துர்க்காவிடம் கல்யாணம் எனக்கு வேண்டாம் என்று மலர்னிகா சொல்லவும் துர்க்காவிற்கு கோபம் வந்தது. அவளிடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தைக் கேட்க,” எனக்கு இப்போ இல்லை அம்மா. எப்பவும் கல்யாணம் வேண்டாம். எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. என்னை விட்டுடுங்க.” என்றாள்.
துர்க்கா இவ என்ன லூசு மாதிரி பேசுறா என்று கோபப்பட்டார். “ஏன் மலர் இப்படி பேசுற? இந்த உலகத்துல ஒரு பொண்ணு தனியா வாழ்ந்திட முடியாது மலர், அன்னைக்கு நம்மகூட ஒரு ஆம்பளை இருந்திருந்தா, அந்த முகேஷ் நம்மகிட்ட இப்படி நடந்திருப்பானா? எனக்கு தெரியாது மலர் நீ இந்த கல்யாணம் பண்ணிக்கிற. காளையன்தான் உன்னோட புருஷன். இந்த கல்யாணம் நடக்கலை என்னை நீ உயிரோட பார்க்கவே முடியாது. “என்றார்.
அவரை அடிபட்ட பார்வை பார்த்தவள்,” என்னோட வாழ்க்கையில என்ன பண்ணணும்னு எனக்கு முடிவு எடுக்கிற உரிமை இல்லைல. சரி நீங்க சொல்ற மாதிரி அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் அதுக்கு பிறகு என்னோட வாழ்க்கையில நான் எது பண்ணாலும் நீங்க தலையிடக்கூடாது. “என்றவள் பெட்சீட்டை எடுத்து முகத்தை மூடியபடி படுத்து விட்டாள். துர்க்கா சிரித்தபடி அங்கிருந்து சென்று கீழே உள்ளவர்களிடம் விசயத்தை சொல்ல, வீடே சந்தோசப்பட்டது. அப்போது அதைக் கேட்ட ஒரு உருவம் அங்கிருந்து யாரும் அறியாமல் சென்றது.
சபாபதிக்கு திடீரென வீட்டிற்கு வருமாறு ராமச்சந்திரன் சொன்னது, சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏதாவது பிரச்சனையா இருக்குமோ என்ற யோசனையினுடனே புறப்பட்டு பேரூந்து நிலையத்திற்கு வந்தான். அங்கே மோனிஷா நின்றிருந்தாள். அவளை அங்கே சபாபதி எதிர்பார்க்கவில்லை. “மோனி, நீ வர்றதா சொல்லவே இல்லை.” என்றான்.
அவனருகில் வந்தவள், “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னுதான் சொல்லலை. சரி ஊருக்கு போயிட்டு என்னை மறந்திடாத சரியா?” என்றாள். அதற்கு சபாபதி, “உன்னை மறப்பனா மோனி. போயிட்டு போன் பண்றன். நீ பத்திரமா வீட்டிற்கு போ. போயிட்டு போன் பண்ணு. ” என்றான். பஸ் எடுப்பதற்கு அறிகுறியாக ஹாரன் சத்தம் கேட்டது. அவளும் அவனை அணைத்து விடுவித்தாள். சபாபதியும் அவளது கன்னத்தில் தட்டி விட்டு பஸ்ஸில் ஏறினான்.
முகேஷ் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தான். அவனது கையில் மலர்னிகா என்ன செய்கிறாள்? எங்கே இருக்கிறாள் என்ற விபரம் கிடைத்தது. அவளது நிம்மதியை கெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையில் விமானத்தில் வந்து இறங்கினான்.
அவனை அழைத்துச் செல்ல ஏர்போட்டில் காத்திருந்தார் கேசவன். மகன் வந்து காரில் ஏறியதும் காரை எடுத்தார். “என்ன முகேஷ் திடீரென வந்திருக்க? என்ன விசயம்?” என்றார். அதற்கு முகேஷ், “அப்பா அந்த மலர்னிகா அந்த துர்க்காவோட எங்க போயிருக்கிறானு தெரியுமா?” என கேட்டான்.
சிரித்த கேசவன், “வேற எங்க போயிருப்பாங்க? எங்கயாவது ஆச்சிரமத்துல போய் சேர்ந்திருப்பாங்க. இல்லைனா ஒரேடியாக போய் சேர்ந்திருப்பாங்க. “என்றார். அதற்கு முகேஷ், “அதுதான் இல்லை அப்பா, அவங்க தேன்சோலையூர் போயிருக்கிறாங்க. “என்று முகேஷ் சொன்னதும், சடார்னு காரை நிறுத்தினார் கேசவன்.
முகேஷ் பக்கம் திரும்பி,” முகேஷ் நீ சொல்றது உண்மையா? “என்றார். அதற்கு முகேஷ்,” ஆமா அப்பா, அவங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் பறிச்சிட்டு விட்டால் செத்துப்போவாங்கனு நினைச்சேன். ஆனால் அவங்க ஊருக்கு போயிட்டாங்க. அதை தெரிஞ்சிக்கிட்டு ஆளுங்களை அனுப்பி, அந்த மலர்னிகாவை கொலை பண்ணப் பார்த்தன். ஆனால் அவ ரெண்டு முறை தப்பிச்சிட்டா. அதுதான் அவளை நேர்ல சந்திக்க நான் வந்தேன்.” என்றான்.
கேசவனுக்கு எங்கேபோய் முட்டிக்கலாம் என்று இருந்தது.” முகேஷ் இப்போ என்ன செய்றது? ” கேட்டார். அதற்கு முகேஷ்,” அப்பா அதை விடுங்க. நான் பார்த்துக்கிறன். முதல்ல வீட்டிற்கு போகலாம். நான் காலையில அங்க போகணும். “என்றான். அவரும் சரி என்று சொல்லி காரை எடுத்தார்.
இரவில் திடீரென வந்து நின்ற அண்ணனை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் மோனிஷா. முகேஷ் தங்கையை நலன் விசாரித்து விட்டு, அவளது ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணதுக்கும் வாழ்த்து சொன்னான். பின்னர் களைப்பாக இருப்பதாகவும், காலையில் பேசலாம் என்று சொல்லி விட்டு அவனது அறைக்குச் சென்றான்.
காலையில் ஆதவன் தனது வேலையை சரியாக செய்திட எழுந்து வந்தான். பெருந்தேவனாரின் குடும்பத்தில் இருந்தவர்கள் அனைவரும் சந்தோசமாக தமது வேலைகளை செய்து கொண்டிருந்தனர். கூடத்தில் இருந்து தேநீர் குடித்துக் கொண்டு இருக்கும் போது வெளியே இருந்து, “தாத்தா” என்றான் சபாபதி.
அவனது குரலில் திரும்பிய பெருந்தேவனார், “அடடே சபாபதி, உள்ளே வா ராஜா. எதுக்காக வெளியே நிற்கிற?” என்றார். சிரித்துக் கொண்டு உள்ளே வந்து சோபாவில் இருந்தான் சபாபதி. குணவதி காப்பி கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி குடித்தான். பின் துர்க்காவிற்கு சபாபதியையும் சபாபதியை துர்க்காவிற்கும் அறிமுகம் செய்து வைத்தனர். அங்கிருந்து குளித்து விட்டு வரலாம் என்று அறைக்குச் சென்றான்.
காமாட்சியும் நிஷாவும் கீழே வந்து பெரியவர்களுடன் பேசியவாறு இருந்தனர். விசாகம், “ஆமா, மலர் எங்க? ஆளையே காணோம். ” என்று கேட்டார். அதற்கு காமாட்சி, “அண்ணி தூங்கிட்டு இருக்கிறாங்க.” என்றாள். காலையில் தோட்டத்திற்கு சென்று விட்டு வந்த காளையனும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான்.
விசாகம், “என்னம்மா இது? மலர் எப்போ பார்த்தாலும் அறைக்குள்ளே இருக்கிறா? நம்மகூட வந்து பேசிட்டு இருக்கலாம்ல.” என்றார். அவருக்கு மகள் வயிற்றுப் பேத்தியை பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம்.
நிஷா அதற்கு பதில் சொல் முன்வந்தாள். “பாட்டி நீங்க இப்போ பார்க்கிற மலர் மேடம் வேற. முன்னாடி இருந்த மலர் மேடம் வேற. அவங்க மும்பைல எப்படி இருந்தாங்க தெரியுமா? அவங்க நடந்து வரும்போதும் சரி, எழுந்து நின்று பலபேரு முன்னாடி பேசும் போதும் சரி, அவங்களை பார்க்க ரொம்ப கம்பீரமா இருப்பாங்க.
சரியா காலையில ஐந்து மணிக்கே எழுந்து வாக்கிங் போவாங்க. சரியா எட்டு மணிக்கு கம்பனிக்கு போவாங்க. எங்க மேடம்க்கு எல்லாமே கரெக்ட் டைமுக்கு நடக்கணும். அவங்களோட கோபத்தை யாராலையும் தங்கவே முடியாது. மேடம்க்கு ரொம்ப கோபம் வரும். அப்படிப்பட்டவங்க மலர் மேடம். எதுக்குமே பயப்படாம எதிர்த்து நிற்கிறவங்க மலர் மேடம்.
ஆனால் அந்த முகேஷ் துர்க்கா அம்மாவை கடத்தி வைச்சு, மேடம் கஸ்டப்பட்டு மேலே கொண்டு வந்த கம்பனியை மனசாட்சியே இல்லாமல், அவன் பேருக்கு மாத்தி எழுதி வாங்கிக்கிட்டான். அதுக்கு அப்புறம் அவங்களோட தைரியம் போயிடுச்சு. அவங்களை கம்பீரமா பார்த்த என்னால, இப்படி அவங்க அறைக்குள்ளே அடைஞ்சி இருக்கிறதை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. கொஞ்ச நாள் மேடத்தை அவங்க போக்குல விடுங்க. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க. “என்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊