அழுகை நின்ற பாடில்லை தலையணையில் தன் முகத்தை புதைத்து அழுகையில் கரைய தொடங்கி விட்டாள்.
பெரிதாக அரவிந்தின் மேல் அவள் காதல் வயப்படவில்லை என்றாலும், திருமணத்திற்கு பிறகு அவன் தான் தன் கணவன் என்று ஆன பிறகு, அவன் மேல் தன் மொத்த நம்பிக்கையையும், காதலையும் வைத்துவிட்டாள் பெண்ணவள்..
அவன் இப்படி ஒரு காரியத்தை செய்ததை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், தன் உயிர் தோழனுக்கு அவன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறானே அதற்கு முழு காரணம் நான் தானே என்று எண்ணியவளுக்கோ உள்ளம் ஊமையாக கதறியது.
விடிய விடிய தூங்காமல் அன்றைய இரவு அவளுக்கு அழுகையிலேயே கரைந்து விட்டது.
மறுநாள் கண் விழித்த அரவிந்திற்கு தான் எங்கே இருக்கிறோம் என்று பிடிபடவே சற்று நேரம் தேவைப்பட்டது. அருகில் விதுஷா இல்லாததை உணர்ந்தவன் தலைவலியோடு எழுந்த அமர்ந்து தன் இரு கைகளாலும் தலையை அழுத்தமாக பற்றி கொண்டான்.
அப்பொழுது தான் நேற்றைய சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவனின் நினைவடுக்கிலிருந்து நினைவூட்டியது.
ஒவ்வொன்றாக நினைவு வர வர அவனுக்குள் அப்படி ஒரு அதிர்ச்சி.
அதிலும், விதுஷா தன்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்..
பாரிவேந்தனிடம் மன்னிப்பை கேட்க வேண்டும் என்பது அவனின் பல நாள் ஏக்கம் தான்.
இப்படி ஒரு நிலையில் அவனிடம் உண்மையை கூறி மன்னிப்பை கேட்டு விட்டு வரையிலும் அவனுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், விதுஷாவை பற்றி தான் அவனுக்கு பெரிய கவலையாக இருந்தது.
அவசரமாக தன் செல்பேசியை எடுத்தவன் அவளுக்கு அழைப்பெடுத்து பார்த்தான். அவளோ ஏற்கவே இல்லை.
இரண்டு, மூன்று முறை இவனின் அழைப்பை ஏற்காமல் இருந்தவள் நான்காம் முறை செல்பேசியையே அணைத்து விட்டாள்.
பொறுத்திருந்து பார்க்கும் அளவிற்கு எல்லாம் அரவிந்திடம் பொறுமை இல்லை. விதுஷாவின் வீடு நோக்கி புறப்பட்டு விட்டான்.
வீட்டிற்குள் நுழைந்தவனை வரவேற்ற விதுஷாவின் தாய் ராதா, “வாங்க மாப்ள விது மேல தான் இருக்கா” என்றதும்.
அவருக்கு ‘சரி’ என்று தலையசைத்தவன் வேகமாக அறையை நோக்கி நடந்தான்.
அரவிந்தின் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லாததை கணித்த ராதாவிற்கு சற்று கலக்கமாக தான் இருந்தது.
நேராக அறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அரவிந்த் கண்டது என்னவோ அங்கே தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதவாறு படுத்திருக்கும் விதுஷாவை தான்.
அவனின் இதயத்திலோ சுருக்கென்ற வலி முள்ளாய் தைத்தது..
யாருக்காக தவறு என்று தெரிந்தும் மனசாட்சி அற்று அவ்வளவு கொடுமைகளை செய்தானோ.. அவளோ இப்பொழுது கண்களில் கண்ணீரை அல்லவா சுரந்து கொண்டிருக்கிறாள்.
அதை பார்க்க பார்க்க இவனுக்கும் மனம் வேதனையாக இருந்தது.
அவள் அருகில் ஓடியவன், “அழாதடி தப்பு பண்ணது நான் தான் நீ எதுக்காக அழற?” என்றது தான் தாமதம் வெடுக்கென்று எழுந்து அமர்ந்தவள் அவனின் முகத்தையே பார்க்காமல் வேறு புறம் திரும்பியவாறு, “உன்னை யாரு இப்போ இங்க வர சொன்னது? எதுக்கு இங்க வந்த? வெளியில் போ” என்றாள் எடுத்த எடுப்பிலேயே.
அவளின் வார்த்தையில் அவனுக்கோ இதயத்தில் பெரிய அடி விழுந்த உணர்வு, “சாரி விது உனக்காக தான்..”.
“போதும் நிறுத்துடா! எனக்காக பண்ணினாயா? யார் உன்னை அப்படி எல்லாம் செய்ய சொன்னது.. நான் கேட்டேனா.. இப்படி எல்லாம் பண்ணி அவனுடைய மானத்தை வாங்குன்னு நான் உன்கிட்ட சொன்னேனா? உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லல்ல.. அவன் யாருன்னு உனக்கு தெரியுமா.. என்னுடைய சைல்ட்வுட் பிரிண்ட்.. நானும் அவனும் சின்ன வயசுல இருந்து ஒன்னா இருக்கோம். வீட்ல தான் அன்னைக்கு கல்யாணத்தை பேசுனாங்களே தவிர, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கல. நீ என்னை விரும்புறேன்னா என்கிட்ட அதை வெளிப்படையா சொல்லி இருக்கலாமே..
அத விட்டுட்டு அவனுக்கு வயாகராவை கலந்து கொடுத்து.. ச்சீ… நினைக்கவே அருவருப்பா இருக்கு. உன்னால அந்த பொண்ணுடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கு. அந்த பொண்ணு மட்டும் பாரியோட கண்ணுல படாம இருந்திருந்தா என்னடா ஆகி இருக்கும். காலம் முழுக்க குற்ற உணர்ச்சியிலேயே அவன் செத்து இருப்பான். அந்த பொண்ணு தன் குழந்தைக்கு யாரு அப்பான்னு தெரியாத வருத்தத்திலேயே செத்திருப்பா.. ரெண்டு உயிரை கஷ்டப்படுத்திட்டு அப்படி என்னடா உனக்கு காதல் வேண்டி கிடக்குது?” என்று சரமாரியாக அவனை திட்ட தொடங்கி விட்டாள்.
அவளின் கேள்விக்கு எதற்குமே இவனிடம் பதில் இல்லை.
தலைகுனிந்து அவமானத்தோடு அமர்ந்திருந்தான்.
தன் தவறை முற்றிலுமாக உணர்ந்து விட்டான். ஆனால், அதை சரி செய்வது எப்படி என்பது தான் அவனுக்கு விளங்கவில்லை.
இவள் எவ்வளவு திட்டினாலும் அதை தான் வாங்கிக் கொள்ள தான் வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டான்.
“என்னால முடியல தெரியுமா.. எனக்காக நீ பாரி கிட்ட இப்படி நடந்து இருக்கேன்னு நினைக்க நினைக்க என் மேலேயே எனக்கு கோவமா வருது. எனக்கே தெரியாம எவ்வளவு விஷயம் நடந்து இருக்கு.. பாவம் பாரி, இதுவரைக்கும் அவன் எதையுமே என்கிட்ட வெளிப்படையா சொல்லல.. நீ மட்டும் நேத்து தண்ணி அடிச்சிட்டு உளராமல் இருந்திருந்தால் பாரிக்குமே இந்த உண்மை எல்லாம் தெரியாமல் தான் இருந்திருக்கும். அவனுக்குள்ளேயே நாம ஏன் இப்படி நடந்துக்கிட்டோம்னு தெரியலையேன்னு குழம்பி தவிச்சுக்கிட்டு இருந்திருப்பான். இப்ப கூட நீ அவன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு உனக்கு தோணல இல்ல.. தண்ணி அடிச்சிட்டு உளரலைனா இந்த விஷயத்தை எல்லாம் உனக்குள்ளவே மறச்சிருப்ப தானே” என்று ஆக்ரோஷமாக கத்தியவளை எப்படி சமாதானம் செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை.
முற்றிலுமாக உடைந்து போய் விட்டான். இவனின் காரியத்தால் அவளின் மனம் எவ்வளவு வேதனைக்குள்ளாகி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு பெரும் வருத்தமாக தான் இருந்தது.
“தெரிஞ்சு தான் தப்பு பண்ணேன். தெரியாம பண்ணேன்னு பொய் சொல்ல நான் விரும்பல.. எனக்கு நீ வேணும்னு தான் இப்படி எல்லாம் பண்ணேன். ஆனால், அது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரியுது. அப்போ ஏதோ புத்தி கெட்டு போய் அப்படி எல்லாம் நடந்துகிட்டேன்”.
“புத்தி கெட்டு போய் நடந்தது நீ கிடையாது நாங்க தான்.. உன்ன மாதிரி ஒரு நம்பிக்கை துரோகியை பிரண்டா கூடவே வச்சிருந்தோம் பாத்தியா.. எங்களுக்கு தான் புத்தி கெட்டு போச்சு. நீ எவ்வளவு தெளிவா ஒன்னு ஒன்னையும் பக்காவா பிளான் பண்ணி செஞ்சிருக்க.. உனக்கு போய் புத்தி கெட்டு போயிடுச்சுன்னு சொல்றியே” என்று அவனை வஞ்சகமாக புகழ்ந்தவள்.
தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, “எதுக்காக நீ இப்படி எல்லாம் செஞ்ச? ஏன்னா, உனக்கு நான் வேணும்.. நான் வேணும்னு தானே நீ இப்படி எல்லாம் செஞ்ச.. உன்னை நான் சும்மாவே விடமாட்டேன் டா. நீ பண்ணதுக்கு கண்டிப்பா அனுபவிக்கணும். பாரி இத்தனை நாள் எவ்வளவு கஷ்டப்பட்டானோ அவனை விட பல மடங்கு நீ கஷ்டப்படணும், வேதனையில் துடிக்கணும்.. எதுக்காக நீ இப்படி எல்லாம் செஞ்சியோ அது உனக்கு கிடைக்கவே கூடாது”.
இவள் ஒவ்வொரு வார்த்தையாக பேச பேச அவனின் இதயமோ படபடவென அடித்துக் கொள்ள தொடங்கியது.
“எனக்காக தானே நீ இப்படி எல்லாம் செஞ்ச.. என் கூட வாழனும்.. பாரியை என்கிட்ட இருந்து பிரிக்கணும்.. அதுக்காக தானே இப்படி எல்லாம் செஞ்ச” என்று அவனை ஏளன சிரிப்போடு பார்த்தவள், “இனி அது நிச்சயமா நடக்காது. இன்னையோட உனக்கும் எனக்கும் இருந்த ரிலேஷன்ஷிப் முடிஞ்சு போச்சு. மரியாதையா இங்கிருந்து வெளியில் போயிடு. எனக்கு உன் முகத்தை பார்க்க கூட பிடிக்கல அருவருப்பா இருக்கு” என்றவாறு தன் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்.
அவளின் செயலில் முற்றிலுமாக உடைந்து போனான் அரவிந்த்.
அவன் இதையெல்லாம் செய்தது விதுஷாவிற்காக தானே.. அவள் தனக்கு வேண்டும் என்பதற்காக தானே இத்தனையும் செய்தான்.
இப்பொழுது அவளே தன்னை வேண்டாம் என்று கூறும் பொழுது என்ன கூறுவது என்று அவனுக்கு புரியவில்லை.
அவன் செய்த தவறுக்கு தண்டனை வேண்டும் தான். அதற்காக விதுஷாவை இழக்க அவனுக்கு சற்றும் விருப்பமில்லை.
“ப்ளீஸ் டி, இப்படி எல்லாம் பேசாத. நான் பண்ணது தப்பு தான். அதுக்கு நீ என்னை எப்படி வேணும்னாலும் பனிஷ் பண்ணு என்னை விட்டு போறேன்னு மட்டும் சொல்லாத.. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால யோசிச்சு கூட பாக்க முடியாது. ப்ளீஸ் விது” என்றான் மன்றாடலாக.
“வெளியில போ அரவிந்த்.. சீக்கிரமே டைவர்ஸ் நோட்டீஸ் வரும் அதுல சைன் பண்ணி அனுப்பு” என்றவள் அவனின் மனதை வார்த்தைகளால் குத்தி கிழித்து அவனை வெளியே அனுப்பினாள்.
சற்று காலம் அவளை தனிமையில் விட்டால் அவள் கொஞ்சம் மனம் மாறுவாள் என்று எண்ணிய அரவிந்த் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டான்.
மனமெல்லாம் அத்தனை வலி..
ஆனாலும், தான் செய்த தவறுக்கு தண்டனையாக எண்ணி பொறுத்துக் கொண்டான்.
அடுத்த இரண்டு நாளும் விதுஷாவும் அரவிந்தும் பாரிவேந்தனை தொடர்பு கொள்ளவே இல்லை.
இரண்டு நாட்கள் கழித்து விதுஷாவிடமிருந்து அரவிந்திற்கு விவாகரத்து பத்திரம் வந்து சேர்ந்தது.
அதை பார்த்தவனோ மனதளவில் நொறுங்கியே போய் விட்டான்.
அவன் செய்தது மிகப்பெரிய தவறு தான். அதற்காக விதுஷா இல்லாத ஒரு வாழ்க்கையை அவனால் நினைத்தும் பார்க்க முடியாதே.. என்ன செய்வதென்று புரியவில்லை.
வேறு வழியில்லாமல் பாரி வேந்தனுக்கு அழைப்பு விடுத்தான்.
அவனிடம் பேசவே இவனுக்கு முகம் இல்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனுக்கு அழைப்பது என்று எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தவனுக்கு இனியும் தாமதிக்க முடியாது. இவன் கூறினாலாவது விதுஷா தன்னை மன்னிப்பாள் என்று எண்ணத்தோடு அழைப்பு விடுத்து விட்டான்.
அழைப்பை ஏற்ற பாரிவேந்தனோ பழைய விஷயங்களை பற்றி எதுவும் பேசாமல் சாதாரணமாக பேசவும். அரவிந்திற்குள் இருந்த குற்ற உணர்வு மேலும் அதிகரித்தது தான் மிச்சம்.
“ஏன் டா இப்படியே பேசி என்னை கொல்லுற.. என்னை திட்டு பாரி.. நான் செஞ்ச தப்புக்கு என்னை அடி.. இல்ல, உன் கையாலேயே கொன்னுடுடா” என்று தொண்டை அடைக்க பேசினான்.