காளையனை இழுக்கும் காந்தமலரே : 44

4.9
(12)

காந்தம் : 44

அதன் பின்னர் போனில் நீலகண்டனுடனும் ஹர்ஷாவுடனும் பேசிக் கொண்டிருந்தான். காளையனை அவர்கள் அவனை ஊட்டிக்கு அழைப்பதும், அவன் மறுப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பின்னர் அவன் விருப்பப்படி நடக்கட்டும் என்று அவர்கள் அவனை ஊட்டிக்கு அழைப்பதில்லை. ஹர்ஷாவுக்கும் காளையனுக்கும் இடையிலான அண்ணன் தம்பி பாசம் ராமலட்சுமணர் போல இருந்தது. ஹர்ஷாவும் தனது காலேஜை முடித்துவிட்டு கம்பெனிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். 

நடந்து முடிந்த அனைத்தையும் நீலகண்டன் அங்கிருந்தவர்களிடம் சொன்னார். இதைக் கேட்ட துர்க்கா, “காளையா உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு” என்று சொன்னார். காளையனும், “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை நான் எதுவும் பெருசா செஞ்சிடல” என்றான். 

“என்ன சொன்ன காளையா? நீ பெருசா எதுவும் செய்யலையா? நீ என்ன வேணாலும் சொல்லலாம். ஆனால் என் பொண்ணோட அந்த தப்பான வீடியோவை பார்த்தும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேயே, உன்னை என்ன சொல்றேன்னு எனக்கு தெரியலை. குடும்பமானம் போயிடும்னு சொல்லி எங்களை வீட்டை விட்டு சொன்ன, என்னோட அப்பா அம்மா அண்ணனுங்க எங்க? என்ன நடந்தாலும் பரவாயில்லை இவதான் என்னோட பொண்டாட்டி என்று சொல்லி அவளை உன்னோடு கூட்டிட்டு வந்த நீ எல்லாரையும் விட ரொம்ப உயர்ந்து நிற்கிற காளையா” என்ற துர்க்கா அவனைப் பார்த்து கைகூப்பி வணங்கினார்.

“ஐயோ என்ன அத்தை இது? ” என்று அவரின் கைகளை இறக்கினான் காளையன். “அண்ணா, அண்ணிக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டான் ஹர்ஷவர்த்தனன். அதற்கு காளையன், “அதை அப்புறம் பேசிக்கலாம் ஹர்ஷா முதல்ல இவங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று சொன்னான். பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை காட்ட பொன்னியை அழைத்து அவளுடன் அனுப்பி வைத்தார் நீலகண்டன். 

துர்க்காவும் நிஷாவும் பொன்னியுடன் சென்றனர். கதிர் அங்கேயே நின்று கொண்டு இருந்தான். அவனைப் பார்த்து நீலகண்டன், “கதிர் நீ என்ன பேசாம இருக்க? நீயும் என்னோட பையன் மாதிரி தான். காளையன் எப்ப இங்க கூட பேசுனாலும், அப்போ அவனோட வாய் அதிகம் சொல்ற வார்த்தை கதிர் தான். ஹர்ஷாவுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். என்ன ஹர்ஷா நீ பேசாமல் இருக்க?” என்று கதிரிடம் ஆரம்பித்து ஹர்ஷாவிடம் முடித்தார் நீலகண்டன். 

ஹர்ஷாவும் அதற்கு, “அப்பா அண்ணன் என்னை விட பெரியவங்க. ஆனால் கதிர் கிட்டத்தட்ட என்னோட வயசு இருக்கும் இல்ல. அதுதான் நான் கதிரை என்னோட அண்ணன் நினைக்காம ஏன் ஒரு நண்பனா நினைக்க கூடாதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்று சொல்லி சிரித்தான் ஹர்ஷவர்த்தனன். 

“சரி சரி அப்போ ரெண்டு பேரும் போய் யோசிச்சு முடிவெடுங்க ” என்று பதிலுக்குச் சொல்லி சிரித்தார் நீலகண்டன். இதை கேட்டு அனைவரும் சிரித்தனர். நீண்ட நாட்களின் பின்னர் அந்த மாளிகை மிகவும் உயிரோட்டமாக இருந்ததாக உணர்ந்தனர் அங்கிருந்த வேலையாட்கள்.  

மலர்னிகா மிகவும் சோர்வாக இருந்ததைப் பார்த்த காளையன்,” மலர்னிக்காவை எங்கு எந்த அறைக்கு அழைத்துச் செல்ல” என்று கேட்க, உடனே ஹர்ஷாவும் “அண்ணா கதிர் என்கூட தங்கிக்கட்டும். நீங்க வந்து அண்ணியை கூட்டிட்டு மேல இருக்க ரூமுக்கு போங்க. முதல் ரூம் உங்களோடது. அடுத்த தளத்தில முதலாவது என்னோடது” என்று சொன்னான் ஹர்ஷா. 

அவனும் சரி என்று சொல்லி, மலரை கூட்டிக்கொண்டு அங்கே இருந்து சென்றான். நீலகண்டன் மனம் நிம்மதியாக இருந்தது. சோஃபாவில் உட்கார்ந்து கொண்டார். கதிரை வீட்டைச் சுற்றிக் காட்டுகிறேன் என்று ஹர்ஷா கூற, நீலகண்டன்,” அவன் இப்போதானே வந்திருக்கிறான். கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டுமே. அதுக்கு பிறகு வீட்டை சுற்றிக்காட்டு” என்றார். ஆனால் கதிர், “இல்லப்பா எனக்கு களைப்பாக இல்லை. நான் ஹர்ஷா கூட போறேன்.” என்று சொல்ல, ஹர்ஷவர்த்தனன் தந்தைக்கு பழிப்புக் காட்டிவிட்டு, கதிரின் தோளில் கைகளைப் போட்டு அழைத்துக் கொண்டு சென்றான். 

இங்கே தேன் சோலையூரில் வீடு பெரும் அமைதியாக இருந்தது. காமாட்சி எழுந்து கீழே வந்தவள். தனக்குரிய தேநீரினைதானே போட்டு குடித்துவிட்டு காலேஜுக்கு செல்ல தயாராக சென்றாள். வீட்டில் உள்ள யாருடனும் அவள் பேசத் தயாராக இல்லை. அவர்கள் கேட்பதற்கும் பதில் சொல்லாமல் மௌனத்தை இவள் ஆயுதமாக பயன்படுத்தினாள். 

அவளுக்கு மிகவும் பிடித்த அண்ணன் காளையனையும் அண்ணியையும் இங்கிருந்து விரட்டியது அவளுக்கு பிடிக்கவில்லை. தனக்கும் ஏதாவது தப்பாக நடந்தால் இப்படித்தான் தன்னையும் விரட்டிடுவார்களா? என்ற எண்ணம் அவளுக்குள் விதைத்தது. சிறிது நேரத்தில் அறைக்குச் சென்று ரெடியாகி வந்தவள், தனது தோழி உமாவை அழைத்துக் கொண்டு காலேஜுக்கு சென்று விட்டாள். 

குணவதியும் நேசமதியும் என்ன செய்வார்கள், வழமை போல அவர்களது வேலையை அவர்கள் செய்து கொண்டு இருந்தார்கள். அங்கு காமாட்சியைத் தவிர மற்றவர்களுக்கு நடந்த எதுவும் அவர்கள் நினைவில் இல்லை என்பது போலவே நடந்து கொண்டனர். காளையன், மலர்னிகா, நிஷா, துர்க்கா சென்றது அவர்களை பெரிதும் பாதிக்கவில்லை. தங்களது கௌரவம் குடும்பத்தின் மானம் காப்பாற்றப்பட்டது என்ற நிம்மதி மட்டுமே அவர்களிடம் இருந்தது. 

சபாபதியும் தூக்கத்தில் இருந்து எழுந்து கீழே வந்து தனது அப்பா மற்றும் தாத்தா சித்தப்பா உடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் இந்த நேரத்துல யார் வீட்டுக்கு வந்திருப்பது என்று சொல்லி எட்டிப் பார்த்தார்கள். அங்கே ராமச்சந்திரன் வயதில் ஒருவரும், சபாபதி வயதில் ஒரு ஆணும், காமாட்சியின் வயதில் ஒரு பெண்ணும் நின்று இருந்தாள். “என்னது மோனிஷா, எல்லோரையும் கூட்டிட்டு வந்திருக்கா?” என்று அவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு எழுந்து நின்றான் சபாபதி. 

மற்றவர்கள் இவர்கள் யாராக இருக்கும் என்று நினைத்தவாறு அவர்களைப் பார்த்தனர். அதற்குள் வெளியே இருந்த கேசவன், “உள்ள வரலாமா?” என்று கேட்ட, எதிரிகளாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர்களை அழைப்பது தானே முறை என்று நினைத்து பெருந்தேவனார் அவர்களை உள்ளே அழைத்தார். 

ஆனால் மோனிஷாவோ உள்ளே வரவில்லை. “அப்பா, அண்ணா நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. ஆனால் நான் இப்போ உள்ள வரமாட்டேன் “என்று சொன்னாள். “என்ன சொல்ற மோனிஷா? நீ ஏன் உள்ள வர மாட்டேன்ற” என்று கேசவன் கேட்டார். 

அதற்கு மோனிஷா, “அப்பா நான் காரணமாகத்தான் சொல்றேன் நான் இப்போ உள்ளே வரமாட்டேன்.” என்றாள் விடாப்பிடியாக. இதைக் கேட்ட முகேஷுக்கு கோபம் வந்தது.” எங்களை கூட்டிட்டு வந்து இப்போ என்ன நீ உள்ள வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க? அடம் பிடிக்காத மோனிஷா வா உள்ளே போகலாம். எல்லாரும் நம்மளைத் தான் பாத்துக்கிட்டு இருக்கிறாங்க” என்று சத்தம் போட்டான் முகேஷ். 

அவனது சத்தத்திற்கு சிறிதும் அஞ்சவில்லை மோனிஷா. “எப்படி அண்ணா என்னை உள்ளே வரச் சொல்ற? நான் இந்த வீட்டு மருமக அப்போ ஆரத்தி இல்லாம எப்படி வீட்டுக்குள்ள வருவது? எனக்கு வந்து ஆரத்தி எடுக்க சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் உள்ள வரேன்” என்று பதிலளித்தாள் மோனிஷா. அவளது இந்த பதிலை கேட்டு எழுந்து நின்றனர் வீட்டில் உள்ளவர்கள். அதற்கு மாறாக கேசவன், முகேஷ் முகங்கள் புன்னகை பூத்தன. பின்னர் அவர்கள் இங்கு வருவதற்கு முதல் மோனிஷாவை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றல்லவா வந்திருக்கிறார்கள். அதன் தாக்கமே மோனிஷா இப்படி நடந்து கொள்கிறாள் என நினைத்துக் கொண்டனர்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

1 thought on “காளையனை இழுக்கும் காந்தமலரே : 44”

Leave a Reply to babuvana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!