கனவு -06
“கௌதம் கௌதம் எங்க இருக்கீங்க”
என்று அவனை அழைத்து கொண்டே அவனுக்கு பிடித்த குலாப் ஜாமுனை செய்து கொண்டு எடுத்து அவர்களுடைய அறைக்கு வந்தவள் தன்னுடைய கணவனை காணாது அந்த அறை முழுவதும் தேடினாள்.
அவள் சமையல் கட்டில் அவனுக்காக குலாப் ஜாமுன் செய்ய உள்ளே சென்றபோது அவனோ வெளியில் சென்று விட்டான்.
அது கூட தெரியாமல் இப்பொழுது வந்து அவர்களுடைய அறையில் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள் துவாரகா.
சற்று நேரத்திற்கு முன்பு கோபமாக அறைக்குள் சென்றவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
“என்ன துவாரகா இப்படி இருக்கா ஜஸ்ட் ஒரு கனவு அதை வச்சுக்கிட்டு எப்படி என் மேல இவ்வளவு சந்தேகம் பட முடியுது. லூசு மாதிரி என்னென்னவோ பேசுறா பத்து வருஷமா உருகி உருகி காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கேன் என் மேல எப்படி இவ்வளவு நம்பிக்கை இல்லாம போச்சு அதுவும் ஒரு கனவால ச்சை மண்ட சூடாகுது”
என்று குழம்பியவன் குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தவன் கேசுவல் ஆடைக்கு மாறிவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.
ஆனால் அவனுடைய நினைவு மனைவி அவனிடம் சண்டை போட்டதையே நினைத்துக் கொண்டிருக்க இப்பொழுது தனக்கு இருக்கும் மனநிலைக்கு துவாரகாவை பார்த்தால் நிச்சயம் இந்த சண்டை பெருசாக வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தவன் தன்னுடைய பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விட்டான்.
“எங்க போனார் இவர் ஆளை காணோம் உள்ள தான வந்தாரு எங்கு போய் இருப்பார்”
என்று அறையைச் சுற்றி தேடியவள் கீழே வந்து வீட்டில் அனைத்து இடத்திலேயும் அவனை தேடிப் பார்த்தாள்.
அவனை எங்கும் காணவில்லை.
வெளியே வந்து பார்த்தவளக்கோ அவனுடைய பைக் அங்கு இல்லை என்றதும் அவளுக்கும் சற்று முன்பு காணாமல் போன கோபம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.
“கௌதம் என்கிட்ட சொல்லாம எங்க போனீங்க அவ்வளவு தூரம் வந்துட்டீங்களா ஒரு சின்ன சண்டை அதுக்காக என்கிட்ட சொல்லாம கூட நீங்க வெளியே போய் இருக்கீங்க. புரிஞ்சு போச்சு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு கௌதம் நீங்க கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சிட்டீங்க என்னோட கௌதம் இல்ல நீங்க.
நான் எவ்வளவுதான் உங்ககிட்ட சண்டை போட்டு பேசாம இருந்தாலும் என்னை சமாதானப்படுத்துற அந்த கௌதம் இப்போ இல்ல நீங்க அந்த கனவுல வந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சிட்டிங்க கௌதம் மாற ஆரம்பிச்சிட்டீங்க”
என்று ஆத்திரத்தில் கத்தியவளோ தன்னுடைய கையில் உள்ள குலாப் ஜாமுனை பார்க்க,
“ஆமா இதுதான் ரொம்ப முக்கியம் உங்களை சமாதானம் படுத்துவதற்கு உங்களுக்கு பிடிச்ச குலாப் ஜாமுன் செஞ்சு எடுத்துட்டு வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் ச்சை”
என்றவள் அதை அங்கு வாசலிலேயே போட்டு வீசியவள் உள்ளே வந்து தனது அறையில் படுத்து கொண்டாள்.
இங்கு வெளியே சென்றிருந்த கௌதமோ இரவு வெகு நேரம் ஆன பிறகு அவனுடைய கோபம் சற்று தனிந்து இருந்துது.
எப்பொழுதும் அவனுடைய மனைவி அவனிடம் கோபமாக இருக்கும் போதெல்லாம் அவளை ஆசையாக கொஞ்சி கொஞ்சி சமாதானம் செய்பவனோ இன்று ஆபீஸில் நடந்த பிரச்சினையால் ஏற்கனவே கடும் எரிச்சலில் வந்தவனுக்கு மனைவியின் இந்த அர்த்தமற்ற கோபம் அவனுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
அவன் எவ்வளவு கூறியும் அவள் அதை காதில் கூட வாங்காமல் அவனுடன் வாதத்தில் இறங்க ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியாத கௌதமோ தன்னுடைய கோபத்தை அவளிடம் காட்டி விட்டான்.
வீட்டிலிருந்து கிளம்பி நேராக பீச்சுக்கு வந்தவன் சிறிது நேரம் தன்னை சமன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே அந்த அமைதியான கடற்கரையில் அவனுக்கு தேவையான அமைதி கிடைத்தது.
எவ்வளவு நேரம் அங்கு அமர்ந்திருந்தானோ அவனுக்கு தெரியாது.
அந்த இதமான காற்றில் தன்னை மறந்து அமர்ந்திருந்தவனுக்கோ தன்னுடைய மனைவியின் முகம் தோன்ற,
“ஐயோ அவதான் ஏதோ புரியாம சின்ன புள்ளத்தனமா சண்டை போட்டான்னா நான் வேற என்னைக்கும் இல்லாம இன்னைக்கு அவகிட்ட கொஞ்சம் அதிகமாவே நடந்துகிட்டேன் பாவம் ரொம்ப பீல் பண்ணி இருப்பாளோ.
இதுல அவ கிட்ட சொல்லாம வேற வந்துட்டோம் என்ன நினைச்சிருப்பாளோ தெரியல நம்மள காணோம்னு தேடி இருப்பாளோ.
ச்சை என்ன கௌதம் நீ எப்பவும் பொறுமையா இருக்கிற உனக்கு இன்னைக்கு என்ன ஆச்சு”
என்ற தன்னைத்தானே திட்டிக் கொண்டவன் நேரத்தை பார்த்தான்.
இரவு வெகு நேரம் ஆகி இருக்க,
“ஐயையோ பத்து தாண்டிட்டு இவ்வளவு நேரமாவா இங்க இருந்து இருக்கோம் ஐயோ துவாரகா என்ன பண்ற தெரியலையே சரி முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்”
என்று அங்கிருந்து கிளம்பியவன் அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இரவு உணவு வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
பைக்கை அங்கு நிறுத்திவிட்டு இறங்கி வாசலுக்கு வந்தவனுக்கு தன்னுடைய மனைவியின் கோபத்தை அங்கு சிதறி கிடந்த அந்த குலாப் ஜாமுனே அவனுக்கு எடுத்துக்காட்டியது.
பின்பு தலையில் அடித்துக் கொண்டவன்,
“ஐயோ எனக்கு பிடிச்ச குலாப்ஜாமுன்னு எனக்காக செஞ்சு என்ன சமாதானப்படுத்துவதற்காக கொண்டு வந்திருக்கா போலவே நான் அவ கிட்ட சொல்லாம வெளியே போனது தெரிஞ்சதும் போன கோபம் திரும்ப வந்திருக்கும் போல இருக்கு.
குலாப் ஜாமுனே இப்படி சிதறி கிடக்குனா டேய் கௌதம் உன் நிலைமை இன்னைக்கு படுமோசம்தான் சரி முதல்ல உள்ள போவோம்”
என்றவன் வீட்டிற்குள் சென்றான்.
அவனுடைய மனைவியை அங்கு ஹாலிலும் இருக்கவில்லை.
கிச்சனிலும் இருக்கவில்லை.
இரண்டையும் விழிகளால் அளந்தவன் நேராக தங்களுடைய அறைக்குச் சென்றான்.
அவன் நினைத்தது போலவே அவனுடைய மனைவி கடும் கோபத்தில் அங்கு பெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருக்க அவளுடைய கோபம் இப்பொழுது வரையும் குறையவில்லை என்பதை காட்டும் பொருட்டு தூக்கத்திலையும் கூட அவளுடைய முகம் கடுமையாக தான் இருந்தது.
அதை பார்த்தவனுக்கோ சற்று புன்னகை எட்டிப் பார்க்க லேசாக இதழ் பிரித்து சிரித்தவன் சாப்பாட்டு பார்சலை அங்கு மேஜையில் வைத்துவிட்டு பாத்ரூம் சென்றவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய மனைவியின் முகத்தை ஈரத் துணியைக் கொண்டு துடைத்து விட்டான்.
எங்கே தண்ணீர் தெளித்தால் தன்னுடைய மனைவி திடுக்கிட்டு எழுந்து விடுவாளோ என்று பயந்தவன் இவ்வாறு செய்தான்.
அதில் அவளோ மெதுவாக தன்னுடைய இமைகளை பிறித்தவள் எதிரே தன்னுடைய கணவனின் முகத்தை பார்க்க அவனோ அவளை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் அவளுக்கு அவன் கௌதமாக தெரியவில்லை கௌதமாதித்தனாக தெரிந்தான்.
இவ்வளவு நேரமும் அதே கனவில் இருந்தாள் துவாரகா.
இவன் வந்து அவளை தண்ணீர் தெளித்து எழுப்பியிருந்தால் கூட அவள் அந்த கனவில் இருந்து வெளியே வந்திருப்பாளராக இருக்கும்.
ஆனால் இவன் குழந்தையை கையாள்வது போல அவளை கையால அதுவே அவனுக்கு எதிராக மாறியது.
(என்ன கௌதம் இது உனக்கு வந்த சோதனை)
கண்களை விரித்து பார்த்தவளோ எழுந்து அமர்ந்தவள்,
“என்ன மன்னா தாங்கள் என்னை கொல்ல வந்தீர்களா தங்களுக்கும் அந்த சேனபதி சாயராவுக்கும் நான் இடைஞ்சலாக இருக்கிறேன் என்று என்னை ஒரேடியாக கொல்ல முடிவு எடுத்து விட்டீர்களா”
என்று விழிகளில் கோபத்தையும் தன்னுடைய இயலாமையும் ஏற்றி வைத்து அவள் கேட்க கௌதமுக்கோ ஒன்றும் புரியவில்லை.
“என்னடி உளர்ற என்ன பார்த்தா உன்ன கொல்ல வர்ற மாதிரியா இருக்கு பசியில தூங்குறியேன்னு உன்னை எழுப்ப வந்தா என்ன பார்த்து இப்படி கேக்குற”
என்று கேட்டான் அவன்.
“போதும் மன்னா தாங்கள் என்னிடம் பொய் உரைக்க வேண்டாம் தாங்கள் நம் இருவருடைய காதலை மறந்து விட்டீர்கள்.
அந்த சேனபதி சாயரா மேல் தான் தங்களுக்கு இப்பொழுது ஆசை. நம்முடைய புனிதமான பந்தத்தை என்றோ தாங்கள் புதைத்து விட்டீர்கள். இப்பொழுது என்னையும் கொன்று புதைக்க தான் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் அறிவேன் மன்னா”
என்றவளுடைய கண்களோ கலங்கின.
ஆனாலும் மீண்டும் அவனிடம்,
“இதற்கு மேலும் தங்களையும் சேனபதி சாயராவையும் ஒன்றிணைத்து என்னால் பார்க்க இயலாது ஆகையால் இனியும் தங்களுக்கு இடைஞ்சலாக நான் இருக்க விரும்பவில்லை மன்னா தங்களுடைய கைகளாலேயே என்னை கொன்று விடுங்கள் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு இவ்வுலகை விட்டு நான் செல்ல தயாராக இருக்கிறேன் எங்கே தங்களுடைய வாழ்”
என்று அவனை சுற்றி தேடியவள் அங்கு டேபிள் மேல் இருக்கும் பழம் வெட்டும் கத்தியை எடுத்து கௌதமின் கையில் கொடுத்தவள்,
அதை தன்னுடைய கழுத்திற்கு மிக அருகில் வைத்து,
“நான் தயாராக உள்ளேன் தாங்கள் என்னுடைய சிரசை கொய்து விடுங்கள்”
என்று அதை அழுத்த போக பொறுமை இழந்த கௌதமோ விட்டான் அவளுடைய கன்னத்தில் பளார் என்ற ஒரு அறையை.
https://shorturl.fm/7ks4c