என் பிழை‌ நீ – 38

4.8
(30)

பிழை – 38

உண்மையை கூற போனால் ஒரு தாயாக அவரின் மனம் வெகுவாக வருந்தியது தான்.

‘தன் மகனுக்கு எப்படி எல்லாம் திருமணம் நடந்திருக்க வேண்டும்’ என்று எண்ணியவர் கண்ணீரை சுரந்தார்.

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவர் தன் வருத்தத்தை பார்த்து மேலும் தன் மகனுக்கு குற்ற உணர்ச்சியாகி விடுமோ என்ற பயத்தோடு, “சரி விடுப்பா.. நடந்தது நடந்து போச்சு. இனியாள் கிட்ட நான் பேசுறேன். நீ சொன்ன மாதிரி இனியாள் தான் இந்த வீட்டோட மருமக.. யாழ்நிலா தான் என்னுடைய பேத்தி.. இனியாள் ரொம்ப நல்ல பொண்ணு அவள மாதிரி ஒரு மருமக நம்ம வீட்டுக்கு வர நாம ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். எனக்கு சந்தோஷம் தான்” என்றார் புன்னகையோடு.

அவரின் புன்னகையை பார்த்த பிறகு தான் பாரி வேந்தனுக்கும் மனம் சற்று லேசானது.

ஆனாலும், “நீ என்ன எல்லாம் சொல்லி என்னை ஏமாற்றி இருக்க இல்ல.. இனியாளுடைய வீட்டுக்காரர் வெளிநாட்டில் இருக்காருன்னு சொன்னியே.. நான் கூட அப்ப நீ சொன்னதெல்லாம் உண்மைன்னு அப்படியே நம்பிட்டேன். உனக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா பாரி” என்று தன் மகனிடம் அவர் பரிகாசம் செய்யவும்.

“எனக்கு அப்போ வேற என்ன சொல்றதுன்னு தெரியல மா.. அவளையும் சமாளிக்கணும் உங்களையும் சமாளிக்கணும்.. வேற வழியில்லாம தான் இப்படி எல்லாம் சொன்னேன். சாரி மா” என்றான் அசடு வழிந்து கொண்டே.

“என் பையனை இப்படி பார்த்து எத்தனை மாசம் ஆகுது. உன்னை இப்படி பழைய மாதிரி பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு”.

“சரிமா, நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க திரும்ப இத பத்தி எதுவும் யோசிச்சு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க”.

“இனிமே நான் ஏன் பா இதை பத்தி யோசிக்க போறேன். எனக்கு தான் என் மருமகளும் பேரப்பிள்ளையும் கிடைச்சிட்டாங்களே.. இனிமேல், அவங்களோட சந்தோஷமா வாழ்வேன்”.

மேலும், சற்று நேரம் அமர்ந்து அவருடன் பேசிவிட்டே மாத்திரையை கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

பாரிவேந்தன் இந்நேரத்தில் இனியாளை இங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த விழிகளே கூறியது.

அவளின் சிவந்து கிடந்த விழிகளே சொல்லாமல் சொல்லியது அவள் இத்தனை நேரமும் அழுது இருக்கிறாள் என்பதை…

“இனியாள் என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றவனின் இதயமோ வழக்கத்திற்கு மாறாக படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

‘எங்கே தான் பேசிய அனைத்தையும் அவள் கேட்டிருப்பாளோ’ என்று சரியாக கணித்தும் இருந்தான்.

“அப்போ.. எல்லாத்துக்கும்.. நீங்க தான்.. காரணம் இல்ல..” என்று அழுகையில் திக்கியபடி வந்தது அவளின் வார்த்தைகள்.

ஆம், கேட்டுவிட்டாள் தான்…

அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்பது அவனுக்கு புரியவும், எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

“சொல்லுங்க டாக்டர்.. அப்போ இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணமா.. நீங்க என்ன காரணம் சொன்னாலும் என்னால இதை கொஞ்சம் கூட ஏத்துக்கவே முடியல. எப்படி இப்படி எல்லாம் செய்ய உங்களுக்கு மனசு வந்துச்சு?” என்று ஆதங்கமாக தான் கேட்டாள்.

“ஷ்ஷ்…” என்று தன் வாயின் மீது விரலை வைத்து காட்டியவன்.

அறை கதவை சாற்றி விட்டு அவளின் கையை பற்றி அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான்.

அறைக்குள் நுழைந்ததும் அவனின் கையில் இருந்து தன் கையை வெடுக்கென்று பிரித்துக் கொண்டு இரண்டு அடி அவள் தள்ளி நிற்கவும்.

அவனுக்கோ இதயத்தில் சுருக்கென்ற வலி..

“நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ இனியாள்.. நான் ஒன்னும் வேணும்னே இப்படி எல்லாம் செய்யல.. அன்னைக்கு நான் கேரளாவுக்கு வந்ததே ஒரு கான்பரன்ஸ்காக தான். அன்னைக்கு எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியல.. ஏதோ பேய் பிடிச்ச மாதிரி அப்படி எல்லாம் நடந்துகிட்டேன். நான் என்ன தான் காரணம் சொன்னாலும் உனக்கு இது எவ்வளவு பெரிய இழப்புனு என்னால புரிஞ்சுக்க முடியுது. என்னை மன்னிச்சிடு.. எனக்கு இதை தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியல” என்றான் குற்ற உணர்ச்சியோடு தவிப்பாக.

இப்படி ஒரு நிலையை என்றேனும் ஒருநாள் கடந்தாக வேண்டும் என்பது அவனுமே முன்னதாக அறிந்த விஷயம் தான்.

ஆனால், இவ்வளவு விரைவில் அந்த காலம் வரும் என்று அவன் சிந்தித்தும் பார்க்கவில்லை. இன்னும் சற்று காலங்கள் கழித்து தான் இனியாளிடம் இதைப் பற்றி விளக்கி கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், இன்றோ எதிர்பாராத விதமாக அவளே அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டாள்.

அவளுக்கோ எவ்வளவு துடைத்தாலும் கண்களில் கண்ணீர் நிற்க மாட்டேன் என்கின்றது..

“இங்க பாரு, இது எல்லாமே ஆக்சிடென்டலா நடந்தது தான். எதுவும் பிளான் பண்ணி நடக்கல.. ஒரு பொண்ணு அவளுடைய சுயநினைவு இல்லாத இருக்கும் பொழுது அவளோட ஃபிசிகல் ரிலேஷன்ஷிப் வச்சிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் மோசமானவன் எல்லாம் கிடையாது. இதுவரைக்கும் நான் எந்த ஒரு பொண்ணையும் தப்பான பார்வையில் பார்த்தது கூட கிடையாது. விதுஷா என்னுடைய சைல்ட்வுட் பிரிண்ட். அவகிட்ட கூட நான் இதுவரைக்கும் தப்பா ஒரு வார்த்தை பேசினதும் கிடையாது, தப்பா ஒரு தடவை நடந்து கொண்டதும் கிடையாது. ஆனால், அன்னைக்கு நமக்குள்ள நடந்தது முழுக்க முழுக்க அன்பிலாண்டு தான். என்னையும் மீறி தான் நான் அன்னைக்கு உன்கிட்ட அப்படி எல்லாம் நடந்துகிட்டேன். தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ.. நான் ஒன்னும் தப்பானவன் இல்ல டி..” என்னும் பொழுதே அவனின் குரல் கம்மியது.

அவனிடம் மெல்லிய பதட்டம் கலந்த‌ பரிதவிப்பு அப்பட்டமாக தெரிந்தது.

எப்படி அவளுக்கு தன் நிலையை விளக்குவது என்று அவனுக்கு சற்றும் விளங்கவில்லை.

எங்கே விட்டு சென்று விடுவாளோ என்ற பதட்டம் ஒரு பக்கம்..

அவளிடம் தன்னை பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு ஒரு பக்கம் என தவிர்த்துப் போய் நின்று இருந்தான்.

அவனின் உணர்வுகள் இவளுக்கு புரிந்தாலும் கூட இதை இலகுவாக கடந்து செல்ல அவளால் முடியவில்லை.

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இன்னல்களை எல்லாம் சந்தித்து விட்டு வந்திருக்கிறாள். அதிலும், தன் தந்தையையே இழந்திருக்கிறாளே.. இதைவிட பெரிய இழப்பு அவளுக்கு இருக்கின்றதா என்ன?

மேலும், யார் தந்தை என்று தெரியாமலே ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுத்து இத்தனை மாதங்கள் வளர்த்திருக்கிறாள். இதெல்லாம் அவளுக்குள் எத்தனை அழுத்தத்தையும், வேதனையையும் கொடுத்திருக்கும்.

என்ன தான் பாரி வேந்தனுக்கு இது அனைத்துமே புரிந்தாலும், அவளால் அவனை அவ்வளவு இலகுவில் மன்னிக்க முடியவில்லை.

“உங்களை இவ்வளவு நாள் நான் எவ்வளவு நல்லவர்னு நினைச்சேன் தெரியுமா.. ஆனா, உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு விஷயத்தை நான் சத்தியமா எதிர்பார்க்கல.. அதெப்படி உங்களால் உங்களுடைய உணர்ச்சிகளை கூட கண்ட்ரோல் பண்ண முடியாமல் போகும். இதனால ஒரு பொண்ணோட வாழ்க்கை நாசமா போக போகுதுன்றது கூட உங்களுக்கு புரியலையா.. வெளியில் எல்லாம் நல்லவர் வேஷம் போட்டுட்டு சந்தர்ப்பம் கிடைத்ததும் இப்படி என் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க இல்ல” என்று கோபத்தில் என்ன பேசுகிறோம், ஏது பேசுகிறோம் என்பதை கூட உணராமல் கண்டமேனிக்கு திட்ட தொடங்கி விட்டாள்.

அவளின் வார்த்தை ஒவ்வொன்றும் இவனுக்குள் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, குற்ற உணர்வில் மருகி கொண்டிருந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் வேறு தலை நிமிர விடாமல் செய்தது.

தன் முகத்தை அழுத்தமாக துடைத்தவள், “சரி உங்களுக்கு தான் எல்லா உண்மையும் தெரியும் இல்ல.. என்னை பார்த்ததுமே எதுக்காக இதையெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லல? இத்தனை நாளும் என் குழந்தையோட அப்பா யாருன்னு கூட தெரியாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா.. இது எல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லணும்னு கூட உங்களுக்கு தோணலையா? உங்க மேல தான் எந்த தப்பும் இல்லையே.. அப்போ இதை எல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியது தானே ஏன் சொல்லல?”.

“சொன்னா நீ இங்க இருந்து போயிடுவேன்னு நினைச்சேன் டி. எப்படி சொல்ல சொல்ற? என்னால நீ எவ்வளவு இழந்து இருக்கேன்னு அன்னைக்கு நீ சொல்லும் பொழுது தான் எனக்கே தெரிஞ்சது. அதையெல்லாம் கேட்டதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. உண்மையிலேயே மனசளவுல நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன் டி. நான் செஞ்ச தப்பை எல்லாம் திரும்ப சரி பண்ணனும்னு நினைச்சேன். அதான் நீ விட்ட படிப்பை உன்ன முழுசா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதை முடிச்சதும் இந்த உண்மை எல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு தான் டி நினைச்சேன். உன்கிட்ட மறைக்கணும்னு நான் நினைக்கல.. இந்த உண்மை எல்லாம் உன்கிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் நினைச்சேன்”.

“கல்யாணமா.. அதுவும் உங்களோட.. அது இந்த ஜென்மத்துல நடக்காது” என்று அழுத்தமாக அவள் கூறவும்.

ஒரு வகையில் பாரி வேந்தனுக்கு அவளை முன்னதாகவே ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டதை எண்ணி இப்பொழுது பெரும் நிம்மதியாக இருந்தது.

இதை நினைத்து தானே அவன் முன்னமே பயந்தான். எங்கே தன்னை திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக்கொள்ள மாட்டாளோ என்று தானே அவன் அஞ்சினான்.

அவன் நினைத்தது போலவே அவன் பயந்தது போலவே இவளும் இதோ கூறிக் கொண்டிருக்கிறாளே‌..

அவளுக்குள் அத்தனை உணர்வுகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

அழுகை, ஆத்திரம், ஏமாற்றம், வருத்தம் என பல உணர்வுகளின் கலவையாய் அவனின் முன்பு நின்று கொண்டு இருந்தாள்.

உணர்ச்சி பெருக்கில் முகம் எல்லாம் சிவந்து போய் கண்களும் சிவந்து இதழ்களோ அழுகையில் துடித்துக் கொண்டிருந்தது.

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எதை பற்றியும் சிந்திக்கும் திறன் கூட இல்லை.

“இனி என்னால் ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. என் லைஃப் இப்படி ஆனதுக்கு காரணமே நீங்க தான். ஆனா, உங்களுடைய ஹெல்ப்பிலேயே இத்தனை நாள் நான் இருந்திருக்கிறேன்னு நினைக்கும் பொழுது எனக்கு என்னை நினைச்சே ரொம்ப அசிங்கமா இருக்கு. நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்கேன் இல்ல.. எல்லாருமே என் லைஃபை நல்லா யூஸ் பண்ணி இருக்கீங்க.. அது எதையுமே புரிஞ்சுக்க முடியாமல் நான் தான் ஒவ்வொரு தடவையும் முட்டாள் ஆகி இருக்கேன். இனியும் நான் நிச்சயமா அப்படி இருக்க மாட்டேன்” என்றவாறு கோபமாக அவள் வெளியே செல்ல முற்படவும்.

அவளின் கையைப் பிடித்து தடுத்தவன், “எங்கடி போக போற?” என்றான் சற்று அதட்டலாகவே.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!