ஒரு பெரிய மாமரத்தின் கிளை ஒன்றின் மேல் காமாட்சி ஏறி நின்று மாங்காய் பறிக்க, கீழே நின்று மாங்காய்களை பொறுக்கிக் கொண்டு நின்றாள் நிஷா. இதைப் பார்த்தவன் வேகமாக அவர்களருகில் வந்தான். அவனைப் பார்த்த காமாட்சி கிளையில் இருந்து கீழே குதித்தாள்.
“உங்களை எங்க எல்லாம்போய் தேடறது? காளையன் அண்ணே உங்களை தேடுறாங்க. வாங்க” என்றான். அதற்கு சிரித்துக் கொண்ட இருவரும், சில மாங்காய்களை தாவணியில் சுற்றிக் கொண்டும், ஆளுக்கொரு மாங்காய்களை கடித்துக் கொண்டும் கதிருடன் சென்றனர். கதிர் அவர்களை வீட்டிற்கு அருகில் விட்டு விட்டு, காளையனுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு, தோட்டத்து வேலையை பார்க்கச் சென்றான்.
ஊரை சுற்றி பார்த்துவிட்டு கைகளில் மாங்காய்களுடன் வந்த, காமாட்சியிடமும் நிஷாவிடமும் மலருக்கும் காளையனுக்கும் திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டினர் சொன்னார்கள். இருவருக்கும் சந்தோசம் தாங்கவில்லை. இருவரும் குதித்து தங்களை சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
நிஷா துர்க்காவிடம், “அம்மா மேடம்கிட்ட இதைப் பற்றி பேசியாய்சா? என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள். அதற்கு துர்க்கா, “இல்லை நிஷா, அவள் காளையனோட வெளியே போயிருக்கா, அதனால கேட்கலை. வந்ததும் கேட்கலாம்.” என்றார்.
ராமச்சந்திரனும், “துர்க்கா நீ எங்க முன்னாடி மலருக்கிட்ட கேட்காதம்மா. அவள் எங்க முன்னாடி பேச கூச்சப்படலாம். ஒருவேளை அவளுக்கு இந்த கல்யாணத்ததில் விருப்பம் இல்லைனா, நீ கட்டாயப்படுத்தக் கூடாது. காமாட்சி, நிஷா நீங்க ரெண்டு பேரும் மலருக்கிட்ட இதைப் பற்றி பேச வேண்டாம். அவள் வந்ததும் நீங்க மேலே கூட்டிட்டு போங்க.
குணவதி, மலர் மேலே போனதும், நீதான் காளையன்கிட்ட இதைப் பற்றி பேசணும். அவனோட மனசில என்ன இருக்குனு தெரிஞ்சிகிறது எல்லோருக்கும் நல்லது. முக்கியமா துர்க்கா நீ இங்க இரு. ” என்றார். அவரும் சரி என்றார்.
அப்போது காளையனும் மலர்னிகாவும் சேர்ந்து அங்கு வந்தனர். காளையன், “என்ன காமாட்சி ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுது” என்றான்.
அதற்கு காமாட்சி, “அண்ணே ரொம்ப சந்தோசம்தான். ஆனால் என்னனு சொல்ல மாட்டேன். மலர் அண்ணி நீங்க வாங்க நாம மேலே போய் மாங்காய் சாப்பிடலாம்.” என்றாள்.
அவள் தன்னை அண்ணி என்று அழைத்ததை புரியாமல் பார்த்த மலர் அவளிடம்,” என்ன என்னை அண்ணினு சொல்றீங்க? “என்று கேட்டாள். ஐயோ சொதப்பிட்டோம் என காமாட்சி விழிக்க, நேசமதிதான்,” மலரு அவள் உன்னை விட சின்னவ. அதனால உன்னை பெயர் சொல்ல முடியாதுல, அதுதான் அண்ணினு மரியாதையா சொல்றா” என்றார்.
அதற்கு மேல் மலர்னிகா எதுவும் கேட்கவில்லை. நிஷாவும் அவளை அழைக்க சரி என்று அவர்களுடன் மேலே சென்றுவிட்டாள். அவள் சென்ற பின்னர் குணவதி காளையனை அங்கிருந்த சோபாவில் இருக்கச் சொன்னார். அவனும்,” என்ன அம்மா? எங்கிட்ட ஏதாவது சொல்லணுமா? “என்று நேரடியாக கேட்டான். அதைக் கேட்டவர்கள் சிரித்தனர்.
விசாகம், “ஆமா காளையா, உங்கிட்ட உன்னோட குணவதி அம்மா ஏதோ கேட்கணுமாம்” என்றார். அதற்கு காளையன், “அப்படியா அம்மா, சொல்லுங்க அம்மா என்ன விசயம்?” என கேட்டான். குணவதியும்,” துர்க்கா மலருக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிற” என்றார்.
“ரொம்ப நல்ல விசயம்தானே அம்மா, இந்த ஊரே மூக்கு மேல விரலை வைச்சி, அசந்து போற மாதிரி செஞ்சிடலாம்.” என்றான். நேசமதி, “காளையா குறுக்க குறுக்க பேசாம அக்கா சொல்ல வர்றதை முழுசா கேளு.” என்றார்.
குணவதி,” துர்க்கா அவளோட பொண்ண நம்ம குடும்பத்தில மருமகளாக்கணும்னு விரும்புறா. மாமா மூத்தவன் சபாபதிக்கு பேசலாம்னு சொன்னாங்க. ஆனால் துர்க்கா, அவ பொண்ணை உனக்கு கட்டித்தரணும்னு ஆசைப்படுறா. எங்களுக்கு இந்த கல்யாணத்ததில் ரொம்ப சந்தோசம். உன்னோட முடிவு என்ன?” என்றார்.
இதைக் கேட்ட காளையன்,” அத்தை நீங்க எனக்கு உங்களோட பொண்ணை தரணும்னு நினைக்கிறது சந்தோசம். இதுல என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை தெரியுது. ஆனால் அத்தை நான் படிக்காதவன். உங்களோட பொண்ணு ரொம்ப படிச்சவங்க. அவங்களோட வாழ்க்கை வேற மாதிரி, என்னோட வாழ்க்கை வேறமாதிரி.” என்றான்.
அதற்கு துர்க்கா,” படிப்பு ஒரு விசயமே இல்லை காளையா, உங்கிட்ட என்னோட பொண்ணை ஒப்படைச்சா நீ அவளை நல்லா பார்த்துக்குவனு நான் முழுசா நம்புறன். “என்றார். காளையன்,” அத்தை உங்களோட நம்பிக்கை சரி. நான் மலரு புள்ளைய நல்லா பார்த்துக்குவேன். ஆனால் அவங்களுக்கு எப்படிப்பட்ட கணவன் வரணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல. அதை உங்களோட ஆசைக்காக மறுக்க கூடாது அத்தை. ” என்றான்.
அப்போது பெருந்தேவனார்,” இப்போ என்ன காளையா, மலரு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னால், நீ அவளை கல்யாணம் பண்ணிக்குவியா? “என்று கேட்டார். அவரையும் துர்க்காவையும் பார்த்தவன்,” மலரு புள்ளை என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா, எனக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அத்தை நீங்க அவங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ” என்றான்.
அப்போதுதான் துர்க்காவிற்கு சந்தோசமாக இருந்தது. எப்படியாவது மலரை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு,” நான் மலருட்ட கேட்டுட்டு சொல்றன். “என்றார்.
அவரவர் அவர்கள் அறைக்குச் சென்றனர். மலரின் அறைக்குள் வர அவள் கட்டிலில் படுத்திருந்தாள். எப்போதும் ஓடியாடி இருக்க நேரம் இல்லாமல் வேலை செய்யும் மகள். இன்று இப்படி படுத்திருப்பதை பார்க்க கவலையாக இருந்தது. மெல்ல மகள் அருகே வந்து கட்டிலில் இருந்தார்.
துர்க்கா வந்ததும் எழுந்து அமர்ந்தாள் மலர்னிகா. மகளின் முகத்தை வருடினார். “மலர் அம்மா உன்கிட்ட ஒண்ணு கேட்பேன். அதை நீ மறுக்க கூடாது.” என்றார். மலர்னிகா எதுவும் பேசாது துர்க்காவை பார்த்தாள்.
“நான் உனக்கும் காளையனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஆசைப்படறேன். வீட்டில எல்லோருக்கும் சம்மதம். எல்லோரும் ரொம்ப சந்தோசமா இருக்கிறாங்க. ஆனால் காளையன் என்ன சொன்னான் தெரியுமா,நான் மலருக்கு ஏத்தவன் இல்லை. நான் படிக்காதவனு சொன்னான் நான்தான் அது ஒரு விசயமே இல்லைனு சொல்லிட்டேன்.
ஆனாலும் கடைசியாக என்ன சொன்னான்னா, மலருக்கு இந்த கல்யாணத்ததில விருப்பமில்லைனு சொன்னா அவளை கட்டாயப்படுத்தாதீங்கனு. எவ்வளவு உயர்ந்த குணம் அவனுக்கு. மலர் நீ என்ன சொல்ற? “என்று கேட்டார்.
அதற்கு மலர்னிகா,” இல்லை அம்மா எனக்கு கல்யாணம் வேண்டாம்.” என்றாள். துர்க்கா,” ஏன் மலர் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? ” என்று கேட்டவருக்கு மலர்னிகா சொன்ன பதிலில் கோபம் வந்தது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊