அவர்களை தேற்றி வழி அனுப்பி வைத்த காளையனால் தன்னை தேற்றிக்கொள்ள முடியவில்லை. இத்தனை நாள் நான் வாழ்ந்தது என்னோட குடும்பத்தோட இல்லையா? அப்போ அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? என்று கதறிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவன் தோளைத் தொட்டது ஒரு கரம்.
காளையன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். அப்போது அங்கே நின்றிருந்தார் அவர். அவனுடைய வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர் முருகன். நீண்ட காலமாக தன்னுடைய குடும்பத்தில் ஒருத்தராக இருக்கும் முருகனைக் கண்டவன், எங்கே நீலகண்டனை தான் சந்தித்தது பேசியவற்றை கேட்டுவிட்டாரோ என அச்சம் கொண்டான். ஆனால் அவர், அவனைப் பார்த்து, “காளையா, எழுந்திரு. என்னோட வா” என்று அவனை அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்குச் சென்றார்.
காளையனும் எதுவும் சொல்லாமல் அவர் இழுத்த இழுப்பிற்கு முருகன் பின்னால் சென்றான். அவர் அவனை நேராக அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையோரத்தில் இருந்த ஒரு பிள்ளையார் கோயிலுக்கு வந்திருந்தார். அங்கிருந்த ஒரு இடத்தில் காளையனை அமர வைத்தவர், அவனது முதுகை வருடினார்.
“காளையா நீ பல குழப்பத்தில் இருக்கிற என்று நீ சொல்லாமலே எனக்கு தெரியுது. உன்கூட இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்தவர் தான் உன்னோட அப்பான்னு அவர் சொன்னது உண்மைதான்னு உனக்கு சந்தேகமா இருக்குதா? அந்த சந்தேகம் உனக்கு வரக்கூடாது. ஏன்னா இந்த தேவச்சந்திரனையா, நேசமதியம்மா உன்னோட சொந்த அப்பா அம்மா இல்லை.
நாங்க சபாபதிக்கு மொட்டை போடுறதுக்காக ஒரு முறை திருச்செந்தூருக்கு போயிருந்தோம் அந்த நேரத்துல அவனுக்கு மொட்டை போட்டுட்டு வர்ற வழியில, நீ சின்னப் பையன் ஒரு ஓரத்தில் நின்னு அம்மா அம்மான்னு அழுதுகிட்டு இருந்தே. அதைப் பார்த்த நேசமதி அம்மா ஓடிவந்து உன்னை தூக்கிக் கொண்டார். நீயும் அவரை அம்மா என்று கழுத்தை கட்டிக்கொண்டு அவரது தோளிலே படுத்து விட்டாய். இது எல்லோருக்கும் ஆச்சரியத்தை தந்தது.
அவர் உன்னை தனது பிள்ளையாக நினைத்துக் கொண்டார். ராமச்சந்திரன் ஐய்யா இந்த குழந்தை யாருடையது என்று விசாரிச்சு அவங்க அப்பா அம்மா கிட்டயே கொடுத்துடலாம் என்று சொன்னார். அதை கேட்ட நேசமதி அம்மா, “இல்ல மாமா அப்படி மட்டும் பண்ணிடாதீங்க. குழந்தையே பிறக்காது என்று சொன்ன எனக்கு, இந்த முருகன் தான் இந்த குழந்தையை கொடுத்திருக்கிறான். இவன் என்னோட குழந்தை தயவுசெய்து இந்த விசயத்தை யாருகிட்டயும் சொல்லிடாதீங்க மாமா. இவன் என் குழந்தையாகவே வளரட்டும் மாமா” என்று கெஞ்சினார்.
அவரின் அழுகை குடும்பத்திற்கு வேதனையை தந்தது. பின்னர் உன்னை அழைத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாக நாங்கள் ஊருக்கு வந்துட்டோம்பா. இதுதான் நடந்துச்சு என்று சொன்னார் முருகன். இதைக்கேட்ட காளையன் முழுவதுமாக நம்பினான் நீலகண்டன் தான் தன்னுடைய உண்மையான அப்பா என்று இருந்தாலும், அவர்களுடன் செல்ல மனம் ஒப்பவில்லை. குழந்தையிலிருந்து தன்னை பாசத்துடன் வளர்த்த நேசமதியும் தேவசந்திரனையும் அந்த வீட்டிலுள்ளோரையும் விட்டுச் செல்ல மனம் வரவில்லை. ஏன் பாட்டி தாத்தா கூட அவனிடம் பிரியமாகத்தான் இருந்தார்கள். இப்போதுவரை இருக்கிறார்கள் அதனால் அவனுக்கு வேறு எதுவும் தேவையில்லை.
அவர்கள் பாசமே போதும். இருந்தாலும் பெற்ற தந்தையாக அவர் ஆசைப்படுவதும் சரிதானே என்ன செய்வது என்று இருவருக்கும் இடையில் என்று தத்தளித்துக் கொண்டிருந்தான். முருகனை இதற்கு ஒரு தீர்வு சொன்னார். “காளையா நீ இவங்களோட பையன் இல்லை என்ற உண்மை உனக்கு எப்பவுமே தெரியக்கூடாது என்று தான் நம்ம வீட்டில இருக்கிற எல்லாருமே நினைக்கிறாங்க. அதனால நீ அவங்க கிட்ட போய் நான் இந்த வீட்டு பிள்ளை? இல்லையா? என்று கேட்டு அவங்களோட மனசை நோகடிக்கிடாத” என்று கேட்டுக் கொண்டார் முருகன்.
உன்னோட உண்மையான அப்பா அம்மா பத்தி உனக்கு எப்படித் தெரிய வந்ததோ ஒரு வேளை, நீ உன்னோட உண்மையான அப்பா அம்மா கூட தான் இருக்கணும்னு விதி இருந்தால் அது நடக்கும். இப்போ எதையும் போட்டுக் குழப்பிக்க வேண்டாம். உனக்கு உண்மை தெரியுன்றதையும் அவங்க கிட்ட நீ காட்டிக்க வேணாம். நானும் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். ” என்றார். அதற்கு அவனும் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்.
போன் வந்ததும் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற காளையன் வரவில்லை என்று யோசித்துக் கொண்டு தோட்டத்தில் வேலைகளை செய்து கொண்டிருந்தான் கதிர். நீண்ட நேரத்தின் பின் வாடிய முகத்துடன் வந்து சேர்ந்தான் காளையன் அவ்விடத்திற்கு. அதனைப் பார்த்த கதிர், அவனிடம் விரைந்து வந்தான்.
“அண்ணே, என்னண்ணே எங்க போயிருந்த? முகம் எல்லாம் ஒரே வாட்டமா இருக்கு. கொஞ்சம் இளநீர் குடிக்கிறியா?” என்று கேட்டான். அதற்கு காளையன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தான். கதிருக்கு இந்த காளையனின் அமைதி வித்தியாசமாக இருந்தது. அவன் ஏதேதோ பேசிப் பார்த்தான். ஆனால், காளையன் எதற்குமே பதில் அளிக்கவில்லை. மௌனத்தை மட்டுமே அவனுக்கு பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தான்.
உடனே கதிர் தேவச்சந்திரனுக்கு போன் பண்ணி காளையனைப் பற்றி கூறச் செல்கையில், அவனது போனை பறித்தான் காளையன், “கதிர் ஒன்னும் இல்ல எனக்கு. நீ வீட்டிற்கு போன் பண்ணி சொல்லிக்கிட்டு இருக்காத. நீ இங்க இருந்து போ. நான் கொஞ்சம் தனியா இருந்தா நல்லா இருக்குன்னு நினைக்கிறேன்.” என்று சொல்லி கதிரை அனுப்பி வைத்து விட்டான்.
தோட்டத்து வீட்டில் இருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்துக் கொண்டு வந்து வெளியில் போட்டு வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டு படுத்தான். காளையன் நீண்ட நேரம் நடந்த எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எதற்காக இந்த விளையாட்டு? என்னோட வாழ்க்கையில உண்மையான அப்பா அம்மா கிட்ட இருந்து என்ன பிரிச்சு, இந்த குடும்பத்துகிட்ட என்ன சேர்த்ததுக்கான காரணம் என்ன? இப்போ மறுபடியும் அவங்களை நான் சந்திக்கிறதுக்கான காரணம் என்ன? அப்பனே முருகா நடத்தியது நீ. நடத்திக் கொண்டிருக்கிறதும் நீ. நடத்த போவதும் நீ எதுவாக இருந்தாலும் நல்லதாவே நடக்கட்டும். என்று நினைத்துக் கொண்டான்.
தனக்கு உண்மை தெரிந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது, என்ற முடிவை எடுத்துக்கொண்டான். பின்னர் இரவு நீண்ட நேரத்தின் பின்னரே வீட்டிற்குச் சென்றான். வீட்டின் வாசலிலே விசாகம் அவனுக்காக காத்திருந்தார். அவனைப் பார்த்ததும், “என்ன ராஜா முகமெல்லாம் வாடிப்போய் இருக்கு. எங்க போயிருந்த இவ்வளவு நேரம்? உன்னோட போன் வேலை செய்யவே இல்லை. நாங்க ரொம்ப பயந்துட்டோம் ராசா” என்ற அவரது பாசம் அவனை அசைத்து.
இத்தனை அன்பு வைத்திருப்பவர்களை விட்டு அவன் எப்படி வேறொருவருடன் செல்ல முடியும்? ஆனால் அவரும் என் மீது அன்பு கடந்த பாசம் வைத்திருப்பவர் ஆயிற்றே என்று பெருமூச்சு விட்டுக் கொண்டவன், ஒன்னும் இல்லை பாட்டி, மனசுக்கு ஏதோ ஒரு நெருடலா இருக்கு பாட்டி அதுதான் தோட்டத்து வீட்ல கொஞ்ச நேரம் படுத்து இருந்திட்டு வர்றேன்” என்று சொன்னான்.
உடனே அவர் குணவதியை அழைத்து இதுதான் அந்தி சந்தியில திரியக் கூடாதுனு சொல்றது. “இவனுக்கு சுத்திப்போடு. பெரியவங்க சின்னவங்க, வயசுப் பொண்ணுங்கனு எல்லாருடைய கண்ணும் காளையன் மேலதான். அதுதான் பிள்ளைக்கு உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு” என்று சொல்லி குணவதியிடம் சொல்ல குணவதியும் உடனே சென்று அவனுக்கு திருஷ்டி கழித்தார். பின்னர் நேசமதி அவனை அழைத்துச் சென்று அறையில் விட்டு குளிக்கச் சொல்லிவிட்டு கீழே வந்தார். குளித்து விட்டு வந்த காளையன் தலையைக்கூட துவட்டாது கட்டில் படுத்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
Super divima