சுவாதி அனுமதி கேட்டு உள்ளே வந்து மலருக்கு முன்னால் தலைகுனிந்தவாறு நின்றாள். நிஷா அவளை பாவமாக பார்த்துக் கொண்டு இருக்கும் போது சுவாதியின் முகத்தில் வந்து விழுந்தது ஒரு ஃபைல். கோபத்துடன் சுவாதி அருகில் வந்த மலர் அவளை அறைந்திருந்தாள். “நான் எத்தனை தடவை சொல்லியிருக்கிறன்…. ஒரு வேலை பார்க்கும் போது நம்மளோட கவனம் மொத்தமும் அந்த வேலையில் தான் இருக்கணும்னு…. இந்த ஃபைல்ல ஏகப்பட்ட மிஸ்டேக்ஸ்…. அதை யாரு நானா கரெக்ட் பண்ற…? உங்களை இப்பிடி தப்பு தப்பா வேலை செய்யவா மாசம் சம்பளம் கொடுக்கிறன்….
இதோட மூணு தடவை நீங்க இந்த மாதிரி தப்பு பண்ணிட்டீங்க. இதுதான் லாஸ்ட் வார்னிங். இதுக்கு மேல செய்ற வேலையில கவனம் இல்லாமல் இருந்தீங்கனா, உங்களுக்கு இங்க வேலை இல்லை…. முதல்ல போய் டுவென்டி மினிட்ஸ்ல இதை கரெக்ட் பண்ணி கொண்டு வாங்க….” என்றாள். விட்டா போதும்டா சாமி என்று அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள் சுவாதி.
வெளியே வந்து தனது இடத்தில் இருந்த சுவாதி வேலையை செய்ய ஆரம்பித்தாள். அவளது தோழி, “என்னடி மேடமோட கவனிப்பு ரொம்ப அதிகமோ…” என கேலி செய்ய அவளுக்கு ஒரு முறைப்பை பரிசாகக் கொடுத்து விட்டு, வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
இங்கே மீண்டும் மலர் ஃபைல்களை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அவளது போன் ஒலித்தது. அதைப் பார்க்க அவளது அம்மா துர்க்கா தான் அழைத்தார். ஆம், துர்க்கா, இனியரூபனின் அன்பு மகளே மலர்னிகா.
சென்னை வந்த துர்க்கா, இனியரூபன் இருவருக்கும் இனியரூபனின் நண்பன் கேசவன் உதவி செய்தான். கேசவனும் இனியரூபனும் இணைந்து பிஸ்னஸ் செய்தனர். இருவரும் ஆரம்பத்தில் பல சரிவுகளை சந்தித்தாலும் பின்னர் நல்லபடியாக முன்னறினர். துர்க்காவும் இவர்களுக்கு பிஸ்னஸில் உதவியாக இருந்தார்.
இப்படியாக இருக்கும் போது இனியரூபன் தனது மகளான மலர்னிகா பெயரில் மும்பையில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பித்தார். அதுவும் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. கேசவனுக்கு இனியரூபனின் வளர்ச்சி பிடிக்கவில்லை. மலர்னிகா காலேஜ் படிக்கும் போது, ஒருநாள் திடீரென இனியரூபன் விபத்தில் இறந்துவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றார் துர்க்கா. அந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்தி கேசவன், இனியரூபனின் சென்னை கம்பனிகளை அவரது பெயரில் மாற்றி எழுதி விட்டார். கொஞ்ச நாட்கள் சென்றதும் வழமைக்கு திரும்பிய துர்க்காவிற்கு கேசவனின் துரோகம் அதிர்ச்சியாக இருந்தது. இனியரூபனின் வீட்டினரும் அவர்கள் இருந்த வீட்டை கேட்டு பிரச்சனை செய்தனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர் தாயும் மகளும்… கலகலவென்று கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த மலர்னிகாவிற்கும் இப்படி சுயநலம் கொண்டவர்களை பார்த்து கோபமாக வந்தது.
நன்றாக யோசித்து விட்டு, தாயிடம் வந்தாள். “அம்மா நாம மும்பை போயிடலாம்…. அங்க இருக்கிற கன்ஸ்ட்ரக்ஷனை நான் பொறுப்பு எடுக்கிறேன்….. நமக்கு துரோகம் பண்ணவங்க இருக்கிற இடத்தில இருக்கக் கூடாது…. நல்ல வேளை அப்பா மும்பை கம்பெனி பற்றி யார்க்கிட்டையும் சொல்லலை…. அந்த வகையில் நமக்கு நல்லது….” என்றாள்.
மகள் சொன்னதை கேட்ட துர்க்கா, “இல்லை மலர்… நாம ரெண்டு பேரும் என்னோட ஊருக்கு போயிடலாம்…. இங்க நமக்கு பாதுகாப்பு இல்லடா….” என்றார். அதற்கு மலருக்கு கோபம் வந்தது. “இத்தனை நாள் நாம இருக்கமோ இல்லையானு வந்து பார்க்காதவங்க வீட்டிற்கு என்னால வர முடியாது அம்மா…. உங்களுக்கு வேணும்னா நீங்க போங்க…. நான் அப்பா கஸ்ரப்பட்டு உருவாக்கின அந்த கம்பனியை பார்த்துக்கிறன்.
இந்த உலகத்தில என்னால தனிய வாழ முடியும்…. இத்தனை நாள் நம்மளோட குடும்பத்துல ஒருத்தரா இருந்த அந்த கேசவனே நமக்கு துரோகம் பண்ணினான்…. இதுக்கு மேல என்னால யாரையும் நம்ம முடியாது…. நீங்களே முடிவு எடுங்க…. யார்க்கிட்டையும் சொல்லத் தேவையில்லை…. நைட்டே மும்பை போகணும்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
இத்தனை நாள் ஊருக்கே போகவில்லை. இப்போ எப்படி போறன்னு தயக்கத்திலும் மகளை தனியே விட மனமில்லாமலும் அவளுடன் மும்பை செல்ல தயாரானார் துர்க்கா. அன்றிரவே தாயும் மகளும் யாருக்கும் தெரியாமல் மும்பை வந்து விட்டனர். கேசவன் இவர்களை கண்டுபிடிக்கும் போது மலர் அவர்கள் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தாள்.
போனை எடுத்து, “சொல்லுங்க அம்மா….” என்றாள். அந்தப் பக்கம் இருந்த துர்க்கா, “என்ன மலர் காலையில சாப்பிடாமலே போயிட்ட. கொஞ்சம் சாப்பிட்டுட்டு போனா என்ன….?” என்றார்.
தலையில் கைவைத்த மலர், “அம்மா முக்கியமான வேலை இருக்கு…. அதனால சாப்பிடாமல் வந்திட்டேன். ஒரு நேரம் சாப்பிடலனா எனக்கு ஒண்ணுமாகாது…. நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க… ஈவ்னிங் நான் வந்து செக் பண்ணுவன்…. ஓகே அம்மா…. எனக்கு வேலை இருக்கு நான் அப்புறம் பேசுறன்….” என்றவள் போனை வைத்தாள்.
துர்க்கா பெருமூச்சொன்றை விட்டு விட்டு தனது வேலையை பார்க்கச் சென்றார்.
ராமச்சந்திரனும் தேவச்சந்திரனும் காலையில் சாப்பிட்டு விட்டு மில்லுக்குச் சென்றனர். பெருந்தேவனார் கணக்கு பிள்ளையோடு பஞ்சாயத்து ஒன்றிற்கு சென்றிருந்தார். குணவதியும் நேசமதியும் மதியத்திற்கு சமையல் செய்ய, அந்த வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தனர். விசாகம் மகாபாரதம் படித்துக் கொண்டு இருந்தார்.
படிகளில் துள்ளியவாறு ஓடி வந்தாள், அந்த வீட்டின் செல்லப் பிள்ளை காமாட்சி. அம்மா என்று கூப்பிட்டவாறு சமையலறைக்கு வந்தாள். “என்னோட லஞ் பாக்ஸ் எங்க…..?” தண்ணீர் பாட்டில் எங்க?” என ஒவ்வொன்றாக கேட்க, அவள் தலையில் கொட்டிய குணவதி,” உன் கண்ணு முன்னாடிதானே இருக்கு. எடுத்துக்க. எங்களை போட்டு தொல்லை பண்ணாம ” என்றார்.
அவர் கொட்டியதைப் பார்த்த நேசமதி, “என்ன அக்கா நீங்க, அவளுக்கு கொட்டுறீங்க? பிள்ளைக்கு வலிக்காது…” என்றவரை கட்டிக் கொண்டு முத்தம் வைத்த காமாட்சி, “சித்தி நீங்கதான் என்னோட செல்லம். லவ் யூ சோ மச் சித்தி. இவங்க வயித்துல பொறந்ததுக்கு உங்க வயித்துல பொறந்திருக்கலாம்…..” என்று கேலி செய்தவளை பார்த்த நேசமதி, “யார் வயித்துல பொறந்தா என்னடா எங்க ரெண்டு பேருக்கும் சபாபதி, நீ, காளையன் மூணு பேருமே ஒண்ணுதான்….” என்றார்.
தாயையும் கொஞ்சி விட்டு வெளியே வந்து, பாட்டியிடம் சொல்லி விட்டு செல்ல முயன்ற காமாட்சியை நிறுத்தியது ஒரு குரல். கண்களை மூடிக் கொண்டு, நாக்கை கடித்துக் கொண்டு திரும்பினாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divima