விதுஷாவிற்கு அவன் எதுவோ பெரிதாக தவறு இழைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்ததே தவிர, அவனின் வார்த்தையை வைத்து எதுவுமே சரி வர முழுதாக விளங்கவில்லை.
“இவன் என்னடா சொல்றான்” என்றாள் நடுங்கும் குரலில்.
பாரி வேந்தனும் இனியாளும் தான் மொத்த கதையையும் அவளுக்கு ஒரே மூச்சில் கூறி முடித்தனர்.
அதை கேட்ட விதுஷா தன் வாயின் மீது அதிர்ந்து கையை வைத்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அரவிந்த் போதையில் பாரிவேந்தனிடம் தன்னை மன்னித்துவிடுமாறு கத்திக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்தான்.
பாரிவேந்தனுக்குமே அவன் கூறியது அதிர்ச்சி தான். அன்று என்ன நடந்தது என்று புரியாமல் அவனும் குழம்பி தான் போயிருந்தானே தவிர, நிச்சயமாக இதற்கு பின்னால் அரவிந்த் இருப்பான் என்பதை அவன் சற்றும் சிந்தித்து கூட பார்க்கவில்லை.
உற்ற நண்பனாக நினைத்தவனை சந்தேகிக்கவும் அவனுக்கு தோன்றவில்லை. இப்பொழுது அவன் தான் தனக்கு இப்படி ஒரு துரோகத்தை இழைத்திருக்கிறான் என்பது தெரியும் பொழுது வாய் அடைத்து போய் விட்டான்.
அவன் மேல் பெரும் வருத்தம் எழுகிறது தான். ஆனாலும், என்ன செய்ய முடியும் அனைத்துமே நடந்து முடிந்து விட்டதே.. இப்பொழுது இனியாளும் இவனுக்கு கிடைத்துவிட்டாள்.
இந்த விஷயத்தில் அரவிந்தின் மேல் இருக்கும் வருத்தம் எத்தனை நாட்கள் ஆனாலும் தனக்கு குறையாது. ஆனால், அவனை தண்டிக்கவும் இவனுக்கு தோன்றவில்லை.
அதற்கு முக்கிய காரணம் விதுஷாவாக கூட இருக்கலாம்..
ஒரு வேளை, இனியாள் இன்னமுமே இவனுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் அவனை தண்டித்திருப்பானோ என்னவோ..
இப்பொழுது தான் அவனுக்கு இனியாளும் அவனின் மகளும் கிடைத்துவிட்டார்களே.. எனவே, எதுவுமே கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
அவனின் கண்களுமே கலங்கிவிட்டது.
நண்பனின் துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“எப்படிடா இவனுக்கு இப்படி எல்லாம் செய்ய மனசு வந்துச்சு?” என்று அழுகையோடு கேட்டாள் விதுஷா.
“விடு விது எல்லாம் இப்போ சரியாயிடுச்சு இல்ல” என்று மேலோட்டமாக அவளுக்கு பதில் கூறினாலும் தற்பொழுது பாரிவேந்தனின் மனமும் அத்தனை ரணமாக தான் இருந்தது.
அவனின் நம்பிக்கை துரோகத்தை இவனாலும் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை.
ஆனால், இனியாளுக்கோ இப்பொழுது தான் மனம் நிம்மதியாக இருந்தது. இத்தனை நாளும் பாரிவேந்தனுடன் பழகிய வரையிலும் அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவன் மிகவும் நல்லவன்.
அவனின் குடும்பமே அத்தனை நல்லவர்கள்.
எத்தனையோ உதவிகளை மற்றவர்களுக்கு செய்கிறார்கள்.
அப்படி இருக்கையில் எப்படி பாரிவேந்தன் அன்று தன்னை சற்றும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் தவறாக நடந்து கொண்டான் என்ற கேள்வி மட்டும் அவளின் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
இப்பொழுது அதற்கும் தெளிவான விடை கிடைத்துவிட்டது அல்லவா.. நடந்த சம்பவத்திற்கும் பாரிவேந்தனிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
அவனையும் மீறி அவன் நடந்து கொண்டதற்கான காரணமும் தெரிந்து விட்டது. இப்பொழுது தான் அவளால் முழு மனதோடு பாரிவேந்தனை ஏற்றுக் கொள்ளவும் முடிந்தது.
நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டாள்.
தன் கண்களை அழுத்த துடைத்துக்கொண்டவள், “விட முடியாது டா.. எப்படி அப்படியே விட சொல்ற? இவன நான் சும்மாவே விட மாட்டேன். நம்ம வீட்ல நமக்கு மேரேஜ்க்கு பிக்ஸ் பண்ணது உண்மை தான். அதுக்காக அவன் இப்படி செஞ்சது சரியா.. எதுவா இருந்தாலும் அவன் உண்மைய சொல்லி இருக்கணும் இல்ல.. இப்படி உன் லைஃபை ஸ்பாயில் பண்ணிட்டானே.. உனக்கு இனியாள் கிடைச்சதால இந்த பிரச்சனை சரியாகிச்சு.
ஒருவேளை, இன்னமும் உனக்கு இனியாள் கிடைக்காமல் இருந்திருந்தால் என்னடா பண்ணி இருப்ப.. பைத்தியக்காரன் மாதிரி என்னை கூட பேஸ் பண்ண கில்ட் ஆகி ரூமுக்குள்ளேயே போய் அடைஞ்சு கிடந்தியே.. அதை எல்லாம் மறந்து போயிட்டியா.. நீ வேணும்னா இவனை மன்னிக்கலாம். ஆனால், நான் கடைசி வரைக்கும் இவனை மன்னிக்கவே மாட்டேன்” என்றவளோ சற்று நேரம் எதையோ சிந்தித்து, “இவன் எதுக்காக இதையெல்லாம் பண்ணினான்.. எனக்காக தானே.. என்னோட கடைசி வரைக்கும் சந்தோஷமா வாழனும் என்பதற்காக தான இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை செஞ்சு உன் வாழ்க்கையை அழிக்க பார்த்தான். இவனுக்கு அந்த சந்தோஷம் கிடைக்காது. இவனால என்னோட வாழவே முடியாது. கடைசி வரைக்கும் இவன் எதுக்காக அவ்வளவு பெரிய தப்பு பண்ணானோ அது இவனுக்கு கிடைக்காது” என்று அழுத்தமாக கூறினாள்.
“விது ப்ளீஸ்.. அவசரப்படாத பொறுமையா யோசி”.
“ப்ளீஸ் பாரி, இது என் லைஃப் சம்பந்தப்பட்ட விஷயம் இப்படி ஒரு நம்பிக்கை துரோகியோட என்னால வாழ முடியாது. நாளைக்கு வேற ஏதாவது பிரச்சனைனா இவன் திரும்ப இப்படித்தானே ஏதாவது செய்வான். என்னால இவனை ஏத்துக்க முடியாது என்னை வீட்ல டிராப் பண்ணு பாரி”.
அவள் கூறியவாறு அவளின் வீட்டில் அவளை இறக்கி விட்டவன். அரவிந்தின் வீட்டில் அவனை இறக்கி விட்டு விட்டு தங்கள் வீடு நோக்கி புறப்பட்டு விட்டனர்.
வீட்டிற்கு வந்து வெகு நேரம் ஆகியும் உறக்கம் வராமல் பாரிவேந்தன் படுகையில் புரண்டு கொண்டே படுத்திருந்தான்.
எப்பொழுதுமே பாரிவேந்தனுக்கும் இனியாளுக்கும் நடுவில் தான் யாழ்நிலாவை படுக்க வைப்பாள் இனியாள்.
இன்று ஏனோ இதற்கு மேலும் பாரிவேந்தனை தன்னிடம் இருந்து விலக்கி வைக்க அவளுக்கு மனம் வரவில்லை.
தவறே செய்யாதவன் எதற்காக தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் போலும்..
யாழ்நிலாவை நகர்த்திவிட்டு பாரிவேந்தனின் அருகில் அவள் இடம் பெயர்ந்து படுத்ததை கூட கவனிக்காமல் தனக்குள்ளேயே உழன்று கொண்டு இருந்தான் பாரிவேந்தன்.
தன்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு படுத்து இருக்கும் இனியாளை பார்த்தவனிற்கோ அதிர்ச்சி தான், “என்ன?”.
“ஒன்னும் இல்லையே” என்றாலும் அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொள்ள.
அனிச்சை செயலாக பாரிவேந்தனின் கரமும் அவளை சுற்றி வளைந்தது.
“ஆமா, இத்தனை நாள் நீங்க ஏன் என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டீங்கன்னு புரியாம ரொம்ப குழம்பி போய் இருந்தேன். நீங்க ரொம்ப நல்லவர்னு தெரியும். ஆனாலும், நீங்க என்கிட்ட நடந்துகிட்டதை என்னால ஏத்துக்க முடியல. இப்போ உங்க மேல எந்த ஒரு தப்புமே இல்லன்னு தெரிஞ்சிடுச்சு. உங்கள இனிமே என்னால ஏத்துக்க முடியும்ல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”.
அவளின் வார்த்தையில் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன் அவளின் நெற்றியில் அழுத்தமாக தன் இதழை பதித்தான்.
இனியாளும் அவனை தடுக்கவில்லை தன் கண்களை மூடி அவனின் இதழ் ஒற்றளை ஆழ்ந்து அனுபவித்தாள்.
பாரிவேந்தனுக்கும் மனம் லேசாக தான் இருந்தது. இத்தனை நாளும் இனியாளின் மனதை அரித்து கொண்டிருந்த அதே கேள்வி தான் இவனின் மனதையும் அரித்து கொண்டிருந்தது.
‘ஏன் அப்படி நடந்து கொண்டோம் அன்று.. அப்படி தனக்கு என்ன தான் ஆனது’ என்று பல்வேறு குழப்பங்களில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டு தான் இருந்தான்.
அனைத்திற்கும் விடை கிடைத்துவிட்டது. ஆனாலும், இப்பொழுது தன் ஆருயிர் தோழி விதுஷாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே என்று எண்ணும் பொழுது தான் அவனின் மனம் கனத்தது.
ஆனாலுமே யாரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் தலையிடுவது பாரிவேந்தனுக்கு சிறு வயது முதலே சற்றும் பிடிக்காது.
அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம் என்று எண்ணுபவன்.
ஆகையால், அரவிந்த் செய்த தவறுக்கு விதுஷா என்ன தண்டனை கொடுக்க நினைக்கிறாளோ அப்படியே செய்யட்டும். தன்னை பொறுத்த மட்டும் அவனை தண்டிக்கவும் முடியாது, அவனை மன்னிக்கும் மனநிலையும் தனக்கு இல்லை என்று ஒதுங்கிக் கொண்டான்.
முதல் முறை இனியாளே தன்னை நெருங்கி வந்திருக்கிறாள். அவனுக்குள்ளும் உணர்வுகள் தீப்பிழம்பாய் கொழுந்து விட்டு எரிந்தன..
ஆனால், அதை எல்லாம் அவளிடம் காட்ட அவனிடம் ஏதோ ஒரு தயக்கம்..
அதனை சரியாக உணர்ந்த இனியாள், “சரி டாக்டர் தூங்கலாமா?”.
“டாக்டர்னு கூப்பிடாதன்னு உன்னை நான் சொல்லி இருக்கேன்ல”.
“எனக்கு உங்கள பாத்தா டாக்டர்னு தான் பீல் ஆகுது. புருஷன்னு பீல் ஆகலையே” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் தன் இதழ்களை அவள் பிதுக்கி காட்டவும்.
இவனின் விழிகளோ அவளின் இதழை விட்டு அசைய மாட்டேன் என்று அடம்பிடித்தது.
உணர்வுகளின் பிடியில் அவளை நோக்கி உஷ்ணமாக பெருமூச்சை வெளியேற்றியவன், “புருஷனா நானும் நடந்துக்க ரெடி தான். ஆனா, மறுபடியும் உன்னை ஹர்ட் பண்ணிடுவனோனு பயமா இருக்குடி” என்று அவளின் கண்களை பார்த்துக் கொண்டே அவன் பேசவும்.
அவனின் சட்டையின் காலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள் அழுத்தமாக அவனின் இதழில் தன் இதழை பொறுத்திருந்தாள்.
இருவரும் முற்றிலுமாக காதலில் உருகி குழைந்து கரைந்து போகும் முதல் இதழ் தீண்டல்..
இருவருக்குள்ளுமே அத்தனை உணர்வுகளை ஆர்ப்பரித்தது.
“உனக்கு ஓகே தானே” என்றான் அவளின் காது மடலில் தன் இதழ் உரச கிசுகிசுப்பான குரலில்.
அவளோ பதில் உரைக்கும் நிலையிலேயே இல்லாத மோன நிலையில் அல்லவா இருக்கிறாள், “ம்ம்” என்றாள் அவனின் முகத்தையே காண முடியாமல் சிணுங்களாக.
அவளின் சம்மதம் கிட்டியதும் அவளுக்குள் மொத்தமாக மூழ்கி கரைய துவங்கி விட்டான்.
இருவரும் முழுமூச்சாக யாழ்நிலாவிற்கு உடன்பிறப்பை உருவாக்கும் வேலையில் இறங்கி விட்டனர்.
இதற்கு முன்னரும் இருவரும் பலமுறை ஒன்றிணைந்து இருக்கின்றனர் தான். ஆனால், அப்பொழுதெல்லாம் இருவருக்குமே இதை உணர்ந்து செய்யும் மனநிலை இல்லை.
ஆனால், இப்பொழுது இருவரின் மனமும் ஒன்றிணைந்து, ஒருவர் மீது மற்றொருவர் காதலில் திளைத்து உணர்ச்சி பெருக்கோடு ஒருவருக்காக மற்றொருவர் மனம் வந்து தன்னை கொடுக்கின்றனர். இதில் இருக்கும் சுகம் தனி தானே…
உண்மையை சொல்லப்போனால் கூடலின் இன்பத்தையே இருவரும் இப்பொழுது தான் உணர்ந்து கொண்டனர்.
அவளை மொத்தமாக தன் வசம் எடுத்துக் கொண்டவன் அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்தவாறு படுத்திருந்தான்.
அவளுக்கோ அவனின் முகத்தை பார்ப்பதற்கே அப்படி ஒரு சங்கடம்..
“அப்படி பார்த்தா நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். எனக்கு நீங்க யாருன்னு தெரியாது. ஆனா, உங்களுக்கு அப்படி இல்ல.. என்னை யார்னு தெரியும். என்னை சரியா கண்டுபிடிச்சதும் உங்க மேல தப்பு வராம இருக்குறதுக்காக நீங்க என்னை யாருன்னு தெரியாதுன்னு மத்தவங்க கிட்ட எல்லாம் சொல்லி இருக்கலாம். ஆனா, நீங்க அப்படி எதுவுமே பண்ணல.. எனக்காக ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து செஞ்சு இருக்கீங்க. அது எல்லாத்துக்கும் நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்”.
“தேங்க்ஸ் தான சொல்லலாம்.. ஆனா, இப்படி இல்ல” என்றவனோ மீண்டும் அவளின் இதழை சிறை செய்தான்.