என்‌ பிழை‌ நீ – 41

4.9
(23)

பிழை – 41

“அழாத ஆஷா நான் மதன் சார் கிட்ட பேசுறேன்” என்றவளை உறுத்து விழித்தான் பாரி வேந்தன், “மதர் தெரசா எல்லாரையும் மன்னிக்கிறாங்க.. ஆனா, என்கிட்ட மட்டும் உர்ரென்று முகத்தை வச்சுக்கிட்டு இருப்பா” என்று உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு இருந்தான்.

“நீ மதன் கிட்ட பேசுறதுக்காக நான் இப்ப இதெல்லாம் உன்கிட்ட சொல்லல இனியாள். நான் பண்ண தப்பை எப்பவோ உணர்ந்துட்டேன். உன்கிட்ட அதுக்கு பல தடவை மன்னிப்பும் கேட்டுட்டேன். இருந்தாலும், மதன் ஒவ்வொரு நாளும் அதை பற்றியே திரும்ப திரும்ப பேசும் பொழுது கொஞ்சம் கொஞ்சமா குற்ற உணர்ச்சியில் செத்துகிட்டு இருக்கேன் இனியாள்.. ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு” என்று கூறி அழவும்.

 

“ஆஷா நீ பண்ணது ரொம்பவே பெரிய தப்பு தான். அன்னைக்கு மட்டும் நீ அப்படி செய்யாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கையே இப்படி தடம் மாறிப் போய் இருக்காது. அந்த வருத்தம் இன்னமுமே எனக்கு உன் மேல இருந்துகிட்டு தான் இருக்கு. அது கடைசி வரைக்கும் இருந்துகிட்டு தான் இருக்கும். நீ பண்ண தப்பை உணர்ந்துட்டேன்னு சொல்ற.. எனக்கும் இப்போ என்ன சொல்றதுன்னு தெரியல.. அதுக்காக மதன் சார் கிட்ட இனி என்னை பத்தி உன்கிட்ட பேச வேண்டாம்னு வேணும்னா சொல்றேன். மத்தபடி, அவர் உன்னை ஏற்றுக்கொள்வதும் ஏத்துக்காததும் முழுக்க முழுக்க அவருடைய விருப்பம் மட்டும் தான். இதில் நான் தலையிட முடியாது”.

“புரியுது இனியாள்.. மதன் சொல்றது சரி தான். உன் லைஃப் செட்டில் ஆன பிறகு தான் நான் இதோட மதன் கிட்ட போய் பேசுவேன். அதுவரைக்கும் நான் அவரை பாக்க போறது இல்ல, பேச போறதும் இல்ல.. நான் பண்ண தப்புக்கு தண்டனையா இதை நான் ஏத்துக்கிறேன்”.

அவள் அருகில் அமர்ந்திருந்த பாரி வேந்தனுக்கு அவள் பேசுவதும் ஆஷா பேசுவதும் தெளிவாகவே கேட்டது.

இருப்பினும், எதுவும் இடைப்புகாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

இனியாள் மெல்லிய குரலில், “ஆஷா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு”.

“என்ன சொல்ற இனியாள் நெஜமா தான் சொல்றியா.. இல்ல, எங்களுக்காக பொய் சொல்றியா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.

“நான் நெஜமா தான் சொல்றேன். என் குழந்தையோட அப்பா யாருன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. எனக்கும் அவருக்கும் கல்யாணமும் ஆகிடுச்சு” என்றவள் பாரி வேந்தனை பற்றி அவளிடம் அனைத்து விஷயத்தையும் கூறினாள்.

முதல் முறை தன்னை கணவன் என்று அனைவரிடமும் அவள் பேசுவது அவனுக்கோ உள்ளுக்குள் ஏதோ ஐஸ் கட்டியை எடுத்து அவனின் தலையில் வைத்தது போல் ஜில்லென்ற உணர்வை கொடுத்தது.

ஏதோ ஒரு விவரிக்க முடியாத உணர்வு ‘இனியாளின் கணவன் பாரிவேந்தன்’ என்னும் பொழுது அவனுக்குள் தோன்றியது.

“ரொம்ப சந்தோஷம் டி. இப்போ தான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. நான் மதன் கிட்ட இத பத்தி பேசுறேன். நீ உண்மையை தானே சொல்ற.. இதெல்லாம் பொய் இல்லல்ல”.

“சத்தியமா உண்மை தான் போதுமா..” என்றவளுக்கும் பாரி வேந்தனின் முன்பு சற்று சங்கடமாகவும் இருந்தது.

பின்னர், அவனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவனிடம் தினமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால், மற்றவர்களிடம் அவனை தன் கணவன் என்று அறிமுகம் செய்கிறாள். அவளுக்குமே அவனின் முன்னர் சங்கடமாக தானே இருக்கும்.

“தூக்க மாத்திரையை கலக்கி கொடுத்தவங்களை கூட மேடம் மன்னிச்சிடுறாங்க. ஆனா, என்னை மன்னிக்க மாட்டேங்கிறாங்க” என்று ஏக்கமாக பெருமூச்சு விட்டவாறு பாரிவேந்தன் கேட்கவும்.

தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டவள், “அவ மதன் சாருக்கு ப்ரொபோஸ் பண்றதுக்காக என்னை தூங்க வைக்கணும்னு ட்ரை பண்ணி தான் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தா.. இடையில் புகுந்து நீங்க இப்படி எல்லாம் செய்வீங்கன்னு அவளுக்கு எப்படி தெரியும்?”.

அதன் பிறகு அவன் ஒன்று பேச இவள் ஒன்று பேச என மீண்டும் இருவருக்குள்ளும் வீடு சென்று சேரும் வரையிலும் வாக்குவாதம் நீண்டு கொண்டே சென்றது.

இருவருமே உர்ரென்ற முகத்தோடு வீட்டிற்குள் நுழைவதை கண்ட முத்துலட்சுமி வேலையாளிடம் இருவருக்கும் குடிக்க பழச்சாறை கொண்டு வர சொன்னார்.

“பாரி நம்ம அலமேலு ஒரு சாமியாரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாங்க. அவர்கிட்ட உன்னுடைய ஜாதகத்தை காட்டினேன். அவரு இப்ப உன் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது மொத்தத்தையும் சரியா கணித்து சொல்லிட்டாரு.. உனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிற வரைக்கும் சரியா சொன்னாருப்பா” என்று ஒற்றை கண்ணை சிமிட்டியவாறு அவர் கூறவும்.

இனியாளுக்கோ குடித்துக் கொண்டிருந்த பழச்சாறு புரை ஏறிவிட்டது.

“என்ன தான் இனியாளை பற்றியும் யாழ்நிலாவை பற்றியும் அனைத்து உண்மையும் முத்துலட்சுமிக்கு தெரிந்திருந்தாலும், அவர் இதுவரையிலும் வெளிப்படையாக இதை பற்றி எல்லாம் பேசியது கிடையாது.

இன்று ஏனோ வெளிப்படையாக அவர் கூறுவதை கேட்கவும் இவளுக்கு அங்கு அமரவே சங்கடமாக இருந்தது.

“அப்படியா! வேற என்ன சொன்னாங்க?” என்றவனுக்கும் தன் தாய் எதையோ மனதில் வைத்துக்கொண்டு தான் இப்படி பேசுகிறார் என்பது விளங்கியது.

“அவர்கிட்ட எல்லாத்தையும் தெளிவா பேசிட்டேன். இன்னையிலிருந்து நீயும் இனியாளும் ஒரே அறையில் தான் தங்கனும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு.. அதுமட்டுமில்ல, நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தது கடவுளா பார்த்து தான் உங்களை ஒன்று சேர்த்து இருக்கிறதா சொன்னாரு. உங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா அமையும்னும் சொன்னாரு.. முக்கியமா யாழ்நிலா குட்டி தான் நம்ம வீட்டோட அதிர்ஷ்ட தேவதையாம்” என்றவாறு அழுத்தமாக குழந்தையின் கன்னத்தில் இதழ் பதித்தார்.

அவர் கூறிய ஒவ்வொன்றையும் கேட்க கேட்க இனியாளுக்கோ அங்கு அமரவே முடியவில்லை. அதிலும், பாரிவேந்தனுடன் ஒரே அறையில் தங்க வேண்டும் என்று அவர் கூறியதை கேட்டது முதல் அவளுக்குள் ஒருவித படபடப்பும் தொற்றிக் கொண்டது.

நிச்சயமாக பாரிவேந்தன் இனியாளிடம் இதை பற்றி பேசினால் அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்த முத்துலட்சுமி இவ்வாறு கூறினால் தான் அவர்களின் உறவில் ஏதாவது மாற்றம் நடக்கும் என்று முடிவு செய்து விட்டார்.

என்ன தான் பாரி அவர்களின் திருமணத்தை பதிவு செய்து விட்டாலும், அவர்களுக்கு கோவிலில் திருமணம் செய்து அதை தன் கண்ணார காண வேண்டும் என்ற ஆசையும் அவருக்குள் இருக்கிறது.

“இனி நீ பாரிவேந்தன் ரூம்லையே தங்கிக்கோ இனியாள். இன்னும் எத்தனை நாள் தான் தனித்தனியாக இருக்க போறிங்க.. அதான் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, குழந்தையும் பிறந்திடுச்சு. இனி உங்க வாழ்க்கையை நீங்க வாழ ஆரம்பிக்கலாம் இல்ல”.

ஆம், அவர் கூறுவது அனைத்தும் உண்மை தான். திருமணமும் நடந்து விட்டது, குழந்தையும் பிறந்து விட்டது.

ஆனாலுமே, இருவரும் மற்றைய ஜோடிகளை போல் கிடையாதே..

இருவரும் இன்னும் பேசி பழக கூட ஆரம்பிக்கவில்லை. அதற்கு முன்னதாகவே திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்து விட்டது.

“இல்ல.. இல்ல மேடம்.. இதெல்லாம் சரி வராது. நான் என்னுடைய ரூமிலேயே தங்கிக்கிறேன்” என்று அவசரமாக இனியாள் மறுக்கவும்.

“அப்ப கடைசி வரைக்கும் நான் மன வருத்தத்துடன் தான் இருக்கணும்னு இருக்கு போலருக்கு. என் பையனோட வாழ்க்கை சரியாகனும்னு நான் ஆசைப்படுறேன். உனக்கு என் மேல அன்பு இருந்தா கண்டிப்பா என் பேச்சை நீ மீறக்கூடாது” என்று ஒரே‌ போடாக போட்டார்.

ஒரே பால் தான்.. முற்றிலுமாக இனியாளை அவுட் ஆக்கி விட்டார்.

எப்படி பேசினால் அவள் தன் பேச்சை கேட்பாள் என்பதை நன்கு உணர்ந்த முத்துலட்சுமி இவ்வாறு கூறி விடவும்.

அவள் பதில் உரைப்பதற்குள்ளாகவே முந்தி கொண்ட பாரிவேந்தன், “அம்மா இனி நானும் இனியாளும் என்னுடைய ரூம்ல தான் தங்க போறோம். இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே” என்று தன் தாயை பார்த்து கேட்டவனோ இனியாளை நோக்கி அவர் அறியாத வண்ணம் ஒற்றை கண்ணை சிமிட்டினான்.

அவனின் ஒற்றை கண் சிமிட்டலிற்கே இவளின் அடி வயிற்றுக்குள் ஒரு கலவரமே நடக்க தொடங்கி விட்டது. அதற்கு மேல்‌ அங்கே அமர முடியாமல் வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்று விட்டாள்.

பாரிவேந்தனும் அவளின் பின்னோடு அறைக்குள் நுழைந்தவன், “அம்மா சொன்ன மாதிரி இனிமே நீ என்னுடைய ரூம்லையே தங்கிக்கோ.. உன் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடு”.

“என்ன டாக்டர் விளையாடுறீங்களா.. இதெல்லாம் சரி வராது. எடுத்ததும் குழந்தை.. அடுத்து எதிர்பார்க்காம கல்யாணம்.. இப்போ ஒண்ணா தாங்கனும்னா என்னால எப்படி முடியும்?” என்று படபடத்தாள் .

“புருஷன் பொண்டாட்டினா ஒரே ரூம்ல தானே தங்குவாங்க. ஏதோ புதுசா நான் பேசுற மாதிரி சொல்ற”.

“ஆனா, நம்ம ஒன்னும் சாதாரணமான புருஷன் பொண்டாட்டி கிடையாது டாக்டர்..” என்றாள் அழுத்தமாக அவனை முறைத்துக் கொண்டே.

“ஆமா டி உன்னை ஏமாத்தி தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதுக்கு என்ன இப்போ?” என்றான் அதிரடியாக.

“என்ன டாக்டர் இப்படி எல்லாம் பேசுறீங்க?”.

“சும்மா சும்மா டாக்டர் டாக்டர்னு சொல்லாதடி. ஏதோ பேஷன்ட் கிட்ட பேசுற மாதிரியே இருக்கு”.

“அப்புறம் டாக்டர்ன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றதாம். நீங்க டாக்டர் தானே?”.

“அது மத்தவங்களுக்கு தான். உனக்கு ஒன்னும் நான் டாக்டர் கிடையாது. உனக்கு நான் புருஷன்” என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு.

அவனின் பார்வை மாற்றத்தை உணராதவள், “ஆனா, எனக்கு அப்படி எந்த ஒரு ஃபீலும் வரல. எனக்கு உங்கள பாத்தா டாக்டர்னு தான் கூப்பிட தோணுது”.

அவள் கூறி முடித்த அடுத்த நொடி என்ன நடந்தது என்று அவள் சுதாரிப்பதற்குள்ளாகவே அவளின் கையை பிடித்து இழுத்தவன், அவளை மஞ்சத்தில் சரித்து அவள் மீது மொத்தமாக படர்ந்து விட்டான்.

இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து வெளியேறியது.

அவளின் இதயத்துடிப்பு தடதடவென வேகமாக அடித்துக் கொள்ளவும், அது இத்தனை அருகாமையில் அவனுக்கு தெளிவாக கேட்டது.

பதட்டத்தில் எச்சிலை‌ கூட்டி விழுங்கியவள்‌ அவனை மிரட்சியான பார்வை பார்க்கவும்.

“நானும் போனா போகுதுன்னு உனக்கு கொஞ்சம் டைம் தரலாம்னு பார்த்தா ரொம்ப தான் பண்றியே.. இப்போ என்ன உனக்கு என்னை பார்க்கும் போது புருஷன்னு ஃபீல் வரணும் அவ்வளவு தானே..” என்றவாறு அவளின் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழை பதித்தவன், “இனி உனக்கு எப்படி ஃபீல் வர வைக்கிறேன்னு பாரு” என்றதும்.

அவளுக்கோ இவ்வளவு அருகாமையில் வார்த்தைகள் கூட வெளிவராமல் சதி செய்தது. திக்கித் திணறி ஒருவாறு ஒவ்வொரு எழுத்துக்களாக கோர்த்து எடுத்தவள், “எ.. என்ன.. பண்றீங்க நீங்க.. நகருங்க..” என்றாள் பதட்டமாக.

“முடியாது.. என்னோட வந்து தங்குறதுக்கு சம்மதம் சொல்லு.. இல்லன்னா, முழுசா ஹஸ்பெண்டா என்னுடைய உரிமையை உன்கிட்ட நிலை நாட்ட வேண்டி இருக்கும்” என்றவாறு அவளின் இதழை நோக்கி அவன் குனியவும் பயந்து போனவள், “சரி, நான் வரேன்” என்று வேகமாக தன் கண்களை மூடிக்கொண்டு ஒப்புக் கொண்டாள்.

“தட்ஸ் மை ஸ்வீட் பொண்டாட்டி” என்றவாறு அவளின் கன்னத்தில் தட்டியவன் எழுந்து தன் அறைக்கு செல்ல முற்படவும்.

அவனின் தொடுகையில் வெடுக்கென்று தன் விழியை மலர்த்தியவள், “நீங்க நடந்துக்குறது எல்லாம் பாத்தா ஒரு டாக்டர் போலவே தெரியல.. இப்படித்தான் மிஸ் பிஹேவ் பண்ணுவீங்களா?”.

“வெளி பொண்ணுங்க கிட்ட நடந்துக்கிட்டா தான் அதுக்கு பேரு மிஸ்பிஹேவ்.. பொண்டாட்டி கிட்ட நடந்துக்கிட்டா அதுக்கு வேற பேரு இருக்குன்னு நினைக்கிறேன்” என்றவாறு தன் ஒற்றை கண்ணை சிமிட்டி கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் தன் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தவள் வேறு வழியில்லாமல் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு அவனின் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!