அவனின் இத்தகைய செயல்களும், பேச்சுகளும் இனியாளுக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது.
பாரிவேந்தனின் இத்தகைய பரிமாணத்தை அவள் இதுவரை கண்டதே கிடையாது.
தனக்கு அனைத்து உண்மைகளும் தெரிவதற்கு முன்னர் இருந்த பாரிவேந்தனிற்கும், அனைத்து உண்மைகளும் தெரிந்ததற்கு பின்னர் இருக்கும் பாரிவேந்தனுக்கும் நிறையவே வித்தியாசங்களை எளிதில் கூறி விட முடியும்.
அவனின் மாற்றத்திற்கான காரணம் இவள் தன்னவள் என்ற உரிமையாகவும் கூட இருக்கலாம்.
அதன் விளைவு அவளிடம் அதிக உரிமையை எடுத்துக் கொள்கிறான். அவளிடமும் தன் உரிமையை நிலை நாட்ட நினைக்கிறான். அதன் விளைவே அவனிடம் இத்தகைய மாற்றம்..
அவளிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்தவனிற்கும் அதே உணர்வு தான்.
இதயம் வேகமாக துடித்தது.
விழி மூடினாலே அவளின் மருண்ட விழிகள் தான் மனக்கண் முன்பு தோன்றி இவனை இம்சித்தது.
அவனின் செயல்கள் அவனுக்கே புதிதாக தான் இருந்தது. இது நாள் வரை யாரிடமும் அவன் இப்படி எல்லாம் நடந்து கொண்டதே கிடையாது.
மற்றவர்களை விட இவளிடம் அதிக உரிமையோடு நாம் நடந்து கொள்கிறோம் என்பது அவனுக்கே நன்கு விளங்கியது.
தன்னை நினைத்து அவனுக்கே வெட்கமாகி போக. தன் தலையை கோதி தன்னை சற்று சமன் செய்தான்.
அதன் பிறகும் நாட்கள் இப்படியே நகர தொடங்கியது.
பாரிவேந்தன் நாளுக்கு நாள் அவளை சீண்டுவதும், அவள் மேல் தனக்கு இருக்கும் உரிமையை காட்டிக்கொண்டும் இருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவளை காதலிக்கவும் தொடங்கி விட்டான்.
ஆம், காதலிக்கிறான்..
அவளின் மேல் எந்தவித பரிதாபமும் இல்லாமல் அவளை அவளுக்காக மட்டுமே காதலிக்கிறான்..
அதன் விளைவு அவளை சீண்டுவது இவனுக்கு அலாதி இன்பமாக இருக்கிறது.
அவளுக்கும் தன் மேல் காதல் இருக்கின்றதா என்பதை பற்றி எல்லாம் ஆராயும் நிலையில் அவன் இல்லை.
இத்தனை நாட்கள் தன்னால் அவள் பட்ட துன்பம் அனைத்தையும் அவள் மறக்க திகட்ட திகட்ட அவளுக்கு தன் காதலை கொடுக்க முடிவு செய்து விட்டான்.
அன்றும் பாரிவேந்தன் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். இப்பொழுது இனியாள் ட்ரைனிங்கில் இருக்கிறாள்.
ஒவ்வொரு மருத்துவருக்கும் கீழ் இரண்டு, மூன்று ட்ரைனிக்கல் என பிரித்து விட்டிருந்தனர்.
அதில் எதிர்பாராத விதமாக இவள் பாரிவேந்தனுக்கு கீழே வேலை பார்க்கும் படி அமைந்துவிட்டது. இதை இருவருமே சற்றும் எதிர்பார்த்து இருக்க வில்லை.
அறைக்குள் நுழைந்த பாரிவேந்தன் இனியாளும் மேலும் இருவரும் நின்று இருப்பதை கண்டு புரியாமல் புருவம் சுருக்கி பார்த்தான்.
‘என்ன நம்ம சண்டை கோழி இங்க வந்து நிக்கிறா.. கூப்பிட்டாலும் வர மாட்டாளே.. இன்னைக்கு என்ன அதிசயம்’ என்று எண்ணியவாறு அவளை பார்த்தான்.
அவனின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட ரம்யா, “ட்ரெய்னி டாக்டர்ஸ் டாக்டர்” என்றதும்.
அவனின் இதழுக்குள் மெல்லிய புன்னகை.
‘எங்கே ஓடினாலும் இறுதியில் என்னிடம் தான் வந்து சிக்குவாய்’ என்று சொல்லாமல் சொல்லியது அவனின் புன்னகை.
அதில், அவளுக்கு தான் அங்கு நிற்கவே பெரும் அவஸ்தையாக இருந்தது. முடிந்த மட்டும் அவனின் பார்வையை எதிர்கொள்வதையே தவிர்த்துக் கொண்டாள்.
அவன் அவளை அவ்வளவு இலகுவில் விட்டு விடுவானா என்ன..
காலை முதல் மாலை வரை அவன் எங்கெல்லாம் செல்வானோ அங்கெல்லாம் அவளையும் உடன் இழுத்துக் கொண்டே திரிந்தான்.
மற்ற இரு ட்ரெய்னி டாக்டர்களையும் விட இவள் தான் அவனின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள்.
அவர்களுக்கு வேறு ஏதாவது வேலையை கொடுத்தாலும் கூட, இவளுக்கு மட்டும் அவனுடனே இருப்பது தான் வேலையாகி போனது.
ஒரு கட்டத்தில் கடுப்பானவள், “என்ன பண்றீங்க நீங்க? அவங்க ரெண்டு பேரும் என்ன நினைப்பாங்க?”.
இப்பொழுதும் கூட ரவுண்ட்ஸிற்கு தான் சென்று கொண்டிருக்கிறான். மற்ற இரு ட்ரெய்னிகளுக்கும் ஒவ்வொரு பேஷண்டின் பைலை கொடுத்து அதை நன்கு படித்துப் பார்க்குமாறு கூறிவிட்டு இனியாளை மட்டும் தன்னுடன் ரவுண்ட்ஸிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
“என்ன நினைப்பாங்க.. நீ என்னவோ செஞ்சு என்னை மயக்கிட்டனு நினைப்பாங்க” என்று அவன் தன் ஒற்றைக் கண்ணை சிமிட்டி கூறவும்.
“தேவையில்லாம பேசாதீங்க டாக்டர்” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கோபமாக அவள் கூறவும்.
“கம் அகைன்..” என்றவாறு வராண்டா என்றும் பாராமல் அவளை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான்.
அதில் பதறியவள், “இது ஹாஸ்பிடல்.. இங்க டாக்டர்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிட முடியும்” என்று அவசர குரலில் படபடத்தாள்.
சுற்றும் முற்றும் பார்த்தவன், “ஹாஸ்பிடல் என்பதால் தப்பிச்ச” என்றவாறு முன்னே நடக்கவும்.
அவளும் ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டுக் கொண்டு அவனின் பின்னோடு அவனின் வேக நடைக்கு ஈடு கொடுத்து நடந்தாள்.
“என்ன இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாள்ல நீ தான் என்னுடைய வைஃப்னு நான் அனௌன்ஸ் பண்ண போறேன். அதுக்கு அப்புறம் இந்த ஹாஸ்பிடலுடைய முதலாளியம்மா நீ தானே.. அதான் உன்னை என் கூடவே கூப்பிட்டு இந்த ஹாஸ்பிடல் ஃபுல்லா சுத்தி காட்டுறேன்” என்று சீரியஸாக அவன் கூறவும்.
இவன் விளையாட்டாக கூறுகிறானா அல்லது உண்மையிலேயே கூறுகிறானா என்று புரியாமல் விழித்தாள் இனியாள்.
அவளின் பார்வையை உணர்ந்தவன் அவளை திரும்பி பார்த்து, “உண்மையா தான் சொல்றேன்” என்று விட்டு முன்னே நடக்கவும்.
சலிப்பாக தன் முகத்தை வேறு புறம் திருப்பியவளிற்கு தான் பார்த்த காட்சியில் இதயமே வெடித்து விடுவது போல் ஆகி விட்டது.
கண்கள் கலங்க..
அப்படியே அசையாமல் நின்று விட்டாள்.
தன் அருகில் வந்து கொண்டிருந்தவள் திடீரென நின்று விடவும். திரும்பிப் பார்த்த பாரிவேந்தனும் அவள் அருகில் வந்து அவள் பார்வை செல்லும் திசையில் பார்த்தான்.
அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இவள் எதை பார்த்து இவ்வளவு அதிர்ச்சியாக நிற்கிறாள் என்பதை புரியாமல் பார்த்தான்.
ஆம், அவளின் தந்தை.. அவளின் தந்தை நாராயணன் தான் இங்கே அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அதுவும் இலவசமாக மருத்துவம் பார்க்கும் அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரை கண்டவளிற்கு இதயமே நின்றுவிடும் உணர்வு.
வேகமாக அவரை நோக்கி விரைந்தவள் பேச முடியாமலும் ஒரு கையும் ஒரு காலும் வேலை செய்யாமல் படுத்த படுக்கையாக அந்த கட்டிலில் துவண்டு போய் படுத்து இருக்கும் தன் தந்தையை கண்ட உடனேயே அவளின் கண்கள் கடகடவென கண்ணீரை சுரந்து விட்டது.
அதை யாரும் அறியா வண்ணம் கடினப்பட்டு உள்ளிழுத்து கொண்டவள். அங்கே தொங்கப்பட்டிருந்த அவரின் ரிப்போர்ட்டை எடுத்து வேகமாக பார்த்தாள்.
அவளால் இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இவ்வளவு நடந்து இருக்கிறது தன்னிடம் யாரும் ஒரு வார்த்தை கூட கூறவில்லையே என்ற ஆதங்கம் வேறு..
அன்று இறுதியாக நாராயணன் கூறியது இன்னமுமே அவளின் காதுக்குள் ரீங்காரமிட ஆரம்பித்தது.
அப்படி என்றால் உண்மையிலேயே நான் இறந்து விட்டேன் என்று முடிவே செய்து விட்டார்களா என்று எண்ணும் பொழுதே அவளின் இதயத்தில் யாரோ கத்தியால் குத்திய உணர்வு.
வார்த்தைகள் எழவில்லை..
தொண்டையில் எதுவோ அடைத்துக் கொண்டது போன்று உணர்ந்தவள் தடுமாறி நிற்கவும்.
அவள் அருகில் வந்து நின்ற பாரிவேந்தனும் அவள் கையிலிருந்த ரிப்போர்ட்டை வாங்கி பார்த்துவிட்டு அவளை புரியாமல் பார்த்தான்.
“அப்பா” என்றாள் தொண்டை அடைக்க.
அவரின் நிலையை கண்டவனுக்குமே வருத்தமாக தான் இருந்தது.
அந்நேரம் அங்கே வந்த முகிலனும், நித்யாவும் இனியாளை கண்டு ஒரு நொடி திகைத்து நின்றனர்.
அதிலும், அவளை இப்படி ஒரு கோலத்தில் காண்போம் என்று அவர்கள் கனவிலும் நினைத்தது கிடையாது.
என்று இனியாள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறினாளோ ஒருநாள் தவறாமல் நித்யா அவளை கரித்துக் கொட்டி விடுவாள்.
எங்கே இருக்கிறாளோ.. என்ன செய்கிறாளோ.. எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாளோ என்று நினைத்து நினைத்து தன் மாமனாரின் முன்னிலையில் திட்டி கொண்டு இருப்பாள்.
அவள் எங்கோ எப்படியோ சீரழிந்து கொண்டிருப்பாள் என்று எண்ணியவர்கள். இப்படி டாக்டராக அவளை நாம் பார்ப்போம் என்று ஒருநாளும் அவர்கள் எண்ணியது கிடையாது.
உண்மையிலேயே நித்யாவிற்கு வாய் அடைத்து போய்விட்டது. அதிர்ந்த பார்வையோடு அவள் முகிலனை பார்க்கவும்.
அவனோ இனியாளை தான் அதிர்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்.
அங்கே இருக்கும் சூழலை உணர்ந்த பாரிவேந்தன், “பேஷண்டுக்கு என்ன ஆச்சு?” என்று பேச்சு கொடுத்தான்.
அதில், சுதாரித்த முகிலன் பதில் கூறுவதற்கு முன்னதாகவே முந்திக் கொண்ட நித்யா, “இவரோட பொண்ணு இவரை ஏமாத்திட்டு படிக்கும் போதே பிரெக்னென்ட் ஆயிட்டா.. அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் ஸ்ட்ரோக் வந்துடுச்சு” என்று வேண்டுமென்றே என்ன கூறினால் இனியாளின் மனம் காயம் படும் என்பதை உணர்ந்து கூறினாள்.
அவள் எண்ணியபடியே இனியாளின் மனதை அவளின் வார்த்தைகள் தவறாமல் பதம் பார்த்தது.
தலை குனிந்து கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு உணர்ச்சி பெருக்கோடு நின்றாள் இனியாள்.
அப்பொழுது தான் கண் விழித்த நாராயணன் தன் மகளை இப்படி ஒரு காட்சியில் காண்போம் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.
அவரின் கண்களிலும் கண்ணீர்..
ஆனால், அது ஆனந்த கண்ணீர்..
அவர் எப்படி தன் மகளை பார்க்க வேண்டும் என்று எண்ணினாரோ அப்படியே தன் முன்னே நிற்கும் மகளை பார்த்து பூரித்துப் போனார்.
நித்யா அனு தினமும் பேசும் வார்த்தைகளை எல்லாம் கேட்டு கேட்டு மனதளவில் நொந்து போய் கிடந்தார் நாராயணன்.
எங்கே அவள் சபிப்பது போல் இனியாளின் வாழ்க்கை மோசமாகி இருக்குமோ என்று பல நாள் மௌனமாக அழுதிருக்கிறார்.
அவரை நாம் வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கக் கூடாது என்று காலம் தாழ்ந்து வருந்தி இருக்கிறார்.
அப்படியெல்லாம் வருந்தியவருக்கு இப்படி தன் மகளை பார்க்கவும் பெற்றவரின் மனம் குளிர்ந்து விட்டது.
முகிலன் நித்யாவை முறைத்தவன் பாரிவேந்தனிடம் தன் தந்தைக்கு ஸ்ட்ரோக் வந்ததை குறித்தும், அதன் பிறகு அவரின் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தான்.
அவரை பற்றிய அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டவனுக்கு அவரை எப்படியாவது சரி செய்து பழையபடி மாற்றிவிட வேண்டும் என்று மனம் பரபரத்தது.
அவரின் இத்தகைய நிலைக்கு தானும் ஒரு வகையில் காரணம் தானே என்ற குற்ற உணர்ச்சியோடு நின்று இருந்தான்.