என் பிழை நீ – 40

4.9
(25)

பிழை – 40

அவளால் இப்பொழுது எதையுமே சரி வர சிந்திக்க முடியவில்லை.

மனம் முழுவதும் குழம்பிய குட்டை போல் இருந்தது.

அப்படி என்ன கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உணர்ச்சிப்பெருக்கு என்ற கோபம் தான் பாரி வேந்தனின் மேல் தோன்றியது.

தன்னை கூட அவனால் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாதா..

அன்று அவன் மட்டும் கட்டுப்பாடோடு இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனையே எழுந்திருக்காதே என்ற கோபத்தை மட்டுமே அவன் மீது இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால், பாவம் தனக்கு தூக்க மாத்திரையை கலந்து கொடுத்த ஆஷாவை பற்றி இப்படி சிந்திக்க மறந்துவிட்டாள்.

அவளை அவ்வளவு இலகுவில் மன்னித்தவளுக்கு ஏனோ பாரி வேந்தனின் மேல் மட்டும் அத்தனை கோபம்…

தன் இத்தனை நாள் கோபத்தையும், ஏமாற்றத்தையும் தனக்குள் அடக்கி வைத்திருந்தவள் பாரி வேந்தனை தனக்கு வடிகாலாக ஆக்கி விட நினைத்து விட்டாள் போலும்..

அன்று முழுவதும் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

சில நேரம் அழுகையிலும்..

சில நேரம் கோபத்திலும்..

சில நேரம் அடுத்து என்ன செய்வதென்றே புரியாத குழப்பத்திலும் கரைந்தது.

ஆனால், இங்கிருந்து அவ்வளவு எளிதில் வெளியேற முடியாது என்பது மட்டும் அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.

கருவுற்ற பிறகு இதுவரையிலும் அவளின் வாழ்க்கை இப்படி தான் செல்ல வேண்டும் என்று அவளுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது கிடையாது.

என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகி விட்டாள். இப்பொழுதும் அதே மனநிலையில் தான் இருக்கிறாள்.

அடுத்து என்ன என்று தெரியவில்லை..

போகும் வரை போகட்டும் என்று வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிட முடிவு செய்து விட்டாள்.

ஒரே இடத்தில் முடங்கி போவதை விட வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடுவது எவ்வளவோ மேல் தானே..

அதிலும், எதுவும் தன் கையில் இல்லை என்ற நிலையில் நிற்கும் பொழுது..

ஒரே வீட்டில் இருப்பதால் அவள் பாரிவேந்தனை மன்னித்து ஏற்றுக் கொண்டாள் என்றெல்லாம் அர்த்தம் கிடையாது.

இப்போதைக்கு அவனிடமிருந்து பிரிய முடியாமல் இருக்கிறாள் அவ்வளவே..

மறுநாள் வழக்கம்போல் அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

முன்பை விட முத்துலட்சுமிக்கு தன் சொந்த பேத்தி தான் யாழ்நிலா என்பது தெரிந்த பிறகு அவள் மேல் கூடுதல் பிணைப்பு உருவாகிவிட்டது.

இனியாளின் மேலும் ஒரு வித உரிமை உணர்வு தோன்றி விட.

அவருக்கு ஏதோ தங்கள் குடும்பம் முழுமை அடைந்து விட்ட உணர்வு.

அது உண்மையும் தானே..

இனியாளும் கல்லூரிக்கு கிளம்பி வெளியே வந்தவள் வழக்கம் போல் முத்துலட்சுமியிடம் கூறிவிட்டு யாழ்நிலாவுடன் புறப்பட்டாள்.

“ஒரு நிமிஷம் இனியாள் யாழ் நிலாவை என்கிட்ட கொடுத்துட்டு போ நானே பாத்துக்குறேன்”.

“இல்ல மேடம் உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் நான் பாத்துக்குறேன் விடுங்க”.

அப்பொழுது அவ்விடம் வந்து சேர்ந்த பாரிவேந்தனும் எதுவும் கூறாமல் அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

“பாரி இனிமேல் யாழ்நிலாவை பிளே ஸ்கூல்ல எல்லாம் விட வேண்டாம். குழந்தைய பாத்துக்க வீட்டிலேயே ஒரு ஆள் போடு நான் குழந்தையுடன் இருந்து பார்த்துக்கிறேன்”.

“சரிமா” என்றவனும் அமைதியாக உணவை அருந்திவிட்டு கிளம்பிவிட்டான்.

யாருமே இதில் இனியாளின் கருத்தை கேட்க கூட இல்லை. அவர்களாகவே அனைத்து முடிவையும் எடுத்து விட்டார்கள்.

இனியாளிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்ட முத்துலட்சுமி, “நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க.. இனி நான் பாத்துக்குறேன்” என்று அனுப்பி வைத்தார்.

அவளோ கோபமாக பாரிவேந்தனை முறைத்து பார்த்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள்.

வழக்கமாக பாரிவேந்தன் தான் அவளை கல்லூரிக்கு கொண்டு சென்று விடுவான். இன்று ஏனோ அவனுடன் செல்ல அவளுக்கு மனமில்லை.

“நானே காலேஜுக்கு போயிக்கிறேன்” என்றவாறு அவள் முன்னே செல்ல முற்படவும்.

அவளின் கையை பிடித்து தடுத்தான் பாரிவேந்தன்.

அவன் தடுத்த வேகத்தில் அவன் மேலேயே மோதி நின்றவளுக்கு ஒரு நொடி மூச்சே நின்று விட்ட உணர்வு.

என்ன தான் அவனுடன் உறவாடி அவனின் பிள்ளைக்கு தாயாக அவள் இருந்தாலும் கூட, அது அனைத்துமே அவள் சுயநினைவு இன்றி இருக்கும் பொழுது நடந்தது தானே..

இப்பொழுது சுய நினைவோடு இருக்கும் பொழுது அவன் அருகாமை இவளுக்கு புதிதாக தான் தோன்றியது. அதுவே அவளுக்குள் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.

“ஒழுங்கா என்கூட கார்ல வரலைன்னா இப்பவே நமக்கு கல்யாணம் ஆன விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்” என்றான் மிரட்டலாகவே.

“என்ன மிரட்டுறீங்களா?” என்று தடுமாறிக் கொண்டு அவள் கேட்கவும்.

‘இவ கிட்ட இனி சென்டிமென்டல் சீன் எல்லாம் வொர்க்கவுட் ஆகாது. ஒன்லி ஆக்சன் தான்’ என்று நினைத்துக் கொண்டவன்.

அவளை சற்றும் சட்டை செய்யாமல் காரில் ஏறியவன், “சரி அப்படியே வச்சுக்கோ.. வந்து வண்டியில் ஏறு” என்றவாறு முன்னிருக்கையின் கதவை அவளுக்கு திறந்து விட்டான்.

எத்தனை நாள் ஆசை அவனுக்கு இது.. அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டு வண்டியில் செல்ல வேண்டும் என்பது.. இன்று தான் அதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆனால், அவளோ முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு முன்னால் ஏறாமல் பின்னே ஏற செல்லவும்.

அவளை நோக்கி சொடக்கிட்டவன், “ஹலோ மேடம் ஓவரா பண்ணாம ஃப்ரெண்ட்ல வந்து உட்காருங்க. இல்லனா..” என்று அவன் தொடங்கும் முன்னரே வேகமாக பின்னிருக்கையின் கதவை அடித்து சாற்றியவள் விறுவிறுவென நடந்து வந்து முன்னே ஏறிக் கொண்டாள்.

அவளின் சிறு பிள்ளை தனமான இத்தகைய செயல் அவனுக்குள் சிரிப்பை ஏற்படுத்த.. தன் பற்களை கடித்து அவளின் முன்பு அதை காட்டாமல் மறைத்துக் கொண்டான்.

சற்று நேரம் கோபமாக அவள் வெளியே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஆனால் அவனோ சற்று நேரத்திற்கு ஒருமுறை அவளையே தன் பார்வையால் வருடியவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? எல்லாமே உங்க இஷ்டப்படி தான் நடக்கணுமா? எதுவுமே என்னை கேட்க கூட மாட்டேங்கிறீங்க” என்று சட்டென பொறிய தொடங்கி விட்டாள்.

“இப்ப என்ன நடந்துச்சுன்னு இவ்வளவு கோவப்படுற?”.

“எதுக்காக யாழ்நிலாவை வீட்டிலேயே விட சரினு சொன்னீங்க?”.

“அம்மா பாத்துக்கணும்னு ஆசைப்பட்டாங்க அவங்க பேத்தியோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசைப்படுறாங்க.. அதை ஏன் நம்ம கெடுக்கணும்னு தான் பாத்துக்க ஆள் போடுறதா சொன்னேன்”.

“இதெல்லாம் தேவையில்லாத வேலை.. ஏற்கனவே மேடம்க்கு உடம்பு முடியல அவங்களால எப்படி யாழ் நிலாவை பார்த்துக்க முடியும். இவ்வளவு நாள் அவளை பிளே ஸ்கூல்ல தானே விட்டுட்டு போனோம். அதே மாதிரி இனிமேலும் அவ இருந்துப்பா”.

“என் அம்மா அவங்க பேத்தி கூட விளையாடனும்னு ஆசைப்படுறாங்க. அதனால தான் நானும் சரின்னு சொன்னேன். வயசான காலத்துல அவங்களுக்கு இது தானே சந்தோஷம்”.

“சும்மா பேத்தி பேத்தினு இதையே சொல்லாதீங்க” என்று அவள் சிடுசிடுக்கவும்.

“பேத்திய பேத்தின்னு சொல்லாம பேரன்னா சொல்ல முடியும்?” என்றான் இவனும் விடாமல்.

“நீங்க பண்றது எல்லாம் ரொம்ப பெரிய தப்பு. இதுக்கெல்லாம் நீங்க கண்டிப்பா அனுபவிப்பீங்க”.

“ஏற்கனவே நிறைய அனுபவிச்சுட்டேன் டி. நான் பண்ண தப்புக்கு நீ இன்னும் எனக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு நினைச்சாலும் அதை நான் தாராளமா ஏத்துக்க தயாராதான் இருக்கேன். நீ என்ன வேணும்னாலும் தண்டனை கொடு. ஆனால், என் கூடவே இருந்து கொடு” என்றவாறு அவளின் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டுக்கொண்டு அவன் பேசவும்.

ஒரு நொடி தன்னையும் மறந்து அவனின் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று சுதாரித்து தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

இப்படியே அவர்களின் நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சண்டையுடனும், சிடுசிடுப்புடனுமே சென்று கொண்டிருந்தது.

ஆனால், என்ன நடந்தாலும் சரி பாரிவேந்தன் ஏதாவது பேசி அவளின் வாயை அடைத்து விடுவான்.

அன்று மதன் அவனின் வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தான்.

அவனை தேடிக் கொண்டு வந்த ஆஷா அவனின் சோர்வான தோற்றத்தை பார்த்து வருத்தமுற்றவளாக, “என்ன ஆச்சு மதன் உடம்புக்கு ஏதாவது முடியலையா ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல”.

அவளின் வார்த்தையில் வெடுக்கென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன், “நீ எதுக்காக இப்போ இங்க வந்து இருக்க? மரியாதையா வெளியில் போ”.

“ப்ளீஸ் மதன்.. நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான். அதுக்காக என்னை வெறுத்துடாதீங்க.. இன்னும் எவ்வளவு நாள் தான் என் மேல கோபத்தையே காட்டிட்டு இருக்க போறீங்க.. உங்க மேல இருக்குற கண் மூடித்தனமான காதல்னால தான் இப்படி பைத்தியக்காரி மாதிரி என்னென்னமோ செஞ்சுட்டேன். நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நான் இனியாள்கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டேன். உங்ககிட்டயும் பல தடவை நான் மன்னிப்பு கேட்டுட்டேன். எப்ப தான் நீங்க என்னை மன்னிச்சு ஏத்துக்க போறீங்க?” என்ற அவளின் கண்களிலோ கண்ணீர் விழுந்து விடவா என்பது போல் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தது.

“இங்க பாரு ஆஷா நீ எத்தனை தடவை தான் என் வீட்டுக்கு வந்து கெஞ்சினாலும் என் மனசு மாறாது. நீ பண்ணது ஒன்னும் சின்ன தப்பு இல்ல.. துரோகம்! உன்னை நம்பின பொண்ணுக்கு அவ வாழ்க்கையையே நாசம் பண்ணி இருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் மன்னிச்சு ஏத்துக்குறதுக்கு எல்லாம் இனியாள் அளவுக்கு நான் ஒன்னும் நல்லவன் கிடையாது”.

தன் கண்களை துடைத்துக்கொண்ட ஆஷா, “சரி, என்ன பண்ணா நீங்க என்னை ஏத்துபிங்கன்னு சொல்லுங்க.. நானும் தினமும் உங்க வீட்டுக்கு வந்து உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு தான் போயிட்டு இருக்கேன். ஒரு நாள் கூட உங்களுக்கு மனசு மாறலையா மதன்”.

அவளை பார்த்து கேலி புன்னகை சிந்தியவன், “மனசு மாறனுமா.. அதுவும் உன்ன பாத்து.. நீ பண்ண காரியத்துக்கு உன்ன பாத்தா பாவம் கூட வர மாட்டேங்குது. எப்போ இனியாளுடைய வாழ்க்கை சரியாகுதோ அதுக்கு அப்புறம் தான் நீ பண்ண தப்புக்கு உன்ன மன்னிக்கிறதை பத்தி கூட நான் யோசிப்பேன் வெளியில் போடி” என்றான் அழுத்தமாக.

அழுது கொண்டே வெளியே ஓடினாள் ஆஷா.

தவறு செய்து விட்டாள் தான். ஆனால், இப்படி எல்லாம் நடக்கும் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லையே..

அவளை தூங்க வைக்க வேண்டும் என்று மட்டும் தானே எண்ணினாள். இதனால் அவளின் வாழ்க்கை சீர் அழியும் என்று முன்னதாகவே தெரிந்திருந்தால் அவள் நிச்சயம் இப்படி எல்லாம் செய்திருக்க மாட்டாள்.

தினம் தோறும் காலையில் மதனின் வீட்டிற்கு வந்து அவனிடம் மன்னிப்பு கேட்பதையே ஒரு வேலையாக வைத்திருக்கிறாள் ஆஷா.

ஆனாலுமே, இன்று வரையிலும் அவனின் மனம் இறங்கவில்லை.

ஆஷாவிற்கு உண்மையிலேயே மனம் மிகவும் சோர்ந்து போய்விட்டது. தான் செய்த தவறை அவள் எப்பொழுதோ உணர்ந்துவிட்டாள். அதற்கான மன்னிப்பையும் யாசித்துவிட்டாள். இனியாள் மன்னித்தாலும் மதன் அவளை மன்னிப்பதாக இல்லையே..

தன் மன வருத்தத்தை இனியாளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி அவளுக்கு அழைப்பு விடுத்தவள் அழுது கொண்டே அனைத்தையும் கூறவும்..

அப்பொழுது தான் கல்லூரி முடிந்து பாரிவேந்தனுடன் காரில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த இனியாள், “சரி, நீ ஒன்னும் அழாத நான் மதன் சார் கிட்ட பேசுறேன்”.

“அவர் சொல்றதும் வாஸ்தவம் தானே இனியாள். உன்னுடைய லைஃப் செட்டில் ஆகாமல் அவர் என்னை மன்னிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. நான் பண்ணது பெரிய தப்பு தான். எனக்கும் இப்போவே அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரோட சேர்ந்து வாழணும்னு எண்ணம் இல்ல. உன் வாழ்க்கை சரியான பிறகு தான் நானும் அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, என் மனச அவர் கொஞ்சமாவது புரிஞ்சுக்கலாம்ல.. எப்படி எல்லாம் பேசுறா

ர்னு தெரியுமா.. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவள் தேம்பித் தேம்பி அழவும்.

இனியாளுக்கு அவளின் நிலை பாவமாக இருந்தது. அவளின் அழுகையை கண்டு உடனே இவள் உருகி விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!