அங்கே வேஷ்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் மீசையை முறுக்கிக் கொண்டு, ஆணழகனாக இறங்கினான் காளையன். மெல்ல அண்ணன் அருகில் வந்தாள் காமாட்சி. “என்ன காமாட்சி சாப்பிடாம எங்க போற…. ?” என்றான்.
அண்ணனை பார்த்தவள், “எனக்கு பஸ்க்கு லேட்டாயிடுச்சி அண்ணா. சாப்பிட்டு போனா பஸ்ஸ மிஸ் பண்ணிடுவன்…. என் செல்ல அண்ணால்ல…. நான் போயிட்டு வர்றன்….” என்று தமையனை தாஜா செய்தாள்.
அவனோட எதுவும் பேசவில்லை. சாப்பாட்டு மேசைக்கு அருகில் சென்று சாப்பாட்டை தட்டில் போட்டுக் கொண்டு, அவளருகில் வந்தவன், “பஸ் போனா பரவாயில்லை…. நான் கொண்டு விட்டுட்டு வர்றன். நீ சாப்பிட்டு போ. சாப்பிடாம இருந்தால் உடம்புக்கு நல்லது இல்லடா…. என் தங்கம்ல வா. என்று அவளை கூட்டிச் சென்று அந்த பெரிய மர ஊஞ்சலில் உட்கார வைத்து அவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டான். அவளுமு சிறு பிள்ளை போல ஊஞ்சலில் ஆடிக் கொண்டே சாப்பிட்டாள்.
இதைப் பார்த்த குணவதிக்கும் நேசமதிக்கும் கண்கள் கலங்கின. காமாட்சிக்கு சபாபதியை விட காளையனைத்தான் மிகவும் பிடிக்கும். சாப்பாட்டை ஊட்டி முடித்து விட்டு, குடிக்க தண்ணீரையும் கொடுத்து அவளது வாயை தனது கையால் துடைத்து விட்டான். வெளியே சென்று தனது புல்லட்டை எடுக்க ஓடி வந்து ஏறிக் கொண்டாள் காமாட்சி. இருவரும் பேசியவாறு சென்றனர்.
பெரிய ஆலமரம் கிளைகள் பல பரப்பி நிழலை மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆலமரத்தின் கீழ் இருந்த மேடையில் பெருந்தேவனார் மற்றும் ஊரில் இருந்த பெரிய தலைக்கட்டுகளும் இருந்தனர். கீழே பஞ்சாயத்தை கூட்டியோரும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் இருபுறமும் நிற்க, பிரச்சனையை வேடிக்கை பார்க்க பலர் வந்திருந்தனர். அனைவரையும் பார்த்த பெருந்தேவனார், “என்னப்பா எல்லோரும் வந்தாச்சா….? பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாமா….?” என கேட்டார்.
அங்கிருந்தவர்கள், “ஆரம்பிக்கலாம் ஐயா….” என்று சொன்னதும், பஞ்சாயத்தை கூட்டியவரை முன்னால் கூப்பிட்டவர், “கந்தா என்ன பிரச்சினை என்று சொல்லு…. இங்க இருக்கிற யாருக்கும் பயப்படாத….” என்றார்.
கந்தா என்று சொல்லப்பட்டவர், சிறிது நேரம் அழுது கொண்டு இருந்தார். தனது கண்களை துடைத்துக் கொண்டார். “ஐயா நான் வேலுச்சாமி ஐயா வீட்ல பத்து வருசமா வேலை செய்றேன்… என்னோட பொண்ணு மயிலு கொஞ்ச நாளாக ஐயாவோட ரைஸ் மில்க்கு வேலைக்கு போறா… நேற்று அந்தியில என் பொண்ணு வேலைய முடிச்சிட்டு வரும்போது வேலுச்சாமி ஐயாவோட மகன் துரை ஐயா என் பொண்ணை சீரழிச்சிட்டாரு ஐயா….” என்று சொல்லி வேதனை தாங்காமல் அழுதார் அந்த தந்தை.
பெருந்தேவனாருக்கு கோபம் வந்தது. இருப்பினும் தன்னை அடக்கிக் கொண்டு, “வேலுச்சாமி இந்த புகாருக்கு நீ என்ன பதில் சொல்லப் போற….?” என்று கேட்டார்.
அதற்கு வேலுச்சாமி சிரித்துக் கொண்டு, “ஏதோ வயசுப் பையன் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திட்டான்…. அதுக்கு இப்பிடி பஞ்சாயத்தை கூட்டணுமா…? வேணும்னா கொஞ்சம் பணம் தர்றேன்…. எடுத்திட்டு போக சொல்லுங்க….” என்றார் திமிராக.
இதைக் கேட்ட ஊர் மக்கள் ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசினர். பெருந்தேவனார் எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு, “வேலுச்சாமி எல்லாத்தையும் பணத்தால விலை பேச முடியாது…. உன் பையன் பண்ணது பெரிய தப்பு, உயிரை விட பெருசா நினைக்கிற பொண்ணோட மானத்தோட விளையாடிட்டான். இதுக்கு பணத்தை காட்டி விஙைபேச நினைக்கிற நீ எல்லாம் பெரிய மனிசனா….?” என்றவர்,
துரையை தனக்கு முன்னால் கூப்பிட்டார். “நீ செய்த பாவத்துக்கு பிராயச்சித்தமா இங்கேயே இப்பவே அந்த பொண்ணோட கழுத்தில தாலியைக் கட்டு….” என்றார். அதைக் கேட்டு சிரித்த துரை, “இங்க பாருங்க நான் படிச்சவன், நகரத்தில் இருக்கிறவன் எப்பவாவது வீட்டுக்கு வருவன்…. என்னோட கலாச்சாரமே வேற. என்னால இந்த பட்டிக்காட்டில இருக்கிற, அதுவும் படிக்காத இவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது….” என்றான்.
பெருந்தேவனார் எழுந்து அவனருகில் வந்து விட்டார் ஒரு அறை, அவரின் காலடியில் விழுந்தான் துரை. எண்ட ராசா என்று வேலுச்சாமி அவனை தூக்கி நிறுத்தினார். அங்கிருந்த பூசாரியிடம் கண்களைக் காட்ட, அவரும் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த அம்மனின் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார்.
துரையை பார்த்தவர், “ம் பிடி அவ கழுத்தில கட்டு…..” என்று தாலியை கொடுக்க அவரது அடிக்கு பயந்து மயிலின் கழுத்தில் தாலியை கட்டினான் துரை. தாலி கட்டி முடிந்ததும், “இங்க பாரு, தாலி கட்டியாச்சி பிரச்சனை முடிஞ்சிதுனு நினைச்சிட்டு, அந்த பொண்ணை கொடுமைப் படுத்தின, உனக்கு கிடைக்கிற தண்டனையே வேற. அதை மறந்திடாத….. மயிலு நீ கவலைப்படாம போ தாயி….. இவன் ஏதாவது தகராறு பண்ணா ஒரு குரல் கொடு தாயி… இவனை சீவிடுவன் சீவி…..” என்றார் பெருந்தேவனார். பிறகு என்ன பஞ்சாயத்து கலைந்து விட்டது.
எல்லோரும் சென்ற பிறகு பெருந்தேவனார் அருகில் வந்த துரை, “எனக்கு இவளை கல்யாணம் பண்ணி வைச்சி பெரிய தப்பு பண்ணிட்டீங்க….. இதுக்கு உங்களை பழி வாங்காம விடமாட்டேன்….” என்று பெருந்தேவனாரிடம் கைநீட்டி சவால் விட்டவன் அங்கிருந்து சென்றான். பெருந்தேவனார் சிரித்துக் கொண்டு கணக்குப் பிள்ளையோடு வீட்டிற்குச் சென்றார்.
டென்டருக்கு போவதற்காக கேபினை விட்டு வெளியே வந்த மலரை தொடர்ந்து வந்தாள் நிஷா. இருவரும் கீழே வர தயாராக இருந்த காரில் முன்னால் நிஷா ஏறிக் கொள்ள, பின்னால ஏறிக் கொண்டாள் மலர்னிகா. பின்னால் இருந்தவள், தனது லாப் டாப்பிற்கு உயிர் கொடுத்தாள். அதில் தான் செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொண்டு வந்தாள். அவர்கள் வரவேண்டிய இடம் வரவும் அவளது வேலை முடியவும் சரியாக இருந்தது.
டென்டருக்கான மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்த மலர்னிகாவை பார்த்த அனைவரும் இவளால் மட்டும் எப்பிடி இந்த சின்ன வயதில் இப்பிடி ஒரு பிஸ்னஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது என்று எண்ணினர். சிலர் அவளைப் பார்த்து பொறாமைப்பட்டனர். சிலர் அவளை அடைய நினைத்தனர். அதில் ஒருவன் தான் கேசவனின் மகன் முகேஷ். முதலில் மலர்னிகாவின் சொத்துகளுக்கு ஆசைப்பட்டு மும்பையில் தனது வேலையை ஆரம்பித்தான். பின் அவளது அழகில் மயங்கி, அவளை கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார். ஆசைகள் நிறைவேறுமா இல்லை நிராசையாகுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊