் பார்க்க தான் செய்தது.
அவர் நினைத்தது ஒன்று, ஆனால் நடந்ததோ வேறாகி போய்விட்டதல்லவா..
தன் மகனுக்கு விதுஷாவை திருமணம் முடித்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால், விதுஷா இப்பொழுது அரவிந்தை மணந்து கொள்ள போகிறாள்.
அதுமட்டுமா.. தன் மகன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வேறு இருக்கிறானே..
அவரின் பார்வை எவ்வளவு முயற்சித்தும் கட்டுப்படுத்த முடியாமல் வருத்தத்தோடு பாரிவேந்தனின் மேல் படிந்தது.
அதை அவன் கவனித்தானோ இல்லையோ.. இனியாள் சரியாக கவனித்தாள்.
அதிலும், அவரின் கண்களில் இழைந்தோடும் வருத்தம் அவளுக்கும் பெரும் வருத்தத்தை கொடுத்தது.
‘எத்தனையோ பேருக்கு இவர்கள் உதவி செய்கிறார்கள். அவருக்கு இருக்கும் ஒரே மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது ஒரு அன்னையாக அவரின் ஆசை தானே.. இதை ஏன் பாரிவேந்தன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்’ என்று எண்ணியவள் முத்துலட்சுமிக்காக வருந்தினாள்.