இனிதே திருமணம் நல்ல முறையில் நடந்தேறி வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டனர்.
முத்துலட்சுமியிடம் ஒரு வித அமைதி..
பாரிவேந்தன் தான் காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்தான்.
அவன் அருகில் இருக்கும் இருக்கையில் தான் முத்துலட்சுமி அமர்ந்திருந்தார்.
இனியாள் வழக்கம் போல் பின் இறுக்கையில் யாழ் நிலாவுடன் அமர்ந்திருந்தாள்.
காரே அமைதியாக பயணப்பட்டுக் கொண்டிருந்தது.
“கல்யாணம் ரொம்ப கிராண்டா நடந்துச்சு இல்லம்மா.. விதுஷா பேரண்ட்ஸ்க்கு ரொம்ப சந்தோஷம். கேட்டரிங் கூட நான் தான் புக் பண்ணினேன். ஏதோ நம்ம வீட்டிலேயே ஒரு கல்யாணம் நடந்த மாதிரி பீல் ஆகுது” என்று அவன் பாட்டிற்கு கதைத்துக் கொண்டே வர.
முத்துலட்சுமியிடம் அமைதி மட்டுமே நிலவிக் கொண்டு இருந்தது.
பாரிவேந்தனும் அப்பொழுது அதை சரிவர கவனிக்கவில்லை.
பிறகு, மூவரும் வீடு வந்து சேரவும், “நீ எப்போ தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க பாரி?” என்றார் நா தழுதழுக்க.
“என்னம்மா இப்போ என்ன ஆச்சு?”.
“எனக்கு உன் வாழ்க்கையை நெனச்சு ரொம்ப கவலையா இருக்கு பாரி. அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது? எனக்கு உன்ன விட்டா வேற யாருப்பா இருக்கா.. எனக்கு இருக்கிறது நீ ஒரே மகன் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்க முடியலையேன்னு தினம் தினம் நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரியுமா” என்று உருக்கமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மயங்கி சரிந்தார்.
திடீரென அவர் மயங்கி விடவும் பதட்டமாகிய இனியாளும், பாரிவேந்தனும் அவருக்கு இருபுறமும் ஓடி வந்து எழுப்ப முற்பட்டனர்.
இனியாள் ஓடிச் சென்று தண்ணீரை கொண்டு வந்து அவரின் முகத்தில் தெளிக்கவும், அவருக்கோ கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியது. ஆனாலும், துவண்டு போய் சோர்வாக காணப்பட்டார்.
அவரை கொண்டு சென்று அறையில் படுக்க வைத்து அவர் அருகிலேயே அமர்ந்த பாரி வேந்தன், “என்னாச்சும்மா.. நீங்க ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க? நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொல்றேன்.. நான் தான் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் நீங்க என்னை நினைச்சு இவ்வளவு கவலைப்படுறீங்க..”.
“கவலைப்படாம வேற என்ன பண்ண சொல்ற.. நானும் எவ்வளவு நாளா உன்கிட்ட கேக்குறேன். ஆனா, நீ கொஞ்சம் கூட என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்குறியே.. எனக்கு இது எவ்வளவு வருத்தமா இருக்குன்னு தெரியுமா..”.
“அம்மா ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க.. என்னால இப்போ எதையும் உங்ககிட்ட வெளிப்படையா சொல்ல முடியாத சூழ்நிலையில் நான் இருக்கேன்” என்று அவன் தவிப்பாக கூறவும்.
“அப்படி என்ன பெரிய சூழ்நிலை? எதுவா இருந்தாலும் என்கிட்ட வெளிப்படையா பேசுப்பா.. எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா.. உனக்கும் என்னை விட்டா வேற யாரு இருக்கா.. என்கிட்ட ஏன் மறைக்கிற? எதுவா இருந்தாலும் பரவாயில்ல நீ என்கிட்ட வெளிப்படையா சொல்லு நீ சொல்றத கேட்டு எனக்கு எதுவும் ஆகாது. நான் நல்லா தான் இருக்கேன். உன்னை நினைச்சு நினைச்சு தினம் கவலைப்பட்டு, நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறன்னு காரணமே தெரியாம வருத்தப்பட்டுக்கிட்டு இருக்குறதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்கிறேன். நீ சொல்ற காரணத்தை கேட்டு நான் ஒன்னும் செத்து விட மாட்டேன்” என்றார் அவனிடம் இருந்து உண்மையை வாங்கிவிடும் முனைப்பில்.
“அம்மா! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?”.
“என்னை என்ன தான் பண்ண சொல்ற.. நானும் உன்கிட்ட எப்படி எல்லாமோ கேட்டு பாத்துட்டேன். ஆனா, நீ என்கிட்ட சொல்ல மாட்டேங்குறியே..” என்று கண்களில் நீரோடு ஆதங்கமாக அவர் கேட்கவும்.
“அம்மா சொன்னா புரிஞ்சுக்கோங்க மா.. நிச்சயமா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்று கெஞ்சாத குறையாக அவன் தன் தாயிடம் மன்றாடவும்.
அவன் சற்றும் எதிர்பாராமல் அவனின் கையை பிடித்து தன் தலையின் மீது வைத்த முத்துலட்சுமி, “என் மேல சத்தியம்.. இப்போவே எல்லா விஷயத்தையும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் நீ என்கிட்ட வெளிப்படையா சொல்லணும். அப்படி என்ன தான் நடக்குது.. எதுக்காக நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற?”.
நல்ல வேளையாக யாழ்நிலா அழத் தொடங்கவும் அவளை தூங்க வைக்க வேண்டி தூக்கிக்கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள் இனியாள். அது பாரிவேந்தனுக்கும் இப்பொழுது வசதியாகி போனது.
இனியும் தன் தாயிடம் எதையும் மறைக்க முடியாது என்று எண்ணியவன் பெருமூச்சு விட்டவாறு, “சரி மா சொல்றேன்” என்று அனைத்தையும் கூற தொடங்கினான்.
ஆனால், பாவம்! இவன் அறியாத விஷயம் என்னவென்றால் முத்துலட்சுமி பாரிவேந்தனின் கையைப் பிடித்து தன் தலையில் வைக்கும் பொழுதே அறை வாயிலுக்கு வந்து விட்டாள் இனியாள்.
இவர்களுக்குள் காரசாரமாக உரையாடல் சென்று கொண்டிருப்பதை பார்த்தவள் அறைக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்று விட்டாள்.
இதை அறியாத பாரிவேந்தனோ தன் வாழ்க்கையின் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வு தொடக்கம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு வரை ஒன்று விடாமல் அனைத்தையும் தன் தாயிடம் கூறி முடித்தான்.
அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியாக தன் வாயின் மீது கையை வைத்த முத்துலட்சுமி, “என்ன சொல்ற பாரி?” என்று நம்ப முடியாத பார்வையோடு அவனை பார்த்து கேட்கவும்.
உண்மையில் அவரை விட பெரிதாக அதிர்ந்தது என்னவோ இனியாள் தான்..
அவளால் சற்றும் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
எவ்வளவு பெரிய விஷயம்..
தன் இத்தகைய நிலைக்கு யார் காரணம் என்று தெரியாமல் எத்தனை குழப்பத்தோடு இருந்தாள்.
அதுவும் தன் வாழ்க்கையில் அவள் எதை நினைத்து பெரிதாக குழம்பிக் கொண்டு இருந்தாளோ அவளுக்கு தேவையான விடை இப்பொழுது கிடைத்துவிட்டது.
ஆனாலும், அதை எண்ணி நிம்மதி அடைய முடியாத நிலை.
அப்படி என்றால் தன்னுடைய இத்தகைய அவநிலைக்கு காரணம் பாரிவேந்தன் தானா..
அவளால் சற்றும் ஜீரணிக்கவே முடியவில்லை..
நிலை கொள்ளவும் முடியவில்லை..
ஏன் என்றே தெரியாமல் கண்கள் தானாக கலங்கி கண்ணீரை சுரக்க தயாரானது.
அவளின் மனதிற்குள் அப்படி ஒரு வலி..
இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட இந்த உண்மையை இவன் தன்னிடம் கூறவில்லையே என்ற ஏமாற்றம் வேறு ஒரு பக்கம்..
“இதையெல்லாம் ஏன் பாரி இத்தனை நாள் என்கிட்ட சொல்லாம இருந்த?”.
“எப்படிமா சொல்றது? எனக்குமே ரொம்ப அதிர்ச்சியா தான் இருந்தது. அன்னைக்கு நான் ஏன் இனியாள்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கே சொல்ல முடியல. ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. அதுவும் இல்லாம ரொம்ப அசிங்கமா இருந்துச்சு மா. இதை போய் நான் எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும். நான் தான் அன்னைக்கு அப்படி இருந்தேன்னா.. அவளும் அன்னைக்கு சுய நினைவில்லாமல் இருந்தா.. அதுக்கான காரணம் என்னன்னு எனக்கு அன்னைக்கு தெரியல.
அதுக்கப்புறம் ஒரு நாள் இனியாள் என்கிட்ட அவளுடைய கடந்த காலத்தை பற்றி சொல்லும் பொழுது தான் எனக்குமே தெரிய வந்தது. அவளோட கூட படிச்ச பொண்ணு அவளுக்கு தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து இருக்கா.. அதனால தான் அன்னைக்கு நடந்த எதுவுமே அவளுக்கு நினைவு இல்ல. இப்ப போய் நான் அவகிட்ட நடந்த உண்மை எல்லாத்தையும் சொன்னா அவ இங்க இருக்க சம்மதிப்பாளானு எனக்கு பயமா இருந்துச்சு.
ஒருவேளை, இங்க இருக்க முடியாதுன்னு அவ குழந்தையுடன் கிளம்பி போயிட்டா.. அப்புறம் அவ எங்கம்மா போவா? ஏற்கனவே, என்னால் அவ நிறைய கஷ்டத்தை அனுபவிச்சிருக்கா.. அவளோட குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருக்கா.. ஆசைப்பட்டு எடுத்த படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிட்டு இருக்கா.. நான் ஏற்கனவே பல பாவம் என்னை அறியாமலே செஞ்சிருக்கேன்.
என்ன தான் என்னை அறிந்து நிறைய நன்மைகளை நான் செஞ்சிருந்தாலும், எனக்கே தெரியாம பெரிய பெரிய பாவங்களையும் நான் செஞ்சிருக்கேன். இப்போ தெரிஞ்சு என் முன்னாடியே இந்த வீட்டை விட்டு வெளியே போய் அவ கஷ்டப்பட்டானா அந்த பாவமும் என்னை தான் வந்து சேரும். அதெல்லாம் வேண்டாம்னு தான் நான் உங்க யார்கிட்டயும் எந்த உண்மையையும் இதுவரைக்கும் சொல்லல”.
“ஏன் பாரி அப்படி எல்லாம் நினைக்கிற? உன்னுடைய சூழ்நிலைய நாம இனியாள் கிட்ட எடுத்து சொல்லுவோம். அதை அவ கண்டிப்பா புரிஞ்சுப்பா.. இனியாள் ரொம்ப நல்ல பொண்ணு”.
“அது எனக்கும் தெரியும் மா.. அவ ரொம்ப நல்ல பொண்ணு தான். ஆனா, அவ இழந்தது ஒன்னும் சின்னது இல்லை. அவளுடைய இழப்பு ரொம்பவே பெருசு. எனக்காவது மனசளவுல கஷ்டம், குற்ற உணர்ச்சி மட்டும் தான். ஆனா, அவளுக்கு உடம்பு அளவுளையும் கஷ்டம்.. மனசளவுலயும் மொத்தமா நொறுங்கி போயிட்டா.. அவளை முதல்ல சரி பண்ணனும்னு நெனச்சேன். அவ ஆசைப்பட்ட படிப்பை படிச்சு முடியணும். அதுக்கு அப்புறமா நடந்த விஷயத்தை எல்லாம் அவகிட்ட பொறுமையா எடுத்துச் சொல்லலாம்னு நினைச்சேன். அதனால தான் இவ்வளவு நாள் யார்கிட்டயும் நான் இதை வெளியில சொல்லல.. கோவத்துல அவ குழந்தையோட இங்க இருந்து வெளியில் போனாலும் ரொம்பவே கஷ்டப்படுவா.. ஆனா, அதை நான் சொன்னா அவ அதை ஏத்துக்க மாட்டா.. போறேன்னு தான் நிப்பா.. அப்படி அவ எந்த முடிவும் எடுத்துடக் கூடாதுனு தான் நான் இவ்வளவு நாள் சொல்லாம இருக்கேன்”.
இவன் கூறிய அனைத்தையும் கேட்டவளிற்கோ கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய தொடங்கியது.
அவன் கூறியதில் இருந்தே அவன் மேல் எந்த தவறும் இல்லை என்பது புரிந்தது..
இதில் யாரை குறை கூறுவது..
இப்படி எந்த தவறும் செய்யாத இருவரின் வாழ்க்கையில் விளையாடிய விதியின் மீது தான் குறை கூற முடியும்.
நிற்க கூட முடியாமல் துவண்டு போனவள் அருகில் இருந்த சுவற்றை அழுத்தமாக பற்றியவாறு அதில் தலை சாய்ந்து நின்றாள்.
கண்ணீர் மட்டும் குறைந்த பாடில்லை..
“என்ன நடந்தாலும் சரி இனி இனியாள் தான் இந்த ஜென்மத்துல என்னோட பொண்டாட்டி. இத நான் அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன். இவ எங்க இருக்கானு தெரியாம ஒரு வருஷமா தேடிக்கிட்டு இருந்தேன். கடவுளா பார்த்து தான் இப்போ இவளை என் கண்ணில் காட்டி இருக்காரு.. என்ன நடந்தாலும் சரி மா அவ தான் இந்த வீட்டோட மருமக.. யாழ் நிலா தான் உங்க பேத்தி.. போதுமா.. நீங்க ஆசைப்பட்ட மாதிரி உங்களுக்கு பேர புள்ள வந்து ரொம்ப மாசமாகுது. என்னை மன்னிச்சிடுங்கமா.. எனக்கு எப்படி எல்லாம் நீங்க கல்யாணம் பண்ணி
பாக்கணும்னு ஆசைப்பட்டீங்கனு எனக்கு தெரியாது. ஆனால், என்னோட வாழ்க்கை இனி இதான்” என்றான் அழுத்தமாக குரலில்.