மலர்னிகா குளியலறைக்குச் சென்றதும் அவளுக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பதற்காக அவளுடைய பெட்டியை திறந்தாள். அப்போது அதற்கு உள்ளே இருந்த உடைகளை பார்த்து முழித்தாள். ஆம், மலர்னிகா மும்பையில் இருந்ததனால் அதிகமாக வெஸ்டர்ன் டைப் ஆடைகளையே அணிவாள். அதைப் பார்த்துதான் முழித்தாள் காமாட்சி. “என்னடா இது, இது மாதிரியான டிரஸ் நம்மளோட ஊர்ல போட மாட்டாங்களே. இதை மலர் போட்டுட்டு கீழே வந்தால்,தாத்தா, பாட்டி எல்லாரும் என்ன சொல்லுவாங்கனு தெரியலையே. இவங்ககிட்ட எப்பிடி சொல்றது? பேசவும் மாட்டேன்றாங்க.” என யோசித்துக் கொண்டே நின்றாள்.
பின்னர் அவளது அறைக்குச் சென்று, அவளது புதிய சுடிதாரை எடுத்துக் கொண்டு வரும்போது, நிஷா காமாட்சியை கூப்பிட்டாள். அவளருகில் சென்ற காமாட்சி என்ன என்று கேட்க,” காமாட்சி இங்க சுடிதார் போலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
அதற்கு சிரித்துக் கொண்ட காமாட்சி, “கண்டிப்பா போடலாம் நிஷா. நான் காலேஜ் போகும் போது சுடிதான் போடுவேன். வீட்டில, அப்புறம் கோயிலுக்கு போறன்னா தாவணி கட்டிக்குவன்.” என்றாள். “நல்லவேளை நான்கூட பயந்துட்டேன். சுடி போடலாமோ தெரியலையேனு. சரி நான் போய் குளிச்சிட்டு வந்து உங்ககூட பேசுறன்.” என்றாள். காமாட்சியும்,” சரி நான் போய் மலரை பார்க்கிறன். ” என்று அங்கிருந்து சென்றாள்.
காமாட்சி தனது புதிய சுடிதாரை எடுத்துக் கொண்டு, மலர்னிகாவின் அறையில் வைத்துவிட்டு அவளுக்காக காத்திருந்தாள். குளித்து விட்டு துண்டோடு வந்த மலர்னிகா, உள்ளே நிற்கும் காமாட்சியை பார்த்து சற்று நின்றாள். அவளது தயக்கத்தை பார்த்த காமாட்சி, “மலர் உங்ககிட்ட இருக்கிற வெஸ்டர்ன் டைப் டிரஸ் இங்க போட முடியாது. அதனால இந்த சுடிதாரை போட்டுட்டு கீழே வர்றீங்களா?” என கேட்டாள். அவளது கையில் இருந்த சுடிதாரை பார்த்தாள் மலர்னிகா.
அவளது பார்வையை பார்த்து, “மலர் இது புதுசுதான், வர்ற வெள்ளிக்கிழமை கோயில்ல பூஜை ஒண்ணு இருக்கு, அதுக்காக காளையன் அண்ணா எனக்கு எடுத்து குடுத்தது. இது ஒண்ணுதான் புதுசா இருந்திச்சு. அதுதான் இதை எடுத்திட்டு வந்தேன்.” என்றாள்.
அப்போதுதான் மலர் வாய் திறந்து, “அப்போ பூஜை அன்னைக்கு உங்களுக்கு போட்டுக் ட்ரெஸ்க்கு என்ன பண்ணுவீங்கனு ” கேட்டாள்.” மலர் நீங்களா பேசினீங்க? உங்களோட வாய்ஸ் சூப்பரா இருக்கு. அண்ணா எனக்கு தாவணியும் எடுத்து குடுத்தாங்க. நான் அதை கோயிலுக்கு போகும் போது கட்டிப்பேன். நீங்க இதை போட்டுட்டு கீழே வாங்க. ” என்று சொல்லிவிட்டு சென்றாள். அவள் சென்றதும் அந்த சுடியை எடுத்து போட்டுக் கொண்டாள். காமாட்சியும் மலரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உடல்வாகு என்றபடியால் சுடிதார் மலர்னிகாவிற்கு பொருத்தமாக அழகாக இருந்தது.
தனது அறைக்கு வந்த துர்க்காவிற்கு கணவன் இனியரூபனின் ஞாபகம் அவரை வாடியது. தானும் தனது கணவனும் வாழ்ந்த நாட்கள் அவர் கண்முன்னே வந்து சென்றது. கண்ணீர் அவர் கண்களை விட்டு உடைப்பெடுத்து கன்னத்தில் வழிந்து ஓடியது.
வாய்விட்டு அழ முடியாமல் வாயை தனது இரு கைகளாலும் மூடிக்கொண்டு அழுதார். என்ன செய்வது என்று தனது மனதை தேற்றிக் கொண்டு, சிறிது நேரம் கட்டில் இருந்தார். பின் எழுந்து சென்று குளிக்கச் சென்றார். துர்கா குளித்துவிட்டு வந்து அங்கிருந்த, தனது புடவை ஒன்றை எடுத்துக் கட்டிக்கொண்டு கீழே வந்தார்.
கீழே இருந்த பெருந்தேவனார் துர்காவைப் பார்த்ததும், “இங்க வாம்மா துர்க்கா” என்றார். பூஜை அறையில் இருந்து வந்த விசாகம் விபூதியை அவளுக்கு வைத்து விட்டார். அங்கிருந்தவர்களுடன் வந்து அமர்ந்த விசாகம் தனது மகளை தனக்கு அருகில் இருத்திக் கொண்டார்.
அவளது குங்குமம் இல்லாத வெற்று நெற்றி அவருக்கு எதையோ உணர்த்தியது. மகளின் கைகளை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டு, “துர்கா என்னமா நடந்துச்சு? உன்னோட நெத்தியில குங்குமம் இல்ல, கழுத்துல தாலி இல்ல மாப்பிள்ளைக்கு என்னாச்சு?” என்று கேட்டார் விசாகம்.
மற்றவர்களும் துர்க்கா சொல்லப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர். எத்தனை துன்பம் வந்தாலும் தனது தாய் மடியில் விழுந்து அழும்போது மனதில் உள்ள பாரம் குறையும் என்பார்கள். அதேபோல துர்க்காவும், தாய் விசாகம் மடியில் விழுந்தாள். இத்தனை நேரம் கட்டுப்படுத்தி இருந்த கண்ணீரை, இப்போது அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
தனது மடியில் படுத்த மகளின் தலையை வருடியவாறு விசாகம், “சொல்லு துர்க்கா, எங்களோட பகிர்ந்து கிட்டா உன்னோட கவலை கொஞ்சமாவது குறையும்”என்றார் . நிமிர்ந்து அமர்ந்த துர்க்கா அவர்கள் இங்கிருந்து சென்றது, பிசினஸ் ஆரம்பித்தது, இனியரூபனுக்கு ஏற்பட்ட விபத்து, கேசவன் அவர்களை ஏமாற்றியது, பின்னர் மும்பைக்கு சென்று அங்கு செட்டில் ஆகியது. என்று அனைத்தையும் சொன்னார்.
பின்னர் மலர்னிகாவிற்கு ஏற்பட்ட விபத்து, தன்னை முகேஷ் கடத்தி வைத்து, மலர்னிகாவின் சொத்துக்களை எல்லாம் அவன் பெயரில் மாற்றி எழுதியது. என்று இறுதியாக, இங்கே வந்தது வரை அனைத்தையும் சொன்னார் துர்க்கா.
அவர் சொன்னதை கேட்டவர்கள் துர்க்கா எவ்வளவு துன்பங்களை அனுபவித்துள்ளார் என்று எண்ணிக் கலங்கினர். சின்ன வயதில் எவ்வளவு பெரிய பொறுப்புகளை சுமந்து இருக்கின்ற மலர்னிகாவின், துணிச்சலையும் அனைவரும் பாராட்டத்தான் செய்தனர்.
தங்கள் வீட்டின் மாப்பிள்ளை, தங்கள் செல்ல தங்கையின் கணவன் இறந்ததை தாங்கிக்க முடியவில்லை. இனியரூபன் இங்கிருக்கும் போது மிகவும் நன்றாக பழகுவார். ராமச்சந்திரன், தேவச்சந்திரன், இனியரூபன் மூவரும் சேர்ந்து கொண்டு சுற்றி திரிவார்கள். அழகான மெல்லிய ஒரு நட்பு ஒரு மூவருக்குள்ளும் இருந்தது.
என்ன செய்வது இதுதான் விதி போல. என்று நினைத்து ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டனர். நிஷா முதலில் கீழே வந்தவள், தயங்கி தயங்கி துர்க்கா அருகில் நின்றாள். அங்கிருந்தவர்கள், “நீ எதுக்குமா தயங்கி தயங்கி நிற்கிற? இதுவும் உன்னோட வீடு மாதிரி தான். காமாட்சி இங்கு எப்படியோ அதே மாதிரி தான் , நீயும்இந்த விட்டு பொண்ணுதான்.” என்று சொன்னார் ராமச்சந்திரன்.
பின்னர் விசாகம் பாட்டி குணவதியை அழைத்து சாப்பாடு தயாரா என்று கேட்டார். குணவதியும்,” சாப்பிடலாம் அத்தை வாங்க. ” என்று சொல்லி எல்லாரையும் அழைக்கும் போது, காளையன் காமாட்சியிடம்,” மலர் பிள்ளையை போய் கூட்டிட்டு வா காமாட்சி,” என்று சொன்னான். அப்போதுதான் துர்க்காவிற்கு மகள் என்ன உடை அணிந்து வருவாள் என்ற யோசனை வந்தது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்