முகமூடி அணிந்த உருவம் மெல்ல நகர்ந்து வந்து மலர்னிகா அருகில் வந்து நின்றது. மீண்டும் கதவுப் பக்கமாக யாரும் வருவார்களா என்று பார்த்தது. பின் மலர்னிகா நல்ல உறக்கத்தில் இருக்க, இதுதான் சரியான தருணம் என்று தனது கையில் இருந்த பளபளக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அவள் வயிற்றில் குத்தச் சென்றது.
யாரோ வருவதை உணர்ந்த துர்க்கா நிமிர்ந்து பார்க்க, முகமூடி அணிந்த உருவம் கையில் கத்தியுடன் மலர்னிகாவை நெருங்குவதைப் பார்த்து, பக்கத்து மேசையில் இருந்த தட்டை எடுத்து அவனது கையில் அடித்தார். எதிர்பாராத விதமாக விழுந்த அடியில் தடுமாறியது அந்த உருவம்.
அதே நேரத்தில் தட்டு கீழே விழுந்து போட்ட சத்தத்தில், கண்விழித்த மலர்னிகா நடந்தது புரிந்ததும் உடனே பக்கத்தில் இருந்த எமர்ஜென்சி அலாரத்தை அடிக்க, செக்யூரிட்டி ஓடி வந்தார். உடனே அந்த உருவம் செக்யூரிட்டியை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
துர்க்கா மலர்னிகா அருகில் வந்தார். “மலர் உனக்கு ஒண்ணுமில்லைல” என்று படபடப்புடன் கேட்டார். அதற்கு மலர், ” எனக்கு ஒண்ணும் இல்லை அம்மா. நீங்க நல்லா இருக்கிறீங்கல்ல” என தாயிடம் தவிப்போடு கேட்டாள் மலர்.
இல்லை என்று சொல்லிக் கொண்டு மலர் அருகில் வந்து இருந்தார் துர்க்கா. அதே நேரத்தில் அலாரச் சத்தத்தினால் டாக்டரும் நர்ஸ்ஸும் வந்தனர். டாக்டர் என்னவென்று கேட்க, துர்க்கா நடந்ததை சொன்னார். அதற்கு டாக்டர்,” இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லை. எதற்கும் நீங்க ரெண்டு பேரும் கவனமாக இருங்க. நானும் போலிஸ்ல சொல்லி வைக்கிறன்.”என்றார்.
அதற்கு உடனே மறுப்பு தெரிவித்தாள் மலர்னிகா. அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் போலிஸிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் சொன்னாள். டாக்டரும் அவள் சொன்னதால் சரி என்றார். பின்னர், காலையில் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்றார்.
அவர் சென்ற பின்னர் இருவரும் எதுவும் பேசவில்லை. மலர்னிகா, இதை யாரு செய்திருப்பார்கள் என்ற யோசனையிலும், துர்க்கா மகளின் உயிரை எப்படி காப்பாற்றுவது என்ற யோசனையிலும் இருந்தனர்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக கம்பனிக்கு தனது விடுமுறையை தெரிவித்து மெயில் அனுப்பி விட்டு மோனிஷாவிற்கு போன் பண்ணினான் சபாபதி.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த மோனிஷா போன் சத்தத்தில் அதை எடுத்துப் பார்க்க சபா என்று வந்தது. உடனே போனை எடுத்தாள். “ஹலோ குட் மார்னிங் சபா. என்ன நீ இந்த நேரத்தில கால் பண்ணியிருக்க?” என்று கேட்டாள்.
மறுபக்கம் லைன்லில் இருந்த சபாபதி சிரித்துக் கொண்டு, “வெரி குட் மார்னிங் மோனிஷா. நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அதுதான் கால் பண்ணன்.” என்றான்.
அதற்கு மோனிஷா,”ஏய் சபா நீயா இப்பிடி பேசுற? என்னைப் பார்த்தாலே எரிஞ்சு எரிஞ்சு விழுவ. ஆனால் இப்போ நீயே எனக்கு கால் பண்ணி பேசணும்னு சொல்ற? சரி நான் கம்பனிக்கு வர ரெடியாகிட்டேன்.” என்றாள்.
சபாபதி,” இல்லை மோனிஷா நான் இன்னைக்கு லீவு. நீ நம்ம கம்பனிக்கு பக்கத்தில இருக்கிற காப்பி ஷாப்க்கு வந்திடு. அங்க வைச்சி பேசலாம்.” என்றான். அவன் கூறியதற்கு, மோனிஷா,” சரி ஆனால் என்னனு சொல்லு சபா. “என்றாள்.
சபாபதி சிரித்தபடி, “இப்போ சொல்லிட்டா எப்பிடி, அதை உங்கிட்ட நேர்ல தான் சொல்லணும் மோனிஷா. நான் உனக்காக வெயிட் பண்றன் வந்திடு.” என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.
இங்கே மோனிஷா,”என்னடா இது நம்ம ஆளுதான் இப்பிடி பேசுறானா? இவனுக்கு என்னாச்சி? எதுக்காக அங்க வரச் சொல்றான்? என்னவா இருக்கும்னு” யோசித்தவாறே சாப்பிடாமல், தட்டில் கையை கழுவி விட்டு சென்றாள்.
காப்பி ஷாப்பில் மோனிஷாவிற்காக காத்திருந்தான் சபாபதி. அந்த நேரத்தில் வீட்டிற்கு போன் பண்ணி எல்லோருடனும் பேசி நலன் விசாரித்து விட்டு இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை ஊருக்கு வருவதாக சொல்லி வைத்தான்.
காப்பி ஷாப்பிற்குள் வேகமாக வந்த மோனிஷா, சபாபதியைத் தேடினாள். சபாபதி அவளிடம் விளையாட எண்ணி, மறைந்து கொண்டான். நன்றாக உள்ளே வந்த மோனிஷா சபாபதியை தேட அவனைக் காணவில்லை. பின்னர் அவனுக்கு அழைக்க நினைத்து போனை எடுத்தாள். அவள் பின்னால் வந்து நின்று அவளது தோளைத் தட்டினான் சபாபதி. திரும்பிப் பார்த்த மோனிஷா சபாபதியைப் பார்த்து சிரித்தாள். பின்னர் இருவரும் சென்று ஒரு மேசையில் இருந்தனர்.
அடுத்த நாள் காலையில் யோசியரை அழைத்து வருமாறு காளையனிடம் சொல்லி அனுப்பினார் விசாகம். கூடத்தில் பெருந்தேவனார், ராமச்சந்திரன், தேவச்சந்திரன் எல்லோரும் டீ குடித்துக் கொண்டு இருந்தனர். விசாகம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
குணவதியும், நேசமதியும் காலை உணவை தயாரித்துக் கொண்டு, இருக்க அவர்களுடன் வாயடித்துக் கொண்டு இருந்தாள் காமாட்சி. சிறிது நேரத்தில் விசாகம் பூஜையை முடித்துவிட்டு கூடத்திற்கு வரவும் காளையன் யோசியரை அழைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.
யோசியர் வீட்டினருக்கு வணக்கம் வைத்தார். பெருந்தேவனார், “வாங்க யோசியரே உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கிறம்.” என்றார். விசாகம், “இங்க ரெண்டு நாளா வீட்டில நடக்கிற எதுவும் சரியில்லை. அதுதான் உங்ககிட்ட என்ன ஏதுனு கேட்கலாம்னு உங்களை கூட்டிட்டு வர காளையனை அனுப்பினேன்.” என்றார்.
அதற்கு யோசியரும், “சரி அம்மா. பார்த்திட்டா போச்சு. ஜாதகத்தை குடுங்க. பார்த்திட்டு சொல்றன். ” என்றதும், விசாகம் குணவதியை அழைத்து, எல்லோருடைய ஜாதகத்தையும் எடுத்து வரச் சொன்னார். அவரும் அறைக்குச் சென்று அங்கிருந்து எடுத்து வந்து யோசியரிடம் குடுத்தார்.
கடவுளை வணங்கி விட்டு முதலில் பெருந்தேவனார் ஜாதகத்தை பார்த்தார். பின்னர் விசாகம், ராமச்சந்திரன், தேவச்சந்திரன், குணவதி, நேசவதி என்று வீட்டில் உள்ள எல்லோருடைய ஜாதகத்தையும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவரது நெற்றி யோசனையில் சுருங்கியது. கைகள் கட்டத்தை எண்ணி எண்ணிப் பார்த்தார். அவர் கொண்டு வந்த பையில் இருந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். வீட்டில் உள்ளவர்களை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.
அவரது நிலையைப் பார்த்த பெருந்தேவனார், “என்ன யோசியரே. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க.” என்றார். அவரைப் பார்த்த யோசியர் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்…
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊