என் பிழை‌ நீ – 39

4.9
(25)

பிழை – 39

“எங்க வேணும்னாலும் போவேன். ஆனா, நிச்சயமா இனி இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன். உங்களுடைய உதவியும் எனக்கு தேவையில்லை” என்று அவனிடமிருந்து தன் கையை விடுவிக்க முயற்சித்தாள்.

ஆனால், அதுவோ சற்றும் அவனிடமிருந்து பிரிக்க முடியாமல் அழுத்தமாக பற்றப்பட்டு இருந்தது.

“கையை விடுங்க டாக்டர்”.

அவளுக்கு மறுப்பாக தலையசைத்தவன், “இனி உன்னால எங்கேயும் போக முடியாது. தெரியாமல் உன் விஷயத்தில் பல தப்பு செஞ்சிட்டேன். இப்போ தெரிஞ்சே மறுபடியும் தப்பு செய்ய நான் தயாரா இல்லை. நான் செஞ்சதை சரி செய்ய தான் பார்க்கிறேன். உனக்கு என் மேல எவ்வளவு கோபமா இருந்தாலும் அதை என்கிட்ட காட்டு.. என்கிட்ட சண்டை போடு.. திட்டு, அடி என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.. ஆனா, இங்க இருந்து போறேன்னு மட்டும் சொல்லாதே.. உன்னையும் யாழ் நிலாவையும் விட்டுட்டு என்னால இருக்க முடியாதுடி” என்றான் மனதை உருக்கும் குரலில்.

“என்ன சரி செய்ய போறீங்க.. ஆங்.. உங்களால என்ன சரி செய்ய முடியும். இனி நீங்க எவ்வளவு முயற்சித்தாலும் எதுவுமே சரி செய்ய முடியாது. எல்லாமே முடிஞ்சு போச்சு.. இதுக்கு அப்புறம் என் வாழ்க்கையை நான் தனியா தான் வாழனும்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். இந்த லைஃப்ல எனக்கு எந்த துணையும் தேவையில்லை. என்னை பாத்துக்கவும், என் பொண்ண பாத்துக்கவும் எனக்கு தெரியும்”.

அவள் பேச பேச அவனின் பிடியோ இறுகிக் கொண்டே போனது.

“கையை.. விடுங்க..” என்றாள் வலியில் சற்று முகத்தை சுழித்தவாறு.

அப்பொழுதும் அவனின் கை சற்றும் விலகவில்லை.

“அப்போ இங்க இருந்து போக தான் போற அப்படி தானே?” என்றான் அழுத்தமாக.

அவளோ அவனை பார்த்துக் கொண்டே ‘ஆமாம்’ என்பது போல் தலையசைக்கவும்.

சட்டென்று அவளின் கையை விடுவித்த பாரிவேந்தன் தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, “சரி, போ.. எங்க போகணும்னு நினைக்கிறியோ நீ தாராளமா போகலாம். ஆனால், என் குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு நீ எங்க வேணும்னாலும் போ” என்று தன் கடைசி வாக்கியத்தை மட்டும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்து கூறினான்.

அவனின் வார்த்தையில் தடுமாறிய இனியாள், “என்ன.. என்ன பேசுறீங்க.. அவ என்னோட பொண்ணு..”.

அவளை நோக்கி இரண்டு அடி முன் வைத்த பாரிவேந்தன், “உனக்கு மட்டுமல்ல.. அவ நம்ம பொண்ணு!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவனின் வார்த்தையில் இவளுக்குள் பெரும் தடுமாற்றம் ஏற்பட, “சரி, இருந்துட்டு போகட்டும்.. தெரியாமல் நடந்த விஷயம் தானே அது.. தெரியாமல் நடந்ததாகவே இருக்கட்டும். எங்களுக்கு நீங்க தேவையில்லை. எங்கள பாத்துக்க எங்களுக்கு தெரியும். நீங்க உங்க லைஃபை மட்டும் பாருங்க” என்றவாறு மீண்டும் வெளியேற கதவின் அருகே சென்றாள்.

“ஒரு நிமிஷம்” என்ற பாரிவேந்தன் வேகமாக தன் அலமாரியை திறந்து அதற்குள் இருந்த ஒரு பைலை கொண்டு வந்து அவளின் முகத்தருகே நீட்டினான்.

அவன் நீட்டுவதை புரியாமல் அவள் பார்க்கவும்.

“பிரிச்சு பாரு” என்றவனின் பார்வையோ அவளின் முகத்திலேயே நிலைத்திருக்க.

அவளோ அதற்குள் என்ன இருக்கப் போகிறதோ என்ற பதட்டத்தோடு தன் நடுங்கும் கைகளால் அதனை வாங்கி பிரித்துப் பார்த்தாள்.

முதலில் இருந்தது குழந்தையின் டி என் ஏ ரிப்போர்ட்.

அதை பார்த்தவளின் விழிகள் பெரிதாக விரிந்து கொள்ள..

“குழந்தை பிறந்த சமயமே நான் இந்த டெஸ்ட் பண்ணிட்டேன். இது என்னுடைய குழந்தை தான்னு சொன்னா அதை நீயே நம்புவியானு எனக்கு தெரியாது. ஏன்னா, அன்னைக்கு நீ தூங்கிகிட்டுல இருந்த.. அதான் ஒரு சேஃப்டிக்கு யாழ்நிலா என்னுடைய குழந்தை தான்னு ப்ரூவ் பண்றதுக்காக டி என் ஏ ரிப்போர்ட் எடுத்து வச்சேன்” என்று அவள் கேட்காமலேயே தன்னிலை விளக்கத்தை கொடுத்தான் பாரிவேந்தன்.

அதை வைத்துவிட்டு அடுத்த பேப்பர்களை பார்த்தவளின் இதயமோ ஒரு நொடி நின்று துடித்தது.

ஆம், அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்ததற்கான சான்றிதழ் தான் அந்த பைலினுள் வீற்றிருந்தது.

அதை பார்த்த அவளின் கைகளில் மெல்லிய நடுக்கம். அவளுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றுமே விளங்கவில்லை.

‘இதெல்லாம் எப்படி சாத்தியம்? அதுவும் தனக்கு இதை பற்றி எல்லாம் எதுவுமே தெரியவில்லையே.. அன்று இரவு தான் தூக்கத்தில் கழிந்தது என்று பார்த்தால், அதன் பிறகு இத்தனை சம்பவம் நடந்திருக்கிறது தனக்கு ஒன்றுமே தெரியவில்லையே’ என்று குழம்பி போய் நின்று இருந்தாள்.

அவளின் நிலையை உணர்ந்த பாரி வேந்தன் அவளை நன்கு நெருங்கி நின்றவாறு, “இதை நான் தான் ரெடி பண்ணேன். நிச்சயமா இந்த உண்மையை நான் உன்கிட்ட சொல்லும் பொழுது நீ என்னுடன் இருக்க மாட்டேன்னு சொல்லி இப்படி கிளம்புவனு எனக்கு தெரியும்‌. என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது. ஆனால், நான் என்ன தான் என்னை பத்தின விளக்கம் சொன்னாலும் அதை உன்னால ஏத்துக்க முடியாது. நீ நிச்சயமா என்னோட இருக்க முடியாதுனு தான் சொல்லுவனு நினைச்சேன். அதான் உனக்கே தெரியாம நம்ம கல்யாணத்தை முடிச்சுட்டேன்”.

“எப்படி?” என்றாள் நடுங்கும் குரலில்.

“அதுல இருக்கிறது உன்னுடைய சைன் தானே?”.

ஆம், தன்னுடைய கையெழுத்து தான். ஆனால் எப்படி? என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை.

“எப்படி என்னோட சைன்.. எப்படி இதில் வந்தது? நான் எதுவும் அப்படி சைன் பண்ணலையே?” என்று குழப்பமாக சிந்தித்தவள் சட்டென்று பாரிவேந்தனை முறைத்து பார்த்து, “இதெல்லாம் உங்களுடைய வேலையா? நான் போட்ட மாதிரி நீங்களே என்னுடைய சைனை ரெடி பண்ணி இருக்கீங்க” என்று சீறினாள்.

“நீ நினைக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் மோசமானவன் எல்லாம் கிடையாது. அவ்வளவு கிரிமினலா யோசிக்கவும் எனக்கு தெரியாது. அன்னைக்கு குழந்தை பேர்ல இன்சூரன்ஸ் போடுவதற்காக உன்கிட்ட சைன் வாங்கினேனே ஞாபகம் இருக்கா? அப்போ தான் இந்த பேப்பரையும் அதுக்குள்ள சேர்த்து வைத்திருந்தேன். நீ கவனிக்காம நான் சொன்ன இடத்துல எல்லாம் அன்னைக்கு சைன் பண்ணதால உனக்கே தெரியாம நமக்கு அன்னைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிடுச்சு”.

எப்படி எல்லாம் செய்து இருக்கிறான். நினைக்க நினைக்க அவளுக்கு மனம் ஆறவில்லை.

அன்று இவன் மேல் இருந்த நம்பிக்கையில் தானே அவன் குழந்தைக்காக என்று கூறியதும் சிந்திக்காமல் அனைத்திலும் கையொப்பமிட்டாள்.

இப்பொழுது அதை வைத்து தங்கள் கல்யாணத்தையே முடித்து விட்டானா என்று அவன் கூறுவதை இவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“இப்போ நீங்க பண்ணி இருக்கிறதுக்கு பேரு என்னன்னு தெரியுதா? என்னை ஏமாத்தி இருக்கீங்க.. என்னை ஏமாத்தி என்கிட்ட இருந்து சைன் வாங்கி இருக்கீங்க.. அன்னைக்கு உங்களுக்கும் எனக்கும் மேரேஜ்னு சொல்லி இருந்தா நான் சத்தியமா இந்த பேப்பர்ல சைன் பண்ணி இருக்கவே மாட்டேன்”.

“தெரியும்.. நீ நிச்சயமா சைன் பண்ண மாட்டேன்னு எனக்கு தெரியும். அதனால தான் உன்கிட்ட சொல்லாமலே வாங்கினேன்”.

“எப்படி உங்களால இப்படி எல்லாம் பண்ண முடியுது? உங்களுக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தலையா?”.

“உறுத்துச்சு தான்.. அன்னைக்கு ராத்திரி உன்னோட விருப்பம் இல்லாம உன் கூட ஒன்னா இருக்கும் பொழுது ரொம்பவே உறுத்துச்சு. ஆனா, இப்போ அதை சரி பண்றதுக்காக.. உன்னை சந்தோஷமா பாத்துக்குறதுக்காக எல்லாத்தையும் செய்யும் பொழுது எனக்கு சத்தியமா எந்த ஒரு உறுத்தலும் இல்லை” என்றான் அழுத்தமாக.

அவளுக்கு வெகு அருகாமையில் தான் நின்று இருந்தான்.

இவ்வளவு நெருக்கத்தில் அவள் இதுவரை பாரிவேந்தனுடன் உரையாடியதே கிடையாது.

பதட்டத்தில் அவளுமே அதனை கவனிக்க தவறிவிட்டாள். இப்பொழுது தனக்கு நெருக்கமாக இருப்பவனை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ள வேகமாக பின்னே நகர முற்பட்டாள்.

ஆனால், ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அறை கதவு அவளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

“இப்போ.. இப்போ எதுக்காக நீங்க தேவையில்லாம இதையெல்லாம் செய்யுறீங்க.. இன்னும் என்னெல்லாம் பண்ணனும்னு நினைக்கிறீங்க.. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.. என்னால இதுக்கு மேல போராட முடியாது. ஏற்கனவே, நான் ரொம்ப வீக்கா ஃபீல் பண்றேன்” என்றாள் இறங்கிய குரலில்.

“தெரியும்.. இனி நீ வீக்கா ஃபீல் பண்ண தேவையில்லை. உனக்கு எப்பவுமே நான் இருப்பேன். நடந்த தப்பை நாம சரி பண்ணலாம் டி. தெரிஞ்சு செஞ்ச தப்புக்கு தான் தண்டனை.. தப்பே செய்யாம நாம ரெண்டு பேருமே நிறைய தண்டனையை அனுபவிச்சிட்டோம். இனி நம்ம வாழ்க்கையை நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கலாமே”.

“அதுக்காக உங்களோட எல்லாம் என்னால இருக்க முடியாது” என்றாள் தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு.

அவனின் பார்வை அவளை‌ என்னவோ செய்தது. நேருக்கு நேர் அவனை ‌எதிர் நோக்க முடியாமல் தவிர்க்க முடிவு செய்து விட்டாள்.

இவளிடம் மென்மையாக பேசினால் வேலைக்காகாது என்பது அவனுக்கு இப்பொழுது தான் புரிந்தது.

அவளை விட்டு ஒரு அடி தள்ளி நின்றவன் சலிப்பாக பெருமூச்சை விட்டவாறு, “சரி டி, இப்ப என்ன பண்ணனும்னு சொல்ற? என்னோட உன்னால வாழ முடியாது இந்த வீட்டை விட்டு போகணும் அதானே?”.

அவளும் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தாள்.

தன் பேண்ட் பாக்கெட்டினுள் இரு கையையும் விட்டபடி, “ஓகே.. தாராளமா இங்க இருந்து நீ கிளம்பலாம்  ஆனால், என் பொண்ண என்கிட்ட கொடுத்துட்டு போ” என்றான் சற்றும் எந்த வித அலட்டலும் இல்லாமல்.

“இதெல்லாம் அநியாயம் டாக்டர்.. நான் தான் அவளுடைய அம்மா!”.

“யாரு இல்லன்னு சொன்னா.. நீ தான் அவளுடைய அம்மா.. ஆனா, நான் தானே அவளுடைய அப்பா.. சந்தேகமா இருந்தா மறுபடியும் ரிப்போர்ட்டை படிச்சுக்கோ” என்றவாறு டேபிளின் மேல் இருக்கும் டிஎன்ஏ ரிப்போட்டை கண்களால் காண்பித்தான்.

“அது மட்டும் இல்ல, இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் நடந்து முடிஞ்சிடுச்சு. நெனச்ச நேரம் எல்லாம் ஈஸியா உன்னால என்னை விட்டுட்டு வெளியில் போயிட முடியாது. ப்ராப்பரா டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணனும். நீ போய் பொறுமையா டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணு. ஆனா, என் குழந்தையை நான் உன்கிட்ட கொடுக்க மாட்டேன்”.

இவளை இங்கிருந்து கிளம்பவே முடியாதவாறு லாக் செய்வது போல் பக்காவாக அனைத்து வேலையையும் அவன் செய்து இருக்கிறான் என்பது அவளுக்கு இப்பொழுது தான் புரிந்தது.

ஆனாலுமே, அவனோடு ஒன்றிணைய ஏதோ ஒரு நெருடல்..

“என்ன.. குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு டைவர்ஸ் பண்ணிட்டு இங்க இருந்து போயிடுறியா?” என்றவாறு தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேள்வி கேட்கவும்.

அவனை முறைத்து பார்த்தவள் அவனுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!