இனியாள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அமைதியாக தான் நின்று இருந்தாள்.
பேசும் நிலையிலும் அவள் இல்லை. உணர்ச்சி பெருக்கில் ததும்பி கொண்டிருந்தாள்.
நாராயணன் கடினப்பட்டு தன் ஒற்றை கையை மெல்ல உயர்த்தி அவளை தன் அருகில் வருமாறு அழைக்கவும்.
ஓடி சென்று தன் தந்தையின் கையை பிடித்துக் கொண்டு அவர் அருகில் அமர்ந்து கொண்டவளோ ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள் மௌனமாக..
“சாரிப்பா” என்ற அவளின் வார்த்தையும் கம்மியபடி வெளியேறியது.
“எப்படி இருக்க?” என்று அவர் கேட்பது இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
எதுவோ கூறுகிறார் என்பது மட்டும் தான் புரிந்ததே தவிர்த்து என்ன கூறுகிறார் என்பது விளங்கவில்லை.
தன் தந்தை கூற வருவது புரியாமல் அவள் தன் அண்ணனை திரும்பி பார்க்கவும்.
“அவரால் கிளியரா பேச முடியாது. வெளியில் ட்ரீட்மென்ட் கொடுத்தோம் எதுவுமே அவருக்கு வேலை செய்யல.. மனசளவுலயும், உடம்பளவுலயும் ட்ரீட்மென்ட்டை அவர் ஏத்துக்கலைனு டாக்டர்ஸ் எல்லாம் சொல்லிட்டாங்க” என்று எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டு பேசினான்.
அவனின் பாராமுகம் இவளுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்பொழுது அதை பற்றி எல்லாம் சிந்திக்கும் மனநிலையில் அவள் இல்லை.
அவளுக்கு தன் தந்தையை உடனே சரி செய்தாக வேண்டும்.
அவளுக்கு மட்டும் ஏதேனும் மாயாஜாலம் தெரிந்திருந்தால், ஒரே நொடியில் அவளின் தந்தையை சரி செய்து பழையபடி மாற்றி இருப்பாள்.
அத்தனை வலி அவளுக்குள்.. அவரை இப்படி ஒரு நிலையில் அவளால் கண் கொண்டு காண முடியவில்லை.
“அது மட்டும் இல்ல, பிரைவேட் ஹாஸ்பிடல்ல எல்லாம் வச்சு ட்ரீட்மென்ட் பார்த்து இதுக்கு மேல முடியாதுன்னு தான் இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கோம். இங்க தான் பீஸ் இல்லையாமே.. பணம் கட்ட முடியாம கஷ்டப்படுறவங்களுக்கு ஃப்ரீயாவே இங்க ட்ரீட்மெண்ட் பார்ப்பாங்கலாமே.. அதனால தான் இங்க கொண்டு வந்து இருக்கோம். இதுக்கு மேல எங்களால பணம் கட்டி சரி பண்ண முடியாது. இருந்த பணம் எல்லாம் இவருடைய ட்ரீட்மெண்ட்க்கே கரைஞ்சு போச்சு” என்று நொடிந்து கொண்டாள் நித்யா.
பாரிவேந்தனுக்கு அவளின் வார்த்தையில், ‘என்ன இவர் இப்படி எல்லாம் பேசுகிறார்’ என்று தான் தோன்றியது.
ஆனால், இனியாளுக்கு அப்படியெல்லாம் எதுவும் தோன்றவில்லை. நித்யாவை பற்றி தான் அவளுக்கு முன்னதாகவே தெரியுமே..
வலி நிறைந்த புன்னகையை உதிர்த்தவள், “இனிமே அப்பாவை நானே பார்த்துக்கிறேன் அண்ணா நீங்க எதுவும் கவலைப்படாதீங்க”
“அப்படியா! ரொம்ப சந்தோஷம்.. அதான் உங்க தங்கச்சி பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க இல்ல.. உங்க அப்பாவுக்கு என்ன நீங்க மட்டும் தான் பையனா.. சின்ன வயசுல இருந்து பையன விட பொண்ணு தான் ஒசத்தின்னு எவ்வளவு பணம் கட்டி டாக்டருக்கு படிக்க வச்சாரு.. இப்போ அவரை அவளே பார்த்துக்கட்டும். நம்மளால முடிஞ்ச வரைக்கும் நாம பாத்தாச்சு. இனிமே நம்மளால பணம் கட்டி எல்லாம் பார்க்க முடியாது. எதுவா இருந்தாலும் அவளே பாத்துக்கட்டும் வாங்க கிளம்புவோம்”.
முகிலனுக்கு தந்தையை அப்படியே விட்டு செல்ல மனமில்லை. நாராயணனும் அவனை சென்று வருமாறு கையசைத்தார்.
அனுதினமும் நித்யா வார்த்தைகளாலேயே அவனை குத்தி கிழிப்பதை அவரும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.
இனியும் தன் மகனுக்கு பாரமாய் இருக்கக் கூடாது என்று நினைத்து விட்டார் போலும்..
நித்யாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளின் தாய் பாக்யாவின் மறு உருவமாக தான் இருக்கும்.
“நல்லா உடம்புல தெம்பு இருக்க வரைக்கும் அவர் பொண்ணுக்கு தானே செலவு பண்ணாரு.. இப்போ உடம்பு முடியாமல் போனதும் நாமலே பாக்கணும்னு நமக்கு என்ன தலை எழுத்தா.. ஏதாவது கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்த்துடுவோம். இதுக்கு மேல செலவு பண்ணா நமக்கு புள்ளைங்க இருக்கு நாளைக்கு நமக்கு சேர்த்து வைக்க வேண்டாமா” என்று வார்த்தைகளால் தேள் கொடுக்காக அனுதினமும் முகிலனை கொட்டிக் கொண்டே இருப்பாள்.
அதன் விளைவே வேறு வழியின்றி இந்த மருத்துவமனைக்கு அவன் நாராயணனை கொண்டு வந்து சேர்த்தது.
இனியாள் எதுவுமே கூறவில்லை.
முகிலனுக்கு அவளுடன் பேச வேண்டும் என்று நா பரபரத்தது.
என்ன தான் அவள் மேல் கோபமிருந்தாலும் தங்கையா ஆயிற்றே.. அந்த பாசமும் இருக்க தானே செய்யும். இத்தனை மாதங்கள் எங்கே சென்றாய்? என்ன செய்தாய்? இப்பொழுது எப்படி டாக்டராக இருக்கிறாய் என்றெல்லாம் அவளிடம் கேள்வி எழுப்ப மனம் துடித்தது.
ஆனால், நித்யாவோ அங்கிருந்து எப்படியாவது முகிலனை அழைத்து செல்ல வேண்டும் என்ற முனைப்பிலேயே பேசிக்கொண்டு இருந்தாள்.
“நீ கிளம்புறதுனா கிளம்பு நான் இனியாள் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்ற முகிலனை முறைத்தவள் வேறு வழியில்லாமல் பற்களை கடித்துக் கொண்டு அமைதியாக நின்று இருந்தாள்.
அதன் பிறகு, பாரிவேந்தனின் சொல்படி நாராயணனை வேறு ஒரு தனி அறைக்கு மாற்றினர். அவருக்கு உயர் தர சிகிச்சையும் நடைபெற்றது.
அனைத்துமே கடகடவென அரங்கேறவும் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றனர் முகிலனும், நித்யாவும்.
அறைக்குள் நாராயணன் படுத்து உறங்கிக் கொண்டிருக்க. அவர் அருகில் அமர்ந்து கண்களில் கண்ணீரோடு அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள் இனியாள்.
பசிக்கிறது என்று முகிலனை அழைத்துக் கொண்டு கேண்டினிற்கு சென்ற நித்யா வயிறு முட்ட உணவை உண்டு விட்டு, மீண்டும் இருவரும் அறைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் வரும் அரவம் உணர்ந்தாலும் இனியாளிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
அவர்களை தொடர்ந்து பாரிவேந்தனும் அறைக்குள் நாராயணனை பரிசோதிக்க வேறு ஒரு மருத்துவர் உடன் நுழைந்தான்.
அவர் நாராயணனை பரிசோதித்து விட்டு சரியா ட்ரீட்மென்ட் கொடுத்தால் சீக்கிரமே குணமடைய வாய்ப்புள்ளதாக கூறிவிட்டு சென்ற பிறகு தான் இனியாளிற்கு மனம் சற்று லேசானது.
அறைக்குள்ளேயே மற்றொரு நாற்காலியில் அமர்ந்த முகிலன், “எங்க போன இனியாள் என்ன இதெல்லாம்.. இங்க என்ன நடக்குது?” என்று பல கேள்விகளை அவளுக்கு முன்பு அடுக்கி வைத்தான்.
“ஒரு நிமிஷம் உங்களுடைய எல்லா கேள்விக்கும் நான் உங்களுக்கு பதில் தரேன்” என்ற பாரி வேந்தன் தங்கள் இருவரின் வாழ்க்கையிலும் நடந்த அனைத்து சம்பவத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினான்.
அவன் இவர்களின் கதையை கூறத் தொடங்கும் முன்னரே நாராயணனும் கண் விழித்து விட்டார். அவன் கூறிய மொத்தத்தையும் கேட்டவருக்கோ கண்களில் கண்ணீர் வடிந்தது.
அவன் கூறியதை கேட்ட முகிலன் கோபமாக பாரிவேந்தனின் சட்டையை பிடித்து உலுக்கியவாறு, “எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் என் தங்கச்சியுடைய வாழ்க்கையை இப்படி அழிச்சிருப்ப.. எவ்வளவு சாதாரணமா நீ தான் அவகிட்ட இப்படி நடந்துக்கிட்டனு சொல்ற”.
அவனின் செயலில் திடுக்கிட்டு இருக்கையில் இருந்து எழுந்த இனியாள் இருவருக்கும் இடையே வந்து நின்றவாறு, “அண்ணா என்ன பண்ற நீ.. முதல்ல அவர் மேலிருந்து கையை எடு. அவர் ஒன்னும் வேணும்னே இப்படி செய்யல”.
“வேணும்னு செய்யாம வேற எதுக்கு செஞ்சாராம்.. ஒரு பொண்ணு அவளுடைய சுய நினைவுல இல்லாத போது அவ கிட்ட தப்பா நடந்திருக்காரு இதுக்கு மேல இவர் பெரிய டாக்டர் வேற” என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்ட தொடங்கி விட்டான்.
“அண்ணா அவர் ஒன்னும் தப்பானவர் எல்லாம் கிடையாது. இந்த ஹாஸ்பிடலுடைய ஓனரே அவர் தான். எத்தனை குழந்தைங்களை இலவசமா இவங்க படிக்க வைக்கிறாங்கனு தெரியுமா.. நான் கூட இவங்க காலேஜ்ல தான் ப்ரீயா படிச்சு முடிச்சேன். இவங்க பேமிலியே ரொம்ப நல்லவங்க அண்ணா. நிறைய கஷ்டப்படுறவங்களுக்கு ஃப்ரீயா ட்ரீட்மென்ட் கொடுக்குறாங்க. எவ்வளவோ மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க”.
“அவ்வளவு நல்லவர் எதுக்காக அன்னைக்கு ராத்திரி உன்னுடைய ரூமுக்கு வந்தாராம்?” என்று ஒரே வார்த்தையில் அவளின் வாயை அடைத்து விட்டான் முகிலன்.
“இங்க பாரு உனக்கு வேணும்னா அவர் சொல்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு அவர் மேல நிறையவே நம்பிக்கை இருக்கு. அவர் தெரிஞ்சு இப்படி அன்னைக்கு என்கிட்ட தப்பா நடந்திருக்க மாட்டார். அன்னைக்கு வேற என்னமோ நடந்து இருக்கு. சொந்த தங்கச்சியவே என்ன நடந்துச்சுன்னு விளக்கம் கூட கேட்காம வீட்டை விட்டு வெளியே துரத்துனவன் தானே நீ.. இதுல, இவர் யார் என்னனே உனக்கு தெரியாது. அப்புறம் இவர் மேல மட்டும் எங்கிருந்து உனக்கு நம்பிக்கை வந்திட போகுது” என்றாள் சூடாக.
கெட்டதிலும் நல்லது என்பது போல் அவளின் வார்த்தையில் இன்பமாக அதிர்ந்தான் பாரிவேந்தன்.
அப்படியானால் அவளுக்கு தன் மேல் நம்பிக்கை இருக்கிறதா என்று எண்ணும் பொழுதே எதையோ ஜெயித்த உணர்வு அவனுக்குள்..
இனி அவனை பற்றி யார் என்ன அவதூராக பேசினாலும் அவனுக்கு கவலை கிடையாது. தன் நிலையை இனியாள் உணர்ந்து கொண்டாள் என்பதே அவனுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
இனியாளின் வார்த்தை முகிலனுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவள் கூறுவதும் உண்மை தானே.. நாம் சரி வர விசாரித்து இருக்க வேண்டும் என்று எண்ணி வருந்தியவன் தன் தந்தையின் அருகில் சென்று, “அப்பப்போ நான் வந்து பாத்துக்குறேன் பா”.
அவரும் அதற்கு சம்மதமாக தலையசைக்கவும் அங்கிருந்து கிளம்பி விட்டனர் அவ்விருவரும்.
அதன் பிறகு பாரி வேந்தனிடம் அவன் எதுவுமே பேசவில்லை.
அடுத்த ஒரு வாரம் இனியாள் தன் தந்தையை நல்ல முறையில் கவனித்துக் கொண்டாள். அவருக்குமே தன் மகள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல்நிலை தேறி வர தொடங்கியது.
இப்பொழுது கொஞ்சம் பேசவும் துவங்கிவிட்டார்.
“அப்பாவ மன்னிச்சிடுடா” என்றார் குழறியபடி.
“அப்பா இனி இதை பற்றி யாரும் பேச வேண்டாம். இது எதுவுமே நம்ம நினைச்சு பார்க்கல.. நாமலே எதிர்பாராமல் தானே இப்படி எல்லாம் நடந்திருக்கு விடுங்க” என்றவள் தயக்கத்தோடு, “அப்பா அவர் ரொம்ப நல்லவர் பா. அவங்க பேமிலியுமே ரொம்ப நல்லவங்க” என்று அவள் பேச தொடங்கும் முன்னரே அவளின் முன்பு பேசாதே என்பது போல் கையை நீட்டி தடுத்தவர்.
“எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு டா. நீ எதையும் எக்ஸ்ப்ளைன் பண்ண தேவையில்லை. அவரை பார்த்தாலே நல்லவரா தான் தெரியுது. உங்க ரெண்டு பேரையும் யாரு நம்புறாங்களோ இல்லையோ நான் நம்புறேன்டா”.