இங்கே காளையன் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது பார்வை அடிக்கடி மலர்னிகாவின் மீது இருந்தது. மலர்னிகா எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். இரவில் பயந்து அழுதது ஞாபகம் இருந்து. தான் பயத்தில் கீழே இருந்தது தெளிவாக ஞாபகம் இருந்தது.
பின்னர் நான் எப்படி மேலே வந்து, கட்டிலில் வந்து படுத்தேன் என்று மலர்னிகாவிற்கு புரியவில்லை. யோசித்துக் கொண்டே இருந்தாள்.
குணவதியும் நேசமதியும் கோயிலுக்குச் செல்வதாக கூற, துர்காவும் சேர்ந்து கோயிலுக்கு வருவதாக கூறினார். உடனே காளையன், “அம்மா அத்தை நானும் உங்க கூட வர்றேன், சேர்ந்து போகலாம் என்று சொன்னான்.
அப்போது விசாகம் மலர் கண்ணு நீயும் இவங்ககூட கோவிலுக்கு போயிட்டு வாம்மா. இங்க வந்ததிலிருந்து நீ அறைக்குள்ளே இருக்க. காமாட்சி நிஷாகூட ஊரையும் சுத்திப் பார்க்க போகலை. கோயிலுக்காவது போயிட்டு வாம்மா. என்றார்.
மலர்னிகாவிற்கும் வெளியே போயிட்டு வந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மறுத்து எதுவும் பேசாமல் சரியென்று சொன்னாள். காமாட்சியும் நிஷாவும், காமாட்சிக்கு காலேஜ் லீவ் என்றபடியால் இருவரும் ஜோடி போட்டுக் கொண்டு ஊரை சுற்றி வந்தனர். இன்று மீண்டும் அவர்களது சுற்றுப்பயணம் தொடர்ந்து.
ராமச்சந்திரன் தேவச்சந்திரன் வழமை போல, அவர்கள் மில்லுக்குச் செல்ல கோயிலுக்கு போவதற்காக தங்களது காரை எடுத்து வந்தான் காளையன். காளையன் காரை ஓட்ட அவனுக்கு பக்கத்தில் மலர்னிகாவும், பின்னால் நேசமதி, குணவதி, துர்க்காவும் அமர்ந்து கொண்டனர்.
முதன்முதல் கோயிலுக்கு போவதால் அவளை தாவணி கட்ட சொன்னார் துர்க்கா. மலர்னிக்காவும் எதுவும் பேசாமல் தாய் சொன்னவாறே, ஒரு புதிய தாவணியை கட்டிக் கொண்டு வந்தாள். கோயிலுக்கு சென்றவுடன் காரை வெளியே நிறுத்திவிட்டு, “நீங்க முன்னாடி போங்க அத்தை அம்மா நான் வரேன்.” என்று சொல்லி சொன்னான் காளையன்.
அவர்களும் சரி என்று சொல்லி பூஜை தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அவர்கள் சென்ற பின்னர் மலர் இறங்கினாள். அப்போது எங்கிருந்துதான் ஒருத்தன் வந்தான் என்று தெரியவில்லை. பைக்கில் வந்தவன், அவளது வயிற்றில் குத்த போக கத்தியை தனது கையால் பிடித்து அதை தடுத்தான் காளையன்.
காளையனிடம் மாட்டி விடக்கூடாது என்று நினைத்து, கத்தியை அவனது கையில் இருந்து இழுத்தான். அதனால் கையில் காயம் ஆழமாக ஏற்பட்டது. கோபத்தில் அவனை எட்டி உதைத்தான் காளையன். கீழே விழுந்தவன் முகத்தை பார்க்க முயன்ற போது மீண்டும் தள்ளிவிட்டு ஓடிவிட்டது அந்த உருவம்.
கணப்பொழுதில் இது நடந்ததில் மலர்னிகா அதிர்ச்சி அடைந்தாள். காளையன் கைகளில் இருந்து இரத்தம் வருவதை பார்த்தவள், தனது தாவணியில் நுனிப் பகுதியை கிழித்து அவனது கையில் கட்டு போட்டாள்.
அதைப் பார்த்த காளையன் சிரித்துக்கொண்டு, “சின்ன காயம் தான் புள்ள, மஞ்ச பத்து போட்டா ஆறிடும். நீ அழாத,” என்றான். அப்போதுதான் தெரிந்தது மலர்னிகாவிற்கு அவளது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது தெரிந்தது. கண்களை துடைத்துக் கொண்டாள்.
பின்னர் அவனுடன் சேர்ந்து கோயிலுக்குள் சென்றாள். கோயிலில் வீட்டில் உள்ள அனைவரின் பெயர்களை அர்ச்சனை செய்ய சொல்லிக் கொண்டிருக்க, பூசாரி பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது மலர்னிகாவும் காளையனும் ஜோடியாக வருவதை பார்த்த பூசாரி, “காளையன் தம்பிக்கு பொருத்தமான பொண்ணைத் தான் பேசி முடிச்சு இருக்கீங்க போல இருக்கு. நல்லா இருக்காங்க ரெண்டு பேரும். ஜோடிப் பொருத்தமும் அமோகமா இருக்கு.” என்று சொன்னார்.
இதை கேட்ட குணவதிக்கு சந்தோசமாக இருந்தது. அதே நேரம் துர்க்கா என்ன சொல்வார்களோ என்று பயமாகவும் இருந்தது. துர்க்காவுக்கு பூசாரி சொன்னதும்தான் இப்படி செய்தால் என்ன என்ற யோசனை வந்தது. அதே நேரம் மலர்னிகா இதை ஏற்றுக் கொள்வாள்? என்ற சந்தேகமும் இருந்தது.
வீட்டில் போய் இதை பற்றி பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவர் சிரித்துக்கொண்டார். அனைவரும் சேர்ந்தே சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம் காயத்தை காட்டினால் பயந்து விடுவார்கள் என்று நினைத்த காளையன் கையை மறைத்தவாறே காமாட்சியை அழைத்தான்.
காமாட்சி நிஷாவுடன் சென்றதாக கூறினர். உடனே கதிருக்கு போன் பண்ணினான். “சொல்லுங்கண்ணே என்ன உங்களை காலையிலே காணலை.” என்று கேட்டான். அதற்கு, “வீட்டில் அத்தை அம்மா எல்லாம் கோயிலுக்கு போகணும்னு சொன்னாங்க டா. அதான் கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தேன். கதிர் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன், அதை கவனமாக கேட்டுக்கொள்.”
“என்ன அண்ணா, உங்களோட குரல் ஒரு மாதிரி இருக்கு என்ன ஆச்சு? ஏதும் பிரச்சனையா? “என்று கேட்டான் கதிர் . “ஆமா கதிர் ஒரு சின்ன பிரச்சனை ஒண்ணு. அம்மாவும் அத்தையும் கோயிலுக்குள்ள போயிட்டாங்க. மலர்னிகா போகும் போது அங்க ஒருத்தன் வண்டியில வந்து அவளை கத்தியால் குத்தப் பார்த்தான். நான் கத்திய புடிச்சதால் என்னோட கையை கீறி போட்டு போயிட்டான். எனக்கு என்னவோ இது சரியா படலை.
நிஷாவும் காமாட்சியும் வீட்டிலே இல்லை. ரெண்டு பேரும் ஊரை சுத்தி பார்க்க போயிருக்கிறாங்க. எதுக்கும் நீ அவங்களை கொஞ்சம் பார்த்துக்க முடியுமா? அவங்க எங்க இருக்காங்கன்னு சொல்லி கொஞ்சம் பார்த்துட்டு எனக்கு ஒரு போன் பண்ணு. ” என்று சொல்ல, அவனும்” என்ன சரி அண்ணே. நான் இப்பவே போய் பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
இங்கே காளையனுக்கு கையில் வலி அதிகமாக இருந்தது. சமையல் அறைக்குள் போகவும் முடியவில்லை. அங்கே குணவதியும் நேசமதியும் இருந்தனர். மஞ்சள் பூசினால், ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்பார்கள், காயத்தைப் பார்த்து பயந்து விடுவார்கள். என்று நினைத்தவன் எதுவும் பேசாமல் வலியை பொறுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.
மலர்னிக்காவிற்கு தன்னால் காளையனுக்கு இப்படி நடந்து விட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தாள். யார் அவன் எதற்காக என்னை குத்த வரவேண்டும் என்று யோசித்தாள். அதற்கு முதல் காளையனின் காயத்திற்கு மருந்து போட வேண்டும் என்று நினைத்தவள், அவள் கொண்டு வந்த பையில் இருந்த க்ரீம் ஒன்றை எடுத்துக்கொண்டு மெதுவாக காளையன் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊