வயலில் காளையனோடு சேர்ந்து உரம் போட்டுக் கொண்டு இருந்தான் கதிர். காளையன் வேலை செய்தாலும் அவனது சிந்தனை இங்கு இல்லை என்பதை உணர்ந்த கதிர், ” அண்ணே என்ன யோசனை? உங்களுக்கு வந்த போனை பற்றியா யோசிச்சிட்டு இருக்கிறீங்க?” என்று கேட்டான்.
அவனைப் பார்த்தவன், “வேலையை முடிச்சிட்டு சொல்றன் கதிர்.” என்றான். அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இருவரும் வேலையை முடித்துவிட்டு, வாய்க்காலில் கைகால் முகம் கழுவி விட்டு ஆலமரத்தின் கீழே வந்து இருந்தனர்.
கையை துண்டில் துடைத்து விட்டு கதிரிடம் பேச ஆரம்பித்தான் காளையன். “கதிர் காலையில யோசியர் வீட்டிற்கு வந்திருந்தாரு. எங்களோட ஜாதகத்தை எல்லாம் பார்த்தாரு. இந்த குடும்பம் பல பிரச்சினைகளை சந்திக்கப் போகுது. கவனமாக இருக்க சொன்னாரு. அதுதான் அதைப்பற்றி யோசிக்கிறன். எனக்கு என்னை பிரச்சனை வந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன் கதிரு. வீட்டில இருக்கிறவங்களுக்கு ஒரு பிரச்சினைனா என்னால தாங்க முடியாது. “
அவனைப் பார்த்த கதிர்,”அண்ணே என்ன பிரச்சினை வந்தாலும் நீங்க தைரியமா இருங்க. உங்களுக்கு என்னால எதுவும் உதவி தேவையா இருந்தா சொல்லுங்க நான் நிச்சயமா செய்வேன்.” என்றான்.
கதிரை பாசத்தோடு பார்த்தவன்,” கதிர் உங்கிட்ட இப்போ சொல்லப்போறதை யார்க்கிட்டையும் சொல்லாத. யோசியர் ஒரு முக்கியமான விசயம் ஒண்ணு எங்கிட்ட தனியா சொன்னாரு. இந்த ஊர் முன்னாடி காமாட்சி அவமானப்பட்டு நிற்கிற சூழ்நிலை வரும்னு சொன்னாரு. எனக்கு அதை நினைச்சாத்தான் பயமா இருக்கு. பட்டாம்பூச்சி போல பறந்திட்டே இருப்பா. சொல்லப்போனா என்னோட முதல் பிள்ளை அவதான். அவளுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது கதிரு. அதுக்காக என்னோட உயிரையும் குடுக்க தயாராக இருக்கிறேன். ” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட கவலைப்பட்ட கதிர்,” அண்ணே ஏன் பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. நீங்க இல்லைனா குடும்பத்தோட நம்பிக்கை சந்தோஷம் எல்லாம் போயிடும். எல்லோருக்கும் தைரியம் சொல்ற நீங்க கலங்கிடாதீங்க அண்ணே.” என்று பதட்டத்துடன் சொன்னான் கதிர்.
அவனுக்கு பதிலாக சிரிப்பை குடுத்து விட்டு, “போகலாம் கதிர். “என்றான். அவனும் சரி என்று சொல்ல இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.
முகேஷ் தனது லாயர் ஒருவரை அழைத்து மலர்னிகாவின் சொத்துகள் அனைத்தையும் தனது பெயரில் மாற்றி எழுதி டாக்குமெண்ட் தயாரிக்கச் சொன்னான். அவரும் அதன்படி செய்து கொண்டிருந்தார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த துர்க்காவிற்கு கோபமும் வருத்தமும் வந்தது. ” என் பொண்ணு கஷ்டப்பட்டு உழைச்ச உழைப்பு எல்லாம் வீணாகப் போகுதே. டேய் நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.” என்று சத்தம் போட்டார்.
அதைக் கேட்டு வாயில் இருந்த விஸ்கி பாட்டில்லை எடுத்த முகேஷ் சிரித்தான். “என்ன சாபம் போடுறியா? உன் சாபம் எல்லாம் என்னை ஒண்ணும் செய்யாது. கொன்னுபோட்டாக்கூட யாருனு கேட்க நாதியில்லாத நீ எல்லாம் எனக்கு சாபம் போடுற? ” என்றான்.
அதற்கு துர்க்கா, “நீ செய்யறதுக்கு நிச்சயமாக அந்த ஆண்டவன்கிட்ட பதில் சொல்லியே ஆகணும்.” என்றார். அவனும் அவரை நக்கலாக பார்த்து சிரித்தான். லாயர் எல்லாம் தயாராகி விட்டதாக சொல்ல, அவருடன் இரண்டு அடியாட்களையும் மலர்னிகா வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
மலர்னிகா அருகில் இருந்த நிஷாவிற்கு பாதி புரிந்தது. மீதி புரியவில்லை. மலர்னிகாவின் முகத்தை பார்த்தவாறு இருந்தாள். மலர்னிகா நிஷாவை பார்த்து ஒரு கசப்பான புன்னகையை கொடுத்தாள். நிஷா இதுவரை மலர்னிகாவிடம் பார்த்திராத ஒரு முகத்தைப் பார்த்தாள். என்னவென்று கேட்க வாய்வரை வார்த்தை வந்தது. ஆனால் அவளிடம் கேட்கவில்லை.
நிஷாவிடம் போனில் முகேஷ் சொன்னவற்றை சொன்னதும் நிஷா அதிர்ந்து போனாள். மலர்னிகா இந்த நிலைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாள் என்பதை அருகில் இருந்து அறிந்தவளாயிற்றே. அதுவும் யாரும் இல்லாதவனுக்கு தாய்போல இருப்பவர் துர்க்கா. அவரை பணயமாக வைத்து மலர்னிகாவின் சொத்தை பறிக்கும் முகேஷ் மீது கோபம் கோபமாக வந்தது.
மலரைப் பார்த்தவள், “மேடம் நம்ம போலிஸ்க்கு போகலாமா?” என்றாள். அதற்கு மலர்னிகா, “நீ என்ன சொல்றனு யோசிச்சிதான் சொல்றியா?” அவன்கிட்ட இருக்கிறது என்னோட அம்மா. இந்த சொத்தை எல்லாம் என்னால மறுபடியும் சம்பாதிக்க முடியும். ஆனால் அம்மாக்கு ஒண்ணுன்னா நான் என்ன செய்யவேன் நிஷா? அவனை அப்புறம் பார்க்கலாம். முதல்ல அம்மா என்கிட்ட வந்திடட்டும். ” என்றாள்.
அதே நேரத்தில் முகேஷின் லாயரும் அடியாட்களும் வந்தனர். எதுவும் பேசாமல் அவளிடம் டாக்குமெண்ட்டை குடுத்தார். அதை வாங்கினாள். அதைப் படித்தும் பார்க்காமல் சைன் போட்டு அவர்களிடம் குடுத்தாள். அவர்களும் அதை எடுத்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் சென்ற சில நிமிடங்களில் துர்க்கா வீட்டிற்கு வந்தார்.
தாயை அணைத்துக் கொண்டாள். துர்க்காவும் மகளை அணைத்துக் கொண்டார். நிஷாவும் துர்க்காவை அணைத்தாள். “நிஷா அம்மாவை உள்ள கூட்டிட்டு போ. நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றாள். அதற்கு துர்க்கா, “மலர் நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. நைட் நாம என்னோட ஊருக்கு போறம். இதுக்கு மேல நீ எதுவும் பேசக்கூடாது. உனக்கு தேவையானதை எடுத்து வை.” என்று அவர் சொல்லும் போது மலர்னிகாவின் போன் ஒலித்தது.
முகேஷ்தான் அழைத்திருந்தான். போனை எடுத்தாள். “என்ன மலர்னிகா மேடம் சொத்து எல்லாம் கைவிட்டு போயிடுச்சினு கவலைப்பட்டுட்டு இருக்கிறியா? ஒழுங்கா ஊரை விட்டு போயிடு. உன்னை நான் பார்க்கவே கூடாது. ” என்றான்.
அதற்கு மலர்னிகா, “நான் மலர்னிகா. என்னோட சொத்தை நீ எழுதி எடுத்ததனால என்னை மெண்டலி டிஸ்டர்ப் பண்ணிட்டதா நினைச்சிட்டியா? நான் நினைச்சா இது மாதிரி சொத்தை மறுபடியும் உருவாக்கிட முடியும். போனை வை. “என்று திமிராக சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
சபாபதி அறையில் யோசனையுடனே இருந்தான். ஒருவேளை வீட்டில யாரும் ஒத்துக்கலனா என்ன செய்றது? மோனிஷாவோட சொத்து வேணும். அதுமட்டுமல்ல நம்மளோட காதல் விஷயம் வீட்ல தெரிஞ்ச அப்புறம், நம்மளை இங்க வராமல் தடுத்திட்டா என்ன செய்றது? “என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு யோசனை வந்தது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divima